முஸ்லிம் கைதிகளும், அரசின் பார்வையும்!
o கருணாநிதியும் ஜெயலலிதாவும் முஸ்லிம்களை சந்திக்கக் கூட மறுப்பதேன்?
o முஸ்லிம் கைதிகளும், அரசின் பார்வையும்!
o மரணத்தைவிட பெரிய தண்டனை!
o கோவை கலவரமும் அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி அரசும்
கருணாநிதியும் ஜெயலலிதாவும் முஸ்லிம்களை சந்திக்கக் கூட மறுப்பதேன்?
“கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் பலர் நிரபராதிகள். அவர்களுக்கும் இந்த குண்டுவெடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை அறிந்து என் அண்ணன் அப்துல்லா, அவர்களுக்கு சட்ட உதவிகள் செய்ய இறங்கிய போது, அவரை காவல்துறை அழைத்து மிரட்டியது.
ஆனால், என் அண்ணன் அவர்களுக்கு சட்ட உதவிகள் செய்வதில் தீவிரமாக இருந்தார். இதனால் கோபமுற்று என் அண்ணன் மீது ஒரு பொய் வழக்கு புனைந்து அவரை கைது செய்துவிட்டது” என்கிறார் இஸ்லாமிய விசாரணை கைதிகளின் விடுதலைக்காக சட்ட போராட்டம் நடத்தி வரும் கோவையை சேர்ந்த சிஹாப்.
“குண்டுவெடிப்பிற்காக சம்பந்தபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எங்களுக்கு இதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால், தண்டனை பெற்றவர்கள் அனைவரும் குற்றவாளிகளா…?. எத்தனை பேர் மீது பொய் வழக்கு புனையப்பட்டது. (அப்போது இருந்தது கருணாநிதியின் ஆட்சி) அப்போது பெண்களிடம் காவல் துறை எப்படி நடந்து கொண்டது. இது அனைத்தும் அவர்களின் மனசாட்சிக்கு தெரியும். நாங்கள் எதிர்பார்ப்பது நீதி. அது காலம் தாழ்த்தியாவது எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என்கிறார் சிஹாப்.
“என் கணவர் சர்புதீனுக்கு இந்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் நிரபராதி. இதைப் பல இடங்களில் பல முறை சொல்லிவிட்டேன். அதை யாரும் கேட்கவும், நம்பவும் தயாரில்லை. சரி… இந்தப் பொது சமூகம் அவரைக் குற்றம் செய்தவராகவே கருதி கொள்ளட்டும். அவர் ஏறத்தாழ 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டார்.
இப்போது அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும். எங்களுக்கு இந்த சமூகத்தின் மீதும், நீதியின்பாலும் பெரும் நம்பிக்கை இருக்கிறது. இத்தனை நாள் கோவை குண்டிவெடிப்பு குறித்து பேசுவதே பெருங்குற்றமாக பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது பொதுவெளியில் அது குறித்த விவாதங்கள் துவங்கி இருப்பது மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது’’ என்கிறார் சுபைதா.
“கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக, 48 இஸ்லாமிய தண்டனை கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். விசாரணை கைதிகளின் எண்ணிகையையும் கணக்கிட்டால் ஆயிரத்தை தாண்டும். இவர்கள் வெளிவர சட்டத்தில் அனுமதி இருந்தும், பொது புத்தியின் காரணத்தினால் இவர்கள் வெளிவர முடியவில்லை” என்கிறார் அகில இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்பாதுரை.
“அபுதாகீர், 17 வயதில் சிறைக்குச் சென்றார். அவருக்கு இரண்டு கண்களும் தெரிவதில்லை. சிறையில் இருக்கும் திண்டுக்கல் மீரானுக்கு இரண்டு சீறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவர்கள் யாரையும் கருணை அடிப்படையில் கூட விடுதலை செய்ய அரசு தயாராக இல்லை. அரசும் காவல் துறையும் இஸ்லாமிய விசாரணைக் கைதிளை வேறு மாதிரி அணுகுகிறது. சச்சார் கமிட்டியும் தன் அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது” என்கிறார் அவர்.
“முசாகீர் கைது செய்யப்பட்டது ஒரு கொலை வழக்கில். அதுவும் கொலை குற்றவாளிகளுக்கு வண்டி ஏற்பாடு செய்து கொடுத்ததாக. ஆனால் அவருக்கு இடைக்கால ஜாமீன் கொடுக்க கூட, காவல் துறை கடுமையாக ஆட்சேபித்தது. நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு அவர் இரண்டு நாள் இடைக்கால ஜாமீனில் வந்தார். அதுவும் அவர் உறவினரின் மரணத்திற்கு. இது போல் பல விசாரணை கைதிகள் கேட்பாரற்று சிறையில் இருக்கிறார்கள். நாங்கள் கேட்பததெல்லாம் பாரபட்சமற்ற நீதி. ஆனால், அனைத்து இஸ்லாமிய கைதிகளையும் ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கத்துடனே தொடர்புபடுத்தி பார்க்கிறது இந்த காவல் துறை” என்கிறார் சிஹாப்.
“இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 161 ன் படி. தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய அதிகாரமிருந்தும், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435 அதனை தடுக்கிறது. இந்த சட்டம் கூட்டாட்சி முறைக்கு எதிரானது. அதனால்தான் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் விடுதலையாக இயலவில்லை. இதனை ரத்து செய்ய வேண்டும்” என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் அ. மார்க்ஸ்.
இஸ்லாமிய கைதிகளும், அரசின் பார்வையும்!
’’இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்காக அண்மையில் தமிழக முதல்வரை சந்திக்க முயற்சித்தோம். ஆனால், அவர் தம் உதவியாளர் மூலமாக எங்கள் மனுக்களை பெற்றார். தி.மு.க தலைவர் கருணாநிதியும் தமக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லி எங்களை சந்திக்க மறுத்துவிட்டார். ஆனால், அதே நாளில் தேர்தல் நிதி கொடுக்க வந்த தி.மு.க வினரை சந்தித்து மிக உற்சாகமாக நிதி வாங்கினார். சில முற்போக்கு இயக்கங்களே இஸ்லாமிய கைதிகளுக்காக பேச மறுக்கும்போது இவர்கள் எங்களை சந்திக்க மறுத்தது பெரிய வியப்பை தரவில்லை!’’ என்கிறார் சுபைதா.
மரணத்தைவிட பெரிய தண்டனை!
சிஹாப்பிடம் பேசிக் கொண்டிருந்தபோது கண்ணீருடன் ஒரு விஷயத்தை சொன்னார். “மரணத்தைவிட கொடிய தண்டனை என்ன தெரியுமா…? தனிமைப்படுத்துவது. இது எம் அரசு அல்ல; எமக்கான சட்டம் அல்ல; எமக்கான நீதி அல்ல என்ற எண்ணத்தை ஒரு சாரார் மனதில் தொடர்ந்து ஏற்படுத்துவது. அதைதான் இந்த அரசுகளும், காவல் துறையும் செய்கிறது. பொது வெளியில் அதிகம் இஸ்லாமியர்கள் கலக்காமல் இருப்பதற்கும் அதுதான் காரணம்.”
ஒரு நிலையான குடியாட்சிக்கு அடிப்படை தேவை சட்டமும், நீதியும் பாரபட்சமற்று இருப்பது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் எள் முனை அளவும் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவர்கள் ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் என்ற காரணத்துகாகவும், பொது புத்தியை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் குரல்களுக்கு செவிசாய்க்காமல் இருப்பது ஆபத்தானது.
அதே நேரம் பொது புத்தியை மாற்றவும், அனைத்து சமூக மக்களிடம் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தவும் நீண்ட உரையாடல்களை அனைத்து சமூக மக்களுக்குள் ஏற்படுத்த வேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது!
– ஆதவன், ஆனந்த விகடன்
கோவை கலவரமும் அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி அரசும்.
Marx Anthonisamy
{தொண்ணூறுகளி்ன் பிற்பகுதியில் கோவைக் கலவரங்கள் நடந்தபோது திமுக அரசு எப்படி நடந்து கொண்டது என்பது குறித்து வேறொரு பக்கத்தில் நடந்த ஒரு விவாதத்தில் நான் செய்துள்ள பதிவுகளை இங்கே உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்}
முதல் கட்ட வன்முறையில் 18 முஸ்லிம்கள் இந்து முன்னணி + கருணாநிதியின் காவல்துறையால் கொல்லப்பட்ட சூழலில் அபோதைய ச.ம.உ அப்துல் நாசர் கோவைக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து முதலமைச்சர் கருணாநிதியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வருகிறார். வந்தவுடன் கருணாநிதி சொன்ன வார்த்தை, “உங்க ஆளுங்கதாய்யா எல்லாத்துக்கும் காரணம்..”.
நாசரின் நூல் இப்போது வெளிவருகிறது. நான் அதற்கு முன்னுரை எழுதியுள்ளேன். அது கருணாநிதிக்கோ இல்லை அதிமுகவுக்கோ எதிரான புத்தகமல்ல. மிகவும் நடுநிலையான நூல். அதில் வந்துள்ள தகவல்தான் இது.
காவல்துறையும் அர்ஜுன் சம்பத் தலைமையில் இந்து முன்னணியும் மருத்துவமனையில் அடிபட்டுக் கிடந்த முஸ்லிம்களை எல்லாம் வெட்டிக் கொன்ற பின் அது குறித்து பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் தலைவர் ஒருவரிடம்ஒரு முதல்வரின் வார்த்தைகள், “உங்க ஆளுங்கதாய்யா காரணம்..”. அதாவது கொல்லப்பட்ட முஸ்லிம்கள்தான் எல்லாத்துக்கும் காரணமாம்…
இன்னொரு முக்கிய செய்தியும் நாசரின் நூலில் உள்ளது. 18 பேர் படு கொலையில் தமிழ்நாடு போலீசின் பெயர் அகில இந்திய அளவில் கெட்டுப் போயிருந்தது. கோகுல கிருஷ்ணன் கமிஷனும் நியமித்தாயிற்று. இந்நிலையில் பழி வாங்கும் உணர்வுடன் சில முஸ்லிம் இளைஞர்கள் காவல் துறைக்குத் தெரிந்தே குண்டு வெடிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் என்பதுதான் அச் செய்தி. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் அதன் மூலம் முஸ்லிம்கள் மீது மக்களின் கோபம் திரும்பும். காவல்துறை தப்பித்துக் கொள்ளும் என்று அவ்வாறு செய்யப்பட்டது என்று இது குறித்து ஒரு கருத்து உள்ளதையும் நாசர் பதிவு செய்துள்ளார்.
ஒரு வேளை இந்தக் கருத்து தவறு எனச் சொன்னாலும் கூட கருணாநிதி செய்த இன்னொரு வேலைக்கு எந்தச் சமாதானத்தையும் அவரது குடும்ப சேவுகர்களால் சொல்ல இயலாது. குண்டு வெடிப்பு நடந்தது. அப்பாவி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி முஸ்லிம்கள் மீது கடுமையான அடக்குமுறை. 300 க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 90 சதம் பேர் அப்பாவிகள். திருமால் வீதியில் பயந்து ஒளிந்திருந்த 5 முஸ்லிம் இளைஞர்களை சுட்டுக் கொன்றது கருணாநிதியின் போலீஸ். எங்கள் அறிக்கை இதை வெளிக் கொணர்ந்தது.
18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது ரொம்பவும் துடிப்பாக வன்முறையில் இறங்கிய போலீஸ் அதிகாரி என பியூசிஎல் லின் அகில இந்திய குழு குற்றம் சாட்டிய அதே காவல் துறை அதிகாரிதான் இந்த ஐவரையும் சுட்டுக் கொன்றது.
கருணாநிதி செய்த வேலையை இப்போது சொல்கிறேன். இந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக ஒரு விசாரணைக் கமிஷன் ஒன்றை கருணாநிதி அரசு அமைத்தது. நல்லது. சரிதான். ஆனால் என்ன செய்திருக்க வேண்டும். தனியாக இதற்கென்று ஒரு கமிஷன் அமைத்திருக்க வேண்டும்.
ஆனால் கருணாநிதி என்ன செய்தார்?
18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரித்த அதே கோகுலகிருஷ்ணன் கமிஷனிடம் இப்போது 50க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட வெடிகுண்டு விசாரணையும் தரப்பட்டது.
இதன் விளைவு?
18 பேர்கள் கொல்லப்பட்ட சம்பவம் முக்கியத்துவம் இழந்தது. , இரண்டாவது பயங்கரவாதம் மட்டும் முதன்மை பெற்றது. ஆனால் இரண்டாவது பயங்கரவாதத்திற்கு அடிப்படையே முதல் பயங்கரவாதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி அத்தனை தந்திரமாக இதில் நடந்து கொண்டார்.
இழப்பீடு கொடுப்தில் கூட கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டதைக் காட்டிலும் நான்கு மடங்கு மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. கடும் விமர்சனங்களுக்குப் பின்பே சமமான இழப்பீடு அளிக்கப்பட்டது.
இது எதற்கும் பதில் சொல்லத் திராணி இல்லாத கருணாநிதியின் குடும்ப சேவுகர்கள் வந்து அதிமுகவுக்கு ஆதரவாகத்தான் இந்த மநகூ … கூ…கூ…. ன்னு கூவி கூவி அழுவாங்க பாருங்களேன்.
source: https://www.facebook.com/marx.anthonisamy/posts/993581664047891