ஐரோப்பாவின் முதல் விவசாயி!
S.ஹலரத் அலி, ஜித்தா
இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து, இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டாமா? (முன் இருந்த) அவர்கள், இவர்களைவிட மிகுந்த பலசாலிகளா இருந்தனர். இவர்கள் எவ்வளவு பூமியை பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாக (பூமியை) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். (அல்குர்ஆன். 30:9)
இவ்வசனமானது 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரபு மக்களை நோக்கி இறங்கியது என்றாலும் இன்றுள்ள நமக்கும் சொல்லப்பட்ட செய்திதான். குறிப்பாக அல்லாஹ் நம்மிடம் கூருவது, “உங்களை நீங்களே பலசாலிகளாக நினைத்துக்கொள்ளாதீர்கள், நிலத்தை பண்படுத்தி விவசாயம் அதிகளவில் செய்வது நீங்கள் மட்டும்தான் என்று எண்ணாதீர்கள். உங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் உங்களை விட பலசாலிகளாகவும், பூமியில் அதிகளவில் விவசாயம் செய்தவர்கள்.”
இது உண்மைதான், இன்றைய தொழில்நுட்ப அறிவு, மின்சாரம் எதுவும் இன்றி, தன உடல் பலத்தைக்கொண்டு பெரும் கட்டிடங்களையும், பிரமிடு போன்ற அதிசயங்களையும், மலைகளை குடைந்து மாளிகைகளையும் கட்டியவர்கள் முன்னோர்கள். (அல்குர்ஆன் 26:128,129 – 26:149)
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் அந்த நாட்டில் தான் வாழும் சூழலை ஒட்டிய நிலப்பரபிலேயே விவசாயம் செய்வார்கள். உதாரணமாக, காவேரி டெல்டா பகுதியில் பாசனம் செய்யும் தஞ்சை விவசாயி வட நாட்டிற்கு சென்று கங்கை டெல்டா பகுதியில் விவசாயம் செய்வதில்லை, அவர்கள் சார்ந்த ஊர்களை ஒட்டியே உள்ள விளைநிலங்களில் மட்டும் பயிறிடுவார்கள். இது தான் எங்கும் உள்ள நிலை.
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அவ்வப்போது அனுப்பியுள்ளான். பல்வேறு கால கட்டங்களில் அவர்கள் வந்து நேர்வழி காட்டினர். குறிப்பாக யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் என மூன்று மார்க்கங்களில் குறிப்பிடப்படும் பெரும்பாலான அறியப்பட்ட நபிமார்கள் அனைவரும், மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக், அரேபியா போன்ற இடங்களில் வாழ்ந்த மக்களிடையே சத்தியத்தை எடுத்துரைத்தனர். இந்த நபிமார்களை பொய்ப்பித்து தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்த மக்களை பற்றியே அல்லாஹ் இவ்வசனத்தில் (அல்குர்ஆன் 30:9) கூறுகிறான்.
இன்னும் (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களிடம் வந்தனர். ஆகவே அல்லாஹ் ஒருபோதும் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை; எனினும் அவர்கள்(அந்நபிமார்களை பொய்யாக்கி) தங்களுக்கு தாமே அநியாயம் செய்து கொண்டனர். – (அல்குர்ஆன்-30:9)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் குறிப்பாக சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக்கில் வாழ்ந்த அரேபியர்கள்தான் உலகில் அதிகமான பரப்பளவில் நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்ததாக அல்லாஹ் கூறுகிறான். எப்படி என பார்ப்போம்.?
ஐரோப்பா கண்டத்தின் அன்றைய நிலை
சுமார் 8 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாவில் வாழ்ந்த பூர்வகுடி ஐரோப்பியர்கள், காட்டு மிருகங்களை வேட்டையாடி உண்ணும் நாடோடிகளாக (Hunter &Gatherer) வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியப் பயிர், விவசாய விளைபொருள் உற்பத்தி முறை தெரிந்திருக்கவில்லை. மிருகங்களை வேட்டையாடி மிருகங்கள் போல் வாழ்ந்து வந்தனர். ஆனால் 7500 வருடங்களில் அதாவது 500 வருடங்களில் வேளாண் உற்பத்தி முறை அறிந்து பயிர்த்தொழில் சாகுபடி செய்து விவசாயிகளாக மாறிய நிகழ்ச்சி, மானிட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
விலங்கோடு விலங்காக வாழ்ந்த ஐரோப்பியர்கள் எப்படி விவசாயத்தை அறிந்தனர். ஒரு 500 வருடங்களுக்கு முன்பு பசுமைப்புரட்சி ஏற்பட காரணம் என்ன? விவசாயத்தை கற்றுக்கொடுத்தவர்கள் யார்? என்ற கேள்வி அறிஞர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் நீடித்து வந்தது. இன்றைய நவீன (GENETIC) மரபியல் சோதனை முடிவுகள் இக்கேள்விகளுக்கு உரிய பதிலை சமீபத்தில் வெளிப்படுத்தின.
ஆஸ்திரேலியா அடிலெய்டு பல்கலைக்கழகமும் மற்றும் (Australian Centre for Ancient DNA-ACAD) ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் எஸ்தோனியா நாட்டு ஆய்வாளர்கள் குழு ஒன்றிணைந்து ஜெர்மனி, ஹங்கேரி, இங்கிலாந்து நாட்டிலுள்ள பழம்பெரும் புதைகுழிகளை கல்லறைகளை ஆராய்தனர். அங்கு அடக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகளை சோதித்து அதன் DNA மூலக்கூறுகளை பிரித்தெடுத்தனர்.
இதே போல, இன்றுள்ள ஐரோப்பியர்களின் DNA மூலக்கூறுகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவுகள் வியப்பளிப்பதாக இருந்தது. ஏனெனில் சுமார் 7100 ஆண்டுகளுக்கு முன் இறந்த புராதன புதை குழிகளிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகளின் DNA மூலக்கூறு, இன்றைய ஐரோப்பியர்களின் DNA மூலக்கூறுடன் ஒத்துப்போகவில்லை. இருவரும் வேறு வேறு இனம் என்று DNA அடையாளம் காட்டியது. குறிப்பாக ஐரோப்பாவில் பல பாகங்களில் சுமார் 16 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பழம் புதை குழி எலும்புகள் DNA பூர்வீக ஐரோப்பியர்களின் DNA உடன் பொருந்தவில்லை.
ஜெர்மனியின் பெர்லின் நகரிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் உள்ள டிரன்பர்க் என்ற கிராமத்தில் இருந்த பழமை வாய்ந்த புதைகுழியிலிருந்து 22 எலும்புக்கூட்டை ஆராய்ந்தனர். இந்த எலும்புகளின் DNA எல்லாம் மைட்டோ காண்ரியல் (Y குரோமோஸோம் HAPLOTYPE) வகையாக இருந்தது. இந்த YY குரோமோஸோம்கள், பூர்வ குடி ஐரோப்பியர்களிடம் மிக அரிதாகவே இருந்தது. தற்போது ஐரோப்பா முழுவதும் வசிக்கும் 36 பிரதேச மக்களின் DNA க்களுடன் புராதன எலும்புகளின் DNA க்கள் ஒத்துப்போகவில்லை. இது மட்டும் அல்லாமல், இந்த எலும்புகளில் இருந்த ஸ்டிரோசியம், கால்சியம் விகிதாச்சாரமும் வேறுபட்டு இருந்தது.
பொதுவாக ஸ்டிரோசியம் (Sr) என்ற தனிமம் Element நமது எலும்பில் உள்ளடங்கி உள்ளது. நீரில் உள்ள Sr ‘Sr’ ஆனது நாம் நீர் உட்கொள்ளும்போது உடம்பில் உள்ள எலும்பில் படிந்து விடும். இதுபோல் நீரருந்தும் விலங்குகள் தாவரங்களிலும் இந்த ஸ்டிரோசியம் படிவதுண்டு. தாவரங்களை உண்ணும ஆடு, மாடு போன்ற கால்நடைகளிலும் ஸ்டிரோசியம் படியும். ஆனால் கால்நடைகளின் கழிவில் பெரும்பாலான ஸ்டிரோசியம் வெளியேறிவிடும். எனவே இந்த விலங்குகளை வேட்டையாடி உண்ணும பழக்கமுள்ள ஐரோப்பிய பூர்வகுடி மனிதர்களின் எலும்புகளில் இந்த ஸ்டிரோசியத்தின் அளவு மிகக்குறைவாகவே இருந்துள்ளது. ஆனால் அதே சமயம் ஐரோப்பா முழுவதும் 16 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புராதன புதைகுழி எலும்புகளில் இந்த ஸ்டிரோசியம் / கால்சியம் விகிதாச்சாரம் மிக அதிக அளவில் இருந்தது. காரணம் இம்மக்களது உணவுப்பழக்கம் தானியங்களாக இருந்ததுதான். ஆகவே இவர்கள் தான் ஐரோப்பாவிற்கு முதன் முதலில் விவசாயத்தை அறிமுகப்படுத்தியவர்கள் என்று அறிஞர்கள் உறுதிப்படுத்தினர்.
ஐரோப்பிய உள்ளூர் மக்களிடம் குறைவாக இருந்த ஸ்டிரோசியம் / கால்சியம் விகிதாச்சாரமும், Y குரோமஸோம்ஸ் DNA ( YY CHROMOSOMES HAPLOTYPE) மாதிரிகளும் பூர்வ புதைகுழி எலும்புகளின் மாதிரியுடன் ஒத்துபோகாமல் புதிய இனமாக அடையாளம் காட்டியது. யார் இவர்கள்? எங்கிருந்து வந்தனர் என்பதை ஆராய்வதற்காக, உலகம் முழுவதும் உள்ள மக்களின் DNA க்களை ஆய்வு செய்தனர்.(Genographic Consortium) என்ற அமைப்பின் மூலம் உலக மக்களின் DNA DNA க்களை ஆராய்தனர்.
நமது இந்திய மக்களின் DNA பிரிவை, மதுரை காமராஜ் பல்கலை கழகம் ஆய்வு செய்தது.
இறுதியில் ஐரோப்பாவில் விவசாயம் செய்த முதல் விவசாயியின் DNA மாதிரிகளின் தொடர்ச்சி பிரான்ஸ், ஹங்கேரி, துருக்கி, சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக்கில் முடிந்தது. ஐரோப்பாவிற்கு விவசாயத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் மத்திய கிழக்கு அரபு மக்களே என்று அறிவியல் உலகம் ஒப்புகொண்டது.
நாடோடி ஐரோப்பியர்களுக்கு பயிர் செய்யும் முறையை கற்றுக்கொடுத்து, சமூக பொருளாதார, அறிவியல் வளர்ச்சிக்கு மாபெரும் பங்களிப்பை மத்திய கிழக்கு அரேபியர்களே செய்துள்ளனர் என்பதை நவீன அறிவியல் ஆய்வு நிரூபித்துள்ளது.
“நிராகரிப்பவர்களை சிதறடித்துப் பிரித்துவிட்டோம்”!
மத்திய கிழக்கில் வாழ்ந்த அரேபியர்கள் ஐரோப்பாவிற்கு செல்ல காரணம் என்ன?
மக்கள் இடப்பெயர்சிக்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கான காரணங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். உதாரணமாக, தோப்புவாசிகளைப்பற்றிக் கூறும்போது நல்ல முறையில் விவசாயம் செய்த மக்கள், அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கணித்ததன் காரணமாக ‘ம ஆரிப்’ எனும் அணையை உடைக்கக்கூடிய பெரு வெள்ளத்தை அனுப்பி அங்கு வேளாண்மை செய்ய முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு சோதிக்கப்பட்டதாக அல்குர்ஆன் 34:15,16 கூறுகிறது. இவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை தேடி இடம் பெயர்ந்திருக்கலாம்.
மேலும்
நிராகரிப்பவர்களை சிதரடித்ததற்கு காரணம், “இன்னும், அவர்களுக்கிடையேயும், நாம் பரக்கத் (அருள்) செய்திருந்த ஊர்களுக்கிடையேயும் வெளிப்படையாகத் தென்படக்கூடிய பல ஊர்களையும் ஆக்கி, அவைகளில் பிரயாணத்தை நாம் அமைத்தோம்”.
“இரவுகளிலும், பகல்களிலும் அவற்றில் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள் (என்று கூறினோம்)”
“ஆனால் அவர்கள், எங்கள் இரட்சகனே! எங்கள் யாத்திரைகளை நெடுந்தூரமாகும்படி செய்வாயாக! என்று கூறி தமக்கு தாமே அநியாயம் செய்து கொண்டனர்; ஆகவே அவர்களை செய்திகளாக்கிவிட்டோம், இன்னும் அவர்களை பல ஊர்களில் சிதறடித்துப்(பிரித்து) விட்டோம்.” (அல்குர்ஆன் 34:19)
அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்ததன் காரணமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட மத்திய கிழக்கு அரேபியர்கள், தங்கள் வாழ்வாதாரங்களை தேடியும், தாங்கள் விரும்பியபடியும் நெடுந்தூர பயணத்தை தொடங்கினர். சிரியா, துருக்கி, பல்கேரியா, செர்பியா, ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பறந்த பயணத்தை மேற்கொண்டனர். தானிய விதைகளை தங்களுடன் கொண்டு சென்று நதிக்கரையோரம் விவசாயம் செய்தனர். குறுகிய 500 வருடங்களுக்குள் முழு ஐரோப்பாவிலும் விவசாயம் பெருந்தொழிலாக மாறியது.
ஆறாம் நூற்றாண்டில் இருண்ட கண்டமாக இருந்த ஐரோப்பாவில், முழு அறிவியல் புரட்சி ஏற்பட அடித்தளமாக இருந்தவர்கள் அரபு முஸ்லிம்கள், என்று சரித்திரம் சான்று பகர்வதை அனைவரும் அறிவோம். அறிவியல் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட அரேபியர்களே 8000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பசுமை புரட்சிக்கும் விதையிட்டவர்கள் என்ற உண்மையை இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டது. இன்று அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆனில் அல்லாஹ் கூறிவிட்டான்.
“இவர்கள் எவ்வளவு பூமியைப் பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாகப் (ஐரோப்பா முழுவதும்) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.” (அல்குர்ஆன் 30:9)
அரேபியர்கள் எந்தளவு விவசாயத்தில் ஆர்வம உடையவர்கள் என்றால், சொர்க்கம் சென்றாலும் கூட, அங்கும் விவசாயம் செய்ய விரும்புவார்கள் என்பதை நபிமொழி நன்கு உணர்த்துகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்
“சுவனவாசிகளில் உள்ள ஒருவர், ‘என் இறைவனே! நான் விவசாயம் செய்ய விரும்புகிறேன்,’ என்று கேட்பார். அதற்கு அல்லாஹ், ‘நீ விரும்பிய இன்பமெல்லாம் இங்கு கிடைக்கவில்லையா’? என்று கேட்பான். “எல்லாம் கிடைக்கிறது ஆனாலும் என் மனம் விரும்புகிறது” என்று அவர் கூறுவார். அல்லாஹ் அனுமதி கொடுத்தவுடன் விதையை போடுவார், அது உடனடியாக பயிராக வளர்ந்து தயாராகிவிடும். அல்லாஹ் கூறுவான், “ஆதமுடைய மகனே! எடுத்துக்கொள்! எதிலும் நீ திருப்தியடையமாட்டாய்!”
இதைக் கேட்ட ஒரு நபித்தோழர் கூறுவார் “அந்த சுவனவாசி குறைஷிகளில் ஒருவராகத்தான் இருப்பார்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனே புன்முறுவல் செய்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ)
அறிவியல் ஆதாரம் : www.plosbiology.org. NOV.2010.VOL .8.ISSUE.11
www.sciencedaily.com NOV.9.2010