புதுமையும் பழமையும்
N. ஹாஜா பந்தே நவாஸ் மிஸ்பாஹி
[ அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிச்சுவடு மனித இனத்திற்கோர் முன்மாதிரியாகும் என்ற அடிப்படையில், அதற்கு மூலாதாரமாக இருப்பவை திருக்குர்ஆனும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன் மொழிகளான ஹதீதுகளுமாகும். அவை இரண்டும் முஸ்லிம்களிடையே நடை முறையில் இருக்கும் வரை அன்னவர்களை எச்சக்தியாலும் அசைக்க முடியாது.
நான் இரண்டு பொருட்களை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொள்ளும் வரை நீங்கள் வழி தவறமாட்டீர்கள். (அவை) இறை மறையும், அவன்தன் திருத்தூதர் மொழியுமாகும். (நபிமொழி முவத்தா மிஷ்காத் பக்கம் – 31.0)]
அறியாமை எனும் அந்தகார இருளில் ஆழ்ந்து கிடந்த மனித சமுதாயத்தை மாற்றியமைக்க வந்தப் பேரொளியாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றினார்
அன்று. வந்தவர்களை அன்பு கனிந்த இதயத்தோடு வரவேற்று. தம் வழி நோக்கி நடாத்திச்சென்றார். அவர் காட்டிய வழி நேர்மை மிக்கது. அபாயமற்றது. பெருமழைக்கும், கோரப் புயலுக்கும் அழிபடாதது என வீர முழக்கம் செய்தார்.
இப்பெரும் முழக்கத்ததை அன்று அவனியோர் கேட்க, அதனாலன்றோ அதனை அழித்தொழிக்க ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் படுதோல்வி கண்டனர்.
ஆம்! அவர் காட்டிய அவ்வழிதான் பெருமதிப்பிற்குரிய இஸ்லாம். இஸ்லாம் புதுமையானதல்ல. பழமையானது. மறைகள் கொணர்ந்த மஹான்களுடையது. மஹான்கள் மறைய, மங்கிப்போன அது மீண்டும் மறுமலர்ச்சி பெற்று கலங்கரை விளக்கமாய் சுடர் பெற்றது. இது அண்ணல் நபியின் சாதுரியத்தால் அன்றோ.
இதோ வாழ வழி அறியாதவர்க்கெல்லாம் வழி திறந்து வைத்திருக்கிறேன். வாழ வழி காட்டும் பணியே என் பணி. நான் செல்லும் வழி நோக்கி எவரும் பயமின்றி வரலாம் என்றெழுப்பிய அறிவொளி இன்று மானசீகமாக காதுகளைத் துளைக்காமலில்லை.
இஸ்லாம் நீங்க ஏனைய வழிகளை நோக்கிப் போனவர்கள். இஸ்லாத்தின் புனிதத்துவத்தை உணர்ந்து, அதன்வழி நோக்கித் திரும்பினர். இது சரித்திரச்சான்று. மிகையல்ல.
மக்களாட்சி தழைத்தோங்கிய ராஜ்ஜியங்களிலும், பெரும் வல்லரசுகள் உருப்பெற்ற நாடுகளிலும், உட்புகுந்து, உண்மையான ஜனநாயகத்தை உருப்பெறச் செய்தது இஸ்லாம் ஒன்றே என்பதும் சரித்திரம் கண்ட உண்மை.
இஸ்லாம் மின் வேகத்தில் எங்கும் ஒளியிடுவதற்கு, அண்ணல் நபியும் அவர்தம் உத்தமத் தோழர்களான புண்ணியமிகு ஸஹாபாக்களுடைய உழைப்புமே மூலகாரணமாய் அமைந்தது. அவர்களுடைய கரங்களில் அன்று மிளிர்ந்து கொண்டிருந்த, புனித மறையின், அறப் போதனையைக் குறிக்கோளாய்க் கொண்ட இஸ்லாத்தை இப்புவி எங்கும் உயர்வடையச் செய்ய அவர்களுடைய வாழ்வை அர்ப்பணித்தவர்கள். புனித மறையில் புதையுண்ட, சொற்சுவை, பொருட்பொழிவு, நாகரிகப்போக்கு, சீரியநடை, பழமையின் அழகிய வடிவம் கண்டு, அன்று வாழ்ந்த கலைஞர்களும், கலை வல்லுனர் களும் பிரமித்தனர்.
இலக்கிய வானில், தனிச்சிறப்புப் பெற்றிருந்த, அன்றைய அரபு நாட்டு யூத மத அறிஞர்கள், இஸ்லாத்திற்கெதிராக எதையும் தியாகம் செய்ய சித்தமாயிருந்தனர். நாவன்மையால் எவரையும், மயக்கும் அபார சக்தியையும் அவர்கள் பெற்றிருந்தனர். இஸ்லாத்தைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்த உண்மை முஸ்லிம்களையும் திகைப்பூட்டும் வண்ணம்அவர்களுடைய நாவன்மை இருந்தது.
ஹழ்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது பற்றிக் கூறினார்கள். அதுகேட்ட அண்ணல் நபி அவர்கள். நீங்கள் யூதர்கள் போன்றும் கிறித்துவர்கள் போன்றும் சந்தேகத்தில் இருக் கின்றீர்களா? நான் உங்களிடம் நிச்சயமாக மிகத் தெளிவான பரிசுத்த இஸ் லாத்தைக் கொண்டு வந்துள்ளேன். மூஸா (நபி இன்று) உயிரோடிருந்தாலும், அவர் என்னைப் பின் தொடர்வதைவிட (வேறு) எவ்வழியையும் அவர் கடை பிடிக்க முடியாது என்று நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கம் தந்தார்கள். (நபிமொழி அஹ்மத் மிஷ்காத் – பக்கம் 30)
ஆகவே அவ்வடிச் சுவடுதான் முஸ்லிம்களின் உயிர்நாடி. அது பழமை மிக்கப் பெருமையுடையது. அண்ணல் நபியின் அடிச்சுவடு அரபு நாட்டிற்கு மாத்திரமல்ல. எந்நாட்ட வருக்கும், எம்மொழி யுடையோர்க்கும், எந்நிறத்தவருக்கும் பொதுவானது அதைக் கொள்கை யளவில் ஏற்று நடப்பவர் உயிரோடிருக்கும் வரை இஸ்லாமிய சமுதாயம் வீழ்ச்சி அடையாது. ஆனால் அதைக் கொள்கையளவில் ஏற்க மறுப்பவர்கள் தோன்றும் பொழுதுதான் பல தொல்லைகள் தொடர்ந்து வரும். அன்னவர்களை தவறான வழி நோக்கி செலுத்த பல கூறு கெட்ட தலைவர்களும் முளைத்து விடுவர்.
எனது கொள்கையன்றி, என் வழியின்றி நடப்பவர்களான கூட்டத்தினர் நரக வாசல்களுக்கு அழைப்பவர்களாவர். அவர்களது அழைப்பை ஏற்றுக் கொள்பவர்களை அன்னவர் நரகில் எறிந்து விடுவர். என் வழி நோக்கிச் செல்லாத, எனது கொள்கையை ஏற்றுக் கொள்ளாத தலைவர்கள் எனக்குப் பின் தோன்றுவர். மனித உருவம் தரித்த இதயங்கள், ஷைத்தான்களுடைய இதயங்களாவுள்ள மனிதர்களும் அவர்களில் வெளிப்படுவர். (நபிமொழி புகாரி, முஸ்லிம் மிஷ்காத் – பக்கம் 461 – 462)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிச்சுவடு மனித இனத்திற்கோர் முன்மாதிரியாகும் என்ற அடிப்படையில், அதற்கு மூலாதாரமாக இருப்பவை திருக்குர்ஆனும், அண்ணல் நபியின் பொன் மொழிகளான ஹதீதுகளுமாகும். அவை இரண்டும் முஸ்லிம்களிடையே நடை முறையில் இருக்கும் வரை அன்னவர்களை எச்சக்தியாலும் அசைக்க முடியாது.
நான் இரண்டு பொருட்களை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொள்ளும் வரை நீங்கள் வழி தவறமாட்டீர்கள். (அவை) இறை மறையும், அவன்தன் திருத்தூதர் மொழியுமாகும். (நபிமொழி முவத்தா மிஷ்காத் பக்கம் – 31.0)
-முஸ்லிம் முரசு, மார்ச் 2016