‘சுன்னத் வல்.ஜமாஅத்’ .ஆலிம்களே உங்களைத்தான்!
திருச்சியில் கூடிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு பிறகு சில ‘சுன்னத் ஜமா அத்’ ஆலிம்கள் கொடுக்கும் விளக்கமும், அவர்களின் செயல்பாடுகளும் வினோதமாக இருக்கிறது. சில ஆலிம்களின் விளக்கத்தைப் படிக்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
சென்ற தலைமுறை மக்களைப்போல் கல்வியில் குறைந்தவர்களாக இன்றைய தலைமுறையை கருதிக்கொண்டு விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள். இனி வரப்போகும் ”ஜும்ஆ”க்களெல்லாம் பாழடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
நீங்கள் மதரஸாவில் கற்ற காலத்தில் உங்கள் ஆசிரியப்பெருமக்கள் போதித்தை மட்டுமே உள்வாங்கி அதனை மட்டுமே நீங்கள் போதிக்க வேண்டும் என்று முடிவெடுப்பீர்களானால் இன்றைய சமூகத்துக்கு நீங்கள் ஒருபோதும் வழிகாட்ட முடியாது. காரணம் நீங்கள் கற்கும்போது எந்த இண்டர்நெட் வசதியும் இல்லை, நூல்கள் கூட அதிகமில்லை.
ஆனால் இன்றைய சூழல் அவ்வாறல்ல. பாமரமக்கள்கூட விரும்பினால் மார்க்கத்தை மதரஸாக்களுக்கு போகாமலேயே அறிந்துகொள்ள முடியுமாக இன்றைய முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்லாஹ் இண்டர்நெட் எனும் மகத்தான அருட்கொடையை வழங்கியுள்ளான்.
எனவே அவன் மார்க்க விஷயங்களை அறிந்துகொள்ளும் வழி மிக எளிதாக்கப்பட்டு விட்டது. அதனை இன்னும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை.
மார்க்கத்தை பேண வேண்டும் என்று எண்ணும் இன்றைய தலைமுறையினரிடம் உண்மையின் தேட்டம் அதிகமிருக்கும். அவனது மன ஓட்டத்தை நீங்கள் புரிந்துகொள்ளவும் இல்லை அதற்கான தீணியையும்(பதிலையும்) உங்களால் கொடுக்கப்படவுமில்லை. அதனால் அவனது கேள்விகளுக்கு பதிலைத்தேடி அலையும் சூழலுக்கு அவன் தள்ளப்பட்டு விட்டான்.
அவனது கேள்விகளுக்கு உங்கள் பதில் திருப்தியளிக்கவில்லை. அதன் காரணமாக தனக்கு சரியான பதில் கிடைக்கும் இடத்தை நோக்கி அவன் நாளுக்கு நாள் விரைந்தோடுகிறான். அவனது கேள்விகளுக்கு அவன் மனம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பி.ஜே.யிடம் பதில் இருந்தது. அவர் ஒவ்வொருகூட்டத்தில் பேசும்போது ”நான் சொல்வதை தான் உண்மை என்று உங்களை வற்புறுத்தவில்லை, நீங்களே யோசித்துப்பாருங்கள், உங்களுக்கே புரியும்” என்றுதான் சொல்கிறார். ஆனால் இங்குள்ள ‘சுன்னத் ஜமாஅத்’ ஆலிம்கள் அவ்வாறல்லவே! “நான் சொல்வதுதான், நான் சொல்வதுதான் சரி என்றுதானே கருத்துத்திணிப்பு செய்கிறார்கள்.
‘சுன்னத் ஜமாஅத்’ மவ்லவி சகோதரர்களே! வண்டி வண்டியாக உங்களிடம் உள்ள குறைகளை மறைத்து மக்களை இனியும் மூலைச் சலவை செய்ய முடியும் என்ற உங்கள் நம்பிக்கை உண்மையில் வியக்க வைக்கிறது.
எவருக்கு அவசரக்குடுக்கையாக ‘முர்த்தத்’ பட்டம் கொடுத்து உங்கள் அறியாமையை வெளிப்படுத்தினீர்களோ அதே பட்டத்துக்கு மக்களின் ஈமானுடன் விளையாடும் மவ்லவிகளே பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள் என்பதைத்தான் திருச்சியில் கூடிய கூட்டம் ஓங்கி உறக்க உணர்த்தியது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு உறங்கிக்கொண்டிருப்பீர்கள்? மக்களை மாக்காளாக நினைத்தீர்கள். ஆனால், இன்றைய கல்வி கற்ற சமுதாயம் உங்களை மாக்காளாக துச்சமாக ஒதுக்கி வருகிறது. இன்னும் மவ்லவிமார்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
உறுதியான ஈமானுடன் வாழ இன்றைய மக்கள் உண்மையாக ஆர்வப்படும்போது அறைகுறை ஈமானுடன் வாழ்வதற்குத்தானே வழி சொல்லிக்கொடுக்கிறீர்கள்! நபி வழியைப் பின்பற்ற வேண்டும் என்று இன்றைய தலைமுறை ஆவலுடன், உறுதியுடன் விரும்பும்போது வேப்பங்காய் கசப்பது போன்ற பார்வையுடன் நோக்கும் உங்களை என்னவென்று சொல்வது?
ஒரு வருடத்துக்கு 52 வாரமென்றால் இந்த 52 ஜும்ஆவில் அல்லாஹ்வின் வல்லமையைப்பற்றியும் அவனது அருட்கொடையைப் பற்றியும், ஈமானை வலுப்படுத்தும் விதமாக தங்களது பயானை ஒவ்வொரு இமாமும் எத்தனை வாரம் ஒதுக்கினீர்கள்? தர்ஹாவைத் தூக்கிப்பிடிக்கும் ஆலிம்கள் தர்ஹா வழிபாட்டைப்பற்றித்தான் சலித்துப்போகும் அளவுக்கு பயான் செய்து ஈமானுக்கு வேட்டு வைப்பார்கள். அல்லது பெரும்பாலும் தவ்ஹீத் ஜமாஅத்தை சாடி, சபித்து பயான்(!!!) பண்ணுவார்கள். இதைத்தவிர்த்து வேறு எந்த ஞானமும் அவரிடம் இருக்காது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?
‘சுன்னத் ஜமா அத்’துக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் உள்ள மிகப்பெரும் வேற்பாடு, அவர்கள்(த,ஜ.) கருத்தை சொல்கிறார்கள், திணிப்பதில்லை. ஆனால் நீங்களோ(சு.ஜ.) உங்கள் கருத்தை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறீர்கள். அவர்கள்(த,ஜ.) இஸ்லாத்தை மார்க்கமாகப் பார்க்கிறார்கள் நீங்கள் (சு.ஜ.) மதமாக மட்டுமே பார்க்கிறீகள். அதனால் மதத்தை திணிப்பதில் குறியாக இருக்கிறீர்கள். அவர்களுடைய பள்ளிக்கு சென்று நீங்கள் எந்த முறையில் தொழுதாலும் அவர்கள் தடுப்பதில்லை. ஆனால் இங்கு அப்படியா…? தொழுகையாளியின் தொழுகைக்கும் கட்டுப்பாடு வைத்து சில விளக்கமில்லா பேர்வழிகள் நாற்றமுடைய பிளாஸ்டிக் தொப்பியை தொழுகையாளியின் தலையில் கவிழ்த்து அவனது தொழுகையையே சீர் குலைக்கும் செயலையும் செய்கிறீர்கள். நான் பொதுவாக தொப்பியுடன் தலைப்பாகை அணிந்து தொழுவது தான் வழக்கம். சில சமயம் தொப்பி அணிந்தும், சில சமயம் தொப்பி அணியாமலும் கூடத் தொழுவேன். இது அவரவர் இஷ்டம். இஸ்லாம் இந்த விஷயத்தில் முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. மார்க்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை பறிப்பதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. வரம்பு மீறுகின்றவர்கள் நாளை தீர்ப்புநாளில் பல வழக்குகளை சந்திப்பதற்கு தயாராகிக்கொள்ளுங்கள்.
இந்த வரம்பு மீறலை எடுத்துச்சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்! அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எந்த (சு.ஜ.)மவ்லவியிடமும் இல்லையென்பதே இன்றை முஸ்லிம்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கிச் செல்வதற்கான முக்கிய காரணம்.
பி.ஜே. சில ஹதீஸை மறுக்கிறார் என்று சொல்லி அவரை இஸ்லாத்தை விட்டு கொஞ்சம் கூட ‘ஹிக்மத்’ இல்லாமல் வெளியேற்றிவிட்டு அவரைப்பற்றி விமர்சனம் செய்வதற்கு துளியும் தகுதியற்றவர்களாக ஆனபிறகு, இப்போது திருச்சியில் கூடிய கூட்டத்தின் எண்ணிக்கையை கண்டு மிரண்டு போய் மக்களை திசை திருப்பும் வேலையைத்தானே மிச்சமுள்ள வாழ்நாளில் பல மவ்லவிகள் செய்யப்போகிறார்கள். அதுவும் பல மூத்த மவ்லவிமார்களின் வற்புறுத்தலால் இளம் மவ்லவிகள்கூட வேறுவழியின்றி தர்ஹா புகழ்பாடும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஏன் நீங்கள் ஹதீஸை மறுக்கவில்லையா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லை உதாசீனப்படுத்தவில்லையா?
ஹனஃபி மத்ஹபின் பிரகாரம் ஜனாஸா தொழுகையின் முதல் தக்பீருக்குப்பின் சூரத்துல் ஃபாதிஹாவான “அல்ஹம்து…” சூராவை ஓதவேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்க வரட்டுப்பிடிவாதம் கொண்டு அல்லாஹ்வின் தூதரின் சொல்லை குப்பையில் கிடாசிவிட்டு இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொன்ன ஃதனாவைத்தான் ஓத வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்களே! அதற்காக மக்களெல்லாம் சேர்ந்து உங்களுக்கு ”முர்த்தத்” பட்டம் கொடுத்தார்களா? கொடுக்க மாட்டார்கள்! காரணம், அவர்கள் ஆலிம்களுக்கு கொடுக்கும் மதிப்பு அது. ஆனால் மக்களுக்கு அந்த மதிப்பை நீங்கள் அளிக்கத்தவறியதன் விளைவு… அதாவது இவர்கள் மார்க்கம் கல்லாதவர்கள், நாம் சொல்வதைத்தான் கேட்டே தீர வேண்டும் என்ற வரட்டுப்பிடிவாதத்தால் இன்றைய ஆலிம் சமூகம் நாளுக்குநாள் கட்டெறும்பாக தேய்ந்து போய்க்கொண்டிருக்கிறது.
இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அந்த சட்டத்தை வகுக்கும் காலத்தில் அவர்களுக்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எல்லா ஹதீஸும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அதானால் தானே அவர்கள் சொன்னார்கள், “என் அறிவுக்கு எட்டியவரை சட்டத்தை வகுத்துத்தந்துள்ளேன், இதற்கு மாற்றமாக ஹதீஸை நீங்கள் பார்த்தால் அந்த ஹதீஸைத்தான் பின்பற்ற வேண்டும், என்னைப் பின்பற்றுவது ஹராம்” என்று! கற்றரிந்த உங்களுக்கு ஏன் இமாம் அபு ஹனீஃபாவின் இந்த எச்சரிக்கை விளையாட்டாகப்போனது?
அதுவும் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “சூரத்துல் ஃபாதிஹா ஓதப்படாத தொழுகை தொழுகையே அல்ல என்றார்களே!” இதற்கு ஆலிம்களிடம் விளக்கம் கேட்டால் “ஜனாஸாத் தொழுகை என்பது தொழுகையே அல்ல, அது ஒரு துஆ” என்று பதில் வருகிறது. சரி அது துஆ என்றால் அது முடிந்தவுடன் எதற்கு மறுபடியும் துஆ? இது கூட இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொன்னதல்லவே! உங்களிஷ்டத்துக்கு மார்க்கத்தில் புகுந்து விளையாடவேண்டியது! விளக்கம் கேட்டால் திட்டுவது, சபிப்பது.. அறிஞர்களுக்கழகா இது? மக்கள் எவ்வாறு உங்களை நம்புவார்கள்?
சில தினங்களுக்கு முன் கவிக்கோ அப்துர்ரஹ்மான் ‘தி இந்து’ நாளிதழில் இறைவன் மறுமையில் நாத்திகனுக்கு சொர்க்கமும், ஆத்திகனுக்கு நரகமும் கொடுப்பான் என்று அல்லாஹ்வின் திருவேதத்துக்கு முற்றிலும் முரண்பாடான கருத்தை பதிவு செய்தாரே (அப்படி எழுதினால் தானே தி இந்து நாளிதழில் வெளியிடுவார்கள்!) அவரை ஏன் ‘முர்தத்’ ஆக்கவில்லை. ஒரு முஃமின் வான் மூட்டுமளவுக்கு பாவம் செய்தாலும் அவன் இணை வைக்காமல் மரணித்தால் அவனுக்கு நிச்சயம் சொர்க்கம் உண்டு எனும் இஸ்லாமிய கொள்கைக்கு நேர் மாற்றமாக இறை மறுப்பாளனுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று அப்துர்ரஹ்மான் எனும் பெயரைத்தாங்கி ஒர் ஹராமான கருத்தை உலகாதாயத்துக்காக திணிக்கறாரே, அவரை நோக்கி ஏன் உங்கள் சாட்டை சுழலவில்லை. கவிக்கோ எனும் பெயரை மட்டும் பயன்படுத்தி அவர் எழுதியிருந்தால் யாரோ என்று விட்டுவிடலாம். ஆனால் அப்துர்ரஹ்மான் (அருளாலனின் அடிமை) எனும் பெயருடன் இதுபோன்ற தவறான கருத்தை புகுத்துவதை கண்டும் காணாமல் இருந்தால் எப்படி?
மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறீர்கள். அவர்களோ ‘அது’ நாங்களல்ல நீங்கள் தான் என்று திருப்பி அடிக்கும் காலமாக இன்றைய காலம் உருவெடுத்திருக்கிறது. அதற்குக்காரணம் யார்? நீங்களா அவர்களா? மக்களை சிந்திக்க விடாமல் மிரட்டி, பயமுறுத்தி நாங்கள்தான் மார்க்கத்திற்கு முழு அத்தாரிட்டீ என்று சொல்லி வந்த காலம் மலையேறிவிட்டது சகோதரர்களே! இன்றைய தலைமுறை மக்களின், கல்வி ஞானத்துக்கு ஈடுகொடுத்து பதிலளிக்கத் தெரியாமல் மார்க்கமறியா நிர்வாகத்துக்கு அடிபணிந்து மக்களைத்தூண்டி ஜும்ஆவை நாசப்படுத்தும் வேலையைத்தானே தொடர்ந்து செய்து வருகிறீர்கள்!
மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு ஊரில் நேற்றைய ஜும்ஆ பயான் என்ன தெரியுமா? “எவரெல்லாம் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்குப் போனார்களோ அவர்களையெல்லாம் ஊர் நீக்கம் செய்ய வேண்டும்” என்று பேசி இருக்கிறார் அந்த இமாம். வெளியூரிலிருந்து வந்து உள்ளூர்க்காரர்களை ஊர் நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒப்பாரி வைக்கும் இவரைப்போன்ற மவ்லவிகளால் சமுதாயத்துக்கு துளியும் நன்மை விளையப் போவதில்லை.
ஒரு விஷயம் அவருக்குத் தெரியாது… அந்த “ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு அந்த ஊரின் சில நாட்டாண்மைகளே வந்திருந்தனர் என்பது! அவர்களின் பெயரைக்கொடுத்தால் அவர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களை ஊர்நீக்கம் செய்ய வேண்டும் என்று அடுத்த ஜும்ஆவில் பேசுவாரா?
இது ஒருபுறமிருக்கட்டும், மதுபானம் அருந்துகின்றவர்களை, விபச்சாரம் செய்கின்றவர்களை சூதாட்டம் ஆடுகின்றவர்களை, வட்டிவாங்குகின்றவர்களை ஊரை விட்டு தள்ளி வைய்யுங்கள் என்று சொல்ல துணிவுண்டா? அவர் உண்மையிலேயே அவர் கற்ற கல்விக்கு தகுதிபடைத்தவராக இருந்தால் இதை பேச வேண்டும், பேசியிருக்க வேண்டும். ஆனால், யாரை ஊர் நீக்கம் செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளை தூண்டிவிடுகின்றார், ஏகத்துவதை முழுமையாக பற்றிப்பிடுத்து லாஇலாஹ இல்லல்லாஹ் (இறைவன் யாருமில்லை அல்லாஹ்வைத்தவிர) கலிமாவை வானுயர ஓங்கியொலிக்கச்செய்து வானவர்களைக்கூட, ஏன் அகிலத்தையும் படைத்த ரப்புல் ஆல்மீன் அல்லாஹ்வையும் சந்தோஷக்கடலில் ஆழ்த்திய கூட்டத்துக்கு சென்றவர்களை ஊர் நீக்கம் செய்ய வேண்டும் என்று சொல்வாரானால் இவர் யார்? எந்த கொள்கையில் இருக்கிறார். இவர் முஸ்லிம்தானா? அவர் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து கொள்ளட்டும் இல்லையெனில் தன்னை நாடிவரும் அடியானை ஊரை விட்டு விளக்க வேண்டும் என்று ஒப்பாரி வைக்கும் அவரை அல்லாஹ் உலகைவிட்டே விரைந்து விலக்கமாட்டான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வாய்க்கு வந்தபடி பேசுவதை ஆலிம்கள் முதலில் நிறுத்துங்கள். இவரைப்போன்றவர்களுக்கு நிர்வாகம் வாய்ப்பூட்டு போடவில்லையென்றால் அல்லாஹ்வின் சோதனை இறங்கினால் அதனால் நஷ்டமடையப்போவது அந்தந்த ஊர் மக்களும்தான்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் வேகமான வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தர்ஹாவாதிகளை ‘சுன்னத் ஜமா அத்தாக’ அங்கீகரித்ததுதான். இன்றைக்கு சுன்னத் ஜமாஅத்தில் இருப்பவர்களெல்லாம் தர்ஹாவாதிகள் மட்டுமே எனும் கருத்து நாளுக்குநாள் வலுப்படும்போது ‘தப்லீக் ஜமாஅத்’தார்கள்கூட உங்களைவிட்டு விலகும் சூழல் ஏற்படும் என்பதே உண்மை. உங்கள் முதுகில் வண்டி வண்டியாக அழுக்கை பாதுகாத்து வைத்திருக்கும் நீங்கள் மற்றவர்களின் முதுகில் உள்ள அழுக்கைப்பற்றி கவலைப்படுவானேன்!
பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் சில ஆயிரக்கணக்கில் கூடிய ‘ஜமாஅத்துல் உலமா’வின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தபோது அடிதடி நடக்காத குறையாக நடந்து முடிந்ததை எண்ணிப்பாருங்கள். மார்க்கம் கற்ற சமுதாயமான உங்களால் சொற்ப எண்ணிக்கையிலுள்ள நபர்களைக்கொண்டு ஒரு கூட்டத்தை நடத்த முடியவில்லை, ஆனால் இங்கு திருச்சியிலோ லட்சக்கணக்கான மக்கள் அதுவும் பாதிக்குப்பாதி பெண்கள் கூடிய அப்பெருவெள்ளத்தில் (பார்வையாளனாக நான் சென்றிருந்தேன்) ஒரு சிறு அசம்பாவிதமோ, கலாட்டவோ, நடைபெறாமல் மிகக்கட்டுக்கோப்பாக அத்தனை காவல் துறை அதிகாரிகள் மட்டுமல்ல மாற்றுமத சகோதரர்கள் கூட அதிசயித்துப்பார்த்தார்களே… அதிலும் ஒரு மாற்றுமத சகோதரர் கூட்டத்தைப்பார்த்து மிரண்டுபோய் “நிச்சயமாக இவர்களுக்கு மனித சக்திக்கு அப்பார்ப்பட்டு ஏதோ ஒரு சக்தி உதவி புரிகிறது” என்று தன் முகநூலில் பதிவு செய்திருக்கிறாரே… அவருக்கு இருக்கும் தெளிவுகூட உங்கள் ஆலிம் சமுதாயத்துக்கு இல்லாமல் போனது ஏன்?
மக்கள் வெள்ளத்தில் நடந்த கூட்டம் என்றுதான் அதனை வர்ணிக்க முடியும். அந்த மாபெரும் திடலில் பார்வை எட்டிய தூரம் வரை மக்கள் தான்.
அல்லாஹ்வை சந்தோஷத்தில் ஆழ்த்திய கூட்டம் என்று மேலே பதிவு செய்துள்ளதற்கு முக்கிய காரணம், நிச்சயமாக அல்லாஹ்வின் உதவியில்லாமல் இப்படியொரு கூட்டம் இவ்வளவு கட்டுக்கோப்பாக நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதே எனது கருத்து. உங்கள் கருத்து வேறாக இருந்தால் அது உங்களிஷ்டம். அதில் நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லை.
இஸ்லாம் கூறாத, வலியுறுத்தாத சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும்’ வலிந்து புகுத்தப்பட்டிருப்பது உங்கள் வருவாய்க்காக மட்டுமே என்பதை மக்கள் எப்பொழுதோ புரிந்துகொண்டு விட்டார்கள். அது புரியாமல் மக்களின் சுதந்திரத்தில் கை வைக்க முயலாதீர்கள். அது உங்களை நிலைகுலையச் செய்துவிடும். நீங்கள் ஏமாற்றுவதற்கு இது கல்லாத சமுதாயமல்ல, கற்ற சமுதாயம்.
ஜமா அத்துல் உலமாவின் முன்னால் தலைவராக, நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் முதல்வராகவும் பெரிய பள்ளிவாசலின் இமாமாகவும் பல்லாண்டு சேவை புரிந்த S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்கள் தர்ஹாவுக்குச் செல்வதற்கு 144 தடை போட்டு ஊர் மக்களை நேர்வழியின்பால் வழிநடத்திய காலம் போய் இன்று தலைகீழ் நிலையில் சில ஆலிம்களால் வலுக்கட்டாயமாக தர்ஹா கொள்கை திணிக்கப்பட்டு மக்களை வழிகேட்டின் பக்கம் இழுத்து செல்லும் சூழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
ஜியாரத் ஜியாரத் என்று கதறுகின்றீர்களே… ஏன் உங்கள் ஊரிலுள்ள மய்யித் கொள்ளையில் உங்கள் மூதாதையர்கள், குடும்பத்தார்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கவில்லையா? அவர்களை ஜியாரத் செய்தால் மறுமை நினைவு வராதா? தர்ஹாவில் போய் நின்றால் தான் மறுமை நினைவு வருமா? தர்ஹாவில் கந்தூரி நேரத்தில் நடக்கும் கூத்துக்களைப்பற்றி உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் கண்டித்திருக்கிறீர்களா? நீங்கள் வேண்டுமானால் அல்லாஹ்வை முழுமையாக நம்பாமல் தர்ஹாவை நம்பி வழிகெட்டுப்போங்கள். ஏன் ஈமானுடன் வாழவேண்டும் என்று விரும்பும் அப்பாவி மக்களை – அப்பாவி மக்களை – அப்பாவி மக்களை ஏமாற்றிப்பிழைக்கிறீர்கள்.
இன்று ஏகத்துவத்தை எதிர்க்க காஃபிர்களுடன் கைகோர்த்து அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகி அவர்களையும் பாராட்டி மடல் வேறு…! ஸுப்ஹானல்லாஹ், இதைவிட வழிகேடு வேறென்ன வேண்டும்? அல்லாஹ் உங்களை காஃபிர்களிடம் கையேந்தும்படி கேவலப்படுத்திவிட்டான் என்பதைக்கூட இன்னும் புரியாதவர்களாக இருக்கிறீர்களே! எப்போது விழிப்புணர்வு பெறப்போகிறீர்கள்?
இறுதியாக ஒன்றை சொல்லி முடிக்கின்றேன். எந்த ஆலிமாக இருந்தாலும் சரி மார்க்கத்தை எடுத்துச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். திணிக்காதீர்கள். அதற்கான உரிமை உங்களுக்கில்லை. ஹலால் ஹராம் மக்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் உண்டுதானே!
அல்லாஹ் ஆலிம் சமூகத்துக்கு பொறுமையை கொடுப்பானாக, தெளிவைக்கொடுப்பானாக, நேர்வழி காட்டுவானாக.
-எம்.ஏ.முஹம்மது அலீ