இஸ்லாமிய சூழலில் மார்க்கக் கல்வி மற்றும் இஸ்லாமிய உயிரோட்டம் உள்ள உலகக்கல்வி
[ சமூக நலம் விழையும் ஒவ்வொருவரும் அவசியம் படியுங்கள் இவ்வாக்கத்தை! -adm. nidur.info ]
சகோதரர் ஸீ எம் என் ஸலீம் அவர்களுக்கு எனது பிரார்த்தனைகள்!
by mujahidsrilanki
இன்றைய இஸ்லாமிய சமூகம் பல விதமான மாற்றங்களையும் அதனடிப்பயைிலான எழுச்சிகளை வேண்டி நிற்கிறது. இதில் இஸ்லாமிய வரையரையைத் தாண்டிய எந்த வளர்ச்சியும் இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிராகவே வந்து நிற்கும். அது உண்மையான வளர்ச்சியுமல்ல.
அது போல் பல கோணங்களில் சிதைக்கப்பட்டுள்ள இந்த சமுதாயத்திற்கு கரிசனைகொண்ட சீர்திருத்தவாதிகளின் சேவையே மிக அவசியம். சிகிச்சியை அவசரமாக செய்ய நினைப்பவர்களை விட அக்கரையாய் செய்பவர்களே மிகவும் தேவை. இஸ்லாமிய வரையரை, சீர்திருத்தத்தில் கரிசனை என்ற இந்த இரண்டு பண்புகளில் ஒன்றை இழந்தாலும் சீர்திருத்தப்பணி தோல்வியடையும்.
முஸ்லிம் சமுதாயத்தில் சீர் திருத்தப்பணி செய்யப்பட வேண்டிய இடங்களில் கல்விச் சீர்திருத்தம் பிரதானமானவைகளில் ஒன்று. மஸ்ஜித் மின்பர்கள் தொடக்கம் தனி நபர் சந்திப்புகள் வரைக்கும் பரிமாறப்படும் மார்க்க அறிவரைகள் அனைத்தும் கல்வியே என்ற விரிந்த கல்வி மரபைப் பெற்றிருக்கும் சமூகமே முஸ்லிம் சமூகம். இஸ்லாமிய சமூகம் அறிவுடமையுடன் இருக்க வேண்டிய சமூகம். ஆனால் கல்வியில் இந்த சமுதாயம் பின் தங்கியுள்ளது.
முஸ்லிம்கள் கல்வியில் எழுச்சி பெற வேண்டும் என்று எழுப்பப்படும் குரல்களில் 90 சதவீதமானவைகள் நல்லெண்ணமுடைய சமூக ஆர்வலர்களால் எழுப்பப்பட்டாலும் இஸ்லாத்தின், கல்வி பற்றிய சரியான பார்வை அவர்களிடத்தில் இல்லை. இது கசப்பான உண்மை.
கல்வி பற்றிய குர்ஆன் வசனங்கள் ஓரிரண்டை சொல்லி நபி மொழிகளில் சிலவற்றை எடுத்தியம் புவதோடு இஸ்லாத்திற்கும் கல்விக்குமுள்ள சம்பந்தத்தை முடித்துவிட்டு எச்சமாக அவர்கள் விதைப்பதெல்லாம் சடவாத க்ரொமோசோம்களை தாங்கிய செல்களைத்தான். படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் இடையிலான தொடர்பு ஒரு வரியிலும் ஞாபகப்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதைக்கொள்கையாக வைத்திருக்கும் கல்வியால் இந்த சமூகம் ஒருபொழுதும் எழுச்சி பெறப் போவதில்லை என்பதை இது போன்ற ஆர்வலர்கள் கணக்கில் கூட எடுப்பதில்லை.
இஸ்லாமிய அறிஞர்களின் வழிகாட்டல்களும் முயற்சிகளும் இல்லாதிருந்தால் இந்தக் கல்வியால் இன்று வரை உருவாக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் நாஸ்திகத்தை உள்ளங்களில் சுமந்த பெயர்தாங்கி முஸ்லிம்களாகவே உருவாகியிருப்பார்கள். இது போன்ற கல்வியை சுமந்தவர்களில் நாஸ்திகம் பேசும் பெயர்தாங்கி முஸ்லிம்களைப் பார்க்கிறோம். மேற்கத்தேய கல்வி முறை ஈன்றெடுத்த பிள்ளைகள் இவர்கள்.
இந்தக் கல்வி முறையில் நாஸ்திகர்களே அதிருப்திப்பட்டதை வைரமுத்துவின் சிற்பியே உன்னை செதுக்குகிறேன் என்ற நூலின் கல்வி பற்றிய பகுதியில் ”கையெழுத்திடத் தெரிந்த சில காட்டு மரங்களை இந்தக் கல்வி முறை உருவாக்கியிருக்கிறது” என்ற அவர் எழுதிய வாசகம் தெளிவாகச் சொல்கிறது. ஆன்மீகத்தோடுமட்டுமல்ல வாழ்க்கையுடன் கூட இந்தக் கல்வி சம்பந்தப்படவில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
How children fail என்ற ஜோன் ஹோல்ட்டின் நூல் பாடசாலைக் கற்பித்தல் முறை ஏற்படுத்திய பாதிப்பை விரிவாக விமரிசிக்கிறது. இவரின் சிந்தனை விதைப்பால் அமெரிக்காவில் மட்டும் 15 லட்சம் வீட்டில் படிக்கும் மாணவர்கள் உருவாகிவிட்டார்கள். Home schooling என்ற நடை முறை அங்கே பிரபல்யாமாகிவருவது இதற்கு பெறும் சாட்சி.
நான் தாருத்தவ்ஹீத் அஸ்ஸலபியா கலாபீடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் பொழுது எனது 17 வயதுகளில் இதை நான் தெளிவாக உணர ஆரம்பித்தேன். ஆன்மீக வரட்சியையும் வாழ்க்கையை விட்டு மேற்கத்தேய இந்தக் கல்வி முறை மிக தூரத்தில் இருப்பதையும் உணர்ந்தேன்.
நல்ல முறையில் சித்தியடைவதற்கான எல்லா வாய்ப்புக்கள் இருந்தும் 11ம் ஆண்டுக் கல்வியைப் புறக்கணித்தேன். அன்று என்னால் அதைத்தான் செய்ய முடிந்தது. எனது தந்தையும் அவர் ஒரு பாடசாலை ஆசிரியராக இருந்தும் எனது ஆன்மீக லௌகீக கல்வித்தந்தையாக இருந்தும் என் எண்ணத்தைப் புரிந்துகொண்டு ஆதரித்தார். மார்க்கத்துறை சார்ந்த கல்வியிலேயே நான் முழுக்கவனத்தையும் செலுத்தினேன். எனக்கு நான் படித்த தாருத் தவ்ஹீல் கலாபீடத்தின் ஆன்மீக சூழல் இதற்கு மிகவும் உருதுணையாக இருந்தது.
அதன் பின் என் பிள்ளைகள் விடயத்தில் “இஸ்லாமிய சூழலில் மார்க்கக் கல்வி மற்றும் இஸ்லாமிய உயிரோட்டம் உள்ள உலகக்கல்வி” என்ற கொள்கையை எப்படி நடைமுறைப்படுத்தவது என்பதில் எனக்கு ஏற்பட்ட மனப் போராட்டத்தை அல்லாஹ் ஒருவனே அறிவான்.
எனது முதல் மகனை பாடசாலைக்கு விட என் கல்வி பற்றிய விளக்கம் என்னை அனுமதிக்கவில்லை. அவனுக்கு குர்ஆன் சொல்லிக்கொடுத்து தாய்மொழி தமிழ் சொல்லிக்கொடுத்து அரபுசொல்லிக் கொடுத்து பின்னர் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்து நல்ல மார்க்க அடிப்படைகளைக் கொடுத்து 10 வயதிற்குள் ஒரு சிறிய ஆளுமையை அவனுக்குள் உருவாக்கியது எனது மனைவியும் நானும் எனது தந்தையும்தான்.
நான் ஸஊதிக்கு வரும் பின்னணியில் என் குழந்தைக்கான சிறந்த கல்விக்கூடத் தேடல் மிகப் பிரதானமானது. பாடசாலை அனுப்பவில்லை என்று பலர் பரிதாபமாகப் பார்த்தார்களே தவிர. பாடசாலையின் குப்பைகள் அவர்களுக்குத் தெரியவில்லை. என்னிடத்தில் இது பற்றிய 15 வருட வாசிப்பும் தேடலும் அனுபவமும். உண்டு. ஆனால் என்னால் என் பிள்ளைகள் விடயத்தில் ழுமையாக வெற்றியடையாமல் போய்விடுமோ என்ற ஆழ்ந்த மனக்கவலையும் உண்டு. எமது பார்வைகளுக்கு ஏற்ப எமது சூழ்நிலைகள் இல்லை. இதைப் புரியாமல் தவறாகப் பார்ப்பவர்களே அதிகம்.
ஆனால்….!
கல்வியின் மூலம் சமுதாய எழுச்சி பேசிய முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் சகோதரர் ஸி எம் என் ஸலீமின் உரைகளைக் கேட்டதும் “இஸ்லாமிய சூழலில் மார்க்கக் கல்வி மற்றும் இஸ்லாமிய உயிரோட்டம் உள்ள உலகக்கல்வி” என்ற கொள்கையை சரியாகப் புரிந்த சொற்பமானவர்களி்ல் அதை செயல்படுத்தத் துடியாய் துடிக்கும் ஓர் இஸ்லாமிய உணர்வையும் தெளிவான சிந்தனையையும் அது பற்றிய ஆழமான பார்வையையும் கொண்ட ஒருவரைக் கண்ட மட்டிலா மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.
கல்வி முற்றிலும் இளவசமாக அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டிய ஒன்று.
குர்ஆனை ஓதவைக்காத கல்வி வீணானது.
இறைவனுக்கும் குழந்தைக்குமிடையில் தொடர்பு ஏற்படுத்தாத எந்த ஆரம்பக்கல்வியும் அர்த்தமற்றது.
முதல்5-7 வருடங்கள் இஸ்லாமிய சூழலில் மார்க்கக் கல்வி கட்டாயமானது.
மார்க்கக் கல்வி இல்லாமல் எழுப்பப்படும் எந்த உலகக்கல்வியும் பயனுள்ள மனிதனை உருவாக்காது.
கல்விக்கு திருமணம் ஒரு தடையல்ல
திருமண வயதில் திருமணத்தை தடுக்கும் கல்வி இஸ்லாமியக் கல்வியல்ல.
முஸ்லிம்களின் கல்விக் கூடம் மஸ்ஜித்களோடு பிண்ணிப் பிணைக்கப்பட்டே இருக்க வேண்டும்.
மார்க்கத்திற்கு மத்ரஸா உலகத்திற்குப் பாடசாலை இதுவே ஒரு புற்று நோய்.
எமது கல்விக் கூடங்கள் மத்ரஸாக்களே.
குத்தாப், மத்ரஸா, ஜாமிஆ இதுவே எமது பாரம்பரியம்.
“இஸ்லாமிய சூழலில் மார்க்கக் கல்வி மற்றும் இஸ்லாமிய உயிரோட்டம் உள்ள உலகக்கல்வி” என்ற கொள்கை இந்தப் பாரம்பரியத்தில்தான் வளரும் மிளிரும்.
இன்று உள்ள உலகக்கல்வி பாடத்திட்டம், கற்பித்தல் முறைமை, கற்கும் சூழல் எல்லாமே ஆபத்தானது.
மார்க்கக் கல்வி மட்டுமல்ல, இஸ்லாமிய உயிரோட்டம் உள்ள உலகக்கல்வியும் அவசியம்.
அல் குர்ஆனும் ஹதீஸும் இஸ்லாமிய அறிவு முன்னோடிகளில் சிந்தனையும் கலந்த பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
5 நேரம் தொழ முடியாத அல்லது தொழத் தூண்டாத சூழல் இஸ்லாமிய கல்விச் சூழல் அல்ல.
வேலைக்காரர்களையே இந்தக் கல்விமுறை உருவாக்குகிறது கல்விமான்களையல்ல.
கிராஅத்தோடு ஆரம்பித்து ஸலவாத்தோடு முடிப்பதால் இஸ்லாமியம் கொண்ட பாடசாலைகளாக மாறிவிடாது.
இஸ்லாமிய உணர்வுகளை அடைகாக்கும் இந்த வரிகளை ஸி எம் என் ஸலீமின் உரைகளிலும் அவருடன் தனிப்பட்ட முறையில் உரையாடிய சந்தர்ப்பங்களிலும் என்னால் செவிமடுக்கக் கிடைத்தது. என் உணர்வுகள் அவரது சிந்தனைகளோடு பிண்ணிப் பிணைந்துகொண்டன.
பேசுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் களம் காண வேண்டும் என்ற அவரது உணர்வு அதற்காக வேண்டி பல விமரிசனங்களை தாங்கிக் கொண்டு போகும் அவரது பயணம் அவருக்காக இறைவனிடம் என்னை பிரார்த்திக்கச் செய்தது.
அவரது இந்தக் கொள்கையின் பயணம் பல தசாப்த தூரங்களைக்கொண்டது என்பதையும் ஒரேயடியாக எட்ட முடியாது என்பதையும் மிகவும் உணர்ந்தவர். விதை நாட்டும் பொழுது வளருமா எனக் கேட்கும் வீண் விமரிசனங்களைக் கண்டுகொள்ளாமல் போகின்றவர்.
குர்ஆனுக்கும் ஸுன்னாவிற்கும் முரணாக இல்லாத ஹலாலான கல்வி கிடைக்கவேண்டும் என்ற சிந்தனையை அணுதினமும் முன்வைத்து அதையே கொள்கையாகப் பிரச்சாரம் செய்பவரை, சமூக தளத்தில் அனைத்து சாராருக்கும் இந்தப் பிரச்சாரம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக சில தவிர்க்கமுடியாத நிகழ்வுகளை செய்த ஒரே காரணமாக அதை எப்படி அணுகவேண்டுமோ அப்படி அணுகாமல் மார்க்கத்தின் காவலாலிகள் நாங்கள் மட்டுமே என்பது போன்று திட்டித் தீர்ப்பவர்களைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடிகிறது.
சகோதரர் ஸலீம் அவர்களுக்கும் எனக்குமிடையில் சில தகவல்களை வாசிப்புச் செய்வதில் அது பற்றிய பார்வையில் நிலைப்பாடுகளில் முரண்பாடுகள் உண்டு. என்றும் பணிவோடு கருத்துக்கள் திருத்தப்படும்போது மாறும் சிறந்த ஒரு சாதனையாளரை குறுகிய பார்வைகொண்டவர்களுக்காய் இழக்க விரும்பவில்லை.
சினிமாப் பித்து பிடித்த நிலையில் மார்க்க அறிஞர்களை முல்லாக்கள் என வர்ணிக்கும் ஷா நவாஸ் போன்ற தரங்கெட்ட விமரிசிகர்களுக்கு பின்னாலோ அல்லது முஸ்லிம் சமூகம் என்ற உணர்வைப் புறக்கணித்து தமிழ் எனும் இன உணர்வு மேலோங்கி அதற்காக இம்மையிலும் மறுமையிலும் பயன்தறாத உழைப்பு செய்பவர்களுக்கு பின்னாலோ அல்லது மார்க்கத்திற்கு முரணான அகீதாவைப் போதிக்கும், முரண்பட்டவர்களை தரங்கெட்ட விமரிசனம் செய்யும் ஷம்ஸுதீன் காஸிமி போன்றவர்களுக்கு பின்னாலோ செல்லுங்கள் என்று நான் இந்த சமுதயாத்தை தாரை வார்க்கவில்லை. மாறாக கல்வி பற்றிய சரியான சிறந்த பார்வையுள்ள மார்க்க வரம்புகள் பற்றிய தெளிவோடுள்ள முரண்பட்டவனையும் மதிக்கத்தெரிந்த ஒரு சகோதரனையே ஆதரிக்கிறேன்.
சகோதரர் ஸீ எம் என் ஸலீம் அவர்களே! தமிழுலகில் மத்ரஸாக்களை உருவாக்கி மார்க்கத்தை கற்பிக்கும் பல ஆலிம்களே “இஸ்லாமிய சூழலில் மார்க்கக் கல்வி மற்றும் இஸ்லாமிய உயிரோட்டம் உள்ள உலகக்கல்வி” என்ற கொள்கையைப் புரியாதவர்கள் மட்டுமல்ல எதிரானவர்களுங்கூட.
அதிகமான ஆலிம்கள் தன் பிள்ளை ஆலிமாகக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். உங்கள் பிள்ளை ஆலிமாக வேண்டும் என்பதற்காக நத்வாவரை சென்ற உங்களுக்காக என் மனம் உருகிப் பிரார்த்திக்கிறேன். சரியான பாதையில் இருந்து உங்களை எந்த ஒன்றும் திசை திருப்பக் கூடாது என்பதில் கவனமாகவே இருங்கள். “இஸ்லாமிய சூழலில் மார்க்கக் கல்வி மற்றும் இஸ்லாமிய உயிரோட்டம் உள்ள உலகக்கல்வி” என்பதில் பிடிவாதமாக இருங்கள்.
உங்களில் முரணைக் காணும் போது முரண்படுவேன். தவறும் போது சரி செய்வேன். முன்னேற்றத்தைக் காணும் போது துணை நிற்பேன். எல்லாம் இந்தக் கொள்கை நல்ல சமுதாய மாற்றத்திற்கு விதயாக வேண்டும் என்பதற்காகவே.
இந்த எழுத்துக்களின் இஸ்லாமிய உணர்வை பொருந்திக்கொண்டு அதன் தவறுகளை மன்னிக் அல்லாஹ்வை பிரார்த்தித்தவனாய் முடிக்கிறேன்.
-Sheikh Mujahid ibn razeen
“சகோதரர் ஸீ எம் என் ஸலீம் அவர்களுக்கு எனது பிரார்த்தனைகள்!” வாசகர் கருத்து:
Mohammed Ameerudin says:
அவருடைய கருத்தால் உந்தப்பட்டு சில ஊர்களில் இஸ்லாமிய பள்ளி கூடங்களை நிறுவ முயன்று கொண்டு இருக்கும் எங்கள் சிறிய கூட்டத்தையும் உங்கள் பிரார்த்தனையில் இணைத்து கொள்ளுங்கள்.
பூந்தோட்டம் அன்சாரி says:
கட்டுரையை முழுவதுமாக வாசிக்க முடியாமல் அழுதேன், அழுதுகொண்டே இருந்தேன். கண்கள் குளமாகின.
ஹலாலான கல்வியை எம் வருங்கால சமூகம் பெற வேண்டும் என்பதற்காக தனது சமுதாயத்துக்காக முடிந்தவரை உழைக்கும் ஒரு மனிதரைப்பற்றி, அவர் கூடவே இருக்கும் நாங்கள் புரிந்து கொண்டு செயல்படுவதை விட பன்மடங்கு நீங்கள் புரிந்து வைத்துள்ளீர்கள், எங்களுக்கு புரியவைத்துள்ளீர்கள். ஜசாக்கால்லாஹு க்ஹைராஸ
எமது பயணங்களில் தெளிவையும், எமக்கான இலக்கையும் நோக்கி புறப்பட்டுவிட்டதனால் வழியில் வரும் விமர்சனம் என்ற முள் குத்திய வலிகள் கூட எங்களுக்கு சுமையாக தெரியவில்லை.
மௌலவி அவர்களே!
உள்ளம் என்ற எங்களது நிலங்களில் உங்களது வரிகள் உரமாய் வந்து விழும் பொழுது விதைகள் முளைக்கத்தானே செய்யும். இறைவன் நாடினால் அது ஒரு நாள் மரமாக வளர்ந்து நிற்கும். அன்று நாம் இவ்வுலகில் இல்லாவிட்டாலும் சரியே.
மார்க்க கல்வியோடு இணைக்கப்பட்ட உலகக்கல்வி என்பது எங்களது பதினைந்து ஆண்டு கால கனவு.
வரலாற்றை படித்ததினால்…
வரலாற்றை படைக்க துடிக்கின்றோம்ஸ
அந்த கனவை நனவாக்கும் திசை நோக்கிய பயணத்தில் எங்களோடு சேர்ந்து பயணிக்கும் சகோதரர்கள் இனி அதிகம் ஆவார்களே தவிர ஒருநாளும் குறையப்போவதில்லை.
அல்லாஹ்வின் அருளை மட்டுமே எதிர்பார்த்து பயணிக்கும் எம்மை போன்ற சகோதரர்களுக்காக அல்லாஹ்விடம் அதிகமாக பிரார்த்தனை செய்கின்றேன்.
அபு உமர் says:
جزاك الله خيرا சகோ.முஜாஹித் அவர்களே, தங்களின் எத்தனயோ ஆழ்ந்த கருத்துக்கள் எங்களுடைய வாழ்வில் பல மாற்றங்களை தந்துள்ளது, குறிப்பாக மக்களின் உணர்வுகளை புரிந்து நடக்கின்ற மனோ பக்குவத்தினை உங்களின் அதிகமான உரைகளிலிரிந்து பெற்றுள்ளேன், அல்லாஹ் தங்களின் கல்வியில் அபிவிருத்தி செய்வானாக, நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து சொர்க்கத்தில் நம் ஹபீப் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக.
தங்களை மௌலவி என்றோ ஷெய்க் என்றோ சொல்லி தங்களை என்னை விட்டும் மூன்றாவது நபராக சொல்ல மனம் வராமல் சகோதரர் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன், தவறு இருந்தால் மன்னிக்கவும், அல்ஹம்துலில்லாஹ் தமிழ் உலகில் உம்மத்தின், கல்வியில் பின் தங்கிய நிலையை உணர்ந்து பம்பரமாய் மாவட்டம் மாநிலம் பிரதேசம் என்று சுழன்று வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சகோ.சலீம் அவர்களுக்கு அல்லஹ் அருள் புரியட்டும், அவர்களின் ஆயுளில் அல்லாஹ் அபிவிருத்தி செய்வானாக.இந்த பணியில் நாம மாளிகையின் மகுடங்களாக இல்லா விட்டாலும் அந்த மாளிகையை தாங்கிநிற்கும் வலுசேர்க்கும் அத்திபாறை கற்கலாக இருக்க வேண்டும் என்ற உந்துதலை தங்களின் கட்டுரை விதைத்திருக்கிறது.
source: http://mujahidsrilanki.com/