நன்னம்பிக்கையாளரே! தன்னம்பிக்கையாளர்!
தன்னம்பிக்கை என்பது மனிதனின் வாழ்வில் இடம் பெறவேண்டிய இன்றியமையாத உணர்வு.
தன்னம்பிக்கையற்ற மனிதர் தனது தனிப்பட்ட வாழ்விலும். இல்லற வாழ்விலும் பொதுவாழ்விலும் வெற்றிபெற முடியாதவராகவே இருப்பார்.
பொதுவாக தன்னம்பிக்கையே மனிதனை செயல்படவைக்கும் ஊக்குவிப்பு கருவி. சாதனையாளர்களின் வெற்றிக்கு தன்னம்பிக்கையே ஆணி வேராகவும், அஸ்திவாரமாகவும் அமைந்து இருக்கிறது. ஒரு தனி மனிதனுக்கு இது ஏற்புடையது போன்றே ஒரு சமூகத்தின் வெற்றிவாழ்வுக்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கிறது.
‘‘தன்னம்பிக்கை’’ அதன் முதற்கட்டம் தன்னைப்பற்றிய சுய மதிப்பீட்டில் துவங்குகிறது தன்னால் சாதிக்க முடியும் என்ற உறுதிப்பாட்டை சுயநிலையில் உணர்வது என்பதே தன்னம்பிக்கையாகும். அதற்கு உரத்தை ஏற்படுத்தக்கூடியவைகளாக அவன் பெற்றிருக்கும் கல்வி – செயலாற்றல் – பொருளாதாரம் – பதவி – செல்வாக்கு போன்றவைகள் அமைந்திருக்கின்றன.
இவை அவனது தன்னம்பிக்கைக்கு பின்பலமாக அமைந்திருக்கின்றன. மனித உள்ளத்தில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும், பயம் போன்ற கோழைத்தனங்களுமே தன்னம்பிக்கையின் முதல் எதிரி. அவைகளை நீக்கி “எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகளாயினும் அதனை நான் சந்திப்பேன்-சாதிப்பேன்” என்ற உறுதிப்பாட்டை உள்ளத்தின் அடித்தளத்தில் பதியவைத்துக் கொள்வதே தன்னம்பிக்கையின் மறுபெயர் என்றும் கூறலாம்.
எதிர்நிலைகளை சந்திக்க நேரும் போது தான் தன்னம்பிக்கை மனிதனுக்கு அவசியதேவை. எதிர்நிலைகள் என்பது யுத்தகளத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. பொதுவாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் அது பொருந்தக்கூடியதே.
“யா அய்யுஹல்லதீன ஆமனூ இஜா லக்கீத்தும் ஃபிஅத்தன் பஸ்புத்தூ…”
ஓ! நன் நம்பிக்கையாளர்களே (எதிரிகளின்) கூட்டத்தினரை நீங்கள் சந்தித்தால் (எவ்வித கலக்கத்தையோ, பயத்தையோ மனதில் கொள்ளாமல்) உறுதியான (தன்னம்பிக்கை) நிலைப்பாட்டை மேற்கொள்ளுங்கள். அதிகம் அல்லாஹ்வை (மனதாலும், வாயாலும்) திக்ரு செய்யுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றியாளர்களாக ஆகிவிடமுடியும். (அல்குர்ஆன் 8:45)
குர்ஆனின் (8:45) வசன அறிவிப்புப்படி எதிரிகளின் கூட்டத்தை (அவர்களால் தொடுக்கப்படும் தவறான தகவல் யுத்தங்களை) சந்திக்கும் போது அல்லாஹ் அறிவுறுத்து உள்ளபடி நாம் முதலில் மேற்கொள்ளவேண்டியது “ஃபஸ்புத்தூ” ஒருங்கிணைந்த உறுதிப்பாடே ஆகும்
“ஸபத்த” என்ற பதத்தின் அரபி ஏவல் வினைச்சொல்லுக்கு “உறுதியான நிலைப்பாடு” என்று கூறலாம். இது மனித உள்ளத்தில் ஏற்படும் துணிவு சார்ந்த உணர்வாகும். அதன்வெளிப்பாடு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மேவிநிற்கும். இதைத்தான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் “தன்னம்பிக்கை” என்று குறிப்பிட்டிருந்தோம். இன்றைய சூழலில் இதனை உயர்ந்த முறையில் உள்ளத்தாலும், உடலாலும் உரமேற்றிக் கொள்வதற்கு பிறர் எவரையும் காண சுயநிலையில் அருமையான வாய்ப்புகளையும் பின்பலமாக சிறந்த சாதகங்களையும் நாமே பெற்றுள்ளோம்.
மனிதனின் தன்னம்பிக்கையில் உரமேற்படுத்துவதற்கு பின்பலங்களும் காரணங்களாக ஆகி இருக்கின்றன என்று துவக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஒரு லட்சாதிபதி, அல்லது ஒரு மந்திரியின் மகனுடைய நடையிலும், உடையிலும் பேச்சிலும் காணப்படும் மிடுக்குக்கும் உறுதிபாடுகளுக்கும் அவனின் தந்தையின் செல்வமும் செல்வாக்கின் பின்பலமுமே உலகியல் ரீதியில் காரணமாக ஆகி இருக்கிறது.
நாம் யாரின் மீது ஈமான் கொண்டிருக்கிறோமோ அந்த அல்லாஹ்வின் தொடர்பு நமக்கு அளப்பரிய பின்பலமாகும். ஏனெனில் அகிலங்கள் அனைத்திற்கும் சொந்தக்கார செல்வந்தன் அல்லாஹ் மட்டுமே. அவனின் பதவிக்கு எல்லையே இல்லை. உலகில் மனிதர்களை பதவியில் அமரவைப்பவனே அவன் தான். பணபலத்தையும், பதவி அதிகார செருக்கையும் உடையவரின் உறவும், தொடர்பும் ஒரு சாதாரண மனிதனை துணிவு உள்ளவனாகவும், தன்நம்பிக்கை கொண்டவனாகவும் ஆக்கி விடுவதற்கு மேலே குறிப்பிட்டுள்ளபடி அவன் பெற்றிருக்கும் பின்பலமே காரணமாக அமைந்திருக்கும் போது. நமக்கு உதவிடவும் – பாதுகாத்திடவும் காத்திருப்பவனும், ஒரு நொடியில் அகிலங்களை ஆக்கிடவும், அழித்திடவும் வல்லமையுள்ளவனான அல்லாஹ்வை உறுதியான பின்பலமாக நாம் பெற்றிருக்கிறோம் என்பதை மனதில் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். ஆகவே நாம் அச்சமடைய வேண்டிய தேவையே இல்லை.
இறை நம்பிக்கையுடனான தன்னம்பிக்கையுடன், நீதிக்கும் நேர்மைக்கும் ஏற்ப நெஞ்சுரத்துடன் அனைத்து சதித்திட்டங்களையும் எதிர்கொள்வதற்கு நமது மனநிலையை தயார்படுத்திக்கொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் வாழ்ந்து காட்டுவதற்கும் நாம் மிக்க தகுதி பெற்றவர்களாகவே இருக்கிறோம் என்பதை நிரூபித்திடும்வகையில் துணிவை வெளிப்படுத்திக்காட்டிடவும் வேண்டும். ஆனால் கைசேதம் என்னவெனில் இன்று நம்மில் அதிகமானவர்கள் நிழலைக்கண்டே அஞ்சக்கூடியவர்களாக இருந்து வருகிறோம்.
“கான ஹக்கன் அலைனா நஸ்ருல் முஃமினீன்.” & மூஃமின்களுக்கு உதவி (அவர்களை காப்பாற்றிடச்) செய்வது நம்மீது கடமை (அல்குர்ஆன் 30:47) என்ற இந்த அறிவிப்பின் மூலம் எவ்வளவு பெரிய வலுவான வாக்குறுதியை அல்லாஹ் நமக்கு அளிக்கிறான். இது எந்த அளவுக்கு நமது உள்ளத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவல்லது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
“இன் யன்ஸுருககு முல்லாஹு ஃபலா காலிபலக்கும்’’ அல்லாஹ் உங்களுக்கு உதவி (செய்து பாதுகாப்பு) செய்துவிட்டால் யாராலும் உங்களை (அழித்துவிடவோ – தீங்கு செய்து) மிகைத்துவிடவோ முடியாது (அல்குர்ஆன் 3:160)
இதுவும் அந்த வல்லமையாளனின் உறுதியான அறிவிப்பே ஆகும். முதன்மையான அகுமுறை அல்லாஹ் அறிவித்த வழிமுறையாகும். அதுவே மிகமிகச் சிறந்ததும் சாதனைபடைக்க வல்லதும் ஆகும். இதனையே சென்றகால இஸ்லாமிய சரித்திரம் நெடுக பதிவுகளை செய்து வந்திருக்கிறது.
இன்றைய சூழலில் எதனை முதலில் செய்ய வேண்டும் என்றால் அதற்கு மிக்க தகுதியுள்ளது “தன்னம்பிக்கை”யே ஆகும். அதிலும் குறிப்பாக அல்லாஹ்வை சார்ந்து அவனையே பின்பலமாகக் கொண்ட தன்னம்பிக்கையே ஆகும். இது மட்டுமே சரியான தீர்வு.
இதன் அடுத்தகட்டமாக,
1. நம்பிக்கையில் தவக்குல்
2. நமக்கிடையில் மனதால் ஒற்றுமை.
3. செயற்பாட்டால் ஒருங்கிணைப்பு.
4. தூரநோக்கிலான திட்டமிடல்.
5. முறைப்படியான செயலாற்றல்.
ஆகிய ஐந்து வகை முயற்சிகளைப் பற்றியும் குர்ஆன் சிறந்த வழிகாட்டல்களைச் செய்துள்ளது. இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வியலும் மேலான முன் மாதிரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இன்ஷாஅல்லாஹ் அறிவோம்.
– மௌலானா மௌலவி சையிது நிஜாமிஷாஹ் நூரி பாக்கவி
-முஸ்லிம் முரசு ஏப்ரல் 2015