துபாய் விசா
முஹம்மது சிராஜுத்தீன்
மகிழ்ச்சியுடன் சென்னை செல்ல ஏற்பாடு செய்தான் முஹம்மது. தனது தந்தை துபாயிலிருந்து வருகிறார் என்பதற்காக அல்ல. மாறாக அவர் அக்காள் கணவர் மேளாலராக பணிபுரியும் நிறுவனத்தில் வேலைக்கான விசாவுடன் தந்தை வருகிறார் என்பதற்கே.
தந்தை உடல்நிலை சரியில்லாமல் வேலையை விட்டுவிட்டு வருகிறார் என்கிற கவலையெல்லாம் அவனுக்கு இல்லை. மேற்படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடகாலம் வெட்டியாக சென்றாகிவிட்டது. என்ன செய்கிறாய்? என கேட்கும் உறவுகளுக்கெல்லாம் விசாவுக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லி சொல்லி அலுத்துவிட்டது.
சென்னை விமானநிலையத்தில் தந்தையை வரவேற்றான்.அவரோ நடக்ககூட இயலாமல் வண்டியில் வந்தார். இவனுக்கு அவருடைய உடல்நலம் பற்றி விசாரிக்க கூட தோன்றவில்லை. விசா எடுத்து வந்தீர்களா? ஓரு சில நாட்களில் விசா எடுத்து அனுப்புவதாக அக்கா வாக்குறுதி கொடுத்திருப்பதாக சொன்னார்.
இவனுக்கோ அதிர்ச்சி ஒரு சில நாள் என சொல்லி ஒரு வருடம் ஓடிவிட்டது. இன்னும் காத்திருப்பா? நினைக்க நினைக்க கவலை மனதை தொற்றிக்கொண்டது. ஏதேதோ எண்ணங்கள் உதிக்கத் துவங்கிவிட்டன. உண்மையில் அக்காள் மாப்பிள்ளைக்கு வேலை வாங்கித்தர விருப்பம் தானா? இல்லை அவரிடம் கேட்காமலே அக்கா வாக்குறுதி கொடுத்துவிட்டார்களா?
எதிர்காலம் சூன்யமாய் ஆகிவிடுமோ என்ற கவலையில் ஜும்மா தொழுக பள்ளிக்குள் நுழைந்தான். வழக்கமான சொற்பொழிவு, அதிகம் செவியுற்ற இறைவசனம் தான், ஆனால் இன்று இவனுக்காக அருளப்பெற்றது போல் உணர்ந்தான்.
“எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;”
அன்று இரவே சென்னை புறப்பட்டான் விமான நிலையத்திற்கு உறவினரை வரவேற்க அல்ல மாறாக வேலை தேடி. ஓரிரு மாத சிரமத்திற்கு பின் வேலையும் கிடைத்தது. பெரிய நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக, மாதம் ரூ.15000 சம்பளம். பிற நிறுவனங்களை சந்தித்து இவர்களது மோட்டாரை விற்க வேண்டும். பொறியியல் படிக்காத இவனுக்கு ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் சில நாட்களில் கற்றுக்கொண்டான். துபாய் விசா முற்றிலும் மறந்தே போனது. ஆனால் உறவினர்கள் விடுவதாய் இல்லை. இங்கே இவ்வளவு சம்பாதிக்கிறாயே நீ துபாய் சென்றால் இன்னும் அதிகம் சம்பாதிக்கலாம் அல்லவா?
ஒரு வருட வேலைக்குப்பின் எவருக்கோ பொருளை விற்று இலாபம் பெற்றுத்தரும் நாம் ஏன் சுயமாக தொழில் செய்யக்கூடாது என சிந்திக்க ஆரம்பித்தான். அதற்கான திட்டங்களையும் தீட்டினான். சிறுக சிறுக தேவையான பணத்தையும் சேர்த்து செயல்படுத்த முடிவெடுக்க மேலும் ஒரு வருடம் ஓடிப்போனது. தனது சுயதொழில் கனவை சுமந்துகொண்டு தந்தையை சந்திக்க செல்ல ஆயத்தமானான். அப்பொழுது தனது தந்தை வேறொரு அதிர்ச்சி தகவலை சொல்ல காத்திருக்கிறார் என்பது இவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மகிழ்ச்சியுடன் வீட்டினுள் நுழைந்த இவனிடத்தில் தந்தை ஒரு காகிதத்தை நீட்டினார். ஆம் இவன் பல காலம் எதிர்பார்த்து காத்திருந்த துபாய் விசா.மாதம் ரூ.40000 சம்பளம். ஆனால் இப்பொழுது ஒரு துளி கூட மகிழ்ச்சி இல்லை மாறாக துக்கம் தொண்டையை அடைத்தது. தனது சுயதொழில் கனவு கனவாகவே ஆகிவிட்டது போல் உணர்ந்தான். சோகமாய் அமர்ந்திருந்த இவனிடத்தில் காலண்டரை நீட்டிய தந்தை இன்னும் பத்து நாட்களுக்குள் புறப்பட வேண்டும் என்றார். வெறுப்புடன் காலண்டரை வாங்கிய இவனது கண்ணில் தென்பட்டது அந்த நபிமொழி.
“வியாபாரத்தில் பரக்கத் இருக்கிறது.”
– முஹம்மது சிராஜுத்தீன்
source: http://mohamed.co.in/