Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இடைத்தரகர்களும் இடைஞ்சல்களும்

Posted on March 11, 2016 by admin

இடைத்தரகர்களும் இடைஞ்சல்களும்

    முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.    

நுகர்வோருக்கும் வணிகருக்கும் இடையே நேரடியான தொடர்பின்றி, இடைத்தரகர்களின் தலையீட்டின் மூலமே பல்வேறு வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

வாடகைக்கு வீடு பார்த்தல், வேலைக்கு ஆள் அனுப்புதல், திருமணத்திற்கு வரன்கள் பார்த்தல், வியாபாரப் பொருள்களை கைமாற்றிவிடுதல் எனத் தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைத்தல், கட்சிகளில் பதவியைப் பெற்றுத் தருதல் வரை பல்வேறு பணிகள் தரகர்களின் தலையீட்டால் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

அரசியலுக்குள் நுழையாமல், சமூகத்திற்கு அவர்களால் ஏற்படுகின்ற தொல்லைகள் தான்  எத்தனையெத்தனை!

தரகர்களின் தலையீட்டால் சமூக சேவை, ஒருவருக்கொருவர் உதவிசெய்தல் முதலிய வார்த்தைகள் பொருளிழந்துவிட்டன. ஒருவருக்கொருவர் உதவுதல் என்ற அடிப்படையில் நடைபெற்று வந்தவை இன்றைய அவசர உலகில் தரகு வேலையாக மாறிப் போய்விட்டன.

வாடகைக்கு ஒரு வீடு பிடித்துக் குடியேறுவதற்குக்கூட நான்கு தெரு சுற்றி அலைந்து தேடிப் பார்க்க நேரமில்லை. நாம் யாரிடமாவது, “வீடு இருந்தால் சொல்லுங்களேன்” என்று சொன்னால் போதும், “புரோக்கரிடம் சொல்லி வையுங்களேன்” என்று உடனடியாக ஒரு பதிலை உதிர்த்துவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள்.

“என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை இருந்தால் பார்த்துச் சொல்லுக்கா” என்று சொன்னால், “புரோக்கரிடம் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்துவிடுகின்றார்கள். மனிதர்களின் இந்த அவசரச்சூழல்தான் சமூக சேவையாக இருந்தவை தரகுச் சேவைகளாக மாறிப்போய்விட்டன.

இதனால் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியேற எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் தம் வீடுகளை வாடகைக்கு விட, To let (வாடகைக்கு) என்ற பலகையை வைக்கவிடாமல் தடுத்துவிடுகின்றார்கள் இடைத்தரகர்கள். அவ்வாறு அவர்கள் வைத்துவிட்டால் இவர்களுடைய தொழில் பாதிக்கப்படுமாம். வீட்டு உரிமையாளரிடம், “நீங்கள் எதிர்பார்ப்பதைவிட ஒரு மடங்கு அதிகமாகவே நான் உங்களுக்கு ஆள் கொண்டு வாறேன்! எனக்கு ஒரு மாத வாடகை மட்டும் கொடுத்துடுங்க” என்று பேசிக்கொண்டு “வீடு வாடகைக்கு” என்ற பலகையை எடுக்கச் செய்துவிடுகின்றார்கள். வீட்டு உரிமையாளரிடம் ஒரு மாத வாடகையும் புதிதாகக் குடியேறுபவரிடம் ஒரு மாத வாடகையும் இடையில் நுழைகின்ற இடைத்தரகர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.

இதனால் வீட்டு வாடகை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. சாதாரண நபர்களுக்கு அவ்வளவு எளிதாக வீடு கிடைத்துவிடுவதில்லை. சுயமாகத் தேடுவோருக்கும் வீடு கிடைப்பதில்லை. இடைத்தரகர்களுக்குத் தரகு கொடுக்க முடியாததால், சாதாரண மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.

“என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பாருங்கள்” என்று யாரேனும் தரகரிடம் தகவல் கொடுத்தால் போதும். உடனடியாக அவர்களிடமிருந்து செலவுக்குப் பணம் வாங்கிக்கொள்கின்றார்கள். அதன்பின் பெண்ணுக்கு எத்தனை பவுன் நகை போடுகின்றார்களோ அத்தனை பவுனுக்கு, ஒவ்வொரு பவுனுக்கும் இவ்வளவு தொகை என நிர்ணயம் செய்து, எத்தனை பவுன் போடுகின்றார்களோ அத்தனை பவுனுக்குரிய தரகுத் தொகையை இருவீட்டாரிடமிருந்தும் வசூல் செய்துவிடுகின்றார்கள். இவர்களின் சுய இலாபத்திற்காக வரதட்சணை மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகிறது.

பவுனுக்கேற்பத் தரகுத் தொகை என்பதால், தொகையைக் கூடுதலாகப் பெற விரும்பி, “இத்தனை பவுன் போட்டால்தான் உங்க பொண்ணு நிகாஹ் நடக்கும்” என்று சொல்லி பவுன் எண்ணிக்கையை உயர்த்திவிடுகின்றார்கள்.

மாப்பிள்ளை வீட்டாரிடம் சென்று, “இத்தனை பவுன் வாங்கித்தாறேன். எனக்கு இவ்வளவு கொடுத்துவிடுங்கள்” என்று ஆசைகாட்டி, தம் நிபந்தனைக்குப் பணிய வைக்கின்றார்கள். எனவே எங்கிருந்து அதிகமாக வருகிறதோ அங்குதான் மாப்பிள்ளை வீட்டார் சம்பந்தம் பேசுகின்றார்கள். இதனால் நடுத்தர மற்றும் ஏழைப்பெண்களின் திருமணம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது; பவுன்களின் கணக்கீட்டின்படி தரகுத்தொகை கிடைப்பதால் குறைந்த அளவு பவுன் போடுகின்ற வீடுகளில் திருமணம் மிகவும் தள்ளிப்போகின்றது; ஏழை வீட்டுக் கன்னிப் பெண்கள் முதிர் கன்னிகளாகும் சூழ்நிலை பரவலாக உள்ளது; தன் திருமணத்திற்குத் தானே சென்று சம்பாதிக்கும் துர்பாக்கிய நிலைக்குப் பெண்சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது.

“நீங்கள் (திருமணம் செய்துகொள்கின்ற) பெண்களுக்கு அவர்களுடைய “மஹரை’ (திருமணக் கொடையை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்” (அல்குர்ஆன் 4:4) என்ற திருக்குர்ஆன் கட்டளையை ஏற்றுள்ள இஸ்லாமியச் சமுதாயத்தின் நிலையைப் பாரீர்!

“பெண்பார்த்தல்’ என்பது பெண்கள் சார்ந்த விஷயமாக இருப்பதால் “பெண் தரகர்கள்’ இக்களத்தில் மிகுதியாக ஊடுருவியுள்ளார்கள். அவர்கள் எல்லா வீடுகளிலும் எளிதாக நுழைந்து கொள்கின்றார்கள். பெண் தரகர்கள் சிலர் ஊர்விட்டு ஊர் சென்று, அங்கு பெண் பார்க்கச் சொன்ன வீடுகளில் இலவசமாகத் தங்கிக்கொண்டு, உணவுண்டு இளைப்பாறுகின்றார்கள்.

பெண்களுக்குள் இது நடைபெறுவதால், ஏழை வீட்டுப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொன்ன உடனேயே, “இந்தப் பெண்ணுக்கெல்லாம் மாப்பிள்ளை கிடைப்பது மிகவும் சிரமம்” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறி, மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றார்கள் பெண் இடைத்தரகர்கள். திருமணம் என்பது பொருளாதாரப் பின்னணியை முன்னிலைப்படுத்தியே பெரும்பாலும் நடைபெறுவதால் “தீன்’ எனும் நற்பண்பு ஒதுக்கப்படுகின்றது. உலகுசார் பண்புகளும் நிறைகளுமே முதன்மைப்படுத்தப்படுகின்றன. இத்தனை இடைஞ்சல்களுக்கும் இன்னல்களுக்கும் இடைத்தரகர்களே காரணம்.

“(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2158) இதை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

“கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக்கொடுக்க வேண்டாம்! என்பதன் பொருள் என்ன?” என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நான் கேட்டேன்; அதற்கு அவர்கள் “இடைத்தரகராக ஆகக் கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)” என பதிலளித்தார்கள் என்று தாவூஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்.

புகாரீ நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள இந்த நபிமொழியின் அடிப்படையில், இடைத்தரகராக இருந்து செயல்படக் கூடாது என்று தடைசெய்யப்படுகின்றது. திருமணம், வியாபாரம், வாடகை வீடு, நிலம் விற்பனை உள்ளிட்ட எத்தனையெத்தனையோ இதனுள் அடக்கம். நுகர்வோரும் வியாபாரியும் நேரடியாகத் தொடர்புகொண்டு ஒருவருக்கொருவர் விலைபேசி வாங்கிக்கொள்கிறார்கள்; விற்றுக்கொள்கிறார்கள். அவ்விருவருக்கும் இடையே இடைத்தரகர் எதற்கு? இடைத்தரகர்களின் தலையீட்டால் விலைவாசி உயர்வதைப்போல் வரதட்சணையாக வழங்கும் பவுன்களின் அளவும் உயர்ந்துவிட்டது.

கிராமத்திலிருந்து சரக்குகளைக் கொண்டு வருகின்ற வியாபாரி, ஊரின் பொதுச் சந்தையில் வைத்து மக்களுக்கு விற்பனை செய்வார்; அவர் தமக்குக் கட்டுபடியான விலையில் சரக்குகளை விற்பார். நுகர்வோர் அவற்றை விலைபேசி வாங்கிக்கொள்வர். இதில் நுகர்வோருக்கும் வணிகருக்கும் எந்த இழப்பும் இல்லை. இதேபோல் திருமணத்தில் பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் நேரடியாகப் பேசிக்கொண்டால் எளிய முறையில் திருமணம் நடைபெறும். அவரவர் தகுதிக்கேற்பப் பெண்ணையோ, மாப்பிள்ளையையோ பார்த்து அவரவர் வீட்டார் திருமணம் செய்து வைக்கப்போகிறார்கள். இதில் இடைத்தரகர்களுக்கு என்ன வேலை? அவர்கள் ஏன் இதில் தேவையின்றி நுழைய வேண்டும்? அவர்கள் வேறு வேலையைப் பார்க்கட்டும்!

“…ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்!…” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதித்தார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரீ: 2140)

மாப்பிள்ளைவீட்டார் ஏதேனும் ஒரு பெண்ணை மணம் பேசி வைத்திருக்கும் நேரத்தில் இடைத்தரகர்கள் இடையில் புகுந்து, “இதைவிடச் சிறந்த வரனை நான் கொண்டுவந்துள்ளேன்” என்று கூறி, அதிகமான தட்சணை கிடைக்கின்ற பெண்ணை அடையாளம் காட்டுவதால், ஏற்கெனவே பேசி வைத்த இடத்தின் சம்பந்தத்தை இடையிலேயே முறித்துவிட்டு, அதிகமான தட்சணை தரக் காத்திருக்கின்ற வேறு பெண்ணைப் பார்க்க ஆசையோடு செல்கின்றார்கள். முந்தைய திருமணச் சம்பந்தம் இடையிலேயே முறிந்துபோவதில் இடைத்தரகர்களின் பங்கு முக்கியமானது. இவை போன்ற எண்ணற்ற இடைஞ்சல்கள் இடைத்தரகர்களால் ஏற்படுகின்றன.

வாடகைக்கு வீடு பார்த்தல், பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தல், மாப்பிள்ளைக்குப் பெண் பார்த்தல், நிலம் வாங்குதல், நிலம் விற்பனை செய்தல் ஆகியவை ஒருவருக்கொருவர் செய்துகொள்ள வேண்டிய உதவியும் சமூக சேவையும் ஆகும். அதில் இடைத்தரகர்களுக்கு என்ன வேலை?

இடைத்தரகர்கள் தம் சுய இலாபத்திற்காக ஏழைகள், நடுத்தர மக்களின் பொருளாதாரத்தோடு விளையாடுவதும், அப்பெண்களின் மணவாழ்க்கை தள்ளிப்போவதற்குக் காரணமாக இருப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். எனவே பொதுமக்கள் இத்தகைய பணிகளில் இடைத்தரகர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் நம் சமுதாயமும் நாமும் பாதிக்கப்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

மேலும் தற்காலத்தில் தகவல் தொடர்பு மிக எளிதாக இருப்பதால், உங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டுமென்றாலும் மாப்பிள்ளைக்குப் பெண் வேண்டுமென்றாலும் நிலம் வாங்க, விற்க வேண்டுமென்றாலும், வாடகைக்கு வீடு வேண்டுமென்றாலும் அனைத்திற்கும் சமூக வலைதளங்கள் உள்ளன.

சுட்டுரை, முகநூல், கட்செவி முதலிய சமூக வலைதளங்களில் உங்களின் செய்தியைப் பதிவு செய்தால் தேவைப்படுவோர் உங்களை எளிதாக, நேரடியாகத் தொடர்பு கொள்வார்கள். நீங்கள் மிக எளிதாகவே உங்கள் தேவையை நிவர்த்தி செய்துகொள்ளலாம். ஆக, இடைத்தரகர்களுக்கு இவற்றில் வாய்ப்பளிக்காமல் தவிர்த்தால் அவர்கள் தாமாகவே இக்களத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்பது திண்ணம்.

source: http://hadi-baquavi.blogspot.in/2016/02/blog-post.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

40 − = 38

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb