மனைவி: இறையருளின் மகத்தான பொக்கிஷம்
[ 1997 இறுதியில் துவங்கி, சுமார் மூன்றாண்டுகள், தொடர்ச்சியான போராட்டம். ரத்த பந்த உறவுகள், விலகி இருந்து கைகட்டி வேடிக்கை பார்த்த வேளையிலும், அவர் அன்பு மனைவி தான் உடனிருந்து, ஆறுதலும் தேறுதலும் தந்து அவரை மீண்டும் முழு மனிதனாக்கினார். பணம் லட்சக்கணக்கில் தண்ணீராய் கரைந்தாலும், இறுதியில், இறைவன் அருளால், நோயை வென்று விட்ட மகிழ்ச்சி இருந்தது.
ஒரு நாள் கோவை கே.ஜி.யின் டாக்டர் பிரனேஷ் அவரிடம் சொன்னார், “நீங்கள் உயிரோடு இன்னிக்கு முழு மனிதனாக இருக்கிறீர்கள் என்றால், அதற்கு உங்கள் மனைவி தான் காரணம். வாழ்நாள் முழுவதும் அவருக்கு நீங்கள் கடன்பட்டுள்ளீர்கள்” என்று. ஆனால், எல்லாவற்றிற்கும் காரணம் இறைவனின் அருள் தான்!
அவர் அப்படி சொன்னாலும், அது ஒரு மனைவியின் கடமை தானே! இன்றும் அப்பெண் ஒரு மனைவியை விட மேலாக – ஒரு மந்திரியாக – ஒரு தோழியாக – அவரின் வலதுகரமாக இருந்து கொண்டிருக்கிறார்.]
என்ன தலைப்பு வைப்பது? (அவசியம் படியுங்கள்-Must Read)
பொறுமையாக, முழுவதும் படியுங்கள்
கைக்குழந்தையுடன் இருபத்தொரு வயது இளம்பெண். அன்பான அனுசரணையான கணவர். தாய் பறவைகளின் நிழலில் இருந்து விலகி அப்போது தான் தங்கள் சொந்த சிறகை விரித்து பறக்க ஆரம்பித்து இருந்தனர். சந்தோஷத்துக்கு குறைவில்லாத அருமையான தாம்பத்யம்.
பாபரி மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 இந்தியாவின் கறுப்பு தினம். டிசம்பர் 7, 1997 இவர்கள் வாழ்வின் கறுப்பு தினம். அன்று காலை தன் ஒன்னரை வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றி வந்தார். ஞாயிற்று கிழமை ஆதலால், அன்று வீட்டில் இருந்தார். மனைவியை சீண்டி, கேலி பேசிக் கொண்டு சந்தோஷமாக இருந்தவர், திடீரென்று, தலையில் கைவைத்தபடி அமர்ந்து விட்டார். பேச்சு குழற ஆரம்பித்தது.
மயக்கம் போலும் என்று நினைத்த இந்த பெண், க்ளுக்கோஸ் கலந்து கொடுத்து விட்டு, அருகில் இருந்த தன் மாமா வீட்டுக்கு, காலில் செருப்பு கூட போட மறந்தவளாக சென்று விஷயத்தை சொல்ல, அடுத்த அரை மணி நேரத்தில், அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
செல்லும் வழியில் கை, கால்கள் வெடுக் வெடுக் என்று இழுக்க, வாந்தி வேறு. உடனே ஐ.ஸி.யூவில் சேர்க்கப்பட்டார். டாக்டர் சொன்ன சேதி இது தான்.
‘உடலின் வலது பக்க இயக்கத்துக்கு காரணமான இடது புற மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ‘லெஃப்ட் கேங்லியானிக் ஹெமடோமா’ என்று பெயர். ரத்த கசிவு நிற்பதற்குண்டான மருந்துகள் கொடுத்திருக்கிறோம். நிற்காவிட்டால், மண்டையோட்டை பிளந்து சர்ஜரி செய்ய வேண்டும். 48 மணி நேரம் கழித்து தான் எதுவும் சொல்ல முடியும்.’
அழுது புரண்டாள் அந்த பெண். கனவிலும் நினைத்து பார்த்ததில்லை, இது போன்று வரும் என்று. சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை! தன் உயிரின் மறு பாதி, அங்கே போராடிக் கொண்டிருக்க, இங்கே இவள் உயிர் அவருக்காக துடித்துக் கொண்டிருந்தது.
தங்கமான அமைதியான குணம் என்று ஊரில் பெயர் வாங்கிய அவருக்கு, நட்பு வட்டம் மிக பெரியது. பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது மருத்துவமனையில். அடுத்த நாள், ஆம்புலன்ஸ் வரவழைத்து, கோவை, கே.ஜி.மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நான்கு நாட்கள் ஐ.ஸி.யில் வைத்திருந்தார்கள். அவரின் பெற்றவர்கள் தங்களிடம் பணமில்லை என்று கையை விரித்து விட, இப்பெண்ணை பெற்றவர்கள் பாதி செலவு செய்தார்கள். இவளின் நகைகள் பணமாக மாறியது.
நாலு நாட்களுக்கு பின், ரூமுக்கு மாற்றப்பட்டார். இப்போ, இவர் பேசும் திறனை முற்றிலுமாக இழந்து விட்டார். அதோடு, வலது கை இயக்கமும் 80% பாதிக்கப்பட்டிருந்தது. மூளையில் இருந்த ப்ளட் க்ளாட் கரைய மருந்துகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
டாக்டர் சொல்லும் முன்பே, இப்பெண் ஓடிப் போய், பிசியோதெரபிஸ்ட்டை விசாரித்து, நியமித்தாள். அடுத்து, ஸ்பீச் தெரபிஸ்ட்டையும் ஏற்பாடு செய்தாள்.
நாக்கு புரள மறுத்தது. தன் பெயர் கூட சொல்ல தெரியவில்லை. அல்லது சொல்ல முடியவில்லை. ஸ்பீச் தெரபிஸ்ட், ‘நிலா நிலா ஓடி வா’ பாடல் சொல்லிக் கொடுக்க, அவர் ‘ஆ ஆ ஆ ஆ’ என்று அதே தொனியில் ராகமாக சொல்ல, மனைவி, அவருக்குத் தெரியாமல் பாத்ரூம் சென்று அழுது விட்டு வருவார்.
பபுள்கம் மெல்லுவது, தேனை நக்கிக் குடிப்பது போல நாக்குக்கான பயிற்சிகளெல்லாம் தர, ஓரளவு ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்தார். 15 நாட்களுக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆனார். ஆனாலும், 6 வாரங்கள் கழித்து மீண்டும் சி.டி. ஸ்கேன் வந்து எடுக்க வேண்டும் என்றார் டாக்டர்.
அப்பெண்ணின் கனிவான கவனிப்பும், தொடர்ந்த பயிற்சியும், 6 வாரத்தில் அவரை பழையபடி ஆக்கி விட்டது. இப்போ, திக்கி திக்கி பேச ஆரம்பித்தார். கையும் பூரண குணம் அடைந்து விட்டது.
இப்போ, டாக்டர், மீண்டும் ஸ்கேன் பார்த்து விட்டு, பரவாயில்லை, ஓரளவு கசிந்து உறைந்திருந்த ரத்தம் கரைந்து விட்டது. ஆனால், ரத்தத்தில் ப்ளேட்லெட்ஸ் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. எனவே, ஹெமடாலஜிஸ்ட்டை உடனே போய் பாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
நம் ரத்தத்தில், சிவப்பணு, வெள்ளையணு மற்றும் ப்ளேட்லெட்ஸ் என்று மூன்று கூறுகள் உள்ளன. சிவப்பணு ஆக்ஸிஜன் கடத்தும் வேலை செய்கிறது. வெள்ளையணு, புண் போன்ற இன்ஃபெக்ஷன் ஏற்படும் போது, ஃபாரீன் பாடீஸ் எனப்படும் வெளிக்கிருமிகள் தாக்காமல், அரண் அமைத்து பாதுகாக்கிறது. ப்ளேட்லெட்ஸ் என்பது, ரத்தம் உறைவதற்காக. அதாவது, ப்ளேட்லெட்ஸ் மட்டும் இல்லை என்றால், ரத்தம் வெளியேற ஆரம்பித்தால், உறையாமல், உடலில் உள்ள ரத்தம் முழுவதுமே வெளியேறி விடும்.
இந்த ப்ளேட்லெட்ஸ் நம் உடலில் சாதாரணமாக இரண்டரை லட்சம் என்ற அளவில் இருக்கும். ஆனால், இவருக்கோ, ஐம்பதாயிரம் தான் இருந்தது. இதற்கான ட்ரீட்மெண்ட் ஆரம்பித்தார்கள். தினமும் லேபில் போய், ப்ளேட்லெட் டெஸ்ட் செய்யப்பட்டு, போன் மூலம் டாக்டருக்கு தகவல் சொல்லி ஆலோசனை கேட்கப்பட்டு வந்தது.
இந்த ப்ளேட்லெட்ஸ் குறைந்ததால் தான், மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது. எனவே, மீண்டும் இது குறைந்தால், மீண்டும் அவ்விதம் ஏற்படும் என்று பயமுறுத்தினார்கள். அவர் சாப்பிட்டு கொண்டிருந்த எப்டாயின் என்ற மாத்திரையால் கூட இது ஏறாமல் இருக்கும் என்று அதற்கு மாற்றாக அதை விட 20 மடங்கு அதிக விலையுள்ள கெபாண்டின் என்ற மாத்திரை மாற்றி தந்தார்கள்.
இப்போ, மாதத்தின் மருந்து மாத்திரை செலவு மிகவும் எகிறியது. சமாளிக்க முடியாமல், அப்பெண் உதிரி வருமானம் தேடி, வீட்டில் இருந்தபடி, டியூஷன் எடுக்க ஆரம்பித்தாள். எப்படியும் தன் கணவனை நன்றாக ஆக்க வேண்டும் என்ற உறுதியும் வெறியும் அவளிடம் இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக ஏறிய ப்ளேட்லெட்ஸ் கவுண்ட் ஒரு லட்சம் வரை தான் வந்தது. இப்போ, ஹெமடாலஜிஸ்ட் (ரத்த சம்பந்தமான படிப்பு படித்த டாக்டர்), ஒரு சிலருக்கு பிறவியிலேயே குறைவாக இருக்கும். அதனால் பாதிப்பு இல்லை என்றால் பரவாயில்லை. இதற்கான மருந்தாக ஸ்டீராய்டு அதிக நாள் எடுத்தால், சர்க்கரை நோய் வரும், அதனால் மருந்தை நிறுத்தி விடலாம் என்று சொல்லி விட்டார்.
இப்போ, கே.ஜி.யில், டாக்டர் பிரனேஷ், எதனால் இவ்வாறு ரத்த கசிவு ஏற்பட்டது என்று கண்டு பிடிக்க வேண்டும்; அப்போ தான் மீண்டும் வராது; அதனால் எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார். அதுவும் எடுக்கப்பட்டது. அதில் தெளிவாக தெரியாததால், ஆஞ்சியோ கிராம் டெஸ்ட் எடுத்து பார்க்க வேண்டும் என்றார். அம்மருத்துவமனை அன்று அவ்வசதி இல்லாததால், கே.எம்.சி.ஹெச். ல் போய் ஆன்சியோகிராம் எடுத்தார்கள்.
ஆஞ்சியோகிராம் என்றால், தொடையில் சிறு துளை போட்டு, மூளை வரை, கலரான மருந்து செலுத்தி, அதன் பாதிப்பை தெளிவாக படம் பிடிப்பது. அன்று அதற்கு 15,000 ருபாய் செலவாயிற்று.
இதன் ரிசல்ட் என்னவென்றால்,
‘மூளையில், ஏவிஎம் என்று சொல்லக் கூடிய ஆர்ட்ரியோ வீனஸ் மால் ஃபார்மேஷன் இருக்கிறது. அதாவது, நல்ல ரத்தத்தை எடுத்து செல்ல கூடிய நரம்பும், கெட்ட ரத்த்தை எடுத்துச் செல்லக் கூடிய நரம்பும் ஒட்டி இருக்கிறது. இதை சரி செய்ய வேண்டும். செய்யாவிட்டால், மூளைக்குள் ஒரு டைம்பாம் துடித்துக் கொண்டிருப்பது போல அவ்வளவு ஆபத்தானது. எந்நேரமும் மீண்டும் ரத்தகசிவு ஏற்படலாம். இது பிறவியிலேயே வருவது. இதன் ரிஸ்க் வருடம் 4 சதவிதம் அதிகரித்து, 25 வயதில் 100% ரிஸ்க் ஏற்படுத்துகிறது’
திருவனந்தபுரத்தில் இருக்கும் சித்ரா திருநல் ஆஸ்பத்திரியில் இதற்கான சிகிச்சை இருக்கிறது. சென்று செய்து கொள்ளுங்கள் என்று டாக்டர் சொல்லி விட்டார்.
அப்பெண் அந்த ஆஸ்பத்திரிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்க போன் செய்தார். அங்கு நல்ல உள்ளம் படைத்த டாக்டர் குப்தா என்பவர், நீங்கள் வீணாக அலைய வேண்டாம். ரிப்போர்ட்ஸ் மட்டும் கொரியரில் அனுப்பி வையுங்கள், என்று சொன்னார். அதோடு, இது கதீடர் எனப்படும் நுண்ணிய டியூப் உபயோகித்து செய்யப்படும் சிகிச்சை. ஒரு கதீடருக்கு 15,000 ருபாய செலவாகும். தங்களுக்கு மூன்று கதீடர்வரை தேவைப்படலாம் என்று கூறினார்.
அதன்படி அனுப்பிவைக்கப்பட்ட ரிப்போர்ட்டை பார்த்து விட்டு, ஏவிஎம் மூளையில் மிகவும் உட்புறமாக இருப்பதால், இந்த சிகிச்சை அளிக்க முடியாது. அதனால், வேலூர் சி.எம்.சி. சென்று, ஸ்டீரியோடேக்டிக் ரேடியோ தெரபி செய்து கொள்ளுங்கள். இது ஒன்று தான் தீர்வு என்று சொன்னார்.
இது பொதுவாக கேன்சர் பேஷண்ட்ஸுக்கு தரப்படும் சிகிச்சையாகும். அவர் இன்னொரு விஷயமும் சொன்னார், அதாவது, ‘கேங்லியானிக் ஹெமடோமா’ வந்து ஒரு வருடத்தில் இது தானே குணமடையவும் வாய்ப்புள்ளது. சற்று பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
இவர்கள் காத்திருந்தார்கள். அதோடு, அந்த சிகிச்சைக்கு 45,000 செலவாகும் என்றும் சொன்னார்கள். 1998ல் அது ஒரு பெரிய தொகை. அதோடு, இவர்கள் கைகாசெல்லாம் கரைந்து விட்ட நிலையில் மிகவும் கஷ்டத்தில் இருந்தார்கள்.
இறைவனிடம் இறைஞ்சி அழுக, நண்பர் ஒருவர், செலவு பற்றி கவலைப்படாதே, உடனே சிகிச்சைக்கான ஏற்பாடு செய் என்று சொல்ல, அதன் படி இவரும் ஏற்பாடு செய்தார். நோயைக் கொடுத்த இறைவன், நண்பர்கள் மூலம் அதற்கொரு தீர்வையும் கொடுக்க நாடிவிட்டான்.
அப்பெண் சி.எம்.சிக்கு போன் செய்து, விவரம் முழுவதும் கூறி அப்பாயிண்ட்மெண்ட் கேட்க, அப்பெண்ணின் பேச்சைக் கேட்டு, நீங்கள் ஒரு டாக்டரா? என்று கேட்டார்கள். அந்த அளவுக்கு அந்நோயின் தன்மையோடு அவர்களின் வாழ்க்கை ஊறிப் போயிருந்தது.
அதன்படி அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்க, புறப்பட்டார்கள். இந்த சிகிச்சையிலும் ஒரு சிக்கல் இருந்தது. அதாவது, இச்சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு வருடம் வரை ரிஸ்க் தான். இது கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டியிருக்கும் நரம்பை பிரிக்கும். இது மூளைக்குள் ஒரு வருடம் வரை தொடரும். அந்த ஒரு வருடத்தில், எதுவும் நடக்கலாம் என்பது தான் அது.
ஆனால், அதற்காக சிகிச்சை செய்யாமல் இருப்பது அதை விட முட்டாள்தனமல்லவா? துணிந்து இறங்கி விட்டார்கள். சொன்னபடியே, நண்பர்கள் சில பேர், அத்தொகை முழுவதையும் கட்டி விட்டார்கள். கடனாக அல்ல, சும்மா… இதுவரை யார் கட்டினார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. பின்னாட்களில், அதைத் திருப்பி தர முயன்ற போது, யார் கொடுத்தது என்று யாருமே காட்டிக் கொடுக்கவில்லை. என்னே உயரிய நட்பு?! என்னே இறைவனின் அருள்?!
வேலூரில் எல்லா டெஸ்ட்டும் எடுத்தார்கள். ப்ளேட்லெட்ஸ் குறைவாக இருந்தும், ப்ளீடிங் டைம், க்ளாட்டிங் டைம் நார்மலாக இருந்ததால், சிகிச்சையை தொடங்கினார்கள்.
தலையில், நான்கு இடத்தில், ஓட்டை போட்டு, இரும்பு வளையம் ஒன்று ஸ்குரூ மூலம் ஃபிட் பண்ணினார்கள். பின், அவரை தனியறையில் படுக்க வைத்து, வெளியே டீவியில் பார்த்தபடி அந்த மிஷினை இயக்க, பெரிய பீரோ போன்ற ஒன்று கரகரவென்று சுற்றுகிறது. அவ்வளவு தான். இது கத்தியின்றி, ரத்தமின்றி செய்யப்படும் சிகிச்சை.
நான்கு நாட்களில் வீடு திரும்பினார் அவர். இறையருளால், இப்போ, பேச்சும், வலது கை இயக்கமும் முற்றிலும் பழையபடி குணமாகிவிட்டது.
சரியாக ஒரு வருடம் கழிந்தது. மூளையில் செலுத்தப்பட்ட கதிர்கள், தேவையான செல்களை அழிப்பதோடு, பக்கத்திலும் லேசான பாதிப்பு ஏற்படுத்த, மீண்டும் வலது கை இயக்கமும், பேச்சும் பாதிக்கப்பட்டது. இந்த முறை கை இயக்கம் முற்றிலும், பேச்சு 70% பாதிக்கப்பட்டது. காலையில் எல்.கே.ஜி. படிக்கும் தன் குழந்தையை, டூவீலரில் பள்ளி சென்று விட்டவர், மாலைக்குள் வலது கையை தூக்கக் கூட முடியவில்லை. இடது கையினால் வலது கையை தூக்கிவிட்டு, விட்டுவிட்டால், தொப்பென்று கை கீழே விழுகிறது.
மீண்டும் வேலூர் போய், மீண்டும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பார்த்து, மாத்திரைகள் கொடுத்தார்கள். டெக்டாக் என்னும் ஸ்டீராய்டு அது. சாப்பிட்டால், கை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கிறது. நிறுத்தினால், மீண்டும் பழையபடி! அதிக நாட்கள் இம்மாத்திரையை எடுக்கவும் கூடாதாம். நான்கு மாத்திரை சாப்பிட்டவர், கிரேஜுவலாக, அரை அரை மாத்திரையாக குறைத்து, நிறுத்தினார்.
இப்போ, எல்லா மருந்தும் நிறுத்தியாகிவிட்டது. பேச்சு முற்றிலும் சரியாகி பழையபடி ஆகி விட்டது. ஆனாலும் கவனித்துப் பார்த்தால், சின்னஞ்சிறு தடுமாற்றம் தெரியும். கை சரியானாலும், ஆள்காட்டி விரல் மட்டும் சரியாக இயங்கவில்லை.
சில நாட்கள் பிசியோதெரபி செய்தார். இதற்கும் மேல் ட்ரீட்மெண்ட் இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார். எல்லாம் செய்ய முடிகிறது, ஆனால் எழுத மட்டும் முடியவில்லை. பேனா பிடிக்க முடியவில்லை.
மனம் தளராமல் இடது கையால் நன்றாக எழுதி பழகிவிட்டார். மற்றபடி, சாப்பிடுவது, டூவீலர் ஓட்டுவது எல்லாம் செய்ய முடிகிறது. இப்போ, அது அவர்களுக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை.
ஆனால், 1997 இறுதியில் துவங்கி, சுமார் மூன்றாண்டுகள், தொடர்ச்சியான போராட்டம். ரத்த பந்த உறவுகள், விலகி இருந்து கைகட்டி வேடிக்கை பார்த்த வேளையிலும், அவர் அன்பு மனைவி தான் உடனிருந்து, ஆறுதலும் தேறுதலும் தந்து அவரை மீண்டும் முழு மனிதனாக்கினார். பணம் லட்சக்கணக்கில் தண்ணீராய் கரைந்தாலும், இறுதியில், இறைவன் அருளால், நோயை வென்று விட்ட மகிழ்ச்சி இருந்தது.
ஒரு நாள் கோவை கே.ஜி.யின் டாக்டர் பிரனேஷ் அவரிடம் சொன்னார், “நீங்கள் உயிரோடு இன்னிக்கு முழு மனிதனாக இருக்கிறீர்கள் என்றால், அதற்கு உங்கள் மனைவி தான் காரணம். வாழ்நாள் முழுவதும் அவருக்கு நீங்கள் கடன்பட்டுள்ளீர்கள்” என்று. ஆனால், எல்லாவற்றிற்கும் காரணம் இறைவனின் அருள் தான்!
அவர் அப்படி சொன்னாலும், அது ஒரு மனைவியின் கடமை தானே! இன்றும் அப்பெண் ஒரு மனைவியை விட மேலாக – ஒரு மந்திரியாக – ஒரு தோழியாக – அவரின் வலதுகரமாக இருந்து கொண்டிருக்கிறார்.
அதற்குப்பின் தான், அவர், தன் மனைவியை தபால் மூலம் படிப்பை தொடர சொன்னார், ஒரு கஷ்ட நேரத்துக்கு கை கொடுக்குமே என்று. எல்லா மருந்து மாத்திரைகளையும் நிறுத்தி கிட்டத்தட்ட, பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்றும் அவர் இடது கையில் தான் எழுதுகிறார்! நமக்கு இடது கைபோல் அவருக்கு வலது கை, நமக்கு வலது கைபோல் அவருக்கு இடது கை!
இன்று பதிவுலகிலும், எழுத்துலகிலும், சுமஜ்லா என்ற புனைப்பெயர் தாங்கி நிற்பவர் தான் அந்த பெண். ஆம், இன்று நினைத்தாலும், என் உள்ளம் நடுங்கும் கறுப்பு நாட்கள் அவை. எனக்கு வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுத்து, எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் துணிச்சலை தந்தது அந்த சம்பவம் தான்.
-சுமஜ்லா.
Source: http://sumazla.blogspot.in/
http://nidurseasons.blogspot.in/2016/03/blog-post_22.html