தர்மம் கைகளையும் காக்கும்
அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வாயிலாக ஓர் செய்தியை தங்களின் ”அல் பிர்ரு வஸ்ஸிலா” எனும் நூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்.
“முன் சென்ற காலத்தில் ஓர் அநியாயக்கார அரசன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்கள் எவரும் தர்மம் செய்யக்கூடாது என்று தடைவிதித்திருந்தான். தடையை மீறுபவர்களின் இரு கைகளையும் துண்டித்து பெரும் தண்டனை வழங்கி தண்டித்து வந்தான்.
இந்நிலையில், ஒரு வீட்டின் முன்னால் நின்று கொண்டு ஒருவர் பசிப்பதாகவும், உணவு வேண்டும் என்றும் யாசித்துக் கொண்டிருந்தார். அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்மனி தங்கள் நாட்டுச் சட்டத்தைக் கூறி தயவு செய்து இங்கிருந்து சென்று விடுங்கள் என்று கூறினார்.
ஆனால், அந்த யாசகரோ, தாம் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டதாகவும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தமக்கு உண்பதற்கு உணவு வழங்குமாறும் வேண்டி நின்றார்.
இளகிய உள்ளம் படைத்த அந்தப் பெண்மனி வீட்டின் உள்ளே சென்று இரண்டு ரொட்டிகளை எடுத்து வந்து பசியால் துடித்துக் கொண்டிருந்த அந்த மனிதரிடம் வழங்கினார்.
அரசரின் அமைச்சர்களுக்கு இது தெரிய வரவே அப்பெண்மனியின் இரு கைகளும் துண்டிக்கப்பட்டது.
சில மாதங்கள் கழித்து அந்த அரசனுக்கு திருமண ஏற்பாடுகள் நடை பெற்றது. எந்தப் பெண்ணும் அரசனுக்கு பிடிக்காமல் போகவே அரசன் தன் தாயிடம் எனக்கு அழகிய பெண்ணைத் திருமணம் செய்து கொடு என்று கூறினான்.
அப்போது, அரசனின் தாய் நான் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணை நமது நாட்டில் பார்த்தேன். அவளை விட அழகான எந்த ஒரு பெண்ணையும் நான் பார்த்ததில்லை என்று கூறி விட்டு, ஆனால், அவளுக்கு ஒரு குறை உண்டு அவளுக்கு இரண்டு கைகளும் இல்லை என்று கூறினாள்.
பரவாயில்லை, அந்தப் பெண்ணையே தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு அரசன் தன் தாயிடம் கூறினாள்.
இறுதியில், அரசனுக்கு அந்தப் பெண்ணைப் பேசி திருமணமும் செய்து வைத்தாள் அந்தத் தாய்.
திருமணம் நடந்த இரவன்று இல்லற வாழ்க்கை முடிந்ததன் பின்னர் தன் மனைவியிடம் ஏன் உனக்கு இரண்டு கைகளும் இல்லை? என்று கேட்டான்.
அப்போது, அந்தப் பெண்மனி மேலே நடந்த அந்த நிகழ்வுகளை விவரித்துக் கூறினாள். கொதித்தெழுந்த அவன் அவளோடு வாழாமல் அவளை கொடுமைப் படுத்தினான்.
சில நாட்கள் கழித்து எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று விட்டான். இல்லற வாழ்வில் ஈடுபட்டதன் விளைவாக அப்பெண்மனி கர்ப்பமானாள். அடுத்த பத்து மாதத்தில் அழகிய ஆண்மகனையும் பெற்றெடுத்தாள்.
போர் முனையில் இருக்கும் தம் மகனுக்கு தாய் ஆசையோடு ஆண் வாரிசு ஒன்று பெற்றெடுத்திருப்பதைக் கடிதத்தின் மூலம் தெரிவித்தாள்.
அரசன் பதில் கடிதம் ஒன்றை எழுதினான். அதில்.. “என் நாட்டின் சட்டத்தை மதிக்காத ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்ததை நான் மறக்க விரும்புகின்றேன். எனவே, அவளையும், அவள் பெற்றெடுத்த ஆண் வாரிசையும் அரண்மனையை விட்டு துரத்தி விடுங்கள் தாயே!” என்று எழுதப் பட்டிருந்தது.
மகனாக இருந்தாலும் அரசன் அல்லவா? அவன் ஆணைக்கிணங்க அப்பெண்மனி பெற்றெடுத்த மகனோடு நாட்டை விட்டு துரத்தப் பட்டாள்.
கண்ணீரோடு அந்தப் பெண் தன் வாரிசை நெஞ்சோடு ஒரு துணியில் வாரி கட்டிக்கொண்டு காட்டின் வழியாக நடந்து வந்தாள்.
பசியும், தாகமும் அவளை வாட்டி வதைக்கவே அங்கும் இங்கும் ஏதாவது கிடைக்காத என ஏங்கித்தவித்தாள்.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு, அங்கே வந்தாள்.
இரு கைகளும் தான் இல்லையே? எப்படி தண்ணீர் குடிக்க முடியும். ஆடு, மாடு குடிப்பது போன்று தலையை தாழ்த்தி ஓடும் நதியில் வாய் வைத்து உறிஞ்சி தண்ணீர் குடித்தாள். கன நேரத்தில் அவள் நெஞ்சோடு கட்டியிருந்த துணி அவிழ்ந்து அதனுள் இருந்த குழந்தை ஓடும் நதிக்குள் விழுந்தது.
துடி துடித்துப்போனாள். செய்வதறியாது திகைத்து நின்றாள். நதிக்குள் விழுந்த குழந்தை நதிக்குள் மூழ்கி இறந்து போனது.
ஆற்றுப் படுகையின் ஓரத்தில் அமர்ந்து அல்லாஹ்விடம் முறையிட்டாள். அப்போது அங்கே இரண்டு மனிதர்கள் வந்தார்கள்.
அழுது கொண்டிருந்த அப்பெண்மனியிடம் அழுகைக்கான காரணத்தை வினவ, அப்பெண்மனி நடந்த சம்பவத்தைக் கூறி அழுதாள்.
அப்போது, அவ்விருவரும் ”பெண்ணே! உனக்கு உன் குழந்தை மீண்டும் உயிருடன் வேண்டுமா?” என்று கேட்க, அவள் ஆம் என்றாள்.
அவ்விருவரும் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அப்போது தான் அந்த ஆச்சர்யம் நடந்தது. எந்த இடத்தில் குழந்தை மூழ்கியதோ அங்கிருந்து அழுகுரலோடு குழந்தை மீண்டும் உயிருடன் வந்தது.
மீண்டும், அவ்விருவரும் ”பெண்ணே! வெட்டப்பட்ட உன் இரு கைகளும், முன்பு போல் உனக்கு வேண்டுமா?” என்று கேட்க, அவள் ஆம் என்றாள்.
அவ்விருவரும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். என்ன ஆச்சர்யம்? முன்பு போல் அவளுக்கு இரு கைகளும் வந்து விட்டது.
இப்போது, அவர்கள் இருவரும் அப்பெண்மனியிடம் ”நாங்கள் இருவரும் யார் தெரியுமா?” என்று கேட்டனர்.
இழந்த இரு கைகளையும், இறந்து போன குழந்தையையும் மீண்டும் கண்ட அந்தப் பெண் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் “தெரியாது” என்று பதில் கூறினாள்.
அப்போது, அவ்விருவரும் ”நாங்கள் இருவரும் தான் நீ இறை திருப்தியை நாடி வழங்கிய இரண்டு ரொட்டிகள், அல்லாஹ் உனக்கு உதவி செய்வதற்காக இப்போது எங்களை இந்த உருவ அமைப்பில் அனுப்பி வைத்தான்” என்று கூறினார்கள்.
(நூல்: கிதாபு அல் பிர்ரு வஸ்ஸிலா லி இமாமி இப்னுல் ஜவ்ஸீ ரஹ்மதுல்லாஹி அலைஹி )