விடைகள் தெரிந்தும் தேர்வில் தோல்வியுற்றோம்!
மனிதனுக்கு அல்லாஹ் குறைந்தது 60 ஆண்டுகள் வாழ்க்கையைக் கொடுத்துள்ளான். அப்படியெனில், 22,000 நாட்கள் மனிதன் உலகில் வாழ்கின்றான்.
ஒரே ஒரு நாள் நடக்கவிருக்கும் தேர்வுத் தயாரிப்புக்காக, மனிதனுக்கு 22,000 நாட்களை அல்லாஹ் தந்திருக்கிறான்.
அந்த தேர்வு நாள், அவன் மரணிக்கும் நாள்!
அந்த நாளில் இறந்தவனிடம் சில கேள்விகள் எழுப்பி அவற்றுக்கு சரியான விடைகளை எதிர்பார்ப்பான்!
தேர்வு வைத்தாலும், அல்லாஹ் கருணையாளன். மனிதன் விடைகளை அறிந்து கொள்வதற்காக, குர்ஆன் – ஹதீஸ் மூலமாக கேள்விகளையும், விடைகளையும் மனிதனுடைய கரங்களிலேயே தந்திருக்கிறான். அவன் கருணைக்கு எல்லையில்லை என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டு.
தேர்வு அறைக்குச் செல்லும் மாணவனுடைய கரங்களில் ஒரு பேப்பர் கொடுக்கப்படும். அதன் ஒரு புறம் முழுவதும் கேள்விகள். மறுபுறம் முழுவதும் பதில்கள் இருந்தும் அம்மாணவன் அத்தேர்வில் தோல்வியுற்றால், எப்படிக் கருதுவோம்? அடி முட்டாள் என்றே கருதுவோம்!
அது போன்று இறுதி நாளின் கேள்விகள், விடைகள் தெரிந்தும் தோல்வியடைந்தால் அந்த மாணவன் போன்று நாமும் முட்டாளே! ஆனால், முட்டாள் என்று நம்மைக் கூறும் முன்னதாக நாம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணமிது.
முஸ்லிம் மக்களில் பலரும் தங்கள் வாழ்வை எவ்வாறு வடிவமைத்துக் கொள்கின்றனர் எனப் பார்த்தால், வயது முதிர்ந்தபிறகு தான் இஸ்லாத்தை பயில ஆரம்பிக்கின்றனர்.
கால்பந்து விளையாட்டு வீரனாக ஆக வேண்டுமென ஒருவன் கருதினால், இளமைப் பருவத்திலிருந்து பயின்று வந்தால்தான் முதுமைப் பருவத்தில் சிறந்த கால்பந்து வீரனாக புகழ்பெற முடியும். முதுமைப் பருவத்தில் கற்கத் தொடங்கினால் விளையாட இயலாது, உடல் ஒத்துழைக்காது. எதார்த்தம் இது.
முதுமைப் பருவத்தில் இஸ்லாத்தை கற்க நினைத்தால் நின்று தொழுவதற்குக் கூட சக்தியிருக்காது. இளமைப் பருவத்தில் வழிபடுபவனுக்கே இறுதிநாளில், இறைவன் தன்னுடைய நிழலை ஆயத்தமாக்குகிறான். இறுதி நேரத்தில் இறைவனுடைய சிம்மாசன நிழல் தவிர வேறு நிழல் மனிதனுக்குக் கிடையாது.
சூரியனுக்கு கீழாக மனிதன் பல மணி நேரம் இருந்துவிட்டு வந்தால், உறுநிழல், மிகுதியான நிழல் தேவைப்படும். மனிதர்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமைகளிலிருந்தும் தவறிச் சென்று பலவீனமான நிலையை அடைந்திருக்கிறோம். அல்லாஹ்வும் அதனை உணர்ந்திருக்கிறான். மனிதன் சிரத்தையுடன் தொடர்ச்சியுடன் செய்வதனையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.
ஒரு குழந்தை தரையில் அமர்ந்து, தவழ்ந்து நிற்க, நடக்க ஆரம்பிப்பது போன்று சிறந்தவைகளைச் செய்வதில் தொடர்ச்சி வேண்டும். தொடர்ச்சி செயல்களுக்குள் முழுமைத்துவம் கொண்டு வரவேண்டும். அகத்துக்குள் இஸ்லாம் ஆழ வேர் விட்டுப் படர்ந்திருக்க வேண்டும். அந்தப்படர்தல் மனிதனது மரணத்துக்கு பிந்தைய தேர்வில் வெற்றியைத் தர இறை நாட்டம் கிடைக்கும்.
– Islam Alive – Africa
-அமீர்கான்
முஸ்லிம் முரசு ஏப்ரல் 2015