Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது”

Posted on April 5, 2016 by admin

“நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:92)

அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய பல வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று ‘ஸ‌தகா’ என்று சொல்லப்படும் தான தர்மங்கள் செய்வதாகும்.

இந்த உலகத்தில் மனிதன் விரும்பக்கூடிய முக்கியமானவைகளில் முதலாவது செல்வம்தான்! எனவே செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாதவரை நன்மையை அடைய முடியாது என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதரத்தைப் பெற்றிருக்கும் ஒரு மனிதன்,அந்த பொருளாதாரத்தில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் செலவு செய்ததுபோக மீதம் உள்ளதில் அவனால் இயன்ற அளவிற்கு தன்னுடைய உறவினர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் அனாதைகளுக்கும் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அவர்களின் கண்ணீர் துடைக்கும் விதமாக, துயர் போக்கும் விதமாக‌ தர்மம் வழங்குவது இஸ்லாத்தின் பார்வையில் அவசியமாகும்.

ஆனால், பொருளாசை நிறைந்த இந்த உலகில் தர்மம் செய்வது என்பது மிகவும் அரிதாகி விட்டது. மரணித்த பிறகு எந்தப் பலனும் தராத செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதை விட, சேர்த்து வைப்பதில்தான் மனிதன் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறான்.

எனவேதான், மனித சமுதாயத்தின் ஒப்பற்ற வாழ்க்கை நெறியான இஸ்லாம், மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதற்காகவும் மனித நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் ஏற்படவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் வழங்குவதை கட்டாயமாக்கி இருக்கிறது.

பொருளாதாரம் என்பது இறைவனின் அருள். இவ்வுலகில் பொருளாதாரம் வழங்கப்பட்டவர்களின் நிலைமையையும் பொருளாதாரம் வழங்கப்படாதவர்களின் நிலைமையையும் நாம் சற்று சிந்தித்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம். வசதி படைத்தவர்களைவிட வசதி அற்றவர்கள் கல்வி, அறிவு, திறமை, கூர்மையான சிந்தனை போன்றவற்றில் உயர்ந்து இருக்கிறார்கள். இருந்தபோதிலும் அவர்கள் ஏழைகளாகவும் அன்றாட‌ம் பணத்திற்கு திண்டாடுபவர்களாவும் இருக்கிறார்கள். எனவேதான் பொருளாதாரம் என்பது என்னதான் திறமை, அறிவு இருந்தாலும் இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.

அதனால்தான் நபித்தோழர்கள் தர்மம் வழங்கும் விஷயத்தில் நான்-நீ என்று போட்டி போட்டார்கள். அவர்களில் செல்வம் படைத்தவர்கள், அதிகமதிகமாக தர்மம் செய்தார்கள். செல்வம் இல்லாதவர்கள் அதை செய்வதற்கு இயலாமல் போனார்கள். தர்மம் செய்ய இயலாம‌ல் ஏழைகளாகளாக இருந்த‌ நபித்தோழர்களுக்கு (தர்மம் செய்வதற்கு ஈடான நன்மை தரக்கூடிய) ஒரு துஆவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். அந்த துஆவையும் வசதி படைத்த சஹாபாக்களும் கற்றுக்கொண்டு ஓதத் துவங்கிவிடுகிறார்கள். இதைக் கண்ட ஏழை சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது அல்லாஹ்வின் அருள்கொடையாகும். அதை அவன், தான் நாடியவருக்கு கொடுப்பான் என்று குறிப்பிட்டார்கள். (நூல்: முஸ்லிம் (ஹதீஸின் சுருக்கம்)

ஆக, செல்வம் என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகும். அல்லாஹ் நமக்கு செல்வத்தை கொடுத்து, அதை அல்லாஹ்வுக்காகவே தர்மம் செய்யக்கூடிய மனதையும் நமக்கு கொடுப்பதற்காக, அல்லாஹ்விடம் அதற்கான‌ எண்ணங்கொண்டு நாம் பிரார்த்திக்க வேண்டும். அவன் கொடுத்தவற்றிலிருந்து நாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்பி மனதார தர்மம் செய்யவேண்டும். வசதி படைத்தவர்களாகிய நாம் வசதி இல்லாதவர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதன் மூலம் நாம் முழுமையான பலனை அனுபவிப்போம் என்பதையும், அது மறுமையின் (நம்முடைய நன்மை)அக்கவுண்ட்டில் சேரக்கூடிய தொகையாகும் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள்; நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும்; நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன்: 2:272)

செல்வம் படைத்தவர்கள் தான தர்மங்கள் செய்து அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைந்துவிடுகிறார்கள். ஆனால் நாம் எவ்வாறு தானதர்மங்கள் செய்வது, அந்த நன்மைகளை எவ்வாறு அடைவது என்று வசதியில்லாதவர்கள் நினைக்கலாம்.

1 லட்ச‌ ரூபாய் இருக்கும் ஒருவர் 1000 ரூபாய் தர்மம் செய்வதைவிட, வெறும் 100 ரூபாய் வைத்திருப்பவர் தன்னைவிட கஷ்டப்படுபவருக்கு 50 ரூபாய்க்கு செய்யும் தர்மம்தான் மேலானதாகும். ஏனெனில் இறைவன் கொடுத்த‌ தன்னுடைய உடமையில் பாதியை அவர் கொடுத்துவிடுகிறார். ஆக தர்மம் செய்வதற்கு அதிகமான வசதிதான் இருக்கவேண்டும் என்று நினைக்கத் தேவையில்லை. அவரவர்களும் தன்னால் இயன்றளவுக்காவது தான தர்மங்களை செய்யவேண்டும். அதற்கும்கூட‌ சக்தி பெறாத பரம ஏழைகள் மற்றும் வறிய‌வர்கள் ஸதகாவின் நன்மையை அடைவதற்காக‌, நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் உபதேசங்கள் எவ்வாறு கைக்கொடுக்கின்றன, சுப்ஹானல்லாஹ்!

அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களில் சிலர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொன்னார்கள், “இறைவனின் தூதரவர்களே! செல்வச் செழிப்புள்ளவர்கள் இறைவனிடம் மிகுந்த நற்கூலியை (தான தர்மத்தின் மூலம்)சம்பாதித்துக் கொண்டார்கள். அவர்கள் நாங்கள் தொழுவது போலவே தொழுகிறார்கள்; நாங்கள் நோன்பிருப்பது போலவே நோன்பிருக்கின்றார்கள்; அவர்கள் தங்களது தேவைக்குப் போக மிகுதியாயுள்ள செல்வத்திலிருந்து தர்மம் செய்கிறார்கள்”என்று கூறியபோது, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கும், தான தர்மங்கள் செய்திட தேவையானவைகளைத் தரவில்லையா?” எனக் கேட்டுவிட்டு சொன்னார்கள்,

“உண்மையிலேயே ஒவ்வொரு தஸ்பீஹும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தஹ்மீதும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தஹ்லீலும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல செயலைச் செய்யத் தூண்டுவதும் ஒரு சிறந்த தர்மமாகும். ஒரு தீய செயலைத் தடுப்பதும் ஒரு தர்மமாகும். நீங்கள் உங்கள் மனைவியரோடு வீடு கூடுவதும் ஓர் தர்மமாகும்” என்று கூறினார்கள்.

அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவியிடம் தன் இச்சையை நிறைவு செய்துக்கொள்ளும்போது அதற்காகவும் அவருக்கு நற்கூலி உண்டா?” எனக் கேட்டார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,”இதில் தடுக்கப்பட்ட(விபச்சாரத்)தை செய்பவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீகளா? ஆகவே இதில் ஆகுமான முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கும் நற்கூலி உண்டு” (நூல்: முஸ்லிம்)

இன்னொரு ஹதீஸிலே,

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “தொழுகைக்காக எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொரு அடியும் ஸதகா, பாதையில் இருந்து தீங்கு தருபவற்றை அகற்றுவதும் ஸதகா, உன் சகோதரனைப் பார்த்துப் புன்முறுவல் பூப்பதும் ஸதகா” என்று கூறியுள்ளார்கள்.

“இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்.” (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

ஆக, அன்றாடம் உண்ணும் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் மக்கள்கூட‌ இவ்வாறாக ஸதகாவின் நன்மைகளை அடைந்துக்கொள்வதற்கு இஸ்லாம் அழகிய நல்லொழுக்கங்களை வழிமுறைகளாக ஆக்கிக் கொடுத்திருக்கிறது. அதே சமயம் சஹாபாக்கள் செய்த தர்மங்களிலிருந்தும் இங்கே நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.

அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இவருடைய செல்வம் இஸ்லாத்திற்கு உதவியது போல் வேறு யாருடைய செல்வமும் எனக்கு உதவியதில்லை” என்று கூறினார்கள். அதாவது, தபூக் யுத்தத்தின் போது நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டால் இங்கு பொருத்தமாக இருக்கும்.

தபூக் யுத்தத்திற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருள் சேகரிக்க அறிவிப்பு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னிடம் உள்ள பொருள்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பது வழக்கமான ஒன்று. உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த முறை தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்து, அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை முந்திவிட வேண்டும் என்று நினைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கொடுத்த போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுடைய குடும்பத்தினருக்காக ஏதாவது வைத்துள்ளீர்களா? என்று கேட்கிறார்கள். “சிலதை என்னுடைய குடும்பத்தினருக்காக மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் கொடுத்து விட்டேன்” என பதில் அளிக்கிறார்கள்.

அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கொடுத்த போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கிறார்கள். அப்போது “அல்லாஹ்வும் அவனது தூதரும் எனது குடும்பத்தினருக்குப் போதுமானவர்களாக உள்ளனர்” என்று அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியபோது, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை என்னால் ஒருபோதும் கொடுப்பதில் முந்திவிட முடியாது” என்றார்கள். சஹாபாக்களிடையே கொடுப்பதில் அந்த அளவுக்குப் போட்டி இருந்தது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்…? யாராவது நம்மிடம் உதவி கேட்டு வரும்போது நம்முடைய மணிபர்ஸில் உள்ள பெரிய நோட்டுகளையெல்லாம் விட்டுவிட்டு, சில்லரையாக தேடிப்பிடித்து கொடுக்கக் கூடியவர்களாக உள்ளோம். நம் செல்வம் பிறருக்கு சென்றுவிடா வண்ணம், நம் செல்வத்தோடு கைவிலங்குப் போட்டுக்கொள்வதையே நம்மில் அதிகமானோர் விரும்புகிறோம்.

நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுக்காவிட்டாலும் நம்மால் முடிந்த அளவு தாராளமாக கொடுத்து, அந்த தர்மம் நம் பாவங்களை அழித்து, நரகத்தைவிட்டும் நம்மை தடுக்கக்கூடிய கேடயமாகும்படி ஆக்கிக் கொள்ளவேண்டாமா?

“பேரீத்தம் பழத்தின் ஒரு கீற்றை(தர்மம் செய்வதைக்)கொண்டாவது உன்னை நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பாளர்: அதிய்யுப்னு ஹாதம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

அதாவது, தன்னால் இயன்றது ஒரு பேரீத்தம்பழத்தின் கீற்றுதான் என்றாலும் அதையாவது தானமாக கொடுத்து, நரகத்தை விட்டும் தப்பித்துக் கொள்ளும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்றால், ‘இது நான் சம்பாதித்த சொத்து, என்னுடைய செல்வம், நான் மட்டுமே இதை அனுபவிக்கவேண்டும், இதிலே என்னைத் தவிர யாருக்கும் உரிமையில்லை என்றெல்லாம் எண்ணி, கொடுக்கும் கரங்களைப் பெற்றிருக்கவேண்டிய எத்தனையோ செல்வந்த‌ர்கள், தன்னுடைய செல்வங்களை தன் கரங்களுக்குள் இறுக்கிப் பிடித்தவர்களாக வாழ்கிறார்களே, அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நரக நெருப்பையும் இவர்கள் அஞ்சவேண்டாமா?

ஒரு மனிதன் தான் செய்யும் சில தவறுகளின் காரணத்தினால் மறுமையில் நரகத்திற்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்படும். அந்த நேரத்தில் அவன் தன்னை நரகைவிட்டும் காத்துக்கொள்வதற்கு தர்மத்தை ஒரு துணைச்சாதனமாக அல்லாஹ் ஆக்கி இருக்கிறான். ஒரு பேரீத்தம் பழத் துண்டுகூட சில நேரங்களில் நம்மை நரகை காப்பாற்றும் கேடயமாக அமைந்துவிடும். எனவே அற்பமானது என்று எண்ணி தர்மம் செய்யாமல் இருந்துவிடாமல் நம்மால் முடிந்த அளவு தர்மம் செய்து மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து யாருடைய ஆதரவுமற்ற அந்த‌ மறுமை நாளில் ‘இன்னும் ஏதாவது ஒரு சிறிய நன்மை இருந்தால் போதுமே, அதைக் கொண்டு நரகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமே’ என ஆதங்கப்பட்டாலும், திரும்பி இந்த உலகத்துக்கு வந்தா நாம் தர்மம் செய்து நன்மை தேடமுடியும்? சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

இதுபோன்றவர்களைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறுகிறான், உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! (இன்னும் கொஞ்சம்) குறைந்த காலலமாவது எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே” என்று அப்போது (மனிதன்) கூறுவான். (அல்குர்ஆன் 63:10)

மேலும் அல்லாஹ் தன்னுடைய திருமறையில், “குழந்தைகளும், செல்வங்களும் இந்த உலகத்தில் உங்களுக்கு சோதனைகளாகவே தரப்பட்டுள்ளது” என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 8:28) அந்த சோதனையில் இருந்து தப்பித்து வெற்றிபெற வேண்டுமெனில், அந்தச் செல்வத்தை நம்மால் இயன்றவரை அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்தால் மட்டுமே ஈடேற்றம் பெற முடியும்.

ஆக, ஏழை எளிய மக்களுக்கு நாம் பெரிதாக வீடு வாசல் கட்டி மறுவாழ்வு அளிக்க இயலாவிட்டாலும், அடுத்த வேளை உணவுக்கு அவர்களுக்கு என்ன வழி பண்ணுவோம் என்றாவது நாம் சிந்திக்கவேண்டும்.

    தர்மம் செய்வதால் நம்முடைய செல்வம் குறைந்துவிடுமா?    

நாம் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் மூலம் நம்முடைய செல்வம் குறைந்துவிடுகிறது என சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் வழங்கும் தர்மம் மறுமையில் அல்லாஹ்வால் பல மடங்கு உயர்த்தப்பட்டு மிகப் பெரிய கூலியாக வழங்கப்படும். அல்லாஹ் தன் திருமறையில்,

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 2:261)

ஆக, ஒவ்வொரு முறையும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போது 1வு7வு100=700 மடங்கு நன்மைகளை அல்லாஹ்தஆலா நமக்கு அள்ளித் தருகிறான்.

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீத்தம் பழத்தின் மதிப்புக்கு தர்மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை; அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலது கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரை குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைப்போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

மேலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான தர்மங்கள் செய்பவருக்கான உவமானம்:

“அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன் 2:265)

நம்முடைய செல்வத்தை விசாலப்படுத்த வேண்டுமென்றால், தான தர்மங்கள் செய்ய வேண்டும் என குர்ஆனும் ஹதீஸும் நமக்கு அறிவுறுத்துகின்றன‌. இதை வலுப்படுத்தும் வகையில், அல்லாஹுத்தஆலா நம்முடைய செலவினங்களை தான் கவனித்துக்கொள்வதாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறும் இன்னொரு ஹதீஸ்:

ஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்)என்று அல்லாஹ் சொல்வதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

ஆக, நாம் ஸதகா செய்யும்போது இறைவனும் நமக்கு பொருளாதாரத்தை வழங்குவான். கொடுக்க கொடுக்க நம் செல்வத்தை நாம் அறியாத புறத்திலிருந்து இறைவன் வளர்த்துதான் கொடுப்பானே தவிர, நமது செல்வம் தான தர்மங்களால் குறைவதில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

    தான தர்மங்களை வாரிவழங்குதல்    

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்,

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ரமலான் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ரமலானின் ஒவ்வொரு இரவும் – ரமலான் முடியும்வரை – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திப்பார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாரி வழங்குவார்கள்.” (நூல்: புகாரி)

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே! நன்மைகள் பெருக்கிக் கொடுக்கப்படும் இந்த ரமலானிலும், வருஷத்தின் மற்ற நாட்களிலும் நாம் அல்லாஹ்வின் பாதையில் அதிகமதிகம் செலவு செய்து அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் நன்மைகளை அடைந்துக் கொள்ள முழுமையாக முயற்சி செய்வோமாக!

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb