நல்லவன் வல்லவன்
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நல்லவனாக வாழ்வதே உத்தமம். அந்த நல்லவன் என்ற மகுடத்தை அவனுக்கு, அவன் வாழ வேண்டிய வழிமுறைகளை முறையாக தவறாமல் பின்பற்றியாக வேண்டும் .
வாழ்நாள் பூராவும் நல்லவன் என்ற பெயரெடுக்க மிகமிக நல்லவனாக வாழ்ந்தாக வேண்டும். அதற்கு மாறாக கெட்டவன் என்ற பெயரெடுக்க அரைநொடி போதும், சீச்சீ நீ கெட்டவன், மனிதனே அல்ல என்று பலரும் அவனை மிரட்டி விரட்டி அடிப்பார்கள்.
நல்லவனாய் பிறப்பது சந்தர்ப்பத்தினால், நல்லவனாய் வாழ்வது விடா முயற்சியினால். ஒரு மனிதன் தவறாக வாழ்ந்து வந்ததை வாழ்வதை குர்ஆன் இப்படி எச்சரிக்கிறது.
“காலத்தின் மீது சத்தியமாக (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக நஸ்டமடைந்து விட்டான்”. (அல்குர்ஆன் 30: 1-2) என கூறுகிறது.
தவறெனும் சேற்றில் கால் வைப்பவன் பின் கழுவிக் கொள்ளலாம் எ ன எண்ணினால் முட்டாள்தனமாகும், அல்லவா!
“குறிக்கோள் இல்லாமல் வாழ்வது, காரணம் இல்லாமல் வெளியூருக்கு செல்கிற பயணம் போன்றது” என்பது போல எதிலும் அக்கறை கொண்டு வாழவேண்டும். உண்மை செயலிலும் பேச்சிலும் நிறைய வேண்டும்,
நல்லதை செயல்படுத்தவேண்டும் நல்லவற்றையே நாடுவது என்ற வைராக்கியம் வேண்டும்.
“உழைக்கும் மனிதனின் உறக்கம் இனி மையானது” என சான்றோர் கூறினர். அந்த உழைப்பிலும் நாணயம் நேர்மை தொடர வேண்டும். இல்லையேல் நல்லவன் அவனுடன் தொடரமாட்டான்.
“நேர்மை, நீதி, அஞ்சாமைப் பாடங்களைப்படி மீண்டும் உலகத்தை வழி நடத்தும் தலைமை உனக்கே கிடைக்கும்’’! என அல்லாமா இக்பால் கூறினார்.
நல்ல உள்ளம் பண்பட பண்பட வல்லவன் வலிமை உடன்சேரும். “முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும், எழுந்து நட எரிமலையும் உனக்கு வழிவிடும்.”.
தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் இல்லாமையைக் கண்டு கவலைப்படாமல், வீரமுடன் உறுதியுடன் இறை நம்பிக்கையுடன் எதையும் சந்திக்க சாதிக்க துணிந்தால் வெற்றி நம் தோள்களில் நின்று முழக்கமிடும்.
நல்லவனோடு வல்லவன் கூட்டணியாகும்போது முரண்பாடுகள் முட்டுக் கட்டை போட முடியாது, உண்மை ஊர்வலம் வந்தால் பொய்கள் வெருண்டோடி விடும் என்பதுபோல, உண்மையும் நேர்மையும் வணிகத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிலைநாட்டியதால்தான் நம்பிக்கையாளர் அல்அமீன் என்றும் போற்றி பாராட்டினர்.
நல்லவன் என்ற சட்டையை நீ மாட்டிக் கொண்டால் மட்டும் போதாது, நடத்தையும் நயம்படக் கலந்திடல் வேண்டும். அப்போது வல்லவன் உன் கரம் பற்றிட விரைந்தோடி வருவேன். கலங்காத உள்ளமும் கனிவான எண்ணங்களும் வெற்றிக்கு பாதை போட்டுத் தந்திடும்.
உண்மை தங்கத்தை விட மேலானது எல்லா அறிவிற்கும் ஆணிவேராகும். மனிதனிடமுள்ள எல்லாத்திறன்களையும் விட தன்னம்பிக்கையே வலிமையானது.
நம்பிக்கையே நல்லவனுக்கும் வல்லவனுக்கும் பலமான ஆயுதம். நல்லவன் வல்லவனாவதும், வல்லவன் நல்லவனாவதும் மனித வாழ்வின் நடக்கும் அபூர்வங்கள் அந்த அபூர்வத்தை கெட்டியாக பிடிக்கின்றவனே வெற்றியாளன் என்பது நல்லோர் கூற்றாகும்.
மனித வாழ்வில் உண்மையைப் பற்றி பிடித்து நேர்மையைக் கட்டித்தழுவி பொய்யை புரட்டை புரட்டிப்போட்டு புரளியை விரட்டியடித்து நீதியை மன உறுதியுடன்கடைபிடித்தால் என்றும் நல்லவன் வல்லவனே!
கவிஞர் பொன்னகரம் சுல்தான்
முஸ்லிம் முரசு, பிப்ரவரி 2016
source: http://jahangeer.in/Feb_2016.pdf