நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய உண்மை நிகழ்வுகள்
மக்களை நல்வழிப்படுத்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல வழிகளைக் கையாண்டார்கள். அவற்றில் ஒன்று, அவர்கள் காலத்திற்கு முன் நடந்த உண்மைச் சம்பவங்களை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களைச் சீர்படுத்தியது.
நபிகளார் கூறிய உண்மைச் சம்பவங்கள் புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் ஆதாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்கள் மக்களைப் பக்குவப்படுத்துவதற்கும், பண்படுத்துவதற்கும் உதவின. இதனால்தான் அல்லாஹுத் தஆலா திருக்குர்ஆனில் நபிமார்கள் உட்பட பல நல்லவர்களின் நிகழ்வுகளை எடுத்துக் காட்டி அதில் படிப்பினை பெற வேண்டுமெனக் கட்டளையிடுகிறான்.
அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (திருக்குர்ஆன் 12:111)
மக்களைப் பண்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாக முந்தைய சமுதாயத்தில் நடந்த ஒரு செய்தியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (பனூ இஸ்ராயீலில்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத்தான் உரியது) என்று கூறினார். மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், உங்கள் இருவருக்கும் பிள்ளைகள் உள்ளனரா? என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான் என்று சொன்னார். மற்றொருவர், எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள் என்று தீர்ப்பளித்தார். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (3472), முஸ்லிம் (3544)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இந்தச் சம்பவம் பல அரிய பண்புகளை நமக்குப் போதிக்கிறது. இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் இருவரின் பெருந்தன்மை நமக்கு நெகிழ்வூட்டுகிறது. பணம், பணம் என்று அலையும் இவ்வுலுகில் புதையல் நமக்குரியது அல்ல என்று எண்ணி அதை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணும் அந்த நல்லுள்ளமும். தங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்தவுடன் நல்ல வேளை மிகப்பெரிய செல்வம் நம்மைவிட்டுப் போக வேண்டிய நிலையில் ஒரு ஏமாளி நம்மிடம் ஒப்படைத்து விட்டான் என்று சந்தோஷம் அடையாமல் இல்லை அது உமக்குரியது தான் என்று கூறும் பெருந்தன்மையும் நம்மை வியப்பில் ஆழ்த்தாமல் இருக்காது.
அடுத்தவரின் பொருள் சிறிதோ, பெரிதோ அதை நாம் நியாமின்றி எடுக்கக்கூடாது என்றும் அவ்வாறு எடுத்தால் மறுமையில் மாட்டிக் கொள்வோம் என்ற இறையச்சமும்தான் அவர்களை இது போன்று பேசச் செய்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார். (அறிவிப்பவர் ஸயீத் பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரி 2452, முஸ்லிம் 3289)
நபிகளாரின் இதுபோன்ற எச்சரிக்கை அனைவரின் உள்ளத்திலும் பதிந்துவிடுமானால் அடுத்தவரின் பொருளுக்கு ஒரு போதும் ஆசைப்பட மாட்டோம்.
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதற்கு இன்னொரு காரணம் பேராசை. இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற எண்ணம். இந்த எண்ணம் இருக்கும் வரை பணத்தாசை நம்மைவிடாது. அது தவறான செயல்கள் செய்வதற்கும் நரகப்படுகுழியில் தள்ளவும் காரணமாக அமைந்துவிடும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை. 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6421)
“அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள். செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள்.” (அல்குர்ஆன் 89:17-20)
மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. (அல்குர்ஆன் 102:1,2)
அப்துல்லாஹ் பின் ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவில் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) உரையாற்றும்போது சொல்லக் கேட்டேன்: மக்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும், அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன் மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் மூடாது. மேலும், (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். (அறிவிப்பவர் : அப்பாஸ் பின் சஹ்ல் பின் சஅத், நூல்: புகாரி 6438)
இது போன்ற எச்சரிக்கை நமது மனதில் ஆழமாகப் பதியுமானால் பொருளாசை நம்மை அடிமையாக்காது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பொற்காசு, வெள்ளிக் காசு, பூம்பட்டுத் துணி, சதுர கருப்புத் துணி ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 2886)
இதுபோன்ற அடிப்படை கருத்துக்களை நபித்தோழர்களுக்கு வலியுறுத்தி நபிகளாரின் பொன்மொழிகள் அவர்களின் வாழ்க்கையிலும் எதிரொலித்தது. இதற்கு ஹகீம் பின் ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு.
ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் பரகத் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ, அவருக்கு அதில் பரகத் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது என்று கூறினார்கள்.
அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.
ஆபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். பிறகு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும்வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: புகாரி 1472)
போதும் என்ற எண்ணம் அதிகரித்தால் போராசை என்ற நச்சு மனதிலிருந்து விலகிவிடும். ஏழை, பணக்காரன் என எல்லா மக்களும் பயன்படும் பொருத்தமான நபிகளாரின் பொன்மொழி இதோ:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரி 6446), முஸ்லிம் 1898)
source: http://sltjcolombo.com/?p=376