M U S T R E A D
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வை சுவாசிப்போம்!
பஷீர் அஹ்மத் உஸ்மானி
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்கின்றோம்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆசிக்கின்றோம்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது புகழ் பாக்களை பாடுகின்றோம்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியப் படுத்துகின்றோம்!
இதைத்தாண்டி நாம் என்ன செய்திருக்கின்றோம்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விஷயத்தில், என்பதை இதயம் இருக்கிற ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் தன் மனசாட்சியைத் தொட்டு சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கின்றார்.
நபியின் மீதான புகழ் நம் குரல்வளையைத் தாண்டி நம் உள்ளத்திற்குள் ஊடுருவவில்லை.
நபியின் மீதான நேசம் வார்த்தைகளைத் தாண்டி வாழ்வில் வெளிப்பட வில்லை.
நம் வியாபாரத்தில் நபி இல்லை. நம் குடும்ப வாழ்வில் நபி இல்லை.
நம் கொடுக்கல் வாங்கலில் நபி இல்லை. நம் உறவில் நபி இல்லை.
நம் நட்பில் நபி இல்லை. நம் இல்லறத்தில் நபி இல்லை. நம் ஆடையில் நபி இல்லை.
நம் திருமணத்தில் நபி இல்லை.
நம் சிந்தனையில் நபி இல்லை. நம் அறிவில் நபி இல்லை.
நம் அரசியலில் நபி இல்லை. நம் ஆன்மீகத்தில் நபி இல்லை. நம் கலாச்சாரத்தில் நபி இல்லை.
மொத்தத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வோடு நம் உயிரும், நம் உணர்வும், நம் வாழ்வும் இரண்டறக் கலக்கவில்லை.
இப்படி எத்தனையோ இல்லைகளுக்கு நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நம் வாழ்வில் இடம் தந்திருக்கின்றோம்.
ஆனாலும், ”நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயிருக்கு உயிராக, உயிரினும் மேலாக நேசிக்கின்றோம்!?” என்னே ஒரு விந்தை?”
நம் ஈமான் முழுமை பெற வேண்டுமானால் நம் உயிரினும் மேலாக நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதோடு, அவர்களின் முழு வாழ்வையும் நம் வாழ்வில் இரண்டற கலக்கவேண்டும். அவர்களின் வாழ்வை உயிர் மூச்சாக சுவாசிக்க வேண்டும்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:“ஒருவருக்கு தம் குடும்பத்தார், தமது செல்வம், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை “எந்த அடியாரும் அல்லது எந்த மனிதரும், இறை நம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்”. (நூல்: புகாரி )
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
“உங்களில் ஒருவருக்கு நான் கொண்டு வந்த மார்க்கத்தை (என் வழியை) பின்பற்றுவது அவரின் மனவிருப்பமாக ஆகாதவரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன்)
எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வை நம் வாழ்வினில் இரண்டறக் கலந்திடச் செய்யும் பணியில் துரிதமாக ஈடுபடுவோம்!
வாருங்கள்! நபிகளாரின் வாழ்வை சுவாசிப்பதால் ஏற்படும் இன்பங்களையும், சுவாசிப்பதை நிறுத்தினால் ஏற்படும் இடர்களையும் வரலாற்றில் கொஞ்சம் வாசித்து விட்டு வருவோம்!
நபிகளாரின் வார்த்தைகளுக்கு நபித்தோழர்கள் அளித்த முக்கியத்துவம்…
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு முறை ஒருவர் என்னிடம் மறுமை குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ஒரு செய்தியை அப்துல்லாஹ் இப்னு உனைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக என்னிடம் கூறினார்.
அந்தச் செய்தியை நேரடியாக நான் கேட்க விரும்பினேன். ஆகவே, அவர் எங்கிருக்கின்றார் என்று விசாரித்தேன். அவர் ஷாமிலே இருக்கின்றார் என்பதை அறிந்து அங்கு செல்ல ஆயத்தமானேன்.
இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இமாம் அபூ யஃலா அவர்களின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்:
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விரைவாகச் செல்கிற ஒரு ஒட்டகத்தை விலைக்கு வாங்கி, ஒரு மாதகாலம் பயணம் செய்து ஷாம் சென்றார். அப்துல்லாஹ் இப்னு உனைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டை தேடிப்பிடித்து அவரின் வீட்டிற்குச் சென்று தான் வந்த நோக்கத்தை விவரித்துச் சொல்லி விட்டு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறுமையில் பழிவாங்குவது குறித்து கூறிய அந்தச் செய்தியை தமக்கு கூறுமாறு சொன்னார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இதற்காகவா இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தீர்கள்? என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.
அதற்கு ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ஒரு செய்தியை கேட்காமலே இறந்து விடுவதை நான் அஞ்சுகின்றேன்” என்றார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாள் எங்களிடம் மறுமையில் மனிதர்களை அல்லாஹ் நிர்வாணிகளாக எழுப்பி மஹ்ஷரில் நிற்க வைத்திருப்பான். அப்போது, அவர்கள் மிகச் சமீபத்திலே ஒரு சப்தத்தைக் கேட்பார்கள். அது வேறு யாருடைய சப்தமும் அல்ல. அது அல்லாஹ்வின் சப்தமாகும்.
அல்லாஹ் கூறுவான் “நரகம் செல்லும் எந்த நரகவாசியும் சுவனம் செல்கிற சுவனவாசிகளிடம் எதுவும் பழிவாங்க வேண்டியதிருந்தால் பழிவாங்கிக் கொள்ளட்டும். அது போல், “சுவனம் செல்லும் எந்த சுவனவாசியும் நரகம் செல்கிற நரகவாசிகளிடம் எதுவும் பழிவாங்க வேண்டியதிருந்தால் பழிவாங்கிக் கொள்ளட்டும். உலகில் வாழும் காலத்தில் அவர் கையால் ஒரு குத்து குத்தியிருந்தாலும் சரியே! பழிவாங்கிக் கொள்ளட்டும்!” என்று
அப்போது அங்கிருந்த நாங்கள் எவ்வாறு பழிதீர்க்கப்படும்? என்று கேட்டோம். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நன்மைக்கு பகரமாக தீமையையும், தீமைக்குப் பகரமாக நன்மையையும் பெற்று பழிதீர்க்கப்படும்” என்று கூறினார்கள்.
இதன் பின்னர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரிடமிருந்து விடை பெற்று மதீனா வந்து சேர்ந்தார்கள். (நூல்கள்: முஸ்னத் அபூ யஃலா, முஸ்னத் அஹ்மத்)
அதாவு இப்னு அபீ ரபாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்: “அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்கமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருக்கும் ஒரு நபிமொழியைக் கேட்டு வர மதீனாவிலிருந்து மிஸ்ருக்கு பயணமானார்கள்.
மிஸ்ரின் பிரதான தெரு ஒன்றின் வழியில் மஸ்லமா இப்னு மகல்லத் அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது, மஸ்லமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிஸ்ரின் கவர்னராக இருந்தார்கள்.
இருவரும் சந்தித்து முஆனக்கா செய்து, ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
பின்னர், மஸ்லமா ரளியல்லாஹு அன்ஹு அபூஅய்யூப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் என்ன விஷயமாக மிஸ்ர் வந்தீர் என்று வினவ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு செய்தியை அல்கமா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு தெரிந்து வைத்திருக்கின்றாராம். அவரிடம் இருந்து கேட்டுச் சென்றிடவே இங்கு வந்தேன்” என்றார்களாம். இது கேட்ட வியந்து போன மஸ்லமா ரளியல்லாஹு அன்ஹு தானும் உங்களோடு வருகின்றேன் என்று கூறி அவர்களோடு சேர்ந்து அல்கமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.
இருவரும் அல்கமா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து, தாங்கள் இருவரும் வந்த நோக்கத்தை வெளிப்படுத்தினர்.
அல்கமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “எவர் ஒரு இறைநம்பிக்கையாளனின் குறையை உலகில் மறைக்கின்றாரோ, அவரின் குறையை அல்லாஹ் மறுமையில் மறைப்பான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்” என்று கூறினார்கள்.
உடனடியாக, அங்கிருந்து அவ்விருவரிடமும் விடை பெற்று விட்டு ஒரு நிமிடம் கூட மிஸ்ரில் தங்காமல் மதீனா திரும்பினார்கள் அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். (முஸ்னத் அஹ்மத்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் நபித்தோழர்கள் அளித்த முக்கியத்துவம்ஸ
இதோ அவர்களின் வாழ்க்கைச் சுவடுகளில் சில..
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் ஒரு நாள் அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்திக்க வந்தார்கள்.
வந்தவர்கள் “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் வழங்கப்பட்ட குமுஸ் எனும் பங்கின் பிரகாரம் கைபர், மற்றும் ஃபிதக்கில் நிலங்கள் இருக்கிறது. அதை தனக்கு தரவேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்கள்.
அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை தர மறுத்ததோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”நாம் விட்டுச் சொல்கிற எதற்கும் நாம் யாரையும் வாரிசாக விட்டுச் செல்லவில்லை” என்று கூற நான் கேட்டிருக்கின்றேன் என்று சொல்லி விட்டு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொன்னார்களோ, எதைச் செய்தார்களோ அதைத் தவிர வேறொன்றையும் நான் செய்ய்ப்போவதில்லை, சொல்லப்போவதில்லை. மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் இருந்து எந்த ஒன்றையாவது நான் விட்டு விட்டாலும் வழிகேட்டில் சென்று விடுவோனோ எனும் அச்சம் எனக்கு மிகுதியாக இருக்கிறது” என பதில் கூறினார்கள்.
அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அங்கிருந்து வெளியேறும் போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது கோபமடைந்த நிலையில் வெளியேறினார்கள். அதன் பின்னர் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களோடு பேசுவதை தவிர்த்து வந்தார்கள்.
அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நோய்வாய்ப்பட்டு மரண தருவாயில் இருக்கும் போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். அப்போது தான் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களோடு பேசினார்கள். மேலும், அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் என் மீது கோபம் கொண்டவர்களாக நான் உங்களைக் காண்கின்றேன். என் மீதான கோபத்தை விலக்கி என்னைத் தாங்கள் பொருந்திக் கொள்ளவேண்டும்” என்று கூறினார்கள்.
பின்னர், ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள். (நூல்: அல் அவாஸிம் மினல் கவாஸிம், பக்கம் 38 )
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது நாங்கள் நாட்டுக் கழுதை யொன்றை பெற்று அதனை சமைத்தோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப் பாளரில் ஒருவர் வந்து அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும், நாட்டுக் கழுதையை உண்பதை விட்டும் உங்களை தடை செய்கிறார்கள். நிச்சயமாக அது ஷைத்தானின் அசுத்தமான செயலில் உள்ளவை எனக் கூறினார். உடனே இறைச்சி கொதித்துக் கொண்டிருக்கும் போதே பாத்திரங்கள் கவிழ்த்தப் (கீழே கொட்டப்) பட்டன. (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம் )
நான் (என் தந்தை) அபூ தல்ஹாவின் வீட்டிலுள்ள மக்களுக்கு மது பரிமாறிக் கொண்டிருந்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்பாளர் ஒருவர் (வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டு) அறிந்து கொள்ளுங்கள் மது ஹராமாக்கப்பட்டு விட்டது’ எனக் கூறினார்.
உடனே அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு என்னை அழைத்து வெளியில் என்ன சப்தம் என்று பார்த்து விட்டு வா என என்னிடம் கூறினார். நான் வெளியில் வந்து பார்த்து விட்டு அழைப் பாளரின் செய்தியை எடுத்துச் சொன்னேன். அப்போது அவர்கள் போய் மதுவை கீழே கொட்டி விடு எனக் கூறினார். நானும் மதுவை கொட்டிவிட அது மதீனாவின் பாதையில் ஓடிக் கொண்டிருந்தது.
(மது ஹராம் என்று அந்த மனிதரின் செய்தி சொல்லப்பட்ட பின் அது பற்றி எக்கேள்வியும் கேட்காது அதிலிருந்து பின்வாங்காது அப்படியே கொட்டி விட்டார்கள்) என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம் )
அப்துர்ரஹ்மான் இப்னு அபீ லைலா ரளியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாள் மிம்பரில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது, பேச்சின் ஊடாக எல்லோரும் அமருங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது, பள்ளிவாசலுக்கு வந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காதில் இந்த ஆணை விழுந்ததும், வந்த வழியிலேயே அப்படியே அமர்ந்து விட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்தி முடித்ததும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறித்து சொல்லப்பட்டதும் “அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்ற விஷயத்தில் அவர் பேரார்வம் கொண்டவராக இருக்கவே நான் காண்கின்றேன். அல்லாஹ் அவருக்கு அவரின் பேரார்வத்தை அதிகப்படுத்தித் தருவானாக!” என்று வாழ்த்திப் பேசி துஆ செய்தார்கள். (நூல்: இப்னு அஸாக்கிர்)
ஹுதைபிய்யாவில் ஸஹாபாக்களோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கிக் கொண்டு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை குறைஷித் தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடத்திட அனுப்பி வைத்தார்கள்.
போன உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் திரும்பி வரவில்லை. அப்போது, அங்கிருந்த ஸஹாபாக்கள் “நாமெல்லாம் கஅபாவைத் தரிசிக்காமலே, தவாஃபு செய்யாமலே திரும்பப் போகின்றோம்! ஆனால், உஸ்மான் அப்படியல்ல கண்டிப்பாக நம்மையெல்லாம் விட்டுவிட்டு அவர் மட்டும் கஅபாவைத் தரிசித்து, தவாஃபும் செய்து விடுவார்” என்றார்கள்.
அப்போது, நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”உஸ்மான் அப்படிப்பட்டவரல்ல! நாம் இப்படி இங்கே இந்த நிலையில் இருக்கும் போது அங்கே அவர் ஒரு போதும் தவாஃப் செய்ய மாட்டார்கள்” என்றார்கள்.
அதற்கு, ஏன் அப்படிச் சொல்கின்றீர்கள்? அவர் தவாஃப் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறதல்லவா?” என்று மீண்டும் கூறஸ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நான் அவர் பற்றியுண்டான அபிப்பிராயத்தை இவ்வாறே வைத்திருக்கின்றேன்!” அவர் நம்மோடு இணைந்து தான் தவாஃப் செய்வாறே தவிர நம்மை விட்டுவிட்டு தவாஃப் செய்ய விரும்ப மாட்டார்!” என்று பதில் கூறினார்கள்.
இதனிடையே உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்த நிகழ்வுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது, ஸஹாபாக்கள் “என்ன உஸ்மான் கஅபாவை தவாஃப் செய்தீர்களா? நாங்கள் உங்களோடு இல்லாத நிலையில் அதை உங்கள் மனது திருப்தி கொண்டதா?” என்று வினவ,
அதற்கு, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “என்னைப் பற்றி நீங்கள் விளங்கி வைத்திருப்பதெல்லாம் இவ்வளவு தானா?
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் இங்கே இப்படி இருக்க ஓர் ஆண்டு நான் மக்காவில் தங்க நேரிட்டாலும், அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவாஃப் செய்யாமல் ஒரு போதும் நான் தவாஃப் செய்ய மாட்டேன்! என்னை குறைஷ்கள் தவாஃப் செய்ய அனுமதித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் தான் முதலில் தவாஃப் செய்யவேண்டும். அதன் பின்னர் தான் நாங்கள் தவாஃப் செய்வோம்! என்று கூறி மறுத்து விட்டேன்” என்றார்கள்.
அப்போது, நபித்தோழர்கள் “ நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மிமில் ஒவ்வொருவரையும் குறித்து நாம் எண்ணியிருப்பதை விட அதிகம் உயர்வாகவே கருதியிருக்கின்றார்கள்” என்றார்கள். (நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா )
இமாம் இப்றாஹீம் இப்னு ஹானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள்:
“இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மூன்று நாட்கள் என்னிடம் எனது பாதுகாப்பின் கீழ் மறைந்திருந்தார்கள். அதன் பின் “நான் இடம் மாறி இருப்ப தற்கு வேறொரு இடத்தைப் பார்” என்று என்னிடம் இமாம வர்கள் கூறினார்கள். அப்போது நான் வேறொரு இடத் தில் உங்களுக்கு பாதுகாப்பு வழங்க எனக்கு முடியாது. வேறொரு இடம் கிடைத்ததும் உங்களுக்குச் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு, அவருக்காக (பொருத்தமான) இடத்தினைப் பார்த்து சொன்னேன்.
அவர்கள் என் வீட்டி லிருந்து வெளியேறும்போது “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் மூன்று நாட்கள் தங்கி விட்டு இடம் மாறினார்கள். செழிப்பிலும் கஷ்டத்திலும் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை (ஸுன்னாவை) நாம் பின் பற்றுவதே போதுமானதாகும்” எனக் கூறினார்கள். (நூல்: அல் மன்ஹஜுல் அஹ்மத், 1 \ 91, )
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வு சுவாசமாக மாறிப்போனால்…
அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு ஆட்சிக்காலம் ரோமர்களை எதிர்த்துப் போரிட கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு ஒரு படைப்பிரிவை அனுப்பினார்கள்.
இக்கட்டான ஒரு தருணம் அந்த நேரத்தில் காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தனர் முஸ்லிம் படையினர். ரோமப் படையினரின் எண்ணிக்கை 4 லட்சம், முஸ்லிம் படையினரின் எண்ணிக்கை எதிரிகளின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு சதவீதம் தான் ஆம்! 46 ஆயிரம் தான்.
ஹிஜ்ரி 8 –இல் தான் இஸ்லாத்தில் இணைந்திருந்தார் காலித் (ரலி) அவர்கள். அதற்கு முன்பு வரை அண்ணலாருடன் நெருங்கிப் பழகிடும் வாய்ப்பைப் பெற்றதில்லை. இஸ்லாத்திற்கு முன்னரும், பின்னரும் தான் பல படைகளை வழி நடத்திய அனுபவம் இருக்கின்றது என்கிற சிந்தனையை முன்னிறுத்தவில்லை.
என்றாலும் காலித் ரளியல்லாஹு அன்ஹு இது போன்ற இக்கட்டான யுத்த நேரங்களில், பத்ர், அஹ்ஸாப், கைபர் போன்ற யுத்த காலங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன செய்தார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தார். இறுதியில் வழியையும் கண்டு பிடித்தார்.
ஆம்! அண்ணலார் இது போன்ற தருணங்களில் ஆலோசனை மன்றத்தை அமைத்து, அங்கிருந்து பெறுகின்ற தகுதியான ஆலோசனையின் அடிப்படையில் யுத்தத்தை நடத்தி வெற்றிக் குரியதாய் மாற்றியிருந்ததை அப்படியே இங்கேயும் பின்பற்றினார்.
இஸ்லாத்திற்கு முன்னரும், பின்னரும் தான் பல படைகளை வழி நடத்திய அனுபவம் இருக்கின்றது என்கிற சிந்தனையை முன்னிறுத்தவில்லை. மாறாக, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைக்கு முன்னுரிமை வழங்கினார்கள்.
ரோமப்படைகள் பின் வாங்கி ஓடிய வரலாற்றுப் பதிவை உண்டாக்கினார் காலித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
இதோ அந்த யுத்த களத்தின் பகுதிகள் விரிவாக…
ரோமப் பேரரசர் சீஸர் “முஸ்லிம்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். அந்தப் பாடத்தை முஸ்லிம்களின் சந்ததியினர் எவரும் எளிதில் மறந்து விடக்கூடாது. எனும் சூளுரையோடு தகுதியும் ஆற்றலும் நிறைந்த பல தளபதிகளின் தலைமையில் சுமார் 4 லட்சம் போர் வீரர்களை அனுப்பி வைக்கிறார்.
ஃகலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலம், கொஞ்சம் கொஞ்சமாக அந்நிய மண்ணில் இஸ்லாம் பரவிக்கொண்டிருக்கின்றது.
ரோமை நோக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பி, ரோமர்களுக்கு சத்தியதீனின் அறிவை எத்திவைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானித்து, அதற்கான ஆயத்தப்பணிகளில் கலீஃபா அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
ரோமை நோக்கி முஸ்லிம்கள் படையெடுத்து வரப்போகிறார்கள் எனும் செய்தியை அறிந்து கொண்ட சீஸர் தன் முக்கிய மந்திரிப் பிரதாணிகளிடம் ஆலோசனைக் கேட்டபோது தான், மேலே சொன்ன சூளுரையை அத்துணை மந்திரிகளும் முன் மொழிந்தனர்.
அதற்கு இசைந்த சீஸர் இப்போது 4 லட்சம் வீரர்களுடன் பெரும்படையை அனுப்பி வைத்தார். படை புறப்பட்டு யர்மூக் எனும் நதிக்கரையின் ஒரு பக்கத்திலே முகாமிட்டு இருந்தனர்.
ஃகலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இந்த விஷயம் எத்திவைக்கப் பட்டது. உடனடியாக சுறுசுறுப்புடன் இயங்க ஆரம்பித்தார்.
ஈராக் மற்றும் சிரியா போன்ற பகுதிகளை வெற்றி கொண்டு திரும்பி மதீனா நோக்கி வந்து கொண்டிருந்த அபூ உபைதா அல் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு, முஆவியா இப்னு அபீ சுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு, யஸீத் இப்னு அபீ சுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு, அம்ர் இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் தலைமையிலான படைப்பிரிவுக்கு கடிதம் மூலம் உடனடியாக ரோம் நோக்கிச் செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.
ஈரானிற்கும் இராக்கிற்கும் இடையே உள்ள கைரா எனும் இடத்தில் தமது சக உதவித் தளபதிகளான தரார் இப்னு அஸ்வர் ரளியல்லாஹு அன்ஹு, கஃகாஃ இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரை அருகிலிருக்கும் ஓர் பகுதிக்கு அனுப்பி வைத்து விட்டு அவர்களின் வருகைக்காக காத்து இருந்த தலைமைத் தளபதி காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஆட்சித்தலைவர் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், கடிதம் மூலம் ரோமப்படைகளை எதிர் கொள்ள இஸ்லாமியப் படையுடன் தங்களின் படையையும் இணைத்துக் கொள்ளுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.
இறுதியாக யர்மூக் நதியின் இன்னொரு பக்கத்தில் ஒட்டு மொத்த இஸ்லாமியப் படையினரும் முகாமிட்டிருந்தனர்.
எதிரிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் எந்த வகையிலும் முஸ்லிம்படை வலுவானதாக இருக்கவில்லை.
நிலைமை ரொம்பவும் மோசமாக இருந்தது. ஆம்! மொத்தப்படையையும் சேர்த்து 46 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தனர்.
அத்துணை தளபதிகளும் உடனடியாக ஆலோசனை மன்றத்திற்குள் ஆஜராகுமாறு கட்டளையிட்டார் ”ஸைஃபுல்லாஹ்” காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
ஆலோசனை மன்றம் இயங்க ஆரம்பித்ததும் ஒருவர் பின் ஒருவராக தங்களது ஆலோசனைகளை கூறினார்கள். ரொம்பக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் காலித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
தங்களுடைய ஆலோசனையின் முறைவரும் போது காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “தோழர்களே! உங்களின் ஒவ்வொருவரின் கருத்துக்களும் மிகவும் பின்பற்றப்பட வேண்டியதே! ஆனால், நாம் இன்னும் மிக வேகமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய முக்கியமானச் சூழ்நிலையில் தள்ளப் பட்டிருக்கின்றோம்.
நமக்கு அவர்களை எதிர் கொள்ள எண்ணிக்கை ஒன்றும் பெரிய விஷயமல்ல. வலிமையுடன் கூடிய நல்ல செயல்திட்டங்கள் தான் இப்போது நமக்குத் தேவை.
நம்மில் ஒவ்வொரு தளபதியும் வெவ்வேறு வகையில் ஆற்றல் மிக்கவர்கள். ஆதலால் ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு தளபதியின் கீழ் போரிடுவோம். அத்துணை தளபதிகளுக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களுடன் களத்தில் போராடுகிற போது, மிக விரைவில் எதிரிகளிடம் இருந்து வெற்றியை நம் வசமாக்கி விடலாம்.” என்று கூறினார்.
அத்துணை தளபதிகளும் காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் முடிவை ஆமோதித்தனர். இறுதியாக முதல் நாள் போரை காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையிலேயே எதிர் கொள்வது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
முதல் நாள் போர் துவங்க சில மணித்துளிகளே இருந்த போது படை வீரர்கள் முன் தோன்றிய காலித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹ்வைப் புகழ்ந்து பின்னர் என்னருமைத் தோழர்களே! இந்த நாள் அல்லாஹ் நம் வாழ்வில் வழங்கிய சிறப்புமிக்க நாள்!
இன்றைய தினத்தில் நம் முரட்டுத்தனம், பாரம்பரிய குலப்பெருமைகள் ஆகியவகளுக்கு துளியளவு கூட இடமில்லை.
என்னருமைத் தோழர்களே! அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை முழு மூச்சாகக் கொண்டு போரிடுங்கள்!
இன்று நம் படைக்கு மிகப்பெரும் தளபதிகள் பலர் பொறுப்பேற்றுள்ளனர். ஒருவர்பின் ஒருவராக உங்களை வழி நடத்த உள்ளனர். அவர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்கள்.
உங்கள் தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க நீங்களும், நானும் உதவிடவும் நம்மை பாதுகாக்கவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன். என்று வீர உரை நிகழ்த்தினார்கள்.
பின்னர் யர்மூக் யுத்தத்தின் முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் மாறிப்போனதை, முஸ்லிம்கள் அடைந்த இமாலய வெற்றியாய் பதிவு செய்யப்பட்டதை வரலாறு சான்றுரைத்துக் கொண்டிருக்கின்றது.
இக்கட்டான நேரத்தில் காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணலாரின் வழி நின்று எடுத்த வேகமான முடிவும், அதனைக் கையாண்ட விதமும் 4 லட்சம் போர் வீரர்களைக் கொண்ட வல்லரசு ரோம் ஆட்டம் கண்டது. யுத்த களத்தில் ரோமபுரி வீரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
வெறும் 46 ஆயிரம் வீரர்கள் கொண்ட ஒரு சிறுபடை பென்னம் பெரும் படையை வீழ்த்தி வெற்றி வாகை சூடியதாக வரலாற்றில் தனக்கான வலுவான இடத்தையும், முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத சக்திகள் என உலகிற்கும் உணர்த்தியது.
நம்முடைய நிலை எங்கே? நபித்தோழர்களின் நிலை எங்கே? அந்த ஒரு ஹதீஸின் படி வாழ முடியாமல் போன குற்றத்துக்கு ஆளாகி விடுவோமோ என்கிற அச்சமும், அதே நிலையில் இறந்து போய் விடக் கூடாது என்கிற பயமும் அவர்களை ஆட்கொண்டதால் அவர்கள் இவ்வாறெல்லாம் வாழ்ந்திருக்கின்றார்கள்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதான நேசத்தை மிக உயர்வாய் வெளிப்படுத்துவோம்!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வை அண்ணலாரின் அன்புத் தோழர்கள் சுவாசித்தது போன்று சுவாசிப்போம்!
அல்லாஹ் நம் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயிரினும் மேலாக நேசிப்பதற்கும், அவர்களின் வாழ்வை சுவாசிப்பதற்கும் தௌஃபீக் நல்குவானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
source: http://vellimedaiplus.blogspot.in/2015/12/blog-post_24.html