இன்பமும் துன்பமும் நன்மையாய் அமைந்திட!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:
”ஓர் இறை நம்பிக்கையாளனின் விவகாரம் குறித்து நான் ஆச்சரியம் அடைகிறேன்.
அவனுடைய ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது.
இது ஒரு நம்பிக்கையாளனுக்கே அன்றி வேறெவருக்கும் வாய்க்கப் பெறவில்லை!
அவனுக்கு மகிழ்வு நிலை வந்தால் நன்றி செலுத்துகிறான்.
அது அவனுக்கு நன்மையாக அமைகிறது.
அவனுக்கு கஷ்ட நிலை வந்தால் பொறுமை காக்கிறான்.
அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது!’ (அறிவிப்பாளர்: ஸுஹைப் பின் ஸினான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைநம்பிக்கையாளரின் நிலைமை குறித்து வியப்பை வெளிப்படுத்தியது அவரைச் சிறப்பிக்கும் வகையில்தான்! அவரது இறைநம்பிக்கையையும் அதிலிருந்து மலரும் வாழ்க்கைப் போக்கையும் திருப்பங்களையும் மெச்சிப் பாராட்டியே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அவனது ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது என்று!
தொடர்ந்து அதற்கு விளக்கமும் தந்தார்கள். மனித வாழ்வில் இறைவன் நிர்ணயித்த விதி என்பது – இன்பம் துன்பம் இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும். இவற்றை எதிர்கொள்ளும் விதத்தில் மனிதர்கள் இருவகையாய்ப் பிரிகின்றனர். நம்பிக்கையாளன் என்றும் நிராகரிப்பாளன் என்றும்!
ஏக இறைவன்மீது நம்பிக்கை கொண்டு வாழ்க்கையில் எது ஏற்பட்டாலும் அது இறைவன் நிர்ணயித்ததுதான் என்று நம்பி செயல்படுபவன் நம்பிக்கையாளன்.
வாழ்க்கையில் சிலபொழுது மகிழ்ச்சியும் இன்பமும் அவனை வந்தடைகின்றன. போதிய வசதி வாய்ப்புகள், கண்குளிர்ச்சியான மனைவி – மக்கள், கண்ணியம் காக்கும் உறவுகள் ஆகியவை கிடைக்கின்றன. இவை யாவும் உலக ரீதியான அருட்பேறுகள். இதேபோல் நற்கல்வியும் நல்லமல் செய்யும் நற்பேறும் கிட்டுகிறது. இவை மார்க்க ரீதியான அருட்கொடைகள்!
இத்தகைய மகிழ்வான நேரங்களில் இறை நம்பிக்கையாளன் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, அவனுக்கு நன்றி செலுத்துகிறான்.
சில நேரத்தில் வாழ்வில் கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டு துன்பங்கள் வந்து சூழ்ந்து கொள்கின்றன. அப்பொழுது அவற்றை அவன் பொறுமையோடு தாங்கிக் கொள்கிறான். அதற்கான கூலியையும் இன்பநிலையையும் இறைவனிடமிருந்து எதிர்பார்க்கிறான்.
இவ்வாறு பொறுமை, நன்றி எனும் இவ்விரு பண்புகளும் இறை நம்பிக்கையாளனின் வாழ்க்கையை அலங்கரிக்கும் இரு அணிகலன்களாகும். மனஇச்சைகளும் மாயைகளும் நிறைந்த இவ்வுலக வாழ்வில் இலட்சியத்தை நோக்கிய அவனது பயணம் தொடர இருதுருப்புகளாய் அவை பயன்பட்டு மறுமை வெற்றிக்கும் வழிவகுத்துக் கொடுக்கின்றன. எவ்வாறெனில் –
நன்றிக்கு பின்வரும் இறைவசனம் குறிப்பிடுவது போன்று இறையருட் கொடைகளை மேலும் மேலும் ஈர்த்து வரும் ஆற்றலுள்ளது:’ நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் உங்களுக்கு மேலும் மேலும் வழங்குவேன்’ (அல்குர்ஆன் 14 : 17)
பொறுமைக்குக் கிடைக்கும் நற்கூலிக்கோ அளவே இல்லை. குர்ஆன் ஓரிடத்தில் குறிப்பிடுவது போன்று: ‘பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றி – நிறைவாய் வழங்கப்படும்’ (அல்குர்ஆன் 39 : 10)
இறைநிராகரிப்பாளனின் நிலையோ இதற்கு நேர்மாறானது. வாழ்வில் அவனுக்கு மகிழ்ச்சி வந்தால் மமதை கொள்கிறான். நமக்கு என்றைக்கும் நற்பேறுதான். நம்மைபோல் உலகில் யாருண்டு என்று ஆணவம் பேசுகிறான். அளவுக்கதிகமாய் பூரித்துப் போகிறான்! இந்த இறுமாப்பு இறை நினைவை விட்டும் அவனைத் திசைதிருப்பும் சாபக்கேடாக அமைகிறது!
இதேபோல் துன்பம் வரும்பொழுது பொறுமை இழந்து பதறித் துடிக்கிறான். ஐயோ! அழிவு காலம் வந்துவிட்டதே என்று கூப்பாடு போடுகிறான் -இப்படிக் காலத்தையும் நேரத்தையும் ஏச அது, இறைவனை ஏசுவதாக ஆகிறது. ஏனெனில் இரவையும் பகலையும் சுழலச்செய்து காலத்தை உருவாக்குபவன் இறைவன்தானே!
இந்நபிமொழி இறைநம்பிக்கைக்கு ஆர்வமூட்டுவதுடன் உள்ளத்தில் விசுவாசம் உள்ளதென்பதற்கு பொறுமை ஓர் அடையாளம் என்றும் உணர்த்துகிறது!
நீங்கள் இறைநம்பிக்கையாளர் எனில், துன்பம் நேரும்பொழுது மனம் சஞ்சலம் அடையாமல் பொறுமையுடன் இருக்கவேண்டும். மாறாக உங்கள் மனம் பொறுமை இழந்து பதறிப் பரிதவித்தால் உங்கள் இறைநம்பிக்கை பலவீனம் அடைந்துள்ளது, பழுதுபட்டுள்ளது என்பதற்கு அது அடையாளமாகும். உடனே நீங்கள் பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுவதுடன் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு உங்கள் மனத்தைப் பக்குவப்படுத்திட வேண்டும். (அறிப்பாளர் அறிமுகம்- ஸுஹைப் பின் ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்)
ஸுஹைப் பின் ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரோம் நாட்டைச் சேர்ந்தவர். ஆரம்ப நாட்களிலேயே இஸ்லாத்தைத் தழுவிய நபித்தோழர்களில் குறிப்பிடத்தக்கவர். இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணியில் ஈடுபட்டதற்காக மக்காவில் எதிரிகளால் தொல்லைக்கும் தண்டனைக்கும் ஆளாக்கப்பட்டு பிறகு மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அப்பொழுது வியாபாரத்தில் ஈட்டிய பெரும் செல்வத்தை மக்காவிலேயே விட்டு விடும்படியாக ஆயிற்று! அவர்களது தியாகத்தைச் சிறப்பிக்கும் வகையிலேயே இந்த இறைவசனம் இறக்கியருளப்பட்டது: (மக்களில் இப்படியும் ஒருவர் இருக்கிறார்: அவர் அல்லாஹ்வின் திருப்தியைத் தேடித் தன் வாழ்வையே அர்ப்பணித்து விடுகிறார்!) – இவர்கள் ஏராளமான நபிமொழிகளை மனனம் செய்திருந்தார்கள். பெரும் எண்ணிக்கையிலான தாபிஈன்கள் இவர்களிடம் இருந்து நபிமொழிகளை அறிவித்துள்ளனர். ஹிஜ்ரி 80 ஆம் ஆண்டு மதீனாவில் மரணம் அடைந்தார்கள்!
-இஸ்லாம் குரல்