இனவெறிக்கு இஸ்லாத்தில் இடமில்லை
மவ்லவி அ.செய்யது அலி மஸ்லஹி பாஜில்
ஒரு இனத்தின் மீது பற்று வைக்கலாம் அது தவறில்லை. ஒரு இனத்தின் மீது பற்று வைப்பது, இன்னொரு இனத்தின் மீது வெறுப்பை காட்டும் இனவெறியாக மாறிவிடக்கூடாது.
தன் இனத்தின் மீது அன்பு வைப்பது இனப்பற்று. பிற இனத்தின் மீது துவேஷத்தை வெளிப்படுத்துவது இனவெறி. ஒரு துளி அளவுகூட இனவெறி கூடாது.
இனப்பற்றையும், இனவெறியையும் அழகான முறையில் இனம் பிரித்து காட்டுகிறார் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
“அபூபுசைலா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். அண்ணலாரிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?’ எனக் கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘தன் சமூகத்தாரை நேசிப்பது இனவெறி அல்ல! மாறாக தன் சமூகத்தார் அநியாயமான முறையில் செயல்படுவது தெரிந்த பின்பும், ஒருவன் தன் சமூகத்தாருக்கு உதவுவதுதான் இனவெறி’ என இவ்வாறு பதில் கூறினார்கள்” (நூல் அஹ்மது 107)
நன்மையான காரியங்களில் இனத்துக்கு உதவுவது இனப்பற்று. அநியாயமான காரியங்களுக்கு தன் இனத்துக்கு துணை போவதும், உதவுவதும் தான் இனவெறி என்பதை எளிய முறையில் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கம் தருகிறார்கள்.
இனவெறி பல தோற்றத்தில் வெளிப்படுகின்றன. சில நேரங்களில் அது மொழி வெறியாகவும், நிறவெறியாகவும், மதவெறியாகவும், சாதி வெறியாகவும் தலை தூக்கி தாண்டவமாடுகிறது.
இத்தகைய வெறித்தனமான போக்கால், சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்களும் பாதிப்புக்குள்ளாகி விடுகிறார்கள். இனப்பற்றால் தான் சார்ந்திருக்கும் சமூகமும் மேம்படுவதுடன், பிற சமூகமே நிம்மதியாக வாழ வழி வகுக்கிறது. இதனால் சமூக ஐக்கியம், பொருளாதார மேம்பாடு, கலாச்சார பண்பாடு, வளமான நாடு, வலிமையான பாரதம், நம்நாடு வல்லரசாகும் கனவு, மனித வளமேம்பாட்டின் குறியீடு உயர்தல் போன்ற பலவகையான நன்மை பயக்கும் காரியங்கள் நிறைவேறுகின்றன.
இதுவெல்லாம் இனவெறியால் நடப்பதற்கு சாத்தியமில்லை. இனவெறியால் மனித உயிர்கள் பறிக்கப்படுகிறது; மனித மானங்கள் பாழாக்கப்படுகிறது; மனித உடமைகள் சீரழிக்கப்படுகின்றன; மனித உரிமைகள் மீறப்படுகின்றன; மனித நேயமும் மறைந்துவிடுகின்றன.
அவரவர் தான் சார்ந்திருக்கும் மதத்தை பின்பற்றுவதுடன் பிற மதத்தையும் மதித்திட வேண்டும். இதைதான் இஸ்லாம் உலக மக்களிடம் எதிர்பார்க்கிறது.
“அந்நிய மதத்தவரை துன்புறுத்தியவன் என்னை துன்புறுத்தியவனாவான்” (நபி மொழி)
முஸ்லிம் முரசு ஏப்ரல் 2015