ஆலோசனையில் அபிவிருத்தி!
ஹாபிழ் அ. செய்யது அலி மஸ்லஹி, பாஜில்
பிறரால் நமக்கு வழங்கப்படும் ஆலோசனை என்பது அன்பின் வெளிப்பாடு; அது அறிவின் செயல்பாடு; அது அனுபவத்தின் கோட்பாடு.
ஒருவரின் மதிநுட்பமும், அடுத்தவரின் ஆலோசனையும் இணைந்து, ஒருவரை முழு மனிதனாக வெளிப்படுத்துகிறது.
மதிநுட்பம் இல்லாதவனும். அடுத்தவரின் ஆலோசனையை மதிக்காதவனும் முழு மனிதனாக, வெற்றி வேந்தனாக வாழ்ந்த சரித்திரம் கிடையாது.
மனிதர்கள் மூன்று வகையினர்
1. ஒருவன் தமது மதிநுட்பத்துடனும், அடுத்தவரின் ஆலோசனையுடனும் செயல்படுபவன் முழு மனிதன்.
2. ஒருவன் தமது மதிநுட்பத்துடன் நடந்து கொண்டு ஆலோசனையை கைவிட்டவன் அரைமனிதன்.
3. ஒருவன் மதிநுட்பத்துடனும் செயல்படவில்லை. அடுத்தவரின் ஆலோசனைபடியும் நடக்கவில்லை. இவன் மனிதனே இல்லை. என ஹஸன் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்.
ஆலோசனையின்படி நடக்கும்பொழுது அதன் முடிவு கெடுதியாக இருந்தாலும், அதிலே பரகத் இருக்கிறது. மேலும் அதிலே ஆறுதலும் கிடைக்கிறது. எந்ததொரு செயலானாலும் தன்னிச்சையாக முடிவு எடுக்காமல், அறிவாளியிடமும், அனுபவசாலியிடமும், வணக்கசாலியிடமும் கலந்தாலோசித்து, அதனடிப்படையில் எடுக்கப்படும் முடிவின் படி செயல்படவேண்டும்.
“ஆலோசனையின் பாதை விசாலமான” குடும்ப ஆலோசனை, நிதி ஆலோசனை, கல்வி ஆலோசனை, நிர்வாக ஆலோசனை, குழந்தை நல ஆலோசனை, உளவியல் ஆலோசனை, மனநல ஆலோசனை, மார்க்க ஆலோசனை.. இவ்வாறு பட்டியல் நீளும்.
‘ஆலோசனை குறித்து அல்குர்ஆன்’ ஆலோசனை சம்பந்தமாக அல்குர்ஆனில் முத்தான மூன்று இடங்கள் வருகிறது.
“சகல காரியங்களிலும் அவர்களுடன் நீர் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால். அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற் படுத்துவீராக! நிச்சயம் அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 3:159)
“இன்னும் தங்கள் இறைவனின் கட்டளைகளை ஏற்று, தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வார்கள்.” (அல்குர்ஆன் 42:38)
ஆலோசனை குறித்து அல்ஹதீஸ்
“எவர் ஒரு காரியத்தை செய்யநாடி, மற்றவரிடம் கலந்தாலோசித்து, பிறகு அதை செய்யவோ, செய்யாமல் விடவோ தீர்மானித்தால், அவருக்கு நிலவும், பயனும் தரும் நல்வழி கிடைக்கிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்.” (அறிவிப்பாளர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: பைஹகீ)
மற்றொரு ஹதீஸில் வருகிறது;
“ உங்களது ஆட்சியாளர்கள் நல்லவர்களாகவும், உங்களது செல்வந்தர்கள் கொடையாளியாகவும், உங்களது வாழ்க்கைப் பிரச்சனைகளில் தங்களுக்கிடையே கலந்தாலோசிப்பவர்களாகவும் இருந்தால் நீங்கள் பூமியின் மேற்பரப்பில் இருப்பது உங்களுக்குச் சாலசிறந்ததாகும்.
அறிவாளியைப்பார். அனுபவசாலியிடம் கேள்!
ஆலோசகர்களின் தகுதியை இஸ்லாம் அழகிய முறையில் பின்வருமாறு தர நிர்ணயம் செய்கிறது.
1. ஆலோசகர் நம்பத்தகுந்தவராக இருக்க வேண்டும்.
2. எந்த காரியம் தமக்கு சிறந்ததாக தேர்ந்தெடுக்கிறாரோ அதை பிறருக்கும் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செயல்படுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பியுள்ளார்கள்.
“ஆலோசகர் நம்பத்தகுந்தவராக இருக்கவேண்டும். தமக்கு எது நல்லது என்பதை தேர்வு செய்வது போன்று கேட்பவருக்கும் நல் ஆலோசனை வழங்கிடவேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.” (அறிவிப்பாளர் அலி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: தப்ரானீ)
3. ஆலோசகர் மதி நுட்பம் உடையவராக இருக்க வேண்டும்.
4. ஆலோசகர் பக்தியாளராகவும் இருக்க வேவண்டும். ‘ அறிவாளயிடம் ஆலோசனை கேளுங்கள். இதற்கு மாற்றம் செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் கைசேதம் அடைவீர்கள் (நபிமொழி அறிவிப்பு: அபூஹ§ரைரா ரளியல்லாஹு அன்ஹு)
முஸ்லிம் முரசு, ஜனவரி 2016