திருமணத்தைக் கெடுக்கும் வில்லன்!
[ நிச்சயத்திற்கு முன், பெண்ணும் மாப்பிள்ளையும் நேரில் பார்த்து பரஸ்பரம் ஓ.கே. சொல்வது நல்லது. கடந்த தலைமுறை ஆட்கள் ‘திருமணம் ஆனால் சரியாகிவிடும்’ எனக் கூறும் விஷயங்கள் எல்லாம், இப்போது திருமணத்தை நிறுத்தப் போதுமான காரணங்கள் ஆகிறது.]
10 ஆண்டுகளுக்கு முன் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தால், அவர்களின் பெற்றொர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சீர் செனத்தி, பிக்கல் – பிடுங்கல்கள் இருந்தாலும் திருமணம் கட்டாயம் நடக்கும் என்ற நம்பிக்கை பெற்றோரிடம் இருந்தது.
இப்போது, அவர்கள் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழை மற்றவர்களுக்கு தரும்போது கூட, இந்த திருமணம் நடக்குமா? என்ற பயத்துடன் தான் கொடுக்கின்றனர். இதற்கு முதல் காரணம், திருமணம் செய்து கொள்பவர்களின் பக்குவத்தன்மை குறைவாக இருப்பதுதான்.
நிச்சயம் முடிந்தவுடன் தொலைபேசியில் பேச ஆரம்பிக்கும் இவர்கள், ரொம்ப நேர்மையாக இருக்கிறேன் பேர்வழி என, பள்ளிக் காலத்து பப்பி லவ்வை வாழ்க்கைத் துணையிடம் உளரிக் கொட்டி, சொதப்பி விடுவர்.
அதனால், பெற்றோரே! உங்கள் பிள்ளைகளின் மெச்சூரிட்டி லெவல் குறைச்சலாக இருந்தால், திருமணத்துக்கு முன் அவசியமாகப் பேச அனுமதிக்காதீர்கள்.
அடுத்து, ஒரு குடும்பத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளையும், ஒரு பெண்ணும் நேரில் பார்க்காமல் ஸ்கைப்பில் பார்த்தே நிச்சயம் செய்தனர். ஸ்கைப்பில் பார்க்கும்போது சிஸ்டம் பிரைட்னஸில் மாப்பிள்ளை கலராகத் தெரிந்துள்ளார். திருமணத்திற்கு 10 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்த மாப்பிள்ளை, கருப்பாக இருந்ததால் திருமணம் நின்று போனது.
எனவே நிச்சயத்திற்கு முன், பெண்ணும் மாப்பிள்ளையும் நேரில் பார்த்து பரஸ்பரம் ஓ.கே. சொல்வது நல்லது. கடந்த தலைமுறை ஆட்கள் ‘திருமணம் ஆனால் சரியாகிவிடும்’ எனக் கூறும் விஷயங்கள் எல்லாம், இப்போது திருமணத்தை நிறுத்தப் போதுமான காரணங்கள் ஆகிறது.
ஒரு தலைமுறைக்கு முந்தைய பெண்களிடம் நிறைய தன்னம்பிக்கை இருந்தது. குடிகார ஆணைக்கூட திருமணத்திற்குப் பின் அவர்களால் திருத்த முடிந்தது. இப்படி மனைவியால் வாழ்க்கை கிடைத்த ஆண்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அதே மாதிரி நல்ல குணமுள்ள பெண்களை, அவர்கள் ஏழை என பார்க்காமல் திருமணம் செய்த ஆண்களும் இருந்தனர். ஆனால், இன்று திருமணத்தை மிகவும் சுயநலத்துடன் அணுகுகின்றனர்.
‘என் பெண் லட்சத்தில் சம்பாதிக்கிறாள், அவள் எதுக்கு புகுந்த வீட்டு உறவுகளை அட்ஜஸ்ட் பண்ணணும்?’ என சில அம்மாக்களே கேட்கின்றனர்.
இந்த மனநிலைகூட ஒரு விதத்தில் திருமணத்தை கெடுக்கும் வில்லன் தான் என தனியார் மேட்ரிமோனியல் நிறுவனத்தை நடத்தி வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.
– H.Q. நஜ்முத்தீன்
“ஜமாஅத்துல் உலமா” மாத இதழ் ஏப்ரல் 2016
www.nidur.info