இஸ்லாம் வகுத்த அரசியல் இலக்கணம்
மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி
முதலில் ‘அரசியல்’ என்றால் என்ன என ஆய்வோம். ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்தான் அரசு இயல் (Politics) எனப்படுகிறது.
அரசின் அமைப்பு, குடிமக்களின் உரிமை, அரசின் கடமை, அதிகாரம் முதலியவற்றை வரையறுக்கும் அடிப்படை சட்டமே (Constitution) அரசியல் சாசனம், அல்லது அரசியல் சட்டம் எனப்படுகிறது.
மனிதர்கள் ஒரு பத்துப்பேர் சேர்ந்து வாழ ஆரம்பித்த நாளிலேயே அரசியலுக்கும் வாழ்வு வந்துவிட்டது என்பதுதான் எதார்த்தம்.
பதின்மரில் ஒருவர் மூத்தவர் (தலைவர்); அவரது வழிகாட்டலின் பேரில் செயல்பட இருவர், அல்லது மூவர் (அமைச்சர்கள்). சிறார்கள் அந்த இடத்தில் வாழ்ந்து வளர வேண்டியவர்கள் (குடிமக்கள்). ஆயினும், ‘தத்துவம்’ (Philosopy), அல்லது ‘கோட்பாடு’ (Theory) என்ற தகுதி அடிப்படையில் பார்த்தால், மனிதன் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகே அரசியல் எனும் தத்துவம் உருப்பெற்றது.
அரசு மற்றும் அதோடு தொடர்புடைய கோட்பாடுகளான அரசியல் கடமை, அரசியல் சட்டம், சமூக நீதி, அரசியல் அமைப்பு போன்றவற்றை ஆராயும் துறையாக அரசியல் தத்துவம் பரிணமித்தது, மிகவும் பின்னால்தான்.
கிரேக்க தத்துவ அறிஞர் பிளேட்டோ (கி.மு. 428-347) எழுதிய ரிபப்ளிக் (குடியரசு) எனும் நூலும், அவருடைய மாணவரும் கிரேக்கத் தத்துவ அறிஞருமான அரிஸ்டாட்டில் (384-322) எழுதிய ‘பாலிடிக்ஸ்’ (அரசியல்) எனும் நூலும்தான் அரசியல் தத்துவத்தில் எழுதப்பட்ட ஆரம்ப வழிகாட்டிகள் என்பர்.
இதே அரசியல், ‘அறிவியல்’ எனும் அந்தஸ்தை அடைந்தது 19ஆம் நூற்றாண்டில்தான் என்கிறார்கள். பலவிதமான சமூக அறிவியல் பிரிவுகள் உருவாகத் தொடங்கிய 19ஆம் நூற்றாண்டுவரை, ‘அரசியல் அறிவியல்’ எனும் நவீனத்துறை உருவாகியிருக்கவில்லை.
அரசியல் கட்சிகள் நவீன வடிவத்தில் 19ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தோன்றினவாம்! உண்மையில் அரசியலும் அரசியல் சாசனமும் 6ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக நடைமுறையும் படுத்தப்பட்டு, உலகின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்த பெருமை இஸ்லாமிய அரசியலுக்கு உண்டு.
அதை இறைவனின் ஆணையின்பேரில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கி, அன்றைய நவீன அரசாட்சி முறையை உலகுக்கு எடுத்திக்காட்டினார்கள். இதனாலேயே, நவீன வரலாற்று ஆய்வாளர் மைக்கேல் H. ஹார்ட் தமது ‘THE 100’ (நூறுபேர்) எனும் நூலில் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதலிடம் அளித்தார்.
அதற்கு அவர் சொன்ன அறிவுபூர்வமான காரணம் கவனத்திற்குரியது.
ஹார்ட் சொன்னார்: நூறு உலகத் தலைவர்களில் முதலாமவர் முஹம்மத். ஏனெனில், சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒருசேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் அவர் ஒருவரே. அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றின் தலைவர்; பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவர்.
சமயமும் அரசியலும்
சமயத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்றே பலரும் கருதுகின்றனர். இக்கருத்து முதன்முதலில் ஐரோப்பியக் கிறித்தவ நாடுகளில்தான் தோன்றியது. அங்கே கிறித்தவ திருச்சபைகள் மக்களின் எல்லா நடவடிக்கைகளிலும் ஆதிக்கம் செலுத்திவந்தன; போப்புகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப அதிகாரம் செலுத்திவந்தனர்; தாங்கள் விரும்பக்கூடியவர்களுக்கு மட்டும் பாவமன்னிப்புப் பத்திரம் வழங்கிவந்தனர்.
திருச்சபைகளின் எல்லைமீறிய போக்கைக் கண்டு வெகுண்டெழுந்த முற்போக்குவாதிகள் சிலர், போப்புகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினர். பணத்துக்குச் சொர்க்கத்தையே விலைபேசும் பாதிரிமார்களின் போக்கால் மதத்தின் மீதே வெறுப்பு கொண்ட அவர்கள், அரசியலுக்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை எனப் பிரகடப்படுத்தினர்.
இவ்வாதத்திற்கு ஆதாரமாக, ‘‘சீசருக்கு வழங்க வேண்டியதை சீசருக்கும் கர்த்தருக்கு வழங்க வேண்டியதைக் கர்த்தருக்கும் வழங்கிவிடுங்கள்’’ என்ற பைபிளின் கருத்தை மேற்கோள் காட்டிப் பரப்புரை செய்தனர்; சீசருக்கும் (அரசருக்கும்) கர்த்தருக்கும் (கடவுளுக்கும்) பிரிவினையை உருவாக்கிய அவர்கள் மதத்திலிருந்து அரசியலை வெளியேற்றிவிட்டனர். இஸ்லாத்தில் இப்பிரிவினைக்கு இடமே இல்லை. ஏனெனில், எவராலும் பணத்திற்குப் பதிலாகச் சொர்க்கத்தை விற்க முடியாது.
ஓரிறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் பாவிகளின் பாவத்தை மன்னிக்க இயலாது. இதில் இஸ்லாம் மிகவும் தெளிவாக இருக்கிறது. எனவே, கிறித்தவ மதத்தில் ஏற்பட்டுவிட்ட இழுபறி நிலை இஸ்லாத்தில் கிடையாது. ஆதலால், அரசியலும் மார்க்கத்தின் பிரிக்க முடியாத ஓர் அங்கம்தான்; அரசியல் மார்க்கத்தின் வழிகாட்டலின் பேரிலேயே அமைய வேண்டிய ஒரு துறைதான் எனும் தத்துவத்தை முதலில் புரிந்துகொள்வது நல்லது. இஸ்லாமும் அரசியலும் இஸ்லாத்தைப் பொறுத்தவரை, அது மற்றத் துறைகளுக்கு வழிகாட்டியிருப்பதைப் போன்றே, இம்மை வாழ்வின் அச்சாணியாக விளங்கும் அரசியல் துறைக்கும் நல்வழி காட்டியுள்ளது.
அரசியல் அதிகாரத்தின் அவசியத்தை உணர்ந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்த அதிகார சக்தியைத் தமக்கு வழங்குமாறு இறையிடம் பிரார்த்தித்தும் உள்ளார்கள். மக்கா இறைமறுப்பாளர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொல்வதற்குத் திட்டமிட்டபோது, மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து சென்றுவிடுமாறு இறைவன் ஆணையிட்டான்.
அப்போது இந்த வேண்டுதலைச் செய்யுமாறு அவன் தன் பிரியமான தூதருக்கு ஆணையிட்டான்: ‘‘என் இறைவா! என்னைத் திருப்தியான முறையில் நுழையச்செய்வாயாக! என்னைத் திருப்தியான முறையில் வெளியேறச்செய்வாயாக! உன்னிடமிருந்து எனக்கு உதவும் ஒரு சக்தியை வழங்கிடுவாயாக! (அல்குர்ஆன் 17:80)
திருமறை விரிவுரையாளர் கத்தாதா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது ஓரிறை அழைப்புப் பணியில் ஆட்சியதிகாரத்தின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாது என்பதை அறிந்திருந்தார்கள். எனவே, இறைமார்க்கத்தை நிலைநாட்டுவதற்குத் துணைபுரியும் ஒரு சக்தியை -அதாவது ஆட்சி அதிகாரத்தைத்- தமக்கு வழங்குமாறு இறையிடம் வேண்டினார்கள். ஆட்சியதிகாரம் என்பது, இறைவனின் அருட்கொடையாகும். அது இல்லை என்றால், மனிதர்களில் சிலர் வேறுசிலரைத் தாக்கி அழிப்பார்கள்; வலிமை மிக்கவன் பலவீனமானவனை விழுங்கிவிடுவான்.
கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், குர்ஆன் மூலம் தடுக்காத பல காரியங்களை, அதிகாரத்தின் மூலம் தடுக்கின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர்) ஆட்சியதிகாரம் என்பது, இத்துணை பெரும் வீரியம் மிக்கது என்பதாலேயே அல்லாஹ் தன் திருமறையில் நல்லடியார்களுக்குச் சில வாக்குறுதிகளை வழங்குகின்றான்.
‘‘உங்களில் இறைநம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்தோருக்கு அல்லாஹ் (சில) வாக்குறுதிகளை அளித்துள்ளான்; அவர்களுக்கு முன்பு இருந்தவர்களை இப்பூமியில் அதிகாரம் உள்ளவர்களாய் அவன் ஆக்கியதைப் போன்று, இவர்களையும் அதிகாரம் உள்ளவர்களாய் நிச்சயமாக ஆக்குவான். அவர்களுக்காகத் தான் உவந்துகொண்ட அவர்களின் மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக அவன் நிலை நிறுத்துவான்; அவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்திற்குப் பின்னர் அமைதியை மாற்றாக அவர்களுக்கு அவன் நிச்சயமாக வழங்குவான். (அல்குர்ஆன் 24:55)
கவனிக்க வேண்டிய வாக்குறுதிகள். நாம் செய்ய வேண்டியது இரண்டு. ஒன்று, அல்லாஹ்வின் மீது அசையாத நம்பிக்கை கொள்ள வேண்டும். இரண்டு, நல்லறங்கள் புரிய வேண்டும். தீமைகளைக் கைவிடுவதும் ஒரு நல்லறம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. இதற்குப் பிரதியாக அல்லாஹ் நமக்கு அளிப்பது முப்பெரும் பரிசுகளாகும்.
1. நல்லாட்சி புரியும் வாய்ப்பு.
2. அல்லாஹ்வுக்குப் பிரியமான இந்த மார்க்கத்தில் நிலைத்திருப்பது.
3. அச்சத்திற்குப் பின் அமைதி.
மூன்றும் முக்கியமானவை; உயிர்நாடியானவை. அல்லாஹ் இவ்வாக்குறுதிகளை நிறைவேற்றவும் செய்தான். வரலாற்றுச் சான்றுகள் முற்காலத்தில், இறைத்தூதர் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெரும் ஆட்சியாளராக விளங்கினார்கள். அவர்களின் புதல்வர் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேரரசை நிறுவி ஆண்டார்கள்.
யூஷஉ பின் நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தலைமையில் அமாலிக்கர்களை இஸ்ரவேலர்கள் வென்றனர். நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தம் சகோதரர்களின் துரோகத்திற்குப் பின்பு எகிப்தின் ஆட்சியில் அமர்ந்தார்கள். இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே மக்கா, கைபர், பஹ்ரைன் உள்ளிட்ட அரபு தீபகற்பம் முஸ்லிம்களின் கைக்கு வந்துவிட்டது.
பலர் காப்புவரி செலுத்தினர். கிழக்கு ரோமானியப் பேரரசர் ஹிரக்ளீயஸ், எகிப்து ஆட்சித் தலைவர் முகவ்கிஸ், அபிசீனிய மன்னர் நஜாஷீ (நீகஸ்) ஆகியோர் நபியவர்களை மதித்து அன்பளிப்புகளை அனுப்பிவைத்தனர். நபிகளாரின் மறைவுக்குப் பிறகு கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியில் பாரசீகத்தின் சில பகுதிகள், ஷாமின் (சிரியா) டமாஸ்கஸ், புஸ்ரா ஆகிய நகரங்கள் வெற்றிகொள்ளப்பட்டன. கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் எகிப்து, பாரசீகம், கிழக்க ரோம் (பைஸாந்தியா) ஆகியவை வீழ்ந்தன.
பாரசீகப் பேரரசன் குஸ்ரூ (கிஸ்ரா), கிழக்கு ரோமானியப் பேரரசன் சீசர் (கைஸர்) ஆகியோர் அதிகாரத்தை இழந்தனர். கலீஃபா உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் இஸ்லாமியப் பேரரசு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லைவரை விரிவடைந்தது. மேற்கு நாடுகள் அதன் கோடிவரை வெற்றிகொள்ளப்பட்டன.
தெற்கு ஸ்பெயினில் உள்ள அண்டலூசியா (உந்துலுஸ்), சைப்ரஸ் (கப்ரஸ்) ஆகியவை அவற்றில் அடங்கும். மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியுள்ள லிபியாவின் சிரநேயிக்கா (கைரவான்), செப்டர் (தாவூடா) ஆகிய நகரங்களும் கிழக்கில் சீனா எல்லைவரையும் முஸ்லிம்கள் கரத்தில் வந்தன. இராக்கின் பல நகரங்களும் ஈரானின் குராசான், அஹ்வாஸ் ஆகிய நகரங்களும் வெற்றிகொள்ளப்பட்டன.
துருக்கியரின் ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தது. (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்) இவ்வாறு முஸ்லிம்களின் வெற்றி தொடர்ந்தது. இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இஸ்லாம் கால் பதிக்காத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அது அவனியெங்கும் பரவிவிட்டது.
உலக மக்கட்தொகை 690 கோடியாக இருந்த 2010ஆம் ஆண்டில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 161 கோடியாக (23.4%) இருந்தது. இதுவே 2030இல் 219கோடியாக (26.4%) உயரும் என PEW எனும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. அப்போது உலக மக்கட்தொகை 830 கோடியாக இருக்கலாம்.
இஸ்லாமிய ஆட்சிமுறை இன்றைய உலகில் இரண்டு வகையான ஆட்சிமுறைகளே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன.
1. முடியாட்சி (Monarchy). அரசர் அல்லது அரசியால் நடத்தப்படும் ஆட்சி. பிளவுபடாத இறையாண்மை, அல்லது ஒரு நாட்டின் நிரந்தரமான தலைமைப் பொறுப்பை ஏற்ற தனிமனிதரின் ஆட்சி. இது இப்போது பரம்பரை வழியில் ஆட்சியுரிமை கொண்ட அரசுகளைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. அரசர்களின் தெய்வீக உரிமையாக ஆட்சி கருதப்பட்டது.
2. மக்களாட்சி, அல்லது ஜனநாயகம் (Democracy). வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்று நடத்தும் ஆட்சிமுறை; உயர்ந்த அதிகாரம் மக்களிடம் குவிந்திருக்கும் அரசாங்க வடிவம். பொது வாக்களிப்பு, பதவிக்கான போட்டி, பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை இது வலியுறுத்துகிறது.
1. இஸ்லாத்தில், நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஆட்சித் தலைவருக்கு (கலீஃபா) மக்களிடமிருந்தே (உம்மா) அதிகாரம் வழங்கப்படும்; அவர் தம் பணிகளை மக்களின் திருப்தியுடனேயே மேற்கொள்ள வேண்டும். இதுவே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள்; உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள்; அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்; உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள்; அவர்கள் உங்களைச் சபிப்பார்கள். (நூல்: முஸ்லிம்)
தனிமனிதன் தனிமனிதனையோ, மக்கள் மக்களையோ, ஆட்சியாளர்கள் குடிமக்களையோ எந்த வகையிலும் சுரண்டுவதற்கும் தவறாகப் பயன்படுத்துவற்கும் இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.
2. ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் வேறுபடலாம் என்பதால், இஸ்லாம் தேர்வு முறையைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில், ஆட்சியின் (கிலாஃபத்) தலைநகரில் உள்ள அறிவுஜீவிகள் (அஹ்லுஷ் ஷூரா) அளிக்கும் யோசனையின் பேரில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தலைநகர் மக்கள் வந்து அவருக்கு வாக்கு (பைஅத்) அளித்தனர். அதையடுத்து இதர நகரவாசிகள் தங்கள் வாக்குகளை அளித்தனர். எப்படியானாலும் ஆலோசனையாளர்களின் கருத்தைக் கேட்டே ஆட்சித் தலைமைக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3. அடுத்து இஸ்லாமிய ஆட்சியின் சாசனம் திருக்குர்ஆனாகவே இருக்கும். அதுதான இறைமொழி; மாற்றம், திருத்தம், கூடுதல், குறைவு ஆகிய எந்த மாறுதலுக்கும் உட்படாத நிலையான சாசனம்.
4. இஸ்லாமிய ஆட்சி, ஆலோசனை (ஷூரா) அடிப்படையில் அமைய வேண்டும்.
5. அது கிலாஃபத்தாகவும் (அரசியல்) இமாமத்தாகவும் (ஆன்மிகம்) இருக்க வேண்டும். சர்வாதிகார ஆட்சியாகவோ குடும்ப மன்னராட்சியாகவோ கட்டுப்பாடற்ற குடியாட்சியாகவோ அது இருக்காது.
ஆட்சித் தலைவருக்கான இலக்கணம்
1. ஆட்சித் தலைவர் பருவமடைந்த இறைநம்பிக்கையாளராக இருக்க வேண்டும். கல்வி அறிவு, ஆட்சித் தகுதி, நிர்வாகத் திறமை, நேர்மை, உடல் ஆரோக்கியம் முதலான அம்சங்கள் உள்ளவராகவும் அவர் இருக்க வேண்டும்.
2. நீதியும் நேர்மையும் ஆட்சியாளரின் முதல்தரமான குணங்களில் அடங்கும். திருக்குர்ஆனில் இறைவன் ஆணையிடுகின்றான்: உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களை, அவற்றுக்கு உரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் மக்களிடையே நீங்கள் தீர்ப்பு வழங்கும்போது நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். உங்களுக்கு அல்லாஹ் கூறும் இந்த அறிவுரை மிகவும் நல்லதாகும். (அல்குர்ஆன் 4:58)
பதவியும் நம்பி ஒப்படைக்கப்படும் ஒன்றுதான்; தீர்ப்புக்கு வேண்டிய நீதி ஆட்சிக்கும் பொருந்தும். ஒருவரோ ஒரு கூட்டமோ பிடிக்கவில்லை என்பதற்காக நீதி தவறிவிடக் கூடாது.
இதனாலேயே மற்றொரு வசனத்தில், ‘‘ஒரு சமுதாயத்தார்மீது (உங்களுக்கு)ள்ள பகை (அவர்களுக்கு) நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம். (எல்லாரிடமும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிகவும் உகந்ததாகும்’’ (அல்குர்ஆன் 5:8) என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
3. சாமானியரும் நெருங்கும் தூரத்தில் ஆட்சியாளர் இருக்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தேவையும் வறுமையும் இல்லாமையும் உள்ளவர்கள் அணுக முடியாதவாறு தமது வாயிற்கதவை ஓர் ஆட்சியாளர் அடைத்துக்கொள்வாராயின், அவருடைய தேவையின்போதும் இல்லாமையின்போதும் வறுமையின்போதும் (தன்னை) அணுக முடியாதவாறு அல்லாஹ் வானத்தின் வாயில்களை அடைக்காமல் இருக்கமாட்டான். (நூல்: ஷாமிஉத் திர்மிதீ)
4. பகட்டும் படோடாபமும் ஆட்சிக்கு ஆபத்து. பதவி வரும்போதுதான் பணிவு வர வேண்டும்; எளிமை மிளிர வேண்டும். ஆட்சிக்கு மட்டும் அவர் தலைவர் அல்லர்; பண்பாட்டிற்கும் மனித நாகரிகத்திற்கும் தலைவராக, முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
5. தவறு சுட்டிக்காட்டப்படும்போது, குறைகள் விமர்சிக்கப்படும்போது, அது உண்மைதானா என்பதை ஆட்சியாளர் பரிசீலிக்க வேண்டும்; உண்மை என்றால், மனப்பூர்வமாக அதை ஏற்று தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்; குற்றம் சொல்வோரிடம் பகைமை பாராட்டக் கூடாது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அநீதியிழைக்கும் அரசனிடம் உண்மை உரைப்பதுதான் சிறந்த அறப்போராகும். (நூல்கள்: நஸயீ, முஸ்னது அஹ்மத்)
அநீதியிழைக்கப்பட்ட ஒருவன், அதை உரக்கச் சொல்ல உரிமையுண்டு. அந்த அப்பாவி தன் உரிமையைப் பயன்படுத்தும்போது, குரல்வளையை நெறிப்பது சர்வாதிகாரமாகும். திருக்குர்ஆன் கூறுகிறது: அநீதியிழைக்கப்பட்டவர் தவிர வேறு யாரும் தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பமாட்டான். (அல்குர்ஆன் 4:148)
6. சட்டத்திற்குமுன் அனைவரையும் சமமாக நடத்துவது ஆட்சியாளரின் முக்கியப் பொறுப்பாகும். தெரிந்தவனுக்கு ஒரு நீதி; தெரியாதவனுக்கு ஒரு நீதி இருக்கலாகாது. எளியவனுக்கு முன்னால் விரைப்பாக நிற்கும் சட்டம், வலியவனின் கண்சாடைக்கே வளைந்து சாஷ்டாங்கமாக விழக்கூடாது. ‘‘நீங்கள் பேசினால் நியாயமே பேசுங்கள்; உறவினராக இருந்தாலும் சரி’’ (அல்குர்ஆன் 6:152) என்று அல்லாஹ் அறிவுறுத்துகின்றான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்கள்தம் தோழர்களும் ஆட்சிப் பொறுப்பு வகித்தபோது இந்த இறையாணையைச் சிறப்பாகச் செயல்படுத்தினார்கள். இதற்கு வரலாற்றில் நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ‘‘என் அருமை மகள் ஃபாத்திமாவே திருடினாலும் அவரது கரத்தையும் நான் துண்டிப்பேன்’’ என்ற நபிமொழி பிரபலமானது. (நூல்: புகாரீ)
கடமையில் கண்ணும் கருத்தும்
7. ஆட்சியாளர் தம் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும். அதற்கு இயலாதவர், அல்லது மனமில்லாதவர் ஆட்சிக் கட்டிலில் அமரவே கூடாது. மக்கள் நலனைப் புறக்கணிக்கும் ஆட்சியாளன் மாபெரும் பாவி ஆவான்.
‘‘ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்’’ என்பது நபிமொழியாகும். (நூல்: புகாரீ)
பொறுப்பை நிறைவேற்றத் தவறிய ஆட்சியாளனுக்கே இந்தக் கதி என்றால், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சொந்த வளத்தைப் பெருக்கிக்கொள்ளும் ஊழல்வாதிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடுமையான எச்சரிக்கையைப் பாருங்கள்: முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகின்றான். (நூல்: புகாரீ)
8. எல்லாவற்றையும்விட, ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் பதவி ஆசை பிடித்தவராக இருக்கலாகாது. நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் சமுரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், ‘‘அப்துர் ரஹ்மான்! ஆட்சிப் பொறுப்பை கேட்டுப்பெறாதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் அது உங்களுக்கு அளிக்கப்பட்டால், அது தொடர்பாக உங்களுக்கு (இறை) உதவி கிடைக்கும்’’ என்று சொன்னார்கள். (நூல்: முஸ்லிம்)
9. இந்த இலக்கணங்களும் உயர் பண்புகளும் ஆட்சியாளர்களிடம் அமைய வேண்டுமென்றால், அவர்களிடம் ‘இறையச்சம்’ (தக்வா), மறுமை நம்பிக்கை, நபிவழி (சுன்னத்) வாழ்க்கை ஆகியவை இருக்க வேண்டும். அத்தகைய ஆட்சியாளர்களுக்கு இறைவனிடம் உயர் தகுதியும் பெரிய பதவியும் நிச்சயமாகக் கிடைக்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நேர்மையான ஆட்சியாளர்கள், அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளி மேடைகளில் இருப்பார்கள். அவர்கள் தமது நிர்வாகத்திலும் குடும்பத்திலும் தாம் பொறுப்பேற்றுக்கொண்டவற்றிலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்). (நூல்: முஸ்லிம்)
மற்றொரு ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்துள்ளார்கள்: இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமப்படுத்தினால், அவரை நீயும் சிரமப்படுத்துவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்துகொள்வாயாக! (நூல்: முஸ்லிம்)
குடிமக்களின் பொறுப்பு இஸ்லாம் வகுத்த அரசியல் இலக்கணத்தில், நல்ல குடிமக்களுக்கான இலக்கணமும் அடங்கும்.
1. ஆரம்பமாக, அவர்கள் நல்ல ஆட்சியாளர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. அடுத்து நன்மைகளில் மட்டுமே ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பட வேண்டும்; பாவத்தில் கட்டுப்படக் கூடாது.
3. சட்டத்தை -இஸ்லாமிய அரசியல் சாசனத்தை- முஸ்லிம் குடிமக்கள் மதித்து நடக்க வேண்டும்.
4. பொது அமைதி, சட்ட ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது. 5. நாட்டின் வளர்ச்சிக்கும் பொது நன்மைக்கும் உறுதுணையாகச் செயல்பட வேண்டும்.
(கட்டுரையாசிரியர்: அஃப்ஸலுல் உலமா, மௌலவி, அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி (முன்னாள் பேராசிரியர், ஜாமிஆ அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத், வேலூர்)
நன்றி: பாக்கியாத் 150ஆம் ஆண்டு மலர்)
source: http://khanbaqavi.blogspot.in/2014/01/blog-post_10.html