இஸ்ரேல் தொடர்ந்து முரண்டுபிடித்தால், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும்!
இஸ்ரேல் – பாலஸ்தீனம்: பிரான்ஸின் முயற்சி!
இஸ்ரேல் – பாலஸ் தீனத்துக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் விதமாக, இன்னும் சில வாரங்களில் சர்வதேச அமைதி மாநாட்டை நடத்த பிரான்ஸ் முயற்சி செய்யும் என்று பிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் ஃபேபியஸ் சமீபத்தில் அறிவித்தார். இஸ்ரேல் தொடர்ந்து முரண்டுபிடித்தால், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
பிரான்ஸில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து குடியிருப்புகளை அமைத்துவருவதாகக் குறிப்பிட்டார். “இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாமல் இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்த உறுப்பு நாடு எனும் முறையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பிரான்ஸின் கடமை” என்று அவர் கூறியிருக்கிறார். இந்த மாநாட்டில் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் அரபு நாடுகளும் கலந்துகொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பை இஸ்ரேல் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், பாலஸ்தீன விடுதலை இயக்கம் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறது. “இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் எனும் பிரான்ஸின் கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு 1967-லேயே தொடங்கிவிட்டது” என்று அந்த அமைப்பைச் சேர்ந்த சாயித் எராகத் கூறியிருக்கிறார்.
இன்னும் சில மாதங்களில் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகவுள்ள ஃபேபியஸின் கடைசி முயற்சி என்றே இது பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சர்வதேச நாடுகளைப் பங்கேற்க வைக்க, 2014-ல் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 2014 டிசம்பரில், இப்பிரச்சினையில் தீர்வு காண்பதற்கான திட்டத்தைத் தொடங்குவதற்காக ஐ.நா. பாதுகாப்பு அவையில் தீர்மானம் கொண்டுவர பிரான்ஸ் முயன்றது. எனினும், பல்வேறு காரணங்களால் அது கைகூடவில்லை.
2015 கோடைக்காலத்தில், பிரான்ஸ் மீண்டும் முயற்சி செய்தது. இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரிக்கும் சர்வதேசக் குழுவை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பரில் ஐ.நா. சபை கூடியபோது, இக்குழு கூடிப் பேசியது. இதில், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஐ.நா.வின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஆனால், இஸ்ரேலோ பாலஸ்தீனமோ அதில் பங்கேற்கவில்லை.
அதன்பிறகு, பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் குடியிருப்புகளை ஏற்படுத்திவருவதைக் கண்டித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரவும் ஃபேபியஸ் முயற்சி செய்தார். அதுவும் தோல்வியடைந்தது. கடந்த சில வாரங்களாக, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.
சர்வதேசப் பேச்சுவார்த்தையில் அரபு நாடுகளுக்கும் முக்கியப் பங்கு இருக்க வேண்டும் என்று பாலஸ்தீனம் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இம்முறை அரபு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார் ஃபேபியஸ். தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்!
-பாலஸ்தீன் நியூஸ் நெட்வொர்க்
தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்
source: http://tamil.thehindu.com/opinion/columns/
in top photograph: Palestinian President Mahmoud Abbas (right) and France’s Foreign Minister Laurent Fabius shaking hands following their meeting in Ramallah.