நம்வசமா? இறைவன் வசமா?
நபிமார்களுக்குத் தரப்பட்ட ‘வஹி’. ‘முஃஜிஸா’. வலிமார்களின் ‘கராமத்’ எதுவும் அவர்கள் கைவசமில்லை. இறைவனிடமிருந்து தரப்படுவது.
அல்குர்ஆன் 12:17 “எங்கள் தந்தையே! நிச்சயமாக நாங்கள் போட்டியிட்டு ஓடிக்கொண்டே சென்று விட்டோம்; யூஸ§பை எங்கள் பொருட்களிடத்தில் விட்டுச் சென்றோம். அப்போது அவரை ஓநாய் தின்று விட்டது. நாங்கள் உண்மையாளர்களாக இருந்தாலும், எங்களை நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.” என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் 12:18 ”பொய்யான இரத்தமுடைய அவரின் சட்டையைக் கொண்டு வந்திருந்தனர். (அப்போது) “இல்லை உங்களுடைய மனங்கள் உங்களுக்கு ஒரு (தீய) காரியத்தை அழகாக்கி(க்காட்டி) விட்டன. எனவே, (யூஸ§ப் விஷயத்தில்) அழகான பொறுமையை மேற்கொள்வதுதான் (சரி). நீங்கள் வருணிக்கின்றவற்றின் மீது அல்லாஹ் தான் உதவி நாடக்கூடியவன்” என்று அவர் கூறினார்.
இந்த இறை வசனங்கள் தரக்கூடிய செய்தி; யூஸ§ப் நபிக்கு என்ன நேர்ந்தது என்று அறியக்கூடிய ஆற்றல் யூஸ§ப் நபி தந்தைக்குத் தரப்படவில்லை. அல்லாஹ்வின் மீது பொறுப்பைச் சாட்டி அமைதி காத்து விடுகின்றார்.
பின்னாளில் அவருக்கு அல்லாஹ் உணர்த்தும் வசனம்; குர்ஆன் 12:93 “இந்த என்னுடைய சட்டையை நீங்கள் கொண்டுபோய் என் தந்தையுடைய முகத்தின் மீது அதனைப் போடுங்கள்; பார்வையுள்ளவராய் அவர் ஆகிவிடுவார்; இன்னும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள் (என்று யூஸ§ப் கூறினார்).
அல்குர்ஆன் 12:94 “(அவர்களுடைய) ஒட்டகக் கூட்டம் (எகிப்தை விட்டும்) விலகிய சமயம் அவர்களுடைய தந்தை “நிச்சயமாக நான் யூஸ§ப் உடைய வாடையை பெறுகிறேன். (நுகர்கிறேன் என்று தமக்கருகில் இருந்தோரிடம் கூறிவிட்டு) அறிவுத் தளர்ச்சியடைந்து விட்டேன் என்று என்னை நீங்கள் கருதாமல் இருக்க வேண்டுமே”! என்று கூறினார்.
அருகில் இருந்த கிணற்றில் தனது மகன் யூஸ§பை மற்ற மகன்கள் தள்ளிவிட்டதை அறியவியலாத தந்தை, பல மைல்களுக்கு அப்பாலிலிருந்து வரும் சட்டையின் மூலம் மகனுடைய வாசனையை உணர்கிறேன் என்று கூறியதோடு, நான் பிதற்றுகிறேன் என்று நீங்கள் கருதிவிடவேண்டாம் என்றும் கூறியதன் பின்புலத்தில் அல்லாஹ் இருக்கிறான். அல்லாஹ் அறியவைத்தான், அறிந்தார். நினைத்த உடன் அவரால் சுயமாகத் தெரிய முடியாது என்பதை அல்குர்ஆன் 12:94 வசனம் உணர்த்துகின்றது.
“நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்தும் நான் அறிவேன்” என்று மகன்களிடம் அவர் கூறிய வசனம் 12:86 கூர்ந்து நோக்கத்தக்கது.
‘கராமத்’ எனக்கூறி தரீகத்தை கேவலப்படுத்தும் போக்கு முரீதுகளால் நடந்தேறுகின்றன. “வானத்தில் பறந்து காட்டினாலும் ‘ஷரிஅத்’ இல்லையெனில், ‘தரீகத்’ குப்பை. கராமத்தை நாம் மறுக்கவில்லை. மனிதரோ, மகானோ அவர்கள் கைவசம் இல்லை என்பதே நான் கூற வருவது.
வானத்திலிருந்து பூமி வரை அல்லாஹ் கட்டுப்பாட்டில், அவன் தெரியப்படுத்தாமல், மகானாக இருந்தாலும் சுயமாகச் செய்யவோ, உணரவோ முடியாது.
பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் எனத் தனித்தனியே எடுக்கப்பெற்றாலும், தனித்த தன்மைகளுடன் விளங்கினாலும், மூலமான பால் இல்லாதிருந்தால் இவைகள் வந்திருக்குமா? அல்லாஹ்விடமிருந்து தான் அனைத்தும் கிடைக்கப் பெறுகின்றன. தந்த அல்லாஹ்வை மறந்து அவன் ஆட்டுவித்தவர்களைப் போற்றக்கூடாது.
‘ஜினா’ (பெருங்குற்றம்) செய்தல், பொய் கூறுதல் இரண்டும் வேறு, வேறு தன்மையிலானதாக இருந்தாலும், தண்டனை ஒரே விதமானது. மனிதர் ஜினாவை சமூகத்திற்கு பயந்து விட்டு விடுகின்றனர். பொய்யைக் கூடவே வைத்துக் கொண்டு அலைகின்றனர்.
ஒரு கடைக்காரர், பொருள்வாங்க வருபவரிடம் அவர் கேட்காத நிலையிலும் தானாக அசல் இவ்வளவு ஆகிறது எனப் பொய் கூறுகின்றார். வாங்க வந்தவர் இவரிடம், அசல் எவ்வளவு எனக் கேட்கவில்லை. விலையைக் குறைத்துத் தாருங்கள் என்றே கேட்டிருப்பார். கடையைத் திறந்து நான்கு பேரிடம் வியாபாரம் செய்திருப்பர், பொருள் வாங்க வந்தவரிடம் முதல் போனி எனப் பொய்யுரைப்பர் ஜினாவை விட்டும் விலகியது போன்று, பொய்களை விட்டும் விலக வேண்டும்.
அகத்தில் ஓடும் எண்ண ஒட்டகத்தை முகத்துக்குக் கொண்டு வந்து காட்டுமாறு மனிதனை அல்லாஹ் படைத்திருக்கிறான். இறைவனை ஏற்றுக் கொண்டு அதன் வழியே செல்பவனிடம், இறைவனையே பார்க்கலாம். ஷைத்தானியச் செயல்களை ஏற்று தொடர்ந்து அதன் பாதையில் பயணிப்போரிடம் ஷைத்தானை மட்டுமே காணமுடியும்.
மனிதனது உடல் சம்பந்தப்பட்ட இஸ்லாத்தின் நான்கு கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் மக்கா காலத்தில் கடமையாக்கப்படவில்லை. நபியவர்கள் மக்காவில் 13 ஆண்டுகள், உள்ளம் சம்பந்தப்பட்ட கலிமாவிற்காக மட்டுமே உழைப்பு செலுத்தினார்கள். உள்ளத்தில் உறுதியில்லாத நிலையில் உடல் சம்பந்தப்பட்டவைகளைச் செய்யுமாறு கட்டளையிட்டால் ஏற்றிருக்கமாட்டார்கள். அதனால், அத்தனை நீண்ட காலம் மனித உள்ளங்களில் கலிமாவை போதித்து வலுவான அடித்தளமிட்டார்கள். மதீனாவிற்கு ஹிஜ்ரத் – புலம்பெயர்ந்த பிறகு நான்கு கடமைகளையும் கட்டாயப் படுத்தினார்கள். பூரணப்படுத்தி வெற்றி கொண்டார்கள்.
மனிதன் உடல் சம்பந்தப்பட்ட நான்கு கடமைகளை வேண்டுமென்றே விட்டாலும் அவனுக்கு தண்டனை மட்டுமே! பாவ மன்னிப்புக் கோரிப் பெறலாம். உள்ளம் சம்பந்தப்பட்ட கலிமாவை ஏற்ற பிறகு அதன் மீது அவநம்பிக்கை கொண்டால் பாவியாகிவிடுவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுவான்.
“இறைப் பாதையில் நடக்கும் நீங்கள், அப்பாதையில் உங்களுக்குத் தெரிந்த உங்கள் குறைகளை உடனே நீக்க முயலுங்கள்”
“உங்களைப் போல் இறைப்பாதையில் நடக்கும் உங்கள் சகோதரரிடம் காணும் குறைகளையும் நீக்க உதவுங்கள்”
அந்த அடிப்படையில் வெளியிலிருக்கும் மற்றவர்களுடைய செயல்களில் குற்றம் கண்டுபிடித்து கூறுவதை விடவும், சொந்த வீட்டை, சொந்த சகோதரர்களைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் கூறியிருக்கிறேன்.
-முஃப்லேஷா ஆமிரி அவர்கள் கூறக் கேட்டுத் தொகுத்து எழுதியவர், ஆமிரி அன்பன்.
முஸ்லிம் முரசு ஏப்ரல் 2015