ஊனமாக்கும் ஊடகங்கள்!
சக மனிதன் மீதான கரிசனை நீர்த்துப் போகும்போது மானுடம் தனது அர்த்தத்தை இழந்து விடுகிறது. சக மனிதன் மீதான அன்பும், அக்கறையும் இன்று பலவீனப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பம் உறவுகளை வெறும் டிஜிடல் தகவல்களால் இணைக்க முயல்வதே அதன் முக்கிய காரணம்.
சமூகத்தில் தன்னை விட இளைத்தவர்கள் மீது வலிமையானவர்கள் நடத்தும் வன்முறை கற்காலத்துக்கு நம்மை கடத்திச் செல்கிறது. வலிமையானவன் வெல்வான் என்பது குகைக் கால வரலாறு. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சி, நம்மை குகைக்குள் குடியிருக்க வைக்கிறதா?
பெண்கள் சமூகத்தின் கண்கள். பெண்கள் தான் வாழ்க்கையை அழகாக்குகிறார்கள். பெண்கள் குடியிருக்கும் வீடுகள் தான் அன்பினால் நிரம்பி வழிகின்றன. பெண்கள் கலந்திருக்கும் சமூகம் தான் நிறைவை அடைகிறது. பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. மனித அன்பின் உச்ச நிலையான தாயும் சரி, மனித வாழ்க்கையின் மகத்துவமான மகளும் சரி, மனித பயணத்தின் மகிழ்வான மனைவியும் சரி பெண்மையின் வைர வடிவங்களே. ஆனால் அந்தப் பெண்கள் இன்று ஆண்களின் கரங்களில் சிக்கி அழிவதைக் காணும்போது சமூகம் அவமானப்படுகிறது.
டெல்லியில் கூட்டுப் பாலியல் வன்முறை ஒரு பெண்ணின் மீது நிகழ்த்தப்பட்ட போது இந்திய தேசம் கொந்தளித்தது. வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ ஆயிரம் இத்தகைய வன்கொடுமைகள் இந்தியாவின் ஒவ்வோர் மாநிலத்திலும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. சமீபத்தில் இலங்கையில் ஒரு பதின் வயதுச் சிறுமியின் மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் வெறியாட்டம் ஆன்மாக்களை அதிர வைத்திருக்கிறது. மலரினும் மெல்லியள் என கவிதையில் பெண்ணைப் பாராட்டி விட்டு, மோகத்தின் பூட்ஸ் கால்களால் அவர்களை நசுக்குவதைக் காண்கையில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்றே இதயம் கதறுகிறது.
தன் சகோதரிக்கு இழைக்கப்பட்ட கொடுமை கண்டு பதறித் தவிக்க வேண்டிய சமூகம் அதை படமெடுத்து ஃபேஸ் புக் ஸ்டேட்டஸ்களாகவோ, வாட்ஸப் தகவல்களாகவோ அனுப்பிக் கொண்டிருக்கிறது. வன்கொடுமை நடப்பதைக் கண்டதும் பதறிப் போய் தடுக்க வேண்டிய கைகள் இன்று ஸ்மார்ட் போன்களில் படம் பிடிப்பதையே முதல் வேலையாய்ச் செய்கின்றன. புலிக் கூட்டில் விழுந்து விட்ட வாலிபனை மீட்காமல் அவனை புலி என்ன செய்கிறது என படம் எடுத்துக் கொண்டிருந்த அவமானச் சமூகமல்லவா இது !
அதைத் தான் ஊடகங்களும் செய்கின்றன. வன்கொடுமைக்கு ஆளான சகோதரியை அவளுடைய வரலாறை முழுக்க முழுக்க பதிவு செய்தும், திரும்பத் திரும்ப அந்த நிகழ்ச்சிகளைக் காட்டியும், குறுப்படங்களில் தலைகுனிய வைத்தும், மேலும் மேலும் அவளை அழித்துக் கொண்டிருக்கின்றன. துபாய் போன்ற நாடுகளில் ஒரு விபத்துப் படத்தைக் கூட பத்திரிகையில் போட அனுமதி இல்லை. ஆனால் சுதந்திரத்தில் திளைக்கும் நமது தேசங்கள் தான் “பிரேக்கிங் நியூஸ்” போட்டுப் போட்டு மனசாட்சியே இல்லாமல் குடும்பத்தினரை மீளாத் துயரத்தில் இறக்கி விடுகின்றன.
அத்துடன் ஊடகங்கள் நிற்பதில்லை. “இந்த வன்கொடுமைக்கு அந்தப் பெண் அணிந்திருந்த மிடி தான் காரணமா ?” என நான்கைந்து பேரை வைத்துக் கொண்டு விவாதம் எனும் பெயரில் சமூகம் இழைத்த கொடுமைக்கு அந்தப் பெண்ணையே குற்றவாளியாக்கியும் விடுகின்றனர். வெட்கம் கெட்ட சில தலைவர்கள் “பெண்கள் தவறிழைக்கத் தூண்டினால் ஆண்கள் என்ன செய்வார்கள்” என குரூரப் பேட்டிகளையும் தவறாமல் கொடுக்கின்றனர்.
ஒரு பெண்ணை சகோதரியாகவோ, மகளாகவோ, தாயாகவோ பார்க்கத் தெரியாத மனிதன் இந்த பூமியின் சாபக்கேடு. அத்தகைய பிழைகளுக்கு ஒத்து ஊதும் தலைவர்கள் மனுக்குலத்தின் வெட்கக்கேடு.
ஒரு அதிரடியானத் தகவல் தங்கள் ஊடகத்தின் வீச்சை அதிகரிக்கும், ரேட்டிங்கை எகிறச் செய்யும் என்பதற்காக மனிதாபிமானத்தைக் கழற்றி வைத்து விட்டு நாள் முழுதும் நீட்டி முழக்கும் ஊடகங்கள் சற்றே நிதானித்துச் சிந்திக்க வேண்டும்.
தங்களுடைய நோக்கம் கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் எனும் நோக்கில் இருக்கிறதா ? இல்லை ஊடகத்திற்குத் தீனி போடவேண்டும் எனும் நிலையில் இருக்கிறதா ?. ஒருவேளை இத்தகைய கொடுமை நமது இல்லத்தில் நிகழ்ந்தால் இதே நிகழ்ச்சியை இப்படித் தான் கையாள்வோமா ? இல்லை கண்ணீரோடு பதிவு செய்வோமா ? போன்ற சில அடிப்படை கேள்விகளை எழுப்ப வேண்டும். சரியானதை, சரியான நேரத்தில், சரியான விதத்தில் செய்யும் சமூகப் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.
கான்பூர் இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஒரு குரங்கு செயலிழந்து விழுந்தது. பதறிப் போன இன்னொரு குரங்கு அதை உலுக்கி, அடித்து, தண்ணீர் தெளித்து, கதறி நீண்ட நெடிய இருபது நிமிட போராட்டத்துக்குப் பின் அதை உயிருடன் மீட்டது. ஒரு குரங்கு தனது சக குரங்கின் மீது காட்டிய பரிவும், அக்கறையும், அன்பும் மனித குலத்துக்கான பாடமல்லவா ? ஆறாவது அறிவு ஆபத்தானதா ? ஐந்தறிவே அற்புதமா ?
நிறுத்தி நிதானிப்போம். வாழ்க்கை என்பது நமது ஸ்மார்ட்போன்களில் இல்லை. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களில் இல்லை. நமது உறவு என்பது வாட்ஸப் தகவல்களில் இல்லை. ஐம்புலன்களின் உரையாடலில் இருக்கிறது. கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி உறவுகளை வளர்ப்போம். வலையில் சிக்கிய பறவை சிறகை இழக்கிறது. இணைய வலையில் சிக்கிய மனிதர்கள் உறவை இழக்கிறார்கள். உணர்வோடு இணைந்து வாழ்பவர்களுக்கு அடுத்தவர்களுடைய வாழ்க்கை வெறும் வேடிக்கைத் தகவலாய் இருப்பதில்லை. வேதனைத் தகவலாய் தான் இருக்கும்.
தொழில் நுட்பத்தை நாம் பயன்படுத்தும் வரை அது நமக்குப் பயனளிக்கும். தொழில்நுட்பம் நம்மை பயன்படுத்தத் துவங்குகையில் வாழ்க்கை பயமளிக்கும். தொழில் நுட்பம் நமது பணியாளனாய் இருக்கட்டும், அன்பு மட்டுமே நமது எஜமானாய் இருக்கட்டும்.
அன்பின்றி அமையாது உலகு.
source: https://sirippu.wordpress.com/