இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம்
மவ்லவி P.M.S.காசிமிய்யி, மன்யகரடிக்குளி, ஸ்ரீலங்கா
அல்லாஹ் மிகத் தெளிவாகக் கூறுகிறான்: “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையையும் பூர்த்தியாக்கி விட்டேன்” (அல்குர்ஆன் 5:3) இஸ்லாமிய மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டு விட்டது என்பதில் முஸ்லிம்களுக்குள் எந்தக் கருத்து வேற்றுமையும் கிடையாது.
இஸ்லாம் சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயத்திலும் முஸ்லிம்கள் கருத்து வேறுபட்டு தர்க்கம் செய்யவோ – பிரியவோ தேவையில்லாத வகையில், அல்லாஹ், குர்ஆன் மூலமாகத் தன்னுடைய சட்டங்களைத் தெளிவுப்படுத்தி விட்டான். அச்சட்டங்களில் மனிதனுடைய சட்டம் கடுகளவும் நுழைவதற்கு இடம் கிடையாது.
அல்லாஹ், தன் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே, சுயமே சட்டம் இயற்றவோ, சட்டத்தை மாற்றவோ அனுமதியளிக்கவில்லை. இதைத் தெளிவாகக் கண்ட பின், வேறு யார்தான் மாற்ற முன் வர முடியும்?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கிறார்கள். ”நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். உங்களுக்காக, இறைவன் தேர்ந்தெடுத்துத் தந்த மார்க்கத்திலிருந்து, ஏதாவதொன்றை நான் ஏவினால், அதை எடுத்துக் கொள்ளுங்கள். என் சொந்த அபிப்பிராயத்திலிருந்து எதையாது, நான் சொன்னால். நான் மனிதன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அறிவிப்பாளர்: ராஃபிஉ பின் கதீஜ், நூல் : முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மதீனாவில், அன்சாரிகளுக்குத் தனது சொந்த அபிப்பிராயம் சொல்லப்போய், ஒரு காரியத்தில் அவ்வன்சாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அப்பொழுதுதான் மேலே கண்டவாறு அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
ஹன்தக் யுத்தத்தின் போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அபிப்பிராயம் ஏற்றுக் கொள்ளப்படாது, ஸல்மான் பார்ஸி ரளியல்லாஹு அன்ஹு என்று ஸஹாபியின் அபிப்பிராயம் ஏற்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது (தஃப்ஸீர் : இப்னுகதீர்)
மார்க்கம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கும் பொழுது, அதை ஏற்றக் கொள்வது நம் மீது கடமையாகிறது.
பூரணப்படுத்தப்பட்ட இஸ்லாம் கலப்பற்றதொரு மார்க்கம். அது அல்லாஹ்வுக்கே சொந்தமானது. அதில் யாருக்கும் உரிமை கிடையாது. அந்த மார்க்கத்திற்கு அல்லாஹ்தான் இஸ்லாம் என்று பெயர் சூட்டினான். நம் அனைவரையம் முஸ்லிம்களாகவே வாழ்ந்து முஸ்லிம்களாகவே மரணிக்கச் சொல்லுகிறான்.
உலகில் தோன்றிய நபிமார்கள் அனைவரும், அல்லாஹ்வின் மார்க்கத்தை முறையாக, மக்களுக்கு எடுத்து வைத்து, தங்களை முற்றிலும், அல்லாஹ்வுக்கு அடிபணிந்து, நடக்கும் முஸ்லிம்களாக, அல்லாஹ் காண வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தார்கள். எனவே அல்லாஹ் ‘இஸ்லாம்’ என்று அறிவிப்பது மட்டுமே இஸ்லாம்; அதுவல்லாத எதுவும் இஸ்லாம் என்றாகிவிட்டது. இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாத்தில் இல்லாதவற்றை யார் செய்தாலும், அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
“இன்னும் இஸ்லாமல்லாத வேறு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால், அது ஒரு போதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அவர் மறுமை நாளில் நஷ்டடைந்தோரில்தான் இருப்பார்.” (அல்குர்ஆன் 3:85) என்று அல்லாஹ் கூறுகிறான்.இதிலிருந்து இமாம்கள் உண்டாக்கிய மார்க்கமல்ல இஸ்லாம் என்பது தெளிவாகிறது.
இமாம்கள் உண்டாக்கிய மார்க்கம் இஸ்லாம் என்று யார் கூறுகிறார்கள்? என்ற கேள்வி எழலாம்.
அல்லாஹ்வின் மார்க்கம் இதுதான் என்று மிகத் தெளிவாக அவனுடைய சொல்லிருந்தும், தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லிலிருந்தும் ஆதாரங்கள் காட்டிய பின்பும், அதிகமானோர் இன்று இமாம்களின் சொல்லில் தொங்கிக்கிடக்கின்றனர். அப்படியானால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் சட்டங்களைக் கொண்டு வரவும், சட்டத்தை மாற்றவும் இமாம்களுக்கு உரிமை இருப்பதாக இவர்கள் கருதுகிறார்களா? கண்ணிய மிக்க இமாம்களோ அல்லாஹ்வின் சொல்லுக்கும், தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்கும் மாற்றமாக எங்களுடைய சொல் காணப்பட்டால், அவற்றைத தூக்கி எறிந்துவிட்டு, அல்லாஹ்வின் சொல்லையும், அவனது தூதரின் சொல்லையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று மிகத் தெளிவாக பல்வேறு இடங்களில் கூறி, தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். ஆனால் முகல்லிதுகளோ, இந்த இமாம்கள் மீது பழியைச் சுமத்தி, அதன் மூலம் தங்களின் அறியாமையை மறைக்கக முயலுகின்றனர்.
“நாங்கள் ஏழெட்டு வருடங்கள் அரபி மதரஸாக்களில் ஓதிப் பட்டம் பெற்றிருக்கிறோம்.” “எங்களுக்குத்தான் ‘மார்க்கம்’ தெரியும்”. “நாங்கள் கூறுவதைத்தான் பாமரர் கேட்டு நடக்க வேண்டும்” இது பெரும்பாலான இன்றைய மெளலவிகளின் நினைப்பு.
மெளலவிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்தவர்களாக, நெஞ்சில் கை வைத்துப் சொல்லுங்கள். ஏழெட்டு வருடங்கள், நாம் இந்தியா இலங்கையிலுள்ள மதரஸாக்களில் ஓதியது என்ன? குர்ஆன், ஹதீஸ் உண்மையில் முழுமையாக ஓதித் தரப்படுகிறதா? மிகவும் சொற்பமாகத் தானே சொல்லிக் கொடுக்கப்படுகிறது! அதுவும் கிளிப்பிள்ளை பாடம்தானு! மதரஸாக்களில் சிந்தனைக்கு இடம் உண்டா?
மதரஸாக்களில் மெளலூது, மளாகிபு, ராத்திபு, புர்தா, வித்ரியா, தஸவ்வுஃபு, மன்திக் மஆனி, ஃபலக் ஆகிய குப்பைகளைப் படிப்பதில் தானே காலம் வீணடிக்கப்படுகின்றது. இந்தக் குப்பைகளால், உலகம் முடியும் வரை, நமக்கோ, நம் சமுதாயத்திற்கோ பயனேதும் கிடைக்குமென்று கருதுகிறீர்களா? இவைகளால் ஒரு பயன் உண்டு! மெளலிது ராத்திபுகளால், வயிறு நிறைய சாப்பாடு, கை நிறைய பணம் கிடைக்கின்றன. இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது என்றவுடன் சிலருக்குப் பெரும் உளைச்சல் எடுக்கிறது.
மெளலிவிகள் உண்மையை உணர வேண்டும். அதை மக்களுக்குச் சொல்ல முன் வரவேண்டும். காரணம் உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் உண்மையைச் சொல்ல பயந்ததில்லை. தலை போய்விடும்; பசி, பட்டினி வந்துவிடும், கெளரவம் பறிபோய் விடும் என்றெல்லாம் எண்ணி, உண்மையைச் சொல்ல பயந்ததில்லை. அத்தகு நபிமார்களின் வாரிசுகளாகிய உலமாக்கள், அவர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர வேண்டும். இன்றைய கால மக்கள் உண்மையை உணரவே ஆசைப்படுகிறார்கள் இது அறிவு வளர்ச்சியடைந்த காலம்; உண்மையை உரைக்கிற போது மக்கள் சிந்திப்பார்கள்.
குர்ஆனும் ஆதாரபூர்வ ஹதீஸ்களும் முஸ்லிம்களாகிய நம்மிடையே இருக்கிறபோது. நமது பிரச்சினைகளுக்கு ஏன் தீர்வு காண முடியாது? நமக்குள் எழும் பிரச்சினைகளுக்கு, இவை இரண்டும் (குர்ஆன், ஹதீஸ்) அல்லாத வேறு எதைக் கொண்டேனும் தீர்வு காண முடியமா? -தீர்வு காணத்தான் விழையலாமா?
மெளட்டீக காலத்துச் சட்டங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? இதற்கு குர்ஆன், ஹதீஸ் பதிலளிக்கின்றன; இல்லை எச்சரிக்கின்றன.
“அஞ்ஞான காலத்துத் தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வை விடத் தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?” (அல்குர்ஆன் 5:50)
“அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு, எவர் தீர்ப்பு அளிக்கவில்லையோ, அவர்கள் காஃபிர்கள்; அநியாயக்காரர்கள் – பாவிகள்.” (அல்குர்ஆன் 5:44, 45,47)
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக நமக்குக் கொடுக்கப்பட்ட இஸ்லாத்திலில்லாத ஒன்றை எவன் உண்டாக்கி, இதுவும் இஸ்லாத்தில் உள்ளது தான் (பித்அத் ஹஸனா) என்று கூறுகிறானோ, அது எடுத்தெறியப்பட வேண்டிய ஒன்றாகும்.” (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி,முஸ்லிம்)
பித்அத்துகள் அனைத்தும் வழி கேடுகளாகும். (அறிவிப்பாளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ, முஸ்லிம், நஸயீ.)
புதுமைகள் அனைத்தும் வழிகேடு என்று அல்லாஹ்வின் தூதர் கூறிவிட்ட பின், அதை அழகுபடுத்த முனைபவனை விட கெட்டவன் யாராக இருக்க முடியும்?
ஹிதாயத் என்பது அல்லாஹ்வின் நேர்வழி அதற்கு நேர் எதிர் தான் லழாலத் (வழிகேடு) இது ஷைத்தானின் வழி – பித்அத் எனும் புது வழி.
“அல்லாஹ்வின் மிகப் பெரும் கோபத்திற்குள்ளான மூவரில் ஒருவர், இஸ்லாத்தில் மூடப்பழக்க வழக்கங்களை உண்டு பண்ணுகிறவராவார்.” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ)
ஒரு சமயம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் தெளராத்தின் பிரதியொன்றைக் கொணர்ந்து படிக்க ஆரம்பித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகம் கோபக்கனல் வீசிச் சிவந்தது.
“பிரகாசமுள்ள தெள்ளத தெளிவான ஷரீஅத்தை நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். எந்த இறைவனிடம், இந்த முஹம்மதின் உயிர் இருக்கிறதோ, அந்த இறைவன் மீது ஆணையாக, இப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் உங்களிடம் வந்து நீங்கள் அவரைப் பின்பற்றினால், நீங்கள் வழி தவறியவராவீர்கள். அந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் இப்போது இருந்தாலும் என்னைப் பின்பற்றுவதை விட்டு, அவருக்கு வேறு வழியில்லை.” (ஹதீஸ் சுருக்கம்) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கடிந்து கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: தாரமீ
அல்லாஹ்வின் வேதங்களில் ஒன்றான தெளராத்தைப் படித்ததற்கே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடிந்துரைத்திருக்கிறார்கள் என்றால், மனிதர்களாக – மதிப்பு மிக்கவர்களாக விளங்கிய இமாம்களின் பெயரால், இட்டுக் கட்டப்பட்ட விஷயங்களை இஸ்லாமிய மார்க்கம் என்று அழைக்கலாமா? என்பதை முஸ்லிம் சகோதர, சகோதரிகளே சிந்தித்துப் பாருங்கள்.
இன்று நமக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, அல்லாஹ்வின் வேதமும், தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தெளிவான ஹதீஸும் இருந்தும் கூட தீர்ப்பு அளிப்பதில் குழப்பம் ஏன்? அப்பிரச்சனைகளுக்கு நம்மில் பெரும்பாளோர் குர்ஆன். ஹதீஸ் கொண்டு தீர்ப்பு அளிப்பதில்லை. இதுதான் குழப்பத்திற்கு முழு முதற்காரணம். அந்த இமாம் அப்படிச் சொல்லுகிறார். அந்தக் கிதாபில் அப்படியுள்ளது. இந்தக்கிதாபில் இப்படியுள்ளது என்று பேசி அடம்பிடிப்பதைக் காண முடிகிறது. இது ஏன்? முஸ்லிம்களைக் கூறு போட்டு, ஆளுக்கொரு சட்டம் என்று வகுத்து, அங்கீகரித்ததது யார்?
“ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எங்களுக்குத தொழுகை நடத்திவிட்டு, எங்கள் பக்கம் முகத்தை திருப்பினார்கள். கண்களில் கண்ணீர் சிந்த. உள்ளங்கள் திடுக்கிடும் அளவுக்கு உருக்கமாகவும் நளினமாகவும் உபதேசித்தார்கள். இது கடைசிப் பிரசங்கமோ என எங்களிலொருவர் கேட்கிற அளவுக்கு கூறினார்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். மேலும் அவனின் பேச்சுக்கு செவிமடுங்கள். அவனின் சொல்லலுக்கு வழிப்பட்டு நடங்கள். ஒரு நீக்ரோ அடிமை உங்களுக்கு அதிகாரியாக இருந்தால், அவருக்கு வழப்படுங்கள். எனக்குப் பின் உங்களில் யார் உயிர் வாழ்வீர்களோ, அப்பொழுது அதிகமான மார்க்கக் குழப்பங்களைக் காண்பீர்கள். அந்நேரத்தில் என்னுடைய வழியையும், கடவாய்ப் பற்களால் பற்றிப் பிடித்து நேர்வழியின்பால் இட்டுச் செல்லக்கூடிய நேர்வழி பெற்ற கலீபாக்கள் வழியையும் பின்பற்றுஙகள். மேலும்(என்னிலில்லாத) புதிய அனுஷ்டானங்களைக் குறித்தும் எச்சரிக்கிறேன். புதியவைகள் அனைத்தும் வழிகேடுகள்.” (அறிவிப்பாளர்: இர்பாழு பின் சாரியா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அஹ்மது, அபூதாவூது, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)
பித்அத்து(புதுமை)கள் அனைத்தும் வழிகேடு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வளவு தெளிவாக, ஆணித்தரமாக எச்சரிக்கிற போது, பித்அத்தில் அழகிய பித்அத் என்று கூற யாருக்கு அதிகார முண்டு? அழகிய பித்அத், அழகிலா பித்அத் என்று கூற யாருக்கு வஹி வந்திருக்கிறது? பித்அத் என்று பெயரில் இஸ்லாத்தில் நடதக்கிற அனாச்சாரங்களை அறிந்தும் மெளனம் சாதிக்கும் உலமாக்கள் ஏராளம். அந்த அனாக்சாரங்களுக்கு’ ஆதாரம்’ அதைவிட ஏராளம். உண்மையை உரைத்து, அனாச்சாரங்களைக் கண்டித்து வரக் கூடியவர்களை மக்களிடத்தில் பிரிப்பதற்கு பாடுபடும் உலமாக்களும் ஏராளம்.
“சத்தியம் வெல்லும், அசத்தியம் தோற்கும்” – (அல்குர்ஆன் 17:81). இது அல்லாஹ்வின் வாக்கு சுயநலத்திற்காக மார்க்கத்தில் இல்லாததை மார்க்கமாகவும்; அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், நன்மையான காரியமாக காணாததை எல்லாம், நன்மையென மக்களிடம் கூறி, வயிறு வளர்ப்பவர்கள், அல்லாஹ்வுக்குப் பயந்து உண்மையை மக்களிடம் எடுத்துக்கூற முன வரவேண்டும். அறிந்த உண்மைகளை வைத்து, வர்த்தக ரீதியில் லாபம் முனையக் கூடாது.
ஹிதாயத் என்னும் நேர்வழியை விற்று, லழாலத் என்னும் தீய வழியை வாங்கக் கூடாது. மக்களின் அதிருப்திக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக, உண்மைக்குப் புறம்பாக மார்க்கம் பேசக் கூடாது. பெரும் மக்கள் கூட்டம் ஒரு பக்கம் இருக்கிறது என்பதைக் கருதி, அதற்கேற்ப மார்க்கத்தை வளைத்துப் பேச வேண்டாம். ஒரு தனி மனிதன் நேர்வழியில் இருந்தால், அவன் பெரிய தொரு சமூகமாக, அல்லாஹ்வினால் கருதப்படுகிறான். இதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஒரு அழகிய முன்மாதிரி என்பதை உணர வேண்டும்.
“பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால்; அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டுத் திருப்பி விடுவார்கள். ஆதாரமற்ற வெறும் யூகங்களைத் தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 6:116)
நாங்கள் மதரஸாக்களில் அரபி படித்த்ருக்கிறோம். அரபி மொழி தெரியாதவர்களுக்கு என்ன தெரியும்? என்ற அகங்கார எண்ணமும் ஆணவப் போக்கும் ஆலிம்களுக்கு இருக்கவே கூடாது. அரபி படித்தவர்களுக்கு அல்லது அரபியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குத்தான் தீனுடைய விளக்கம் கிடைக்கும் என்பது ஆலிம்களின் எண்ணமா?
அரபி மொழியைக் காட்டி, குர்ஆனை ஓதி உணர – சிந்திக்க விடாமல், இதுகாலம் வரை பொதுமக்களை உலமாக்களாகிய நாம் அச்சுறுத்தியல்லவா வந்துள்ளோம். குர்ஆனை விளங்குவதற்கு எத்தனையோ படித்தரங்கள் இருக்கின்றன என்று மக்களை நாம் பயமுறுத்தி வந்திருக்கிறோம். குர்ஆனை விளங்க குறிப்பிட்ட கலை பலவற்றைக் கற்றிக்க வேண்டும் என்ற கட்டளை யாருடையது? கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான் என்ற மாற்று மதத்தாரின் கதைக்கொப்ப அல்லவா இக்கூற்று இருக்கிறது. “இக்குர்ஆனை விளங்குவதற்கு மிகவும் எளிதாக ஆக்கியிருக்கிறோம். இதைச் சிந்திப்பவர்கள் உண்டா?” (அல்குர்ஆன் 54:17) என்றல்லவா கருணையுள்ள ரஹ்மான் கூறுகிறான்.
சிந்தித்துச் செயல்படுத்த முடியாததொரு வேதமா குர்ஆன்? தெளிவில்லாத, நடைமுறைக்குச் சாத்தியப்படாத ஒரு வேதத்தை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான் என்று ஆலிம்கள் கூறப் பார்க்கிறார்களா? ஆம், அப்படிக் கூறினாலும் ஆச்சரியப்படுவதில்லை.
குர்ஆனை இன்று மந்திழர தந்திர வேலைகளுக்கு மரணித்தவர்களுக்கு ஓதுவதற்கும் அல்லவா ஆலிம்களில் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். எல்லா விஷயமும் குர்ஆனில் விளக்கமாக இருக்கிறது என்று சொல்லும் இவர்கள் ஏன் இமாம்களின் கிதாபுகளைத் தூக்கிப் பிடித்து அடம் செய்ய வேண்டும்? இதற்கெல்லாம் முழுமுதற் காரணம், நமக்கு மதரஸாக்களில் அதிகம் கற்றுத் தருவதெல்லாம், இமாம்களின் கிதாபுகள், அந்தக் கிதாபுகளில் நன்கு பழக்கப்பட்டு விட்டோம். பழக்க தோஷம் விடுமா?
அல்லாஹ் இன்ன சூராவில் இன்ன ஆயத்தில், தன்னிடம் பாதுகாப்புத் தேடச் சொல்லுகிறான் என்று கூறும்பொழுது, இல்லை முஹிய்யித்தீனை உதவிக்குக் கூப்பிடலாம் என்று அல்லாஹ்வுடைய கிதாபுக்குப் போட்டியாக, இன்ன இமாமுடைய கிதாபிலுள்ளது என்று கூறும் சுயநலமிகளும் நம்மில் ஏராளமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அல்லாஹ்வின் சட்டமே உன்னதச் சட்டமாகும். அதை உலகில் நிலை பெறச் செய்ய முன் நின்று பாடுபட வேண்டியவர்கள் உலமாக்கள். இஸ்லாத்தில் யூகங்களும், சுயநலும் நுழைந்துவிடக் கூடாது. அவைகளை ஆலிம்கள் களைந்தெறிய முன்வர வேண்டும். குர்ஆனுக்கும் உண்மை ஹதீதுக்கும் மாற்றமாக, கண்ணியமிக்க இமாம்கள் பெயரால், பல கிதாபுகள் மதரஸாக்களில் உள்ளன். அவைகளைத் தடை செய்ய, அகற்ற உலமாக்கள் முற்பட வேண்டும்.
மவ்லூது என்ற பெயரால் பல கிதாபுகள் முஸ்லிம்களில் பெரும்பாலோரால் பக்தி சிரத்தையோடு பாடப்பட்டு வருகிறது. இதனையும் நம் உலமாக்களில் பலரே அரங்கேற்றம் செய்கிறோம் என்பது வேதனைக்குரியது.
ஷிர்க்கையும், அல்லாஹ்வின் அந்தஸ்தையும் குறைத்துக் காட்டும் இந்த மவ்லூது கிதாபுகளைத் தடை செய்ய உலமாக்கள் முன் வர வேண்டும்.
கலங்கமற்ற வேத நூல் குர்ஆன். இந்த குர்ஆனைக் களங்கப்படுத்தவும், அல்லாஹ்வின் தனித்துவத்தைக் கொச்சைப்படுத்தவும் ஷைத்தானின் தூண்டுதலில் உருவானவைகள் தான் இந்த மெளலூது கிதாபுகள் எனும் குப்பைகள்.
எனவே இது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நம்முடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் குர்ஆன், ஹதீஸ் மூலமகாவே தீர்வு கண்டு. அதன் பயனாக நாம் ஒன்று படுவோமாக! அல்லாஹ் நம் அனைவரையும் இஸ்லாத்தின் பால் கொண்டு செல்வானாக ஆமீன்.
source: http://annajaath.com/archives/4102