கொடைத்தன்மையைக் காட்டும் கண்ணாடி..!
[ மனித உயிர் பறவை போன்றது! உடல் கூடுக்கு ஒப்பானது! இறப்பும், பிறப்பும் இயல்பானது! உயிர் உள்ள போதே நல்லறம் புரியவேண்டும். கடல் அலைகள் ஓய்ந்த பின்பு நீராடுவேன் என்பதும், எனது குறைகளைச் சரிசெய்த பின் மற்றவர்க்கு உதவுவேன் எனக் கூறுவதும் ஏமாற்றவும், ஏமாறவும் போதுமான சொற்கள்!]
வெட்டுப்படக் காத்திருக்கும் ஆடு முன்பு இலை, தளைகள் போடப்பட்டுள்ளன! மறுமைக்குச் செல்லும் மனிதன் முன்பு உலக இன்பங்கள் காட்டப்பட்டுள்ளன.
மயிலின் அழகு தோகையே அதன் உயிருக்கு விரோதியாவது போல், செல்வந்தரின் படோபடோபம், பெருமை, வெளிப்பகட்டு அவர்கள் அழிவுக்குக் காரணமாகின்றன.
மனிதர் உண்ணக்கூடிய உணவே அவர்களுக்குள் விளைவிக்கப்போகும் விதை! அவ்விதை தரப்போகும் கனிகளே மனித எண்ணங்கள்! உணவு வரும் பணத்தின் வழியும், உண்μம் வாயிம் தூய்மை, பரிசுத்தமாக இல்லையெனில், இறை, மறை, மறுமை குறித்த பார்வை, பயம், கவலை மனத்துக்குள் எழும்பாது.
மனித உடலின் பயனை உணர கரும்பின் பயனைப் பாருங்கள்! அறம் செய்ய விரும்பினால், ஆலம் விதையையும், அதன் விருட்சத்தையும் உற்று நோக்குங்கள்!
ஏழைகளுக்கு உதவாது தான் மட்டும் வாழ்ந்தால் போதுமென்று கருதுவோர் விளாம்பழம் போன்றோர்! விளாம்பழம் மரத்தில் வெளவால்கள் வாழ்ந்தாலும் அவற்றுக்கு உணவாக விளாம்பழம் பயன்படுவதில்லை!
மனித உயிர் பறவை போன்றது! உடல் கூடுக்கு ஒப்பானது! இறப்பும், பிறப்பும் இயல்பானது! உயிர் உள்ள போதே நல்லறம் புரியவேண்டும். கடல் அலைகள் ஓய்ந்த பின்பு நீராடுவேன் என்பதும், எனது குறைகளைச் சரிசெய்த பின் மற்றவர்க்கு உதவுவேன் எனக் கூறுவதும் ஏமாற்றவும், ஏமாறவும் போதுமான சொற்கள்!
செந்நிற நெல்லின் விதை செந்நெல் போன்றே இருக்கும்! தந்தையின் அறிவு, குணமே பிள்ளைக்கும் இருக்கும்! பேய்ச் சுரைக்காயை எந்த காய், உணவுடன் சேர்த்து சமைத்தாலும் அதன் கசப்புத்தன்மை நீங்காது! அது போன்று சில மனிதர்கள்!
தந்தை தன் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கும் செல்வம் அவர்களுக்குக் கற்பிக்கும் கல்வி! தந்தைக்கு அவமானம் ஏற்பட்டு விடாது காக்க வேண்டியது மகனுக்குரிய கடமை! நல்லவர்களுடன் சேரும் நட்பு செல்வங்கள் நிறைந்த சுரங்கத்திற்குச் செல்வது போன்றது! தீயவர்களுடன் சேர்வது விரியனுடன் சேர்ந்து உயிரை விடும் நல்ல பாம்பு செயலுக்கு ஒப்பானது! நல்லபாம்பு, விரியன் பெண் பாம்புடன் சேர்ந்து ஆட்டம் போட்டு இணை சேரும். சேர்ந்த பின்பு நல்ல பாம்பு இறந்துவிடும்!
வறண்டு கிடக்கும் ஆறு நீர் எடுத்துக் கொள்ள தன்னையே தரும். அது போன்று நற்குடும்பத்தில் பிறந்தவர்கள் தான் வறுமையில் வாழ்ந்தாலும், தன்னிடம் உதவி கேட்டு வருவோருக்கு உதவி செய்யத் தயங்கமாட்டர்!
வறுமையில் வாழும் மக்கள், பூக்கள் இல்லாத மரக்கிளைகளுக்கு ஒப்பானவர்கள்! உறவினர்கள் அம்மரக்கிளைகளை நாடாத வண்டுகள்!
அறிவு, நல்ஒழுக்கம், போதுமென்ற குணத்துடன் வாழ்வோர் துன்பமில்லாமல் வாழ்வர்! துன்பம் எனும் இருள் அவரவர் மீதும் படர்வதற்குக் காரணம் வெட்கமற்ற செயல், ஒழுக்கமற்ற போக்கு!
தாய், குழந்தையைத் தேடுவது போல் வேர்கள் கிளைகளைத் தேடுகின்றன! இறைவன் தன்மீது இரக்கம் காட்ட கண்ணீர் விடுவோர், பலவீனர் மீது இரக்கம் காட்டலாம், கரம் நீட்டலாம்!
உயிர் மீதான அன்பு உயர்வானது! உடல் மீதான அன்பு பிணங்களுக்கானது! ஆன்மாவைப் பிரகாசிக்க வைத்து வாழ்வின் தாழ்வாரத்தில் பசுமை பூக்கச் செய்வது இறையச்சத் துடன் வெளிக்கிளம்பும் கண்ணீர்!
அறிவு கரை காண இயலாத கடல்! மூழ்கி முத்துக் குளிப்பவனே அறிவாளி!
சூரா ரஹ்மான் ஆயத் வசனம் – 29 “குல்ல யவ்மின் ஹுவ ஃபீ ஷான்’’ – அவன் ஒவ்வொரு நாளும் செயலாற்றிக் கொண்டிருக்கிறான்” எனக் குறிப்பிடுகிறது!
மனிதனது ஓய்வு குழிக்குள் மட்டுமே இருக்கவேண்டும்! சொற்கள், எழுத்துகள் சிக்கவைக்கும் வலைக்கு ஒப்பானவை!
வார்த்தைகள் மணல் போன்றது! மனிதன் வயது தண்ணீர் போன்றது! அழிந்து போகும் பண்டங்களின் சேர்மானம் மனித உடல்!
புழுத்து அழுகியப் பிணங்களைத் தின்பது கழுகின் குணம்!
குரலெழுப்பி தன்னைக் காட்டுவது தவளைக் குணம்!
தவிர்க்கப்பட வேண்டிய உறவுகளுடன் பாலியல் வேட்கை கொள்வது பன்றி குணம்!
தன்னைச் செதுக்கும் உளிக்கு தானே பிடியாகி அழிவது மரத்தின் குணம்!
பிறரிடம் குற்றம் கண்டுபிடிப்பது மனித குணம்!
கொடைத்தன்மைக்கு கண்ணாடியாக இருப்பவன் வறுமையாளன்! அக்கண்ணாடி முன்பு செல்வந்தன் விடும் மூச்சு அவனுக்கே ஆபத்தாக அமையும்!
காய், கனிகளைத் தாங்கி நிற்கும் சிறிய கொம்பு கிளைகளைச் செல்வந்தர் பாடமாக எடுக்கலாம்.
மனிதர் புரிய வேண்டிய ஈகைக் குணங்களை, தாங்கிப் பிடிக்கும் தன்மையை தன்னிடமிருந்தும் அவை வெளிப்படுத்துகின்றன! திரண்ட செல்வம், மாடி மனைகள் இருப்பதால் ஒரு குடும்பம் சிறந்த குடும்பமாக போற்றுதலுக்குரிய குடும்பமாக ஆகிவிட முடியாது! அறிவு, கல்வி, இறைபக்தி, உதவும் மனப்பான்மை நற்செயல்களுக்கான முயற்சிகளே மனிதரின் சிறப்பை தீர்மானிக்கின்றன!
மனிதனை இறைவன் பழமாகவும், தோலாகவும் படைத்திருக்கிறான். எண்ணெயும், தண்ணீரும் போல் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும்!எண்ணெய் பிழிய உதவும் விதையை வளர்த்துத் தருகிறது தண்ணீர். வளர்ந்த பிறகு அவ்விதை தரும் எண்ணெய், தண்ணீருக்கு எதிரியாகி விடுகிறது! இறை இரகசியத்தை எவர் அறிய முடியும்?
-ஜெ. ஜஹாங்கீர்
முஸ்லிம் முரசு, ஜனவரி 2016