தடுமாறும் தலைகளும் தடம்மாறும் உறுப்புக்களும்
பேராசிரியர், திருமலர் மீறான் பிள்ளை
ஆட்சியதிகாரங்களில் ஓரளவிற்காவது பங்குபெற்றாலொழிய எந்தச் சமுதாயமும் தமக்குரிய உரிமைகளை பெறவியலாது. தமிழகத்தில் ஆட்சி நிர்வாகத்தில் பங்குபெறுவதற்குரிய வகையில் எண்ணிக்கையைப் பெற்றும் சிதறிக்கிடக்கும் வாக்குகளை சரியாகத் திட்டமிட்டு பயன்படுத்தாத காரணத்தால் முஸ்லிம் சமுதாயம் எல்லாம் இழந்து கட்சிக்கொடிகளையும் கையேந்தி கோஷம் போடும் எடுப்பார் கை பிள்ளைகளாக முஸ்லிம்கள்.
அண்டை மாநிலமான கேரளாவில் இடது வலதுசாரி கட்சியினர் எவர் ஆட்சிக்கு வந்தாலும் சராசரி ஏறத்தாழ முப்பது சட்டமன்ற உறுப்பினர்களையும் மூன்று அமைச்சர் பதவிகளையும் பெற்று ஆட்சி நிர்வாகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக முஸ்லிம்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்குக் காரணம் முறையான அரசியல் தந்திரமும் நுட்பமான திட்டமிடலுமே. சமுதாயம் என்பது மனித உடலுக்கு ஒப்பானது. தலைமை வகிக்கும் தலை ஒன்று. செயலக இதயமும் ஒன்று.
திட்டமிடும் மூளை ஒன்று. செயல்படுவதற்குரிய கை கால்கள் இரண்டு. அவ்வாறானால் எல்லாம் சரியாக முறையாக நடக்கும். பல தலைகள், பல இதயங்கள், பல மூளைகள், பல கை கால்களானால் ஏதாவது ஒழுங்காக நடக்குமா? தலை, இதயம், மூளை, கை, கால் வலிதானே மிஞ்சும்?
இன்றைய முஸ்லிம் சமுதாய நிலை என்ன? பல்வேறு கட்சிகளில் கட்டுப்பாடின்றி கலைத்துப்போட்ட சீட்டுகளாக அன்றோ முஸ்லிம்கள் சிதறிக்கிடக்கிறார்கள் கையாலாகாதவர்கள் கூட எளிதில் கையிலெடுத்து கண்டவாறு விளையாடலாம். அறிவும் திறனும் அனுபவமும் உடைய மேய்ப்பர்கள் இருந்தும் அரசியல் தந்திரமும் சூழ்ச்சியும் இல்லாமை காரணமாக ஆடுமாடுகளும் ஈமான்களும் கட்டுப்பாடின்றி சிதறி ஆங்காங்கே புலிகள், சிங்கங்கள், நரிகள் ஆகியவைகளின் வாயில் அகப்படும் ஆபத்தான நிலை.
இவர்களைக் காப்பாற்ற மேய்ப்பர்கள் உடனே ஒன்று சேரவேண்டாமா? அரசியலில் பதவி நாற்காலி மோகங்கள் தவிர்க்க இயலாத அடிப்படைத் தேவைகள் என்பதில் அய்யமில்லை. ஆனால் சமுதாய நலனும் முன்னேற்றமும் அதன் தலையாய நோக்கமாக, லட்சியமாக அமைதல் வேண்டும்.
தேனைப்பருகப்போய் மயங்கி தேன் குடத்திலேயே வீழும் வண்டுகளாக மட்டும் ஒருபோதும் ஆகிவிடக்கூடாது.
எந்தக் கருத்தியத்திற்கும் நாணயம் போல் இரு பக்கங்கள் உண்டு. பூவாகவோ தலையாகவோ இருக்கலாம். பூ இவ்வளவுதானே எனும் அளவுக்கு தரம் தாழ்ந்து போனால் நிறமும் தரமும் நிரந்தரமாக இழக்க நேரிடும். இது அரசியல் கட்சி உருவாக்கத்திற்கும் செயல்பாட்டிற்கும் மிகவும் பொருந்தும்.
பேச்சு, செயல், அரசியல் தந்திர அறிவும் ஆற்றலுமிக்க இரண்டு தலைமைகளின் கீழ் ஒட்டுமொத்த சமுதாயமும் ஒன்றுபட்டு திரண்டு நின்றால் பெரும் பயன் விளையும். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி கூட்டணியில் இந்தப் பிரிவுகள் தனித்தனியாக அரசியல் திறனுடன் இடம் பெற்றால் சில தொகுகளிலாவது சமுதாய பிரதிநிதித்வம் பெற இயலும். ஆட்சிக்கட்டிலில் தவிர்க்க முடியாத சக்தியாகப் பங்குபெற இந்த அரசியல் உத்தி உதவும் என்பது உறுதி.
சகோதரச் சமயங்கள் போன்று சமுதாய நலனுக்கு வழிகாட்டும் நெறிகளை வற்புறுத்தவும், செயல்படக் கட்டளையிடவும் ஆற்றலுடைய ஆன்மீகத் தலைமைகளின் பற்றாக்குறை முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளது கவலை தருவதாகும்.
உள்ள சிலரும் உறுதியாகத் துணிச்சலுடன் அறிவுறைக்கவும், கட்டளையிடத் தயங்குவதும் முஸ்லிம் சமுதாயத்தின் சமகாலச் சாபக்கேடாகும். மட்டுமின்றி ஏனைய சமுதாயங்கள் போன்று சமுதாயத் தலைவர்கள் ஆன்மீகத் தலைமைகளிடம் ஆலோசனை பெற நாடுவதும் இல்லை என்பதும் உண்மையாகும்.
கல்வி, தொழில், வேலை, ஆன்மீகம், இலக்கியம், இதழியல் சமூகத்தொண்டும் என்ற பெயரில் செயல்படும் பல நிறுவனங்களும் அதன் தலைவர்களும் புரவலர்களிடமிருந்து பணத்தைத் தோண்டுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே தவிர ஆட்சியதிகாரத்தில் சமுதாயம் பங்கு பெறுவதற்கான வழிமுறைகளை அறிவுரைப்பதில்லை. அது பற்றிய பெருங் கவலையோ கரிசனமோ இந்த இயக்கங்களுக்கு இல்லை என்பதே தசப்பான உண்மை.
யார் ஆண்டால் என்ன? நமக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்கவேண்டிய சமயத்தில் கிடைத்தால் மட்டும் போதுமானது என்பதே அவர்கள் அதிகப்பட்ச இலட்சியம்.
சமூக நல மேம்பாட்டார்வமும் விழிப்புணர்வும் கவலையும் மிக்க புரவலர்களும், தொழிலதிபர்களும், ஜமாஅத் தலைவர்களும் எழுத்தாளர்களும் முஸ்லிம் சமுதாயத்தில் பேரளவு இல்லாததும் இந்த அரசியல் தேக்கநிலைக்கும் விழிப்புணர்வின்மைக்கும் பெருங்காரணமாகும். கட்சித் தொண்டர்களும் மிகக் குறைவு மட்டுமின்றி உள்ளவர்களிடம் சரியான சமூகநல உணர்வும் நாட்டமும் இல்லாமையும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது பெரும் பிரச்சினை, தூங்கி அழுது வழிகின்றது முஸ்லிம் சமூகம். தடுமாறி தடம் மாறிச் செல்லும் தமிழக முஸ்லிம் சமுதாயம் விழி திறக்க நல்ல வழி காட்ட இறைவன் உதவுவானாக!
முஸ்லிம் முரசு, ஏப்ரல் 2016