அல்குர்ஆனுடன் ஓர் உள்ளார்ந்த உறவை ஏற்படுத்துவோம்
ஹனீஃபா ரஹ்மதுள்ளாஹ் ரஹ்மானி, உமரி.
நாம் உலகில் வாழும் காலத்தில் பலரும் பலருடனும் தொடர்புகள் வைத்து வாழ்கின்றோம். ஆனால் முஸ்லிம்களாகிய எமது தொடர்பு மற்றவர்களது தொடர்புகளையும், உறவையும் தாண்டி எம்மைப்படைத்த அள்ளாஹ்வுடன் இருக்கமாக இருக்கவேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.
அல்லாஹ்வுடன் இருக்கமான ஒரு தொடர்பை ஏற்படுத்தக்கூடிய பல நல்ல வழிகளுக்கு மத்தியில் புனித அல்குர்ஆன் பிரதான இடத்தில் இருக்கின்றது. இதற்கு தக்கதொரு சான்றாக பின்வரும் நபிமொழியை சொல்லமுடியும்.
“அல்லாஹ்விடமிருந்து வந்த குர்ஆனை விட சிறந்த வேறொன்றின் மூலமும் நீங்கள் அல்லாஹ்வை நெருங்க முடியாது” (அறிவிப்பாளர் : அபூதர் றழியள்ளாஹு அன்ஹ், நூல் : முஸ்தத்ரக் ஹாகிம்)
குர்ஆனின் மூலம் அள்ளாஹ்வை நெருங்க வேண்டுமாயின் முதலில் குர்ஆனுடன் ஓர் உள்ளார்ந்த உறவு எமக்கு இருக்கத்தானே வேண்டும்! எனவே குர்ஆனுடன் எமது உறவைப் பலப்படுத்த ஓரிரு வழிகளை இங்கு அவதானிக்கலாம்.
1. அதிகமாக குர்ஆனை ஓதுதல் :
இதற்கு உதவியாக வழமையாக ஒதிவருவதெற்கென ஒரு குறிப்பிட்ட அளவை நிர்ணயித்துக் கொள்ளமுடியும். அந்த அளவை எச்சந்தர்ப்பத்திலும் தவறவிடமாட்டேன் என திடசங்கற்பம் பூண்டுகொள்ளவும் வேண்டும்.
2. சரியான குர்ஆன் ஒதல் முறைமையை கற்றுக்கொள்ளல் :
கல்விகளில் மிக உயர்ந்த கல்வி குர்ஆனியக்கல்வி என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது. ஆனால் இன்று இராகங்களுக்கு உள்ள முக்கியத்துவம் குர்ஆன் ஓதற்சட்டங்களுக்கு வழங்கப்படுவதில்லை; ஒவ்வொருவரும் சற்று இராகமாக ஒதிவிட்டு அது சரியான ஓதல் என்று மனநிம்மதி வேறு அடைகின்றனர். அதைவிட ஒருபடி மேல் சென்றோமானால் ஓதற்சட்டங்கள் தெறிந்தவர்கள் கூட ஓதற்சட்டங்களுக்குள் அவசியமான “எழுத்துகள் வெளியாகும் இடங்கள், எழுத்துகளின் பண்புகள்” போன்றவற்றை மறந்து ஒதலை அழகு படுத்தக்கூடிய “நீட்டி ஓதுதல், அசைத்து ஓதுதல், மூக்கினால் சத்தத்தை எடுத்தல்” போன்ற சட்டங்களுக்கே அதிக கவனம் கொடுக்கின்றனர்.
3. குர்ஆன் ஓதும்சமயம் அதனால் தாக்கமுறுதல் :
தாக்கமுறவேண்டுமாயின் அதன் கருத்துகளை புரியவேண்டும். எனவே அறபு அறியாதவர்கள் மொழியாக்கங்களை வழமையாக சிறிது சிறிதாக வாசிக்கவேண்டும். அல்குர்ஆனில் அனைவராலும் புரியமுடியுமான செய்திகளும் உள்ளன, சட்டதிட்டங்கள் அறிந்த ஆலிம்களால் புரியமுடியுமான செய்திகளும் உள்ளன.
4. குர்ஆனில் வரக்கூடிய விடயங்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்தல் :
யார் குர்ஆனில் வரக்கூடிய விடயங்களை ஆய்வு செய்ய தகுதி இருந்தும் ஆய்வு செய்யவில்லையோ அவரது உள்ளம் பூட்டு போடப்பட்டுள்ளது என்றே கொள்ளவேண்டும்.
5. மனனமிடலும் மனனமிட்டவற்றை மீள்சோதனை, மீட்டல் செய்தலும் :
குர்ஆனிலிருந்து சில பகுதியளவேனும் உள்ளத்தில் மனனமாக இல்லையெனில் அவ்வுள்ளம் பாலடைந்த வீட்டுக்கு ஒப்பானது என்றொரு நபிமொழி கூறுவதை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும்.
6. குர்ஆனில் வரக்கூடியவற்றை உரிய சந்தர்ப்பத்தில் அமுல்படுத்தல் :
ஸஹாபிகள் ஓரிரு வசனங்கைக் கற்றபின் அவற்றை அமல் செயததன் பிற்பாடுதான் அடுத்த வசனங்களைக் கற்பார்கள் என்றெல்லாம் வரலாறு சொல்கின்றது. இதன் அடிப்படையில்தான் அல்-பகரா எனும் அத்தியாயத்தை உமர் றழியள்ளாஹு அன்ஹ் அவர்கள் கற்றுமுடிப்பதற்கு 12 வருடங்களும் இப்னு உமர் றழியள்ளாஹு அன்ஹ் அவர்கள் கற்பதற்கு 08 வருடங்கள் சென்றதாகவும் ஹாபிழ் பைஹகி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகின்றார்.
7. நோய்கள் நொம்பளங்கள் ஏற்படும் வேளை குர்ஆனை வைத்தே சிகிச்சையை ஆரம்பித்தல் :
அல்-ஃபாதிஹாவில் அனைத்து நோய்களுக்கும் பரிகாரம் உண்டு என்றொரு நபிமொழி சொல்கின்றது.
எனவே நாம் மேற்கண்ட வழிகளிலும் மற்றுமுண்டான நல்ல வழிகளிலும் சென்று அல் குர்ஆனுடன் ஓர் உள்ளார்ந்த தொடர்பை ஏற்படுத்தி அதற்கூடாக அள்ளாஹ்வை நெருங்க வள்ள அள்ளாஹ் அருள்பாலிக்க வேண்டுகின்றேன்.
source: http://www.lankascholars.com/2015/10/blog-post_14.html