இன்றே கடைசி நாள்
[ இது உங்களுடைய கடைசி தினமாக இருந்தால் நீங்கள் யார் மீதும் கோபமோ, விரோதமோ எதிர்ப்போ கொண்டிருக்க வாய்ப்பில்லை. வழியே போகும் பூனைக் குட்டியைக் கூட நேசத்தோடு தான் பார்ப்பீர்கள். யாரையாவது ஏமாற்றி, பணம் பிடுங்கி, வாழ்க்கையைக் கெடுக்கும் சிந்தனைகள் ஏதும் வராது.
சாகக் கிடக்கும் மனிதர்கள் சொல்வதைக் கவனித்திருக்கிறீர்களா? “சாகப் போற நேரத்துல எதுக்கு அவன் கூட சண்டை போட்டுகிட்டு… அதை விட்டுடு” என்பார்கள்.
சமாதானத்தோடு சாவதா, சமாதானத்தோடு வாழ்வதா? எது நல்லது? எது தேவையானது? வாழ்க்கையை விட மரணம் முக்கியமானதா?
சாகும் போது அன்பு செலுத்த மனம் சொல்கிறதெனில், ஏன் வாழும் போது அதைச் சொல்ல மனம் தயங்குகிறது. மன்னிப்பும், அரவணைப்பும் சாவுக்கு முன் எழுதப்பட வேண்டிய முடிவுரைகளா? இல்லை வாழ்க்கையில் எழுதவேண்டிய முன்னுரைகளா என்பதைக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் இல்லையா?]
இன்றே கடைசி நாள்
இதுவே உங்கள் வாழ்வின் கடைசி நாள் போல வாழுங்கள். கடந்த நாட்கள் கடந்து போய்விட்டன. எதிர்காலத்துக்கு உத்தரவாதமில்லை.
காலை முதல் மாலை வரை அரக்கப் பரக்க ஓடிக் கொண்டே இருக்கிறோம் இல்லையா? வழக்கமான உதாரணங்களைச் சொல்லவேண்டுமென்றால் பேட்டரி போட்ட கடிகாரம் போல என்று சொல்லலாம். பரபரப்பாய் எழுந்து, குளித்து, சட்டென விழுங்கி, அவசரமாய் பேப்பரைப் புரட்டி, அல்லது சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சி செய்தியைக் கேட்டு, பாலிஷ் போட மறந்த ஷூவைச் சபித்துக் கொண்டே, கையாட்டும் குழந்தைக்கு ஒன்றரை வினாடி செலவு செய்து டாட்டா காட்டியபடி காரைக் கிளப்பி அலுவலகம் போனால் வேலை வேலை வேலை! அப்புறம் ‘அடடா இருட்டிடுச்சே’ என்றோ ‘ மிட்நைட் ஆயிடுச்சா’ என்றோ பரபரத்து ஒரு ரிட்டன் டிரைவ்!
கேட்டால், ‘ரொம்ப பிஸி’. ‘இல்லேன்னா முடியாதுங்க’. ‘எல்லாமே ரொம்ப ரொம்ப முக்கியம்’. என்று ஏகப்பட்ட பதில்கள் ரெடிமேடாய் இருக்கும்.
எது முக்கியம்? எது முக்கியமில்லை? வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை என்பதில் சந்தேகமில்லை. சிலருக்கு வேலையில் முழுமையாய் ஈடுபடுவதே வாழ்க்கை. சிலருக்கு வாழ்க்கையை அனுபவிப்பதே வேலை. சிலருக்கு பணம் சம்பாதிப்பது! இன்னும் சிலருக்கு மனங்களைச் சம்பாதிப்பது. சிலருக்கு வெளிநாடுகள் போய் கிளையன்ட் மீட்டிங் கலந்து கொள்வது, வேறு சிலருக்கு சேரிகளுக்குப் போய் ஏழைக் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது. சிலருக்கு நண்பர்களோடு அரட்டை அடிப்பது. சிலருக்கு நெஞ்சுருக பிரார்த்திப்பது. ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமானவன். எனவே தான் அவனுடைய செயல்களும் வித்தியாசமானவையாய் இருக்கின்றன.
ஒருவேளை கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்று, “இன்னிக்கு தான்பா உன்னோட கடைசி நாள். என்ன வேணும்ன்னாலும் பண்ணிக்கோ, நாளைக்கு நீ காலி” என்று சொன்னால் என்ன நினைப்பீர்கள். நீங்கள் நாத்திகர் என்றால் கடவுள் என்பதை டாக்டர் என்று நினைத்துக் கொள்ளுங்கள்!
உங்களுக்கு எழும் அச்சமும், மிரட்சியும், இன்ன பிற உணர்ச்சிகளைத் தவிர்த்து விட்டு பாருங்கள். உங்களுடைய அன்றைய தினமும் இதே பரபரப்பாய் தான் இயங்குமா? காலையில் எழுந்து மாலை வரை ஓடிக் கொண்டே இருப்பீர்களா? அல்லது கடைசியாய்ப் பார்க்கும் அலாதிப் பிரியத்துடன் சூரிய ஒளியைத் தொட்டுப் பார்ப்பீர்களா? மனைவியைப் பிரியமாய் பார்த்துக் கொண்டே காபியை சுவைப்பீர்களா? சாப்பிடும் போதும் மழலையை அணைத்துக் கொண்டே ஊட்டி விடுவீர்களா? அலுவலகம் கிளம்பும் போது குழந்தையைக் கட்டியணைத்து, மனைவிக்கு டாட்டா காட்டி கிளம்புவீர்களா ? வேலையை விட முக்கியமான விஷயம் உறவு என்பதை உணர்ந்து நேரத்தோடு வீடு திரும்புவீர்களா?
அதெப்படி நேற்றுவரை முதல் இடம் பிடித்தவையெல்லாம் இன்று சட்டென கடைசி இடத்துக்கு ஓடிவிட்டன? நேற்று வரை உதாசீனப்படுத்தப்பட்டவையெல்லாம் இன்று முதல் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டன ? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!
உண்மையில் இந்தக் கடைசி நாளில் நீங்கள் எவற்றையெல்லாம் முக்கியம் என கருதுகிறீர்களோ அவையே மிக முக்கியமானவை. எனவே தான் தத்துவ ஞானிகள் சொல்கிறார்கள், “இன்றே கடைசி தினம்” என்பது போல வாழுங்கள் என்று!
இது உங்களுடைய கடைசி தினமாக இருந்தால் நீங்கள் யார் மீதும் கோபமோ, விரோதமோ எதிர்ப்போ கொண்டிருக்க வாய்ப்பில்லை. வழியே போகும் பூனைக் குட்டியைக் கூட நேசத்தோடு தான் பார்ப்பீர்கள். யாரையாவது ஏமாற்றி, பணம் பிடுங்கி, வாழ்க்கையைக் கெடுக்கும் சிந்தனைகள் ஏதும் வராது.
சாகக் கிடக்கும் மனிதர்கள் சொல்வதைக் கவனித்திருக்கிறீர்களா? “சாகப் போற நேரத்துல எதுக்கு அவன் கூட சண்டை போட்டுகிட்டு… அதை விட்டுடு” என்பார்கள். சமாதானத்தோடு சாவதா, சமாதானத்தோடு வாழ்வதா? எது நல்லது? எது தேவையானது? வாழ்க்கையை விட மரணம் முக்கியமானதா? சாகும் போது அன்பு செலுத்த மனம் சொல்கிறதெனில், ஏன் வாழும் போது அதைச் சொல்ல மனம் தயங்குகிறது. மன்னிப்பும், அரவணைப்பும் சாவுக்கு முன் எழுதப்பட வேண்டிய முடிவுரைகளா? இல்லை வாழ்க்கையில் எழுதவேண்டிய முன்னுரைகளா என்பதைக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் இல்லையா?
வாழ்க்கை வாழ்வதற்கானது. அதில் நின்று நிதானித்து நமது வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நாம் சரியான பாதையில் செல்கிறோமா? என்பதை அடிக்கடி பரிசீலனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்!
நமக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் ஒரு நொடியில் திருப்பி எடுத்துக் கொள்ளும் வல்லமையாளன் இறைவன் என்பதை ஒவ்வொரு நிமிடமும் மனத்துள் கொள்ள வேண்டும். இறைவன் வாக்குறுதி அளித்திருக்கிறான். “தன்னை நினைப்பவர்களை அவன் நினைப்பதாக”.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மையும் தீமையும் அனுபவிக்கும் நிலைக்கு உள்ளாக்கி நாம் உங்களைச் சோதிப்போம். நீங்கள் நம்மிடமே மீள்வீர்கள். (அல்குர்ஆன் 21:35)
இதனை உணரும்போது, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணை குர்ஆன் மூலம் வெளிப்படுவதைத் தெளிவாக மனிதன் அறிந்து கொள்கிறான். குர்ஆனின் மூலமே மறுமையைப் பற்றிய மிகச் சரியான உண்மைகளை இறை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். உண்மையான மார்க்கமே மறுமையைப் பற்றிய யதார்த்தங்களை அறிவிக்கவல்லது.