ஆண்களின் வருமானமும் அல்லாஹ்வின் அபிவிருத்தியும்
இஸ்லாமியக் குடும்பவியலில் ஆண்கள் நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள் என்பதையும், பொருளாதாரப் பிரச்சனை கள் அனைத்திற்கும் ஆண்களே பொறுப்பாளர்கள் என்பதையும் இதுவரை நாம் பார்த்துள்ளோம்.
குடும்ப நிர்வாகத்தை ஏற்று வழிநடத்துகிற ஆண்கள் எந்தக் கட்டத்திலும் தங்களது மனைவிமார் களை வேலைக்கு அனுப்பி, அவர்களுக்கு இரட்டைச் சுமையை சுமத்தி, அவர்களது இயல்புக்கு மாறான சிரமங்களையும் கஷ்டங்களை யும் கொடுத்துவிடக் கூடாது. அந்தக் கஷ்டங்களை நாமே சுமந்து கொண்டு, அவர்களைச் சிறந்த முறையில் கவனிக்க வேண்டும் என்பதற்குரிய பல காரணங்களைப் பார்த்தோம்.
பொதுவாக முஸ்லிம்கள் பெண்களை வேலைக்கு அனுப்பக் கூடாது என்பதில் மற்றவர்களை விடவும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் இருவரின் சம்பாத்தியமும் சேர்ந்து கிடைத்தால் தற்போது வாழ்வதை விடவும் செழிப்பாக வாழலாம் என்பதே வேலைக்கு அனுப்புபவர்களின் மனநிலையாக உள்ளது. இதில் காசு பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆண் போன்று இன்னொரு மடங்கு பெண்களின் சம்பாத்தியத்தின் மூலம் கிடைத்தால் சொத்து சுகங்களைச் சேர்த்துக் கொள்ளலாம், வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பதுதான் பெண்களை வேலைக்கு அனுப்புபவர்களின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது.
இது இஸ்லாமிய சமூகமல்லாத மற்ற மக்களுக்குரிய வழியாகும். அவர்கள் உலகப் பொருளாதாரக் கணக்குப் போடுவது அவர்களுக்குச் சரியாகத் தான் தெரியும். ஏனெனில் அவர்கள் உலகத்தையே நோக்கமாகக் கொண்டவர்கள். எனவே அதில் ஆச்சரியத்திற்கு ஒன்றுமில்லை.
ஆனால் முஸ்லிம்களாகிய நாம் மறுமையை நோக்கமாகக் கொண்டவர்கள். எனவே ரிஸ்க்கைத் தருகிறவன் அல்லாஹ் என்று நம்புகிறோம். ரிஸ்க் என்றால் வெறுமனே உணவு என்று மட்டும் அர்த்தம் வைத்துவிடக் கூடாது. உணவு, ஆடை, அழகு, அலங்காரம், வாகனங்கள், பண்புகள் என்று எதுவெல்லாம் மனித வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரங்களாக உள்ளதோ அவை அனைத்துக்குமே ரிஸ்க் என்று சொல்லப்படும். அதை வழங்குகிற இறைவனுக்கு ராஸிக் (ரிஸ்க்கை வழங்குபவன்) என்றும் ரஸ்ஸாக் (அளவு கடந்து ரிஸ்க்கை வாரிவழங்குபன்) என்றும் அல்லாஹ் தன்னைப் பற்றி திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான்.
எது பரக்கத்?
அல்லாஹ் நமக்குத் தந்த ரிஸ்க்கில் பரக்கத் என்ற மறைமுகமான அருளைத் தருகிறான் என்று நம்பிச் செயல்பட வேண்டும். நிறைய பொருளாதாரத்தைத் தந்து, அதில் நமது தேவைகள் நிறைவேறாமல் ஆகிவிட்டால், அந்த நிறைய பொருளாதாரத்தினால் எந்த நன்மையும் கிடையாது. இலட்சக் கணக்கான ரூபாய் வருமானம் வந்து, அதை விடவும் இலட்சக் கணக்கான வகையில் செலவாகிவிட்டால் அதிகமான வருமானத்தினால் எந்த நன்மையும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.
பத்தாயிரம் வருமானம் வந்து, 12 ஆயிரம் செலவானால் இந்தப் பத்தாயிரத்தில் நன்மை இல்லை என்று பொருள். அதே நேரத்தில் 5000 வருமானம் வந்து 4000 ரூபாயில் நமது தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் அதுதான் நமக்குக் கிடைத்த பெரிய நன்மை. ஏனெனில் ஆயிரம் ரூபாய் மிச்சமாகும்.
ஆக முஸ்லிம்களைப் பொறுத்த வகையில், ஆண்கள்தான் குடும்பப் பொருளாதாரத்தைச் சுமக்க வேண்டும் என்று அல்லாஹ் சொன்னதை கொள்கையளவில் ஒத்துக் கொண்டு செயல்பட்டால் அல்லாஹ் அத்தகைய ஆண்களுக்கு மறைமுகமாக அருள் செய்கிறான்.
ஆண்கள் மட்டும் வருமானத்தை ஈட்டி குடும்பத்தைப் பார்க்கிற நமது சமூகம் இருக்கிற செழிப்பைப் போன்று ஆணும் பெண்ணும் சேர்ந்து சம்பாதிக்கிற வேறு சமூகங்களில் செழிப்பு இல்லாமல் இருப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.
ஆணும் பெண்ணும் சம்பாதிப்பதால் சொகுசாக வாழலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களை ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் பெறுகிற சம்பளத்திற்கேற்ற செழிப்பு அவர்களது வாழ்க்கையில் தெரிவதில்லை. அவர்களது வாழ்க்கையில் பல சிரமங்களைத் தான் அன்றாடம் அனுபவித்துக் கொண்டுள்ளார்கள்.
அதே நேரத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆய்வு செய்து பார்த்தால், பிற சமூகங்களைப் போல் பெரிய படிப்பு படித்திருக்க மாட்டார்கள். 5000, 6000 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்களாக அதிகமான முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்தச் சம்பளத்தில் தான் தானும் சாப்பிட்டு, மனைவி மக்களுக்கும் சாப்பாடு கொடுத்துக் கொண்டு, பிள்ளைகளைப் படிக்க வைத்து, மனைவிமார்களுக்கு நகை நட்டுகளெல்லாம் அணிவித்து நல்லபடியாக வைத்துள்ளார்கள்.
ஒரு நபரின் சம்பாத்தியத்திலேயே குடும்ப உறுப்பினர்களின் சாப்பாடு, ஆடைகள் உள்ளிட்ட முக்கியத் தேவைகளையெல்லாம் அல்லாஹ் நிறைவேற்றித் தருகிறான்.
தொகை அதிகமாக வந்தால் இன்னும் நன்றாக வாழலாம் என்று தப்பாக ஒரு முஸ்லிம் கணக்குப் போடவே கூடாது. தொகை கூடுதல் குறைவு என்பது விஷயமல்ல. குறைவோ, கூடுதலோ எப்படியிருந்தாலும் அல்லாஹ் அதில் பரக்கத் என்ற மறைமுக அருளைச் செய்கிறானா? என்று தான் பார்க்க வேண்டும்.
ஒரு இலட்ச ரூபாயைத் தந்து, 2 இலட்சத்திற்கு நோயையும் சேர்த்துக் கொடுத்தால் ஒரு இலட்சத்திற்கு எந்த மதிப்பும் கிடைக்காது. ஒரு இலட்சமும் தராமல், நோயும் வராமல் இருந்தால் நமக்கு மிச்சம் தான். எனவே ஒவ்வொரு முஸ்லிமும், அல்லாஹ் நமக்கு இப்படியொரு ஏற்பாட்டைச் செய்து வைத்திருக்கிறான். இதில் நமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பான், நம்மைச் சிரமத்தில் விட்டுவிட மாட்டான் என்று அல்லாஹ்வின் பரக்கத்தை நம்ப வேண்டும்.
இறைவனின் மறைமுக உதவியான பரக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள பின்வரும் உதாரணத்தைப் பார்ப்போம்.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இறை மறுப்பாளர் ஒருவர் விருந்தாளியாக வந்து தங்கினார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே கற(ந்து அவரிடம் கொடு)க்கப்பட்டது. அவர் அந்தப் பாலைப் பருகினார். பிறகு மற்றோர் ஆட்டில் பால் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். பிறகு மீண்டும் ஓர் ஆட்டில் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். இவ்வாறாக ஏழு ஆடுகளிலிருந்து கறக்கப்பட்ட பாலை அவர் பருகினார். மறு நாள் காலையில் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அப்போது ஓர் ஆட்டில் பால் கறந்து அவருக்கு வழங்கும்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட, அவர் அந்தப் பாலைப் பருகினார். மற்றோர் ஆட்டில் பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டபோது, அவரால் அதை முழுவதுமாகப் பருக முடியவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இறை நம்பிக்கை யாளர் ஒரே குடலில் பருகுவார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் பருகுவான்” என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 4189, புகாரி 5397)
இன்னும் இச்செய்தி புகாரியில் 5393, 5394, 5395, 5396 யிலும் முஸ்லிமில் 4185, 4186, 4187, 4188 ஆகிய அறிவிப்புக்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி நபியவர்கள் கண்முன்னே நடந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டுத் தான் அல்லாஹ் முஸ்லிமுக்குச் செய்யும் மறைமுக அருளான பரக்கத்தை விளக்குகிறார்கள், ஒரு ஆட்டின் பாலிலிருந்தே முஃமினுக்கு வயிறும் நிறைந்து விடுகிறது, மனதும் போதுமாக்கிக் கொள்கிறது, அதிலிருந்து கிடைக்க வேண்டிய சத்துக்களும் சரியாகக் கிடைத்து விடுகிறது.
முஃமினல்லாதவருக்கு அதிகம் வயிறு கொள்கிற அளவுக்கு சாப்பிட்டும், மனதும் வயிறும் நிரம்பாத நிலை உள்ளது.
எனவே பரக்கத் என்ற மறைமுக அருளைத் தான் முஃமின் ஒரு குடலில் சாப்பிடுவதாகவும் மற்றவர்கள் ஏழு குடலுக்குச் சாப்பிடுவதாகவும் சொல்கிறார்கள்.
இந்த நன்மையை முஸ்லிம் சமூகம் இன்றுவரை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறது. எத்தனையோ சமூகங்கள் கணவன் வேலைக்குச் செல்வதைப் போன்று மனைவியைச் சம்பாதிப்பதற்கு அனுப்புவார்கள். இப்படிக் குடும்பத்துடன் உழைத்தும் சாதாரண நிலையில் தான் அவர்களது வாழ்க்கை இருக்கிறது. குடிசைகளிலும் ஓட்டு வீடுகளிலும்தான் இருக்கிறார்கள்.
நமது சமூகம் வெளிநாடுகளில் அற்ப சம்பளத்திற்கு இருந்தாலும் வீட்டைக் கட்டுகிறார்கள். காரை வீடுகளிலும் மாடிவீடுகளிலும் சொகுசாக வசிக்கிறார்கள். முஸ்லிமல்லாதவர்கள் ஒரு பொட்டு தங்கத்திற்குக் கூட வழியில்லாமல் இருப்பார்கள். நமது சமூதாயப் பெண்கள் காதுக்கு, மூக்குக்கு, கைகளுக்கு என்று தங்கத்தை அடுக்கிக் கொள்கிற அளவுக்கு இருக்கிறார்கள். ஆனாலும் பிற சமூக மக்களோடு ஒப்பிடுகையில் நாம் தான் மிகவும் வருமானத்தில் பின்தங்கியிருக்கிறோம். நமக்குக் கிடைக்கும் பொருளாதாரம் குறைவாக இருந்தாலும் அதற்குள்ளேயே நமது தேவைகள் நிறைவேறி, மிச்சத்தைச் சேமிக்கும் வகையில் அல்லாஹ் நமக்கு அமைத்துத் தருகிறான்.
கல்யாணத்திற்குப் பிற சமூக மக்கள் பத்தாயிரத்திற்கு நகை போட்டதைப் பெரிதாகச் சொல்வார்கள். முஸ்லிம் சமூக மக்களுக்கு கல்யாண வீட்டில் பெண் உடுத்துகிற பட்டுக்கே பத்தாயிரம் பற்றாமல் இருக்கிறது. கல்யாணப் பெண்ணுக்கு நகை போட்டால் அரைக் கிலோ, ஒருகிலோ தங்கம் என்று போடுகிறார்கள். வரதட்சணை வாங்குவதையும் கொடுப்பதையும் இந்த மார்க்கம் தடுக்கிறது. இருப்பினும் முஸ்லிம் சமூகத்தின் செழிப்பை விளங்கிக் கொள்வதற்காக இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
எனவே அதிகமான பொருளாதாரம் நமக்குக் கிடைக்கும் என்பதற்காக பெண்களை வேலைக்கு அனுப்பும் நோய் நமக்கு வந்து விடக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மரபுக்கு மாற்றமாக பொருளாதாரத்திற்கு ஆசைப்பட்டால், மாத வருமானம் இரட்டிப்பாகக் கிடைக்கலாம். ஆனால் அதை விட அதிகமாகச் செலவாகி விடும்.
இப்படி மனைவியை வேலைக்கு அனுப்பி சம்பாதிப்பதால் அல்லாஹ் பரக்கத்தை தடுத்துவிட்டுத் தான் தருவான். கடைசியில் கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிச்சம் ஒன்றுமிராது. கையைப் பிடிக்கிற மாதிரித்தான் இருக்கும்.
எனவே முஸ்லிம்களைப் பொறுத்த வரை, குடும்பச் செலவுக்கான பொருளாதாரப் பொறுப்பை ஆண்களின் மீது அல்லாஹ் சுமத்தியிருப்பதினால் நாம் தான் அந்தப் பொறுப்பைச் சுமக்க வேண்டும் என்பதையும் அப்படிச் சுமந்தால் அல்லாஹ்வின் உதவியும் மறைமுகமான அருளும் இருக்கிறது என்பதையும் நம்பிச் செயல்பட்டால் எந்தக் கட்டத்திலும் நமது மனைவிமார்களை வேலைக்கு அனுப்ப வேண்டிய சூழல் வராது.
அதுபோக, நாம் உலகத்திற்காக வாழ்கின்ற சமூகம் கிடையாது. இதுவரை கடந்த இதழ்களில் கூறப்பட்டவைகள் அனைத்திலும் உலகக் கணக்கின் அடிப்படையில் பெண்களை வேலைக்கு அனுப்பி சம்பாதிக்கக் கூடாது என்பதை விளக்கியிருந்தோம்.
முஸ்லிம்கள் மறுமையை இலக்காகக் கொண்ட சமுதாயம் என்பதால் இந்த உலகத்தில் வறுமையிலும் கஷ்டத்திலும் உழன்றாலும் அதற்காக இஸ்லாமிய நெறிமுறைகளை மீறிவிடவே கூடாது.
உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில் கணவர் மட்டும் உழைக்கிறார். அவரது சம்பாத்தியத்தில் சோறு, தண்ணீர் மட்டும் தான் குடித்து வாழ முடிகிறது, மற்றபடி பெரியளவுக்குத் தேவைகளை கணவரது சம்பாத்தியத்தில் ஒன்றும் செய்யமுடியாத சூழல் இருந்தால் அதை அப்படியே பொருந்திக் கொண்டு வாழவேண்டியது தான். அவர்கள் அப்படியிருக்கிறார்கள்; இவர்கள் இப்படியிருக்கிறார்கள் என்று மற்றவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளத் தேவையில்லை.
இதற்கு மிகச் சிறந்த ஆதாரம், ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் அனைத்திற்கும் முன்மாதிரியாக அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ள வேண்டும். நபிகளார் நபித்துவ வாழ்வில் வறுமையும் ஏழ்மையும் தான் நிறைந்து காணப்படுகிறது. நபிகள் நாயகத்தின் குடும்பத்தினரது ஒருநாள் உணவு ஒரு பேரீச்சம் பழம் என்ற அளவில் தான் இருந்தது. வெறும் தண்ணீரையும் பேரீச்சம் பழங்ளையும் உண்டு, பாலைப் பருகித் தங்களது வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார்கள்.
சொகுசாக வாழ்வதற்காக, டீவி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மிஷின் போன்றவை வாங்க வேண்டும் என்பதற்காகக் குடும்பப் பெண்களை சம்பாதிக்க அனுப்பக் கூடாது. நன்றாகவும், நவீன வசதிகளோடும், சொகுசாகவும் வாழ்வதற்கு ஆண்களே மார்க்கம் அனுமதித்த வழியில் கூடுதலாக சம்பாதிப்பதற்கு, உழைப்பதற்கு முயற்சிக்கலாம். இதில் தவறேதும் கிடையாது. இன்னும் சொல்வதெனில் மார்க்கம் அதை வலியுறுத்தவே செய்கிறது.
ஆனால் மனைவியை வேலைக்கு அனுப்பித்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவை ஒருக்காலும் எடுத்துவிடவே கூடாது. ஏனெனில் நபிமார்களும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களது தோழர்களும் பட்ட சிரமங்களை இன்றைய காலத்தில் நம்மில் ஒருவர் கூட நிச்சயம் அடைந்திருக்க மாட்டார். அவ்வளவு பெரிய வறுமையில் தான் வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் இந்தக் குடும்பவியல் தலைப்பில் புரிந்து கொள்ளவேண்டும்.
சமூக பாதிப்பு
பெண்களைச் சம்பாதிப்பதற்காக வேலைக்கு அனுப்புவதால், சமூகத்திற்கும் நாட்டுக்கும் பொருளாதார ரீதியாக பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. நாட்டு மக்களுக்கே நட்டம் தான். ஏனெனில் வேலையில்லாத் திண்டாட்டம் இன்று பலநாடுகளில் காணப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு ஆண் வேலைக்குச் சென்றால், மனைவி மக்கள், தன் குடும்பத்தையெல்லாம் காப்பாற்றிக் கொள்கிறான். அந்தக் குடும்பத்திற்கு ஒரு வேலை என்றாகி விடுகிறது.
ஆனால் நடைமுறையில் இன்றைக்குக் கணவர் வேலைக்குச் சென்றால், தனது செல்வாக்கில் மனைவியையும் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். அப்படியெனில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு வேலையாகி விடுகிறது. இப்போது, இந்தப் பெண்ணுக்குக் கிடைத்த வேலை வேறொரு ஆணுக்குக் கிடைத்தால் அவனைக் கொண்டு ஒரு குடும்பமே நன்றாக வாழும். பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஆண்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுகிறது.
ஒரு ஆண் வேலைக்குச் செல்வது ஒரு ஆணுக்கு மட்டும் உரிய வேலை கிடையாது. ஒரு குடும்பத்தின் வேலையாகும். அப்படியெனில் ஒரு ஆணுக்கு வேலை கொடுத்தால் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்துத் தான் வேலை கொடுக்கிறோம் என்றாகும். ஏனெனில் தாய், மனைவி போன்ற பெண்களைப் பார்ப்பதும் ஒரு ஆண்மகனின் வேலை தான்.
பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஒரு குடும்பத்திலுள்ள இருவர் வேலை செய்வார்கள். அதே நேரத்தில் இன்னொரு குடும்பத்திலுள்ள ஆணுக்கு வேலையில்லாத் திண்டாட்டமாக இருக்கும்.
அடுத்ததாக, பெண்களுக்கு இன்னும் ஒரு முக்கியமான பலவீனம் இருக்கிறது. பெண்கள் இயற்கையாகவே மாதவிடாய்க் காலத்தில் இயல்புக்கு மாற்றமாகவே இருப்பார்கள். டென்ஷனாகவும் கோபமாகவும் இருப்பதைப் பார்க்கலாம். மாதவிடாய் நேரத்தில் சாதாரண நாட்களில் இருப்பதை விடவும் அதிகமாக ஓய்வை எதிர்பார்ப்பார்கள். பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தார்கள் எனில் சிறிய வேலைகளைச் செய்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் ஏதேனும் நிறுவனத்தில் வேலைக்குப் போகிற பெண்ணாக இருந்தால் மாதம் முழுவதும் எல்லா நாட்களிலும் வேலைக்குச் சென்றுதான் ஆகவேண்டும். நினைத்த நேரத்திற்கெல்லாம் ஓய்வை எடுக்க முடியாது. இந்நேரத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமான சுமைகளைத் தாங்கக் கூடாது என்றும் இலகுவாக வேலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்களும் உடற்கூறு ஆய்வு செய்கிற விஞ்ஞானிகளும் சொல்லத்தான் செய்கின்றனர்.
அதேபோன்று பொதுவாக பெண்கள் 45 வயதை அடைய ஆரம்பித்தால் மாதவிடாய்க்கான சுரப்பிகள் குறையத் துவங்கி ஏறத்தாழ 50 வயதுக்குள் பெரும்பாலும் மாதவிடாய் நின்றுவிடும். இந்தக் கால இடைவெளியில் உடல் ரீதியாக பல சிதைவு மாற்றங்கள் ஏற்படும். அப்போதெல்லாம் கடுமையாகக் கோபப்படுவார்கள். மாதவிடாய் நின்றதும் உடலிலுள்ள வியர்வை சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக சுரக்க ஆரம்பித்துவிடும். இவ்வளவு பலவீனங்களுள்ள ஒரு பெண்ணை வேலைக்கு அனுப்புவது நியாயமற்ற செயல்.
இதில் நிறைய விஷயங்கள் உள்ளன. மாதவிடாய் மூலம் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று ஆய்வு செய்தால் இன்னும் அதிகமான பிரச்சனைக்குரிய காரணகளைச் சொல்கிறார்கள்.
மாதவிடாய் நிற்கும் பருவத்தில் உள்ள பெண்கள் விஷயத்தில் கணவன்மார்கள், குடும்பத்தினர் கூடுதலான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான கோபம் தெரியும். அதையெல்லாம் சகித்துக் கொண்டு தான் வாழவேண்டும். எப்போதையும் விட அதிக பரிவையும் கரிசனத்தையும் அன்பையும் அவர்கள் மீது பொழிய வேண்டும்.
எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்த்தால், இஸ்லாம் ஆண்கள் மீது பொருளீட்டும் பொறுப்பைச் சுமத்தியிருப்பது அறிவுப்பூர்வமான தாகவும் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை செய்யக் கூடியதாகவும் மனித குலத்திற்கு நன்மை செய்யக் கூடியதாகவும் இருப்பதை விளங்கிக் கொள்ளலாம்
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி
source: http://sltjcolombo.com/?p=399