மனிதனது வெற்றிகள் சாதனைகளால் அளவிடப்படுவதில்லை!
சனோபர் நிஷா
மனிதர்களுக்கு இறைவன் பிரச்சினைகளைத் தருவது ஐந்து காரணங்களுக்காக!
சந்திக்கும் பிரச்சினைகளை மனிதன் எதிர் கொள்தல் பொறுத்து வெற்றி, தோல்வி அமைகின்றன!
இறைவன் பிரச்சினைகள் மூலமாக நல்லது செய்ய முற்பட்டாலும், துரதிருஷ்டவசமாக, மனிதர்கள் அவற்றை தீயவையாகக் கருதி தோல்விக்குத் தம்மைத் தள்ளிக் கொள்கின்றனர். அறிவிலித்தனத்துடன் செயல்பட்டு ஆத்திரம் கொள்கின்றனர்.
மனிதனுக்கு வழிகாட்டுவதற்காக இறைவன் தரும் பிரச்சினைகள்!
மனிதனுக்குக் கீழ் நெருப்பை மூட்டினால், அவ்விடத்தை விட்டும் அவனை அகற்றுவதற்கானது. பிரச்சினைகள் மூலம் புது வழி காட்டுவது, மாற்றத்தை நோக்கி நகர்த்தும் ஊக்குவித்தலுக்கானது. சில சமயங்களில் கடுமையான நிலைக்குத் தள்ளுவதும், பாதையை மாற்றி நல்வழியில் செலுத்துவதற்கே!
மனிதனது நிலையை ஆய்வு செய்வதற்காக இறைவன் தரும் பிரச்சினைகள்!
தேயிலைத் தூள் நிரப்பி தைக்கப்பட்ட சிறிய பைகள் போன்றவர்கள் மக்கள்! டீத்தூள் சிப் குறித்து அறிவதற்கு அதனை வெந்நீருக்குள்ளே விட்டு எடுத்தால் தான் தெரிய முடியும். அது போன்று, மனிதனது நம்பிக்கையினை இறைவன் பிரச்சினைகள் வழியாகச் சோதித்து அறிகின்றான். அதன் வழியில் நல் இரகசியங்களையும் வெளிப்படுத்துகின்றான்.
வாழ்க்கையில் அமைதியின்மையை பல வழிகளில் சந்திக்க நேர்ந்தாலும், சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இறைவன் மனிதனது ஈமான் எண்ணங்களைச் சோதிப்பதற்காக ஏற்படுத்துவது. உவப்புடன் எதிர்கொள்வோருக்கு அமைதி, பொறுமையினை அளிக்கின்றான்.
மனிதனை நேர்ப்படுத்துவதற்காக இறைவன் தரும் பிரச்சினைகள்!
மனிதன் தன் வாழ்வில் பாடங்களை, இயல்பான தோல்வி மற்றும் கடின வழியினை அடைந்த பிறகு கற்கிறான். சூடான ஒரு பொருள்; அதனைத் தொடதே எனக் குழந்தைகளுக்கு அறிவுறுத்தினாலும், தொட்டு அனுபவித்த பிறகு தான் உணர்கின்றது. அது போன்ற நிலைதான் மனிதனுடையது. பணம், உடல் நலம், உறவு மூன்றையும், இழந்த பிறகு தான் அதன் மதிப்பை மனிதன் உணர்கின்றான்.
மனிதனைப் பாதுகாப்பதற்காக இறைவன் தரும் பிரச்சினைகள்!
பிரச்சினை தரப்படுவது, வேறொரு பிரச்சினையிலிருந்து மனிதனைக் காப்பதற்காக. கடந்த வருடம் ஒரு தொழிலாளியை அவரது முதலாளி நியாயமற்ற ஒரு செயலைச் செய்யுமாறு கூற, தொழிலாளி மறுத்துவிடுகின்றார். அத்தொழிலாளியை வேலையை விட்டும் முதலாளி நீக்கி விடுகின்றார். தொழிலாளிக்கு வேலையில்லை. அடுத்த ஆண்டு அந்த நிர்வாகம், தொழிலாளி செய்ய மறுத்த நியாயமற்ற செயலைச் செய்து சிறைக்குச் செல்கின்றது. தொழிலாளியை வேலையை விட்டும் நீக்க வைத்து பிரச்சினை ஏற்படுத்தி வேறு ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொள்வதிலிருந்தும் இறைவன் காப்பாற்றியிருக்கிறான் என்பதை இதன் மூலம் உணரலாம்!
மனிதனைப் பூரணப்படுத்துவதற்காக இறைவன் தரும் பிரச்சினைகள்!
பிரச்சினைகளை நேரிய வழியில் எதிர்கொள்தலே நற்குணத்தை வளர்க்கும். மனிதனுக்கு ஆறுதல் அளிப்பதை விடவும், மனிதனது குணத்தின் மீது தான் இறைவனுக்கு ஆர்வம் அதிகம். காரணம்; இறைவன் மீது மனிதன் கொண்டிருந்த நேசம், மனிதனது ரூஹ§ இரண்டு மட்டுமே அவனுடன் அவ்வுலகம் நோக்கிக் பயணிக்கக் கூடியது.
பிரச்சினைகளை மனிதன் சந்தோஷமுடன் ஏற்றுக் கொண்டால் அவனுக்குள் அமைதியை அது கற்றுத்தரும். அந்த அமைதியே வலுவான குணத்தையும் இறைவன் மீதான அதீத நம்பிக்கையினையும் உருவாக்கும். எப்போது நிகழுமெனில், வலுவான, நிலையான நம்பிக்கையினை இறை மீது வைக்கும் போது நிகழும்.
மனிதனுடைய வாழ்க்கையில் இறைவன் பணியாற்றிக் கொண்டே இருக்கிறான். இறைவனைப் புரிந்து கொண்டோர், அடையாளம் கண்டோர் அவனோடு ஒத்துழைத்து பயணிப்போர் இலாபம் அடைகின்றனர்.
மனிதனது வெற்றிகள் அவனது சாதனைகளால் அளவிடப்படுவதில்லை. அவன் வாழ்வில் கற்றுக்கொண்ட பாடங்களால், சந்திப்புத் தருணங்களால் அளவிடப்படுகின்றன. (ஆப்பிரிக்கா கட்டுரை மொழிமாற்றப்பட்டுள்ளது.)
-முஸ்லிம் முரசு ஏப்ரல் 2015