ஹிஜாபின் நோக்கங்கள் முழுமையாக உணரப்பட வேண்டும்
அலங்காரங்கள் நிறைந்த பர்தாவை அணிவதற்குப் பதிலாக, எளிமையான (முழு உடலையும் மறைக்கும்) மற்ற உடைகள் பலமடங்கு சிறந்தவை.
எல்லாம் அப்பட்டமாக வெளியே தெரியும் வண்ணம் நம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வீதிகளில் பவனி வருவதென்பது மறுக்க முடியாத உண்மை. பல்வேறு டிசைன்களில் பர்தாக்களை வாங்கி, அதனை உடலுக்குத் தக்கவாறு பிடித்துத் தைத்துக்கொள்வது, அணியும் ஹிஜாபின் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறது.
இது ஒருபுறம் இருக்க, பெண்களின் ஹிஜாப் பற்றியே மேடைகளிலும் பிரச்சாரங்களிலும் பேசிப் பேசியே ஆண்களின் ஹிஜாப்பை மறக்கச் செய்துவிட்டனர்!
பெண்களையே குறை கூறும் ஆண்கள் தங்களின் ஹிஜாப் பேணுதல் பற்றி கவலைக்கொள்வதே இல்லை! பெண்களுக்கு அறிவுரை சொல்லும் ஆண்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா, சீர்கெட்டு அலையும் இளைஞர்களின் போக்கு குறித்து?!
இன்றைய காலத்தில் பார்க்கும் இடம் எல்லாம் அனாச்சாரங்கள் மலிந்துவிட்டன. கண்ணால் பார்க்கும், காதால் கேட்கும் எந்த செய்தியிலும் “கற்பழிப்பு” என்ற சொல் வரவில்லையானால் அதிசயமே! அந்த அளவில் ஆடைக்குறைப்பு மனிதனை பாடாய்ப்படுத்துகிறது.
இவற்றிற்கு மனிதன் தீர்வினைத் தேடுவானாயின் அதற்கு ஒரே வழி பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் “ஹிஜாப்” பேண வேண்டும் என்ற உண்மை விளங்கும்.
ஆம், ஆண்களும் பெண்களுக்கீடாகத் தம் ஹிஜாப் பேண வேண்டும். அதைத் தான் சமநிலை பேணும் இஸ்லாமிய மார்க்கம் எடுத்துரைக்கிறது.
ஹிஜாப் என்பது உடை சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல!]
ஹிஜாபின் நோக்கங்கள் முழுமையாக உணரப்பட வேண்டும்
இன்றைய நவநாகரீக உலகில் ஆண்,பெண் இருபாலாரும் முகம் சுழிக்கும் ஒரு பெரும் பிரச்சினை தான் ஆடைக் குறைப்பு.
ஆடைக் குறைப்பு என்பது முஸ்லிம்களால் மட்டும் எதிர்க்கப்படுவது அன்று. பெண்களின் கண்ணியம் காக்கத் துடிக்கும் பல தரப்பு மக்களாலும் கடுமையாக எதிர்க்கப்படுகிறது.
18 வயது பூர்த்தியடையாத பள்ளி மாணவர்கள் ஆசிரியைகளை கேலி செய்வதும், கிண்டல் செய்யும் சம்பவங்களால் கல்வித்துறையே அதிர்ச்சியடைந்தது. இவ்வாறான பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அரசு தரப்பில் ஆய்வும் முயற்சியும் மேற்கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில், முதன்முறையாக, திருச்செந்தூர் உடன்குடி அருகே பள்ளி ஆசிரியைகள், வெள்ளை நிற, “கோட்’ அணிந்து, வகுப்பில் பாடம் நடத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம் முன்மாதிரி கட்டளை பிறப்பித்தது பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது.
இன்றைய பெண்களின் ஹிஜாப் உடை எவ்வாறு உள்ளது என்று சற்று சிந்தித்தால் அவை வெறும் அழகிற்காக அணியப்படும் நவநாகரீக ஆடையாகவே உள்ளது என்பதில் ஐயம் இல்லை.
இன்று அநேகப் பெண்கள் கருப்பு நிற ஹிஜாப் அணியும் பாங்கிற்கு மாறிவிட்டார்கள். ஆனால் வீதிகளில் ஹபாயா, ஹிஜாப் அணிந்து சில பெண்கள் சென்றால், ஆண்கள் தன்னாலே திரும்பிப்பார்க்கும் நிலையிலேயே அவர்கள் அணிந்துள்ள ஹிஜாப்கள் “பள பள” ஜிகினாக் கற்களாலும், மணிகளாலும், அலங்கார முத்துக்களாலும் கண்ணைக் கவர்ந்து காண்போரை கண்களால் பரவசப்படுத்தும் நிலையிலேயே உள்ளன.
போதாக்குறைக்கு எல்லாம் அப்பட்டமாக வெளியே தெரியும் வண்ணம் நம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வீதிகளில் பவனி வருவதென்பது மறுக்க முடியாத உண்மை. பல்வேறு டிசைன்களில் பர்தாக்களை வாங்கி, அதனை உடலுக்குத் தக்கவாறு பிடித்துத் தைத்துக்கொள்வது, அணியும் ஹிஜாபின் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறது. ந’ஊதுபில்லாஹ்.
இன்னும் அனார்கலி மாடல் புர்காக்கள் வந்துவிட்டது! அதில் அலங்காரமே கழுத்துப் பகுதியில் தான்! தலைக்கணியும் ஹிஜாப் கொண்டு அதனை மறைப்பதென்றால் மனது துளியும் இடம் தராது. ஏனெனில் அந்த புர்காவின் பெறுமதியே மார்புப்பகுதி அலங்காரங்களில் தான் உள்ளது.
இன்னும் சில புர்காக்கள், அதன் துணி உடம்பில் ஒட்டி, வழுக்கிக் கொள்ளும் வகையில் flexible, elastic fabric வகை துணியில் தயாரிக்கப்படுகிறது. இவை மேனி அழகையும், அங்கங்களையும் இன்னும் தூக்கலாக காட்டியபடி!!
அந்தத் துணியில் ஹபாயா தான் இப்போதைய “பேஷனாம்”. அதை அணியும் போது மனசாட்சியே சொல்லும் இதை அணிந்து வீதியில் சென்றால் அத்தனை கண்களும் நம்மையே நோக்கும் என்று. ஆனாலும் நாகரீக மோகம் பேஷனை விட்டுத் தர இடம் கொடாது.
நம் மார்க்கம் காட்டித் தந்த ஹிஜாப் இதுவன்று. தன் கைகளையும், முகத்தையும் தவிர அனைத்து உறுப்புகளையும், கவர்ச்சி இல்லாமல் மறைக்கும் ஆடை தான் ஹிஜாப், ஹபாயா(திரை)
கடைகளில் ஹிஜாப் என்று கேட்டால் கூட அங்கே இஸ்லாம் காட்டிய முறையில் கிடைக்காது. நமக்கு பிடித்த தளர்வான புர்காக்களை கேட்டால் வேற்றுகிரக வாசிகளைப் போல் பார்ப்பவர்களும் உண்டு. அதெல்லாம் அந்த காலம், இப்பலாம் யாரும் அந்த மாதிரியான புர்கா வாங்குவதில்லை என ஒற்றை பதிலைச் சொல்லிவிடுகிறார்கள்.
அவர்களைச் சொல்லி குற்றமில்லை. பாவம் அவர்களும் என்ன தான் செய்வார்கள்? நம் பெண்கள் பல கடைகள் ஏறி, இறங்கி தேடுவது இந்த மாதிரி ஜிகினாக்களைத் தானே? அதனால் தான் அவர்களும் அதையே நீட்டுகிறார்கள். 1500 ரூபாய்க்கு குறைந்த புர்க்காக்களே இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளனர் பேஷன் விரும்பும் நம் மங்கைகள்!
இன்றெல்லாம் சாதாரண ஹபாயாக்கள் தேடுபவருக்கு அவை எளிதில் கிடைப்பதில்லை. இந்த நிலை விரைவில் மாற வேண்டும். அதற்கு முதலில் ஹிஜாபின் நோக்கங்கள் நம்மால் முழுமையாக உணரப்பட வேண்டும். இத்தகைய அலங்காரங்கள் நிறைந்த பர்தாவை அணிவதற்குப் பதிலாக, எளிமையான (முழு உடலையும் மறைக்கும்) மற்ற உடைகள் பலமடங்கு சிறந்தவை.
அல்லாஹ் அழகை நேசிக்கக் கூடியவன், எப்போதும் அழுக்கான ஆடைகளே உடுத்தி, கிழிந்தும் பார்ப்பதற்கே அருவருப்பான உடைகளுமே அணிந்து அனைவரின் கண்ணுக்கும் மட்டமாக பெண்களை நிற்கச் சொல்ல வில்லை. அழகானதையே தேர்ந்தெடுக்கச் சொல்கிறான். அவை கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்த மாத்திரத்தில் விதைக்க வேண்டும் என்பதற்காக! ஆடைகளில் அலங்காரங்கள் இருப்பதும் தவறல்ல! ஆனால் அவை எல்லையை மிகைக்காத வரையில் சரியானவையே!
இஸ்லாமிய ஆண்களும் சளைத்தவர்களா என்ன?! பெண்களின் ஹிஜாப் பற்றியே மேடைகளிலும் பிரச்சாரங்களிலும் பேசிப் பேசியே ஆண்களின் ஹிஜாப்பை மறக்கச் செய்துவிட்டனர்! பெண்களையே குறை கூறும் ஆண்கள் தங்களின் ஹிஜாப் பேணுதல் பற்றி கவலைக்கொள்வதே இல்லை! பெண்களுக்கு அறிவுரை சொல்லும் ஆண்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா சீர்கெட்டு அலையும் இளைஞர்களின் போக்கு குறித்து?!
இன்றைய காலத்தில் பார்க்கும் இடம் எல்லாம் அனாச்சாரங்கள் மலிந்துவிட்டன. கண்ணால் பார்க்கும், காதால் கேட்கும் எந்த செய்தியிலும் “கற்பழிப்பு” என்ற சொல் வரவில்லையானால் அதிசயமே! அந்த அளவில் ஆடைக்குறைப்பு மனிதனை பாடாய்ப்படுத்துகிறது.
இவற்றிற்கு மனிதன் தீர்வினைத் தேடுவானாயின் அதற்கு ஒரே வழி பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் “ஹிஜாப்” பேண வேண்டும் என்ற உண்மை விளங்கும். ஆம், ஆண்களும் பெண்களுக்கீடாகத் தம் ஹிஜாப் பேண வேண்டும். அதைத் தான் சமநிலை பேணும் இஸ்லாமிய மார்க்கம் எடுத்துரைக்கிறது.
ஒரு கை தட்டலில் ஓசை வராது என்ற கோட்பாட்டினை இஸ்லாம் கொண்டுள்ளது. சமுதாய மாற்றம் என்பது ஆண்களாலும் பெண்களாலும் தான் கொண்டு வர முடியும் என்பதனை வலியுறுத்துகிறது. அதனால் தான் ஆண்களுக்கும் ஹிஜாப் என்பதனை கட்டாயமாக்கியது. ஹிஜாப் என்பது உடை சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல!
“ஹிஜாப்” என்றால் என்ன?? ஹிஜாப் என்பது திரை. தன்னை, தன் கற்பை பார்வையாலும், ஆடையாலும் காத்துக்கொள்ள இஸ்லாம் காட்டித் தந்த சிறந்த வழி முறை தான் ஹிஜாப். ஆண், பெண் இருபாலருக்குமான மனரீதியான ஹிஜாபிற்கு வித்தியாசமில்லையென்றாலும் உடையளவில் மட்டும் சற்று வேறுபாடு உண்டு. பெண்களுக்கு எந்த அளவு ஹிஜாப் வலியுறுத்தப்படுகிறதோ, ஆண்களுக்கும் அவ்வலியுறுத்தல் சற்றும் குறைவில்லாதது.
காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் பார்க்கில் நடமாடவோ, வாக்கிங் செல்லவோ அவ்வளவு அசவுகரியம். உடல் முழுதும் மூடிக்கொண்டு ஓட்டப்பந்தயங்களில் ஓட முடியாதா, டென்னீஸ் விளையாட முடியாதா என கேட்பவர்களுக்கும் இதே கேள்வியைத்தான் முன் வைக்கிறோம். ஏன் முழு உடை அணிந்து ஆண்களால் ஜாக்கிங் செல்ல முடியாதா? விளையாட முடியாதா? சஹாபாக்களிலேயே அதிகம் வெட்கப்படுபவரான உஸ்மான் ரழி அவர்களைக் கண்டதும் தமது உடையை ஒழுங்குபடுத்தினார்கள் நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
வெட்கம் ஈமானின் ஓர் அங்கம் என்பதை நாம் அறியவில்லையா? பல தவறுகள் மட்டுமின்றி, அரைகுறை ஆடையணிவதும் ஒரு தவறு தான். அத்தவறைச் செய்யவும் வெட்கப்பட வேண்டும். பெண்களின் ஆடை குறித்து கவலைக்கொள்ளும் ஆண்கள் சிக்ஸ் பேக் தெரியும் வண்ணம் இறுக்கி தன் உடலை காண்பிக்கும் சட்டைகள் அணிவது யாரை கவர்வதற்காக..?! உள்ளாடைகளும் தெரியும் வண்ணம், தரையோடும் இழுத்துச் செல்லப்படும் கால்சட்டைகளையும் அணிவதை இன்று பல முகச்சுளிப்புகளுடன் பெண்கள் கடந்து விடுகிறார்கள். இவர்களெல்லாம் திருந்தப்போவது எப்போது?
தாம் அணிந்திருக்கும் அழகிய உடைகளைப் பிறர் காண வேண்டும் என்று பெருமையுடன் நடக்கும் சகோதரர்களே, சகோதரிகளே, கீழ்வரும் ஹதீஸை மனதில் நிறுத்திக்கொள்வோம். இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாவது: (முற்காலத்தில்) ஒரு மனிதன் தோள்கள் வரை தொங்கும் தனது தலை முடியையும் தான் அணிந்திருந்த இரு ஆடைகளையும் எண்ணிப் பெருமிதத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பூமிக்குள் அவன் புதையுண்டு போனான். அவன் மறுமை நாள் நிகழும்வரை பூமிக்குள் குலுங்கியபடி அழுந்திச் சென்றுகொண்டே இருப்பான். இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆடையொழுக்கமும்,. கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமும் இருபாலினரும் கடைபிடிக்கும் போது தான் சமுதாயத்தில் நிகழும் கலாச்சார சீரழிவுகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும். இன்ஷா அல்லாஹ் இனி ஹிஜாப் பற்றி பேசுகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்தே உரைப்போம்! வளமான சமுதாயத்தினை அமைத்திட இருதரப்பினரையும் உருவாக்க முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்…
உங்கள் சகோதரி,
உம்மு ஜாக்கி, இலங்கை
source: http://www.islamiyapenmani.com/2015/11/blog-post.html