வசிக்கும் வீட்டை நிம்மதியானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான், “நீங்கள் வசிக்கக்கூடிய வீட்டை நிம்மதியானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்”.
பல கஷ்டங்கள், பிரச்சனைகளை வெளியில் சந்தித்துவிட்டு வீடு திரும்புகிறீர்கள். இல்லத்திற்குள் நுழைந்த பிறகு நிம்மதி இருக்க வேண்டும்.
”வீடு கட்ட நாடினால், ஹலாலான பணத்தில் கட்டுங்கள். ஹராமான வழியில் ஈட்டிய பொருளால் கட்டாதீர்கள். அவ்வீட்டில் நிம்மதியாக இருக்க மாட்டீர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வுக்கு மாறாக நடப்பவர்களுடைய சொகுசு வாழ்க்கையைக் காணும் கஷ்டவாதிகள் பொறாமைப்படுகின்றனர். அவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள், “அல்லாஹ்வுக்கு மாற்றமாக நடக்கும் அவர்களை நீங்கள் உயர்வாகப் பார்க்கிறீர்களா?
அல்லாஹ், பயமில்லாமல் வாழக்கூடியவர்களுக்கு அனைத்து வகையான சுகபோக வாசல்களையும் அல்லாஹ் திறந்துவிடுகிறான். விட்டுப் பிடிக்கிறான். சந்தோஷத்தில் தலை, கால் புரியாமல் ஆடி, திமிர் அதிகமாகும்போது தகுந்த நேரத்தில் இறுக்கிப் பிடிக்கிறான் (என்று கூறிவிட்டு) இந்த வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக் காண்பிக்கிறார்கள். “என்னுடைய பிடி கடினமான பிடி”.
“உங்களது வீடுகளை பள்ளிக்கு அருகில் அமைத்துக்கொள்ளுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். பெரிய வீடுகளைக் கட்டுகிறோம். தொழுகைக்கென்று ஒரு அறை ஒதுக்குவதில்லை. குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை தொழுகைக்கு ஏவ வேண்டும்.
ஸஹாபாக்கள் பள்ளிக்கருகிலேயே வீடுகளை அமைத்துக்கொண்டனர். ஹளரத் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள்,
“எனது வீடு ஓடைக்கருகில் இருக்கிறது. மழை பெய்தால் வெள்ளம் புகுந்து சிரமம் ஏற்படுவதால் பள்ளிக்கு தொழவர சுணங்குகிறது. நீங்கள் என் வீட்டிற்கு வந்து தொழுகை வையுங்கள் என்று கூற,
ஹளரத் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டிற்குச் சென்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உங்கள் வீட்டில் எந்த இடத்தில் தொழ வேண்டும்? நீங்கள் ஆசைப்பட்ட இடத்தைக் காண்பியுங்கள்” எனக்கூற மூலையைக் காண்பித்தார்கள் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
அந்த இடத்தில் நின்று தொழ வைத்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். பின்னாளில் அவ்விடத்தை தொழுகைக்குறிய இடமாக மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பாவித்தார்கள். இந்த ஸஹாபி மூலம் வீட்டுக்குள் தொழுகையிடம் அமைப்பது கற்றுத்தரப்பட்டுள்ளது.
“உங்களது இல்லங்களை கபர்களாக, மண்ணறைகளாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கூறப்பட்டதன் பொருள் வீட்டிலும் தொழுக வேண்டும் என்பதுதான். ஃபர்ளு அல்லாத, ஃபர்ளுக்கு முன் தொழக்கூடிய சுன்னத்துல் வக்ரா” 12 ரக் அத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டிலேயே தொழுதார்கள்.
இன்று வீடுகள் கட்டும்போதும், குடிபுகும்போதும் தேவையில்லாத, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தராத அன்னாச்சாரங்களை செய்கின்றனர். “யார் மற்ற மதத்தாரைப் பின்பற்றுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல” என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
வீடுகளில் தொழுகையிடம் என்று ஒன்று இருக்குமானால் பெண்களும் குழந்தைகளும் தொழுவதற்கும், ஓதுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்காலத்தில் வீடுகள்தோறும் டி.வி.க்கள் வீட்டின் மத்திய பகுதியை ஆகிரமித்துக்கொள்ளும் அவல நிலையில் தொழுகைக்காக ஒரு தனியறை இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை யோசித்துப்பாருங்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் தொழுவதற்கென்று தனியறை இருக்குமானால் வீடு தேடி வரும் உறவினர்கள் தொழுவதற்கும் அது மிக உதவியாக இருக்கும்.
நம்மில் தொழுகையாளியாக இருப்பவர்கள்கூட உறவினர்களின் வீட்டிற்கு செல்லும் நேரங்களில் தொழுவதற்கு சங்கடப்பட்டு தொழுகையை “களா”ச்செய்யக்கூடிய சூழ்நிலை இருப்பதை மறுப்பதற்கில்லை. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இந்த அனுபவம் அதிகமிருக்கும்.
தொழுகைக்கென்று தனியறை இருக்குமானால் இதுபோன்ற பிரச்சனை எழ வாய்ப்பில்லை. அல்லாஹ் நமது இல்லங்களை நிம்மதி பூத்துக்குளுங்கும் இடமாக ஆக்கியருள்புரிவானாக.
-அபூ ஸஃபிய்யா