வேறுபட்ட மனங்கள் இணைய உணவு டிப்ளமசி!
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
‘உறவுகள் இணைப்புப் பாலத்தினை அமைக்காதவர் முஸ்லிமா?’ என்ற கட்டுரை ஒன்றை எழுதி இருந்தேன். அதில் முஸ்லிம் இயக்க தலைவர்கள், தொண்டர்கள் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களானாலும் மனம் விட்டுப் பேசி கலந்துரையாடல் செய்வதில்லையே என்ற ஆதங்கத்தினை தெரியப் படுத்தியிருந்தேன். அந்தக் கட்டுரைக்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஒத்தக் கருத்துக்களையும் தெரியப் படுத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஒரு உண்மை சம்பவத்தினை சமூதாய நல்லிணக்கத்திற்காக எடுத்துக் காட்டுகிறேன்.
மேற்காசியாவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பாலஸ்தீன மக்களிடையே இஸ்ரேயில் என்ற நாட்டினை மேற்கத்திய வல்லரசு நாடுகள் உருவாக்கி, மேற்காசிய மக்களுக்கு சொல்லவென்னா துன்பத்தினை ஏற்படுத்தி வருவதுடன், எங்கே பாலஸ்தீன நாடே ஒன்று இல்லாமல் போய் விடுமோ என்ற அடக்குமுறை நிலை உள்ளதினை பத்திரிக்கை, எலக்ரானிக் மீடியாவினைத் திறந்தால் படித்தும், பார்த்தும் இருப்பீர்கள்.
பாலஸ்தீன மண்ணில் நடக்கும் வன்முறையால் வேறுபட்டிருக்கும் இஸ்ரேயில, பாலஸ்தீனர் மனங்களை இணைக்க ஒரு புது வழியினை வட இஸ்ரேயில் கிபார் விட்கின் நகரில் ஹோட்டல் நடத்தும் கோபி சபிரிர் நினைத்தார். அதன் பயனாக எழுந்தது தான் இந்த டின்னெர் டிப்ளமசி. அரேபியர் மிகவும் விரும்பிச் சாப்பிடும் உணவு வகையினைச் சார்ந்தது தான் ஹம்முஸ் என்று அரேபியா சென்றவர்களுக்குத் தெரியும். அதாவது சென்னா பயறு, எள்ளு, வெள்ளைப் பூடு நசுக்கி பொடியாக்கி, எலும்பிச்சை, ஆலிவ் எண்ணெய் கலந்து, சிறிது உப்பினைத் தூவி செய்யப்படும் களி என்றால் சரியாக இருக்கும். அராபியருக்கு சுவைதரும் உணவாகக் கருதப்படுகிறது. அதனை இஸ்ரேயிலரும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
இதனை அறிந்த அந்த ஹோட்டல் உரிமையாளர் வாடிக்கையாளர்களைக் கவர, தன் உணவகத்தில் ஒரே மேஜையில் அமர்ந்து ஹம்முஸ் சாப்பிடும் பாலஸ்தீனருக்கும், இஸ்ரேயிலருக்கும் தாங்கள் சாப்பிட்ட உணவின் விலையில் 50 சதவீதம் மலிவு விலையில் தரப்படும் என்று அறிவிப்பு செய்தாரே பாருங்கள், அவர் ஹோட்டலில் ஈ மொயத்ததுபோல இஸ்ரேயிலரும், பாலஸ்தீனர்களும் மொய்க்க ஆரம்பித்து வியாபாரம் ஆகோ, ஓகோ என்று நடக்கின்றதாம்.
ஜும்மா தொழுகைக்குச் செல்லும்போது தொழுகை ஆரம்பிக்கும் முன்பு இமாம், தொழுகைக்கு வந்தவர்களைப் பார்த்து நேராகவும், நெருக்கமாகவும் நில்லுங்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் ரஹ்மத் செய்வான் என்று கூறுவார். அது ஏன் என்று நினைப்பீர்கள்? உங்களில் ஏழை, பணக்காரன், தாழ்ந்தவன், உயர்ந்தவன், வெள்ளை-கருப்பு நிறத்தவன் என்ற வேறுபாடு வராமல் இருப்பதிற்காகவே இதனைச் சொல்லுவார். சில சமயங்களில் நம்மைப் பயம் முருத்துவதிற்காக இடை விட்டு நின்றால் ஷைத்தான் நுழைந்து விடுவான் என்றும் சொல்லுவார். அது எந்த ஷைத்தானும் இல்லை, மாறாக மனதிற்குள் வேறுபாடு சுவர் எழுப்பும் ஷைத்தானைத் தான் கூறுவார்.
ஆகவே இஸ்லாமிய இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களும், தொண்டர்களும் இன்ப, துன்பங்களில் ஒருவருக்கொருவர் கலந்துகொண்டு, மனம் விட்டு பேசிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன், உங்கள் மனக் கதவைத் திறங்கள், உங்கள் நல் வாழ்விற்கு இறைவன் வழிவிடுவான் என்று கூறிக் கொள்கிறேன்!
AP,Mohamed Ali
source: http://mdaliips.blogspot.in/