மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் – ஒரு பார்வை
கிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்ததே. சிறைப் பிடிப்பட்ட பிறகும் ஒரு மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தப்பட்டார் போரஸ்.
அதுவே மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் கையில் போரஸ் சிக்கியிருந்தால், கதையே வேறு! ஆகவேதான், வரலாறு அலெக்ஸாந்தரை மாபெரும் வீரனாகவும் செங்கிஸ்கானை கொடுங்கோலனாகவும் சித்தரிக்கிறது!
ஒரு போர்வீரனின் குணநலன்களை, சிறுவயதில் அவன் வளர்க்கப்பட்ட முறைதான் நிர்ணயிக்கிறது. அரிஸ்டாடிலிடம் மாணவராக இருந்தவர் அலெக்ஸாந்தர்!
செங்கிஸ்கானின் தந்தை, வேறொரு மங்கோலியப் பிரிவின் தலைவனால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து சிறுவன் செங்கிஸ்கான் எதிரிகளிடம் சிக்கி, சித்ரவதை செய்யப்பட்டான். படை திரட்டிக்கொண்டு எதிரிகளோடு மோதியபோது, அவனுக்கு மிகவும் விசுவாசமான எழுபது வீரர்களைச் சிறைப்பிடித்து, பிரம்மாண்டப் பானைகளில் கட்டிப் போட்டு, அடியில் தீ மூட்டி, நிஜமாகவே எதிரிகளால் வறுத்து எடுத்தார்கள்!
இதையெல்லாம் பார்த்த செங்கிஸ்கானின் இதயம் இறுகிப் போய்விட்டது. நெப்போலியனின் அகராதியில் ‘முடியாதது’ என்கிற வார்த்தையே கிடையாது என்பார்கள். செங்கிஸ்கானின் அகராதியில் ‘இரக்கம்’ என்கிற வார்த்தை கிடையாது!
செங்கிஸ்கானை பொறுத்தவரை, அவன் மங்கோலியாவை ஆட்சி செய்த காலகட்டம் முழுவதுமே வன்முறைத் தீயின் ஜுவாலைகள் ஓங்கி வளர்ந்து, எரிந்து கொண்டிருந்தது.
கி.பி 1162 ஆம் ஆண்டு பிறந்த செங்கிஸ்கானின் நிஜப்பெயர் தெமுசின். வயதுக்கு வந்தவுடன் தெமுசின் செய்த முதல் காரியம் – தன் பெயரை மாற்றிக்கொண்டதுதான்! ‘செங்கிஸ்கான்’ என்றால், ‘முழுமையான போர்வீரன்’ என்று மங்கோலிய மொழியில் அர்த்தம்!
பல பிரிவுகளாக இருந்த மங்கோலிய குட்டி மன்னர்களை வாள்முனையில் ஒன்றிணைக்க அவன் இறங்கியதால், நாற்பது வயதுவரை செங்கிஸ்கானைப் பற்றி வெளியுலகுக்குத் தெரியாமல் இருந்தது! செங்கிஸ்கான் படை மங்கோலியாவை விட்டு வெளிப்பட்டவுடன், முதலில் சிக்கிக்கொண்ட நாடு சீனா. சீனாவின் உலகப் புகழ்வாய்ந்த கோட்டைச் சுவர் (The Great Wall of China) செங்கிஸ்கானுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை! அந்தச் சுவரைக் காத்த வீரர்கள் அனைவரையும் வெட்டித் தள்ளிவிட்டு, மங்கோலியப் படை சீனாவுக்குள் புகுந்து (1214 ஆம் ஆண்டுக்குள்!) வடசீனா முழுவதையும் கைப்பற்றிவிட்டது!
(நாம் பேச்சுவாக்கில் வடஇந்தியா, தென்னிந்தியா என்று குறிப்பிடுவது போல், சீனாவிலும் வடசீனா, தென் சீனா என்று உண்டு. வடசீனா – இந்தியா அளவுக்குப் பெரிய நிலப்பரப்பு கொண்டது. ஏராளமான தனி ராஜ்யங்கள் அங்கேயும் இருந்தன!).
சீனாவின் நடுவில் ஓடும் மாபெரும் மஞ்சள் நதிக் கரையோரம் வந்த பிறகுதான், மங்கோலியப் படை நின்று, சற்று மூச்சுவிட்டுக் கொண்டது!
வடக்கு முழுவதும் ஆட்சி செய்த ‘கின்’ இன அரசர், செங்கிஸ்கானின் முன்பு மண்டியிட்டார். அவரிடம் ‘என் வீரர்களின் கோபத்தை எப்படித் தணிக்கப் போகிறீர்கள்? இரண்டு இளவரசர்கள், ஐந்நூறு இளம்வீரர்கள் மற்றும் இளம் பெண்கள், மூவாயிரம் குதிரைகள், ஆயிரம் ஒட்டகங்களைக் ‘கப்பமாக’ எங்களுடன் அனுப்பினால், உங்களை உயிரோடு விடுகிறேன்!’ என்றான் மங்கோலிய மன்னன் இகழ்ச்சியாக.
எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு திரும்பிய மங்கோலியப் படை, மேற்குப் பக்கம் நோக்கிக் கிளம்பியது. போகிற வழியில் இருந்த இந்தியாவுக்குள் செங்கிஸ்கான் நுழையாதது ஆச்சர்யமே! அதை இந்தியாவின் அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம்.
ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்த ஒரு நாட்டின் எல்லைக்குச் சென்று எட்டிப் பார்த்த மங்கோலிய வீரர்கள், அங்கே வெட்டித் தள்ளப்பட்டார்கள். தகவல் தெரிந்தவுடன், செங்கிஸ்கானின் கண்கள் சிவக்க, மறுபடியும் ஒரு தூதர் மூலமாக, ‘எங்களுக்கு கிழ்ப்படிந்து விடுங்கள்’ என்று எச்சரிக்கையை அனுப்பினான் அவன்.
செங்கிஸ்கானை பற்றி அவ்வளவாகத் தெரியாததாலும், மங்கோலிய நாட்டைக் குறைத்து மதிப்பிட்டதாலும் ஷா முகமது என்கிற மன்னரின் கவர்னர் ஒருவர், வந்த தூதுவனின் தலையை வெட்டி, அதை ‘பார்சலாக’ செங்கிஸ்கானுக்கு திருப்பி அனுப்பினார் (இந்தியா தப்பித்ததற்க்கு அதுகூடக் காரணமாக இருக்கலாம்!)
கோபம் தலைக்கேறிய செங்கிஸ்கான், ‘இனி மற்ற நாட்டு மன்னர்களோடு இதுபோல பேரம் பேசிக் கொண்டிருக்கக்கூடாது’ என்று முடிவு செய்தது அப்போதுதான்! அதிலிருந்து எதிரிகளை மங்கோலியர்கள் நடத்திய விதமே மாறிவிட்டது!
ஐம்பதாயிரம் வீரர்கள் அடங்கிய மங்கோலியப் படை, ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து, அந்த நாட்டை அடியோடு கைப்பற்றிவிட்டது! முதல் வேலையாக, தூதுவனின் தலையை வெட்டியனுப்பிய கவர்னரை இழுத்துவரச் செய்த செங்கிஸ்கான், அவரையே குரூரப் புன்னகையுடன் உற்றுப் பார்க்க… கவர்னர் ‘என்னை உடனே குத்திக் கொன்று விடுங்கள்’ என்று கதறினார். செங்கிஸ்கான் ‘நோ’ என்று தலையசைத்துவிட்டு தந்த தண்டனை, குரூரமானது!
செங்கிஸ்கானுக்கும் பொறுமைக்கும் சம்பந்தமே இல்லைதான். ஆனால், எதிரிக்கு என்ன விதமான தண்டனை தரவேண்டும் என்பதை பொறுமையாக குரூரமாகச் சிந்திப்பான் அவன்! மங்கோலிய தூதுவனின் தலையை வெட்டித் தள்ளிய ஆப்கானிஸ்தானிய கவர்னரை செங்கிஸ்கான் மறக்கவில்லை என்பது தான் முக்கியம்!
கைது செய்யப்பட்டு இழுத்துவரப்பட்ட கவர்னர், ‘என்னை உடனே கொன்றுவிடுங்கள்’ என்று கதறக் காரணம் – சித்ரவதைக்கு பயந்தே! அவரை வெறித்துப் பார்த்த மங்கோலிய மன்னன், ‘சேச்சே! உனக்கு வெள்ளியைப் பரிசாகத் தரப்போகிறேன்’ என்றான் அடித்தொண்டையில்.
கூடவே, தன் தளபதிகளைப் பார்த்து, ‘இங்கே அரண்மனையிலிருந்து எடுத்துவந்த வெள்ளியைக் கொதிக்கவைத்து உருக்கி, அந்த குழம்பை இவனுடைய கண், காது பிறகு தொண்டைக்குள் ஊற்றுங்கள்’ என்று ஆணையிட்டான். உடனே, கொடூரமான அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பிறகு, சமர்கன்ட் நகருக்குள் புகுந்த மங்கோலியப் படை, ஒரே நாளில் ஐம்பதாயிரம் பேரை வெட்டி வீழ்த்தியது. டேர்மேஸ் என்னும் ஊரில் செங்கிஸ்கான் முகாமிட்டபோது, ஒரு மூதாட்டி துணிவுடன் வந்து, ‘எங்கள் ஊர்ப் பெண்களை நீங்கள் துன்புறுத்தாமல் இருந்தால், நான் உங்களுக்கு விசேஷமான பரிசு தருகிறேன்!’ என்று மன்றாட…
செங்கிஸ்கான் ‘சரி’யென்று தலையசைக்க… அந்தப் பெண்மணி, ‘நான் விலைமதிப்பு மிகுந்த வைரங்களை விழுங்கியிருக்கிறேன். என்னை வெட்டி, அவற்றை எடுத்துக் கொண்டு, ஊர்ப் பெண்களை விட்டுவிடுங்கள்!’ என்றாள்.
செங்கிஸ்கானே எழுந்து, வாளை உருவி அந்த மூதாட்டியின் வயிற்றைக் கிழிக்க… உள்ளே வைரங்கள் இருந்தன! திரும்பித் தன் வீரர்களைப் பார்த்த மங்கோலிய மன்னன், ‘ஒருவேளை இந்த ஊரில் எல்லாப் பெண்களும் வயிற்றில் வைரங்களைப் பதுக்கி வைத்திருப்பார்களோ?’ என்று விஷமப் புன்னகையுடன் கேள்வி எழுப்ப…
உடனே மங்கோலிய வீரர்கள் வாட்களுடன் கிளம்பிச் சென்று, அத்தனை பெண்களையும் ஆர்வத்துடன் வெட்டிச் சாய்த்து, வயிறுகளைக் கிழித்துப் போட்டதுதான் மிச்சம்… வைரம் இல்லை! அதைத் தொடர்ந்து, உலகின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான ‘புகாரா’வுக்குள் மங்கோலியப் படை நுழைந்தது. அங்கே இருந்த பிரம்மாண்டமான மசூதிக்குள், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒளிந்து கொண்டிருந்தனர்.
முன்னணியில் செங்கிஸ்கான் செல்ல, மங்கோலியப் படை பின்தொடர… கையில் புனித குர்-ஆனுடன் செங்கிஸ்கானை நோக்கிவந்த இமாம், உடனடியாக வெட்டித் தள்ளப்பட்டார். புத்தகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. மசூதியின் உட்பகுதியில் மங்கோலியர்கள் நுழைவதற்குள், அத்தனை ஆண்களும் தங்கள் மனைவிகளைத் தாங்களே கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்கள். ‘கணவர்களின் முன்னிலையில், மசூதிக்குள்ளேயே பெண்களை மங்கோலியர்கள் அலங்கோலப் படுத்தக்கூடும்’ என்ற பயம்தான் காரணம்.ஆப்கானிஸ்தான் முழுவதையும் செங்கிஸ்கான் கைப்பற்றியாகி விட்டது. யுத்தத்தின் நடுவே, தளபதிகளாகப் பணியாற்றிய அவனுடைய மகன்கள் இருவர், தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிக் கேளிவிப்பட்ட செங்கிஸ்கான், இரு மகன்களை அழைத்துப் பிரம்பை எடுத்து விளாசித் தள்ளிவிட்டு, பிறகு மூன்றாவது மகனை அழைத்து, ‘இந்த இருவருக்கும் தலைமைத் தளபதியாக உன்னை நியமிக்கிறேன். இவர்கள் மறுபடியும் சண்டையில் ஈடுபட்டால், உன் உயிர் போய்விடும்!’ என்று எச்சரித்தான்.
‘நம்மை எதிர்க்கும் நாட்டில், ஆண்கள் யாருமே உயிரோடு இருக்கக்கூடாது. சமாதானம் பேசும் நாடுகளில் உள்ள அனைத்து ஆண்களையும் அடிமைகளாக நாம் அழைத்துச்செல்ல வேண்டும்!’ – இதுதான் செங்கிஸ்கான் போட்ட சுருக்கமான ஆணை!
ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பிய மங்கோலியப் படை இன்றைய இரான், இராக் நாடுகளுக்குள் புகுந்து துவம்சம் செய்தது. போரில் ஈடுபட்ட செங்கிஸ்கானின் பேரன், அம்பு பாய்ந்து இறந்துபோனான். அந்த இளைஞனின் தந்தை (செங்கிஸ்கானின் மகன்) வேறொரு பகுதியில் போரில் ஈடுபட்டிருந்ததால், தகவல் தந்தைக்கு போய்ச் சேரவில்லை!
மகனை அழைத்துவரச் சொன்ன செங்கிஸ்கான், ‘நீ உண்மையான போர்வீரன் என்றால், பிரதானத் தளபதியான என் ஆணை எதுவாக இருந்தாலும், அதற்க்குக் கீழ்ப்படிய வேண்டும். செய்வாயா?’ என்று கேட்க… ‘சத்தியமாக’ என்று மகன் தலைநிமிர்ந்து சொல்ல, ‘சரி… உன் மகன் போரில் இறந்துவிட்டான். நீ அதற்காக அழக்கூடாது என்பதுதான் என் ஆணை…’ என்றான் செங்கிஸ்கான்!
‘மங்கோலியப் படைவீரர்கள் குளிக்கத் தேவையில்லை’ என்பது செங்கிஸ்கானின் விசித்திரமான கொள்கைகளில் ஒன்று. காரணம் இதுதான் – தோல் உடை, வியர்வை நாற்றம் ஒருபுறம், எதிரிகளின் கோட்டையை நோக்கிக் காற்று வீசும்போது தேர்ந்தெடுக்கப்படும் நேரம் இன்னொரு புறம்! மங்கோலியப் படை தொலைவில் வரும்போதே, ‘கும்’மென்று துர்நாற்றம் நகருக்குள் வீசி, எதிரிகளைக் குலைநடுங்கச் செய்யும்!
வேகம் குறையாமல் தொடந்து மங்கோலிய வீரர்கள் குதிரைகளை ஓட்டிச்செல்ல வேண்டும். நடுவில் ரெஸ்ட் எடுப்பதெல்லாம் செங்கிஸ்கானுக்குப் பிடிக்காது. மங்கோலியப் படை ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் நூறு மைல்களையாவது கடக்கும்.
குதிரைகள் சோர்வடைந்து வேகம் குறையக்கூடாது என்பதால், ஒவ்வொரு வீரனுக்கும் – மாறிமாறி ஏறி அமர்ந்து பயணம்செய்ய வசதியாக, ஐந்து குதிரைகள் உண்டு! சீரான வேகத்துடன் படையைத் தளபதிகள் நடத்திச்சென்று, எதிரி நாட்டுக்குள் நுழையும்போது ‘டாப் கியரில்’ குதிரைகளை ஓட்டுவார்கள்!
இப்போதெல்லாம் காருக்குப் பின்னால் பிணைக்கப்பட்ட ‘வீடுகள்’ (Caravan) எல்லா முன்னேறிய நாடுகளிலும் வந்துவிட்டது. இதை முதலில் கண்டுபிடித்தவன் செங்கிஸ்கான் தான்! படையை அவ்வப்போது நிறுத்தி, கூடாரங்கள் அமைத்து ஓய்வேடுப்பதால் நேரம் விரயமாகிறது என்று எடுத்துச்சொன்ன செங்கிஸ்கான், ‘நகரும் கூடாரங்களை’த தயாரிக்க ஆணையிட்டான்!
பத்து அல்லது இருபது கட்டுமஸ்தான எருதுகள், அந்தக் கூடாரங்களை இழுத்துச் சென்றன. அத்தனை போர்த் திட்டங்களையும் மங்கோலிய மன்னன் மொபைல் கூடாரத்துக்குள்தான் தீட்டுவது வழக்கம்!
வழியில் உதடுகள் வறண்டாலோ, தாகம் ஏற்பட்டாலோ மங்கோலிய வீரர்கள், தாங்கள் பயணிக்கும் குதிரையின் கழுத்தருகே கத்தியால் ஒரு கீறல் போட்டு, வெளிப்படும் ரத்தத்தைச் சற்று உறிஞ்சிக் கொள்வார்கள்!
நெப்போலியன், ஹிட்லர் – இவர்களால் கூட ரஷ்யாவைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், ரஷ்யப் படைவீரர்களால் செங்கிஸ்கானின் ஆவேசமான வேகத்தை தடுத்துநிறுத்த முடியவில்லை! இத்தனைக்கும் இருபதாயிரம் வீரர்களை மட்டுமே பயன்படுத்தி எண்பதாயிரம் ரஷ்ய வீரர்களை தோற்கடித்தான் செங்கிஸ்கான்!
பள்ளங்களில் பதுங்கிக் காத்துக்கொண்டிருந்த ரஷ்யப் படையைப் பார்த்துவிட்டுப் பயந்துபோனது போல நடித்து மங்கோலியப் படை திரும்பி ஓட… உற்சாகமடைந்த ரஷ்ய வீரர்கள் பள்ளத்திலிருந்து வெளிப்பட்டுத் துரத்த ஆரம்பித்தார்கள். திடிரென்று திரும்பியது மங்கோலியப் படை. திகைத்து சிதறிய ரஷ்ய வீரர்கள் அத்தனை பெரும் காலி!
கைது செய்யப்பட்ட ரஷ்யத் தலைமைத் தளபதியும் இளவரசருமான ஸ்டிஸ்லாவ், செங்கிஸ்கான் முன்பு நிறுத்தப்பட்டவுடன், ‘என்னதான் இருந்தாலும் ரஷ்யாவின் இளவரசர் ரத்தம் கிழே சிந்துவதை நான் விரும்பவில்லை’ என்றான் செங்கிஸ்கான் இகழ்ச்சியாக. அழகிய ரஷ்யக் கம்பள விரிப்புக்ளைக் கொண்டுவந்து, அதற்குள் இளவரசரைப் படுக்கவைத்துச் சுருட்டி, ஏற்கனவே மூச்சுத் திணறிக் கொண்டிருந்த இளவரசரை, மங்கோலியத் தளபதிகள் எட்டி உதைத்தே கொன்றார்கள்!
பிற்பாடு மங்கோலியாவுக்குத் திரும்பிய செங்கிஸ்கான், 1227 -ஆம் ஆண்டு அறுபத்தைந்தாவது வயதில் நோய்வாய்பட்டுச் சாதாரணமாக இறந்துபோனான். இன்றும்கூட தொல்பொருள் ஆய்வாளர்கள், அவன் கல்லறையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!
போரில் வன்முறை தவிர்க்க முடியாததுதான். ஆனால், அளவுக்கு மீறிய கொலைவெறியைப் போரில் காட்டினான் செங்கிஸ்கான். இரண்டு கோடி பேருக்குமேல் மங்கோலியர்களின் வாட்களுக்கும் ஈட்டிகளுக்கும் அம்புகளுக்கும் இரையானார்கள்! இதற்க்குக் காரணமாக இருந்ததால், வரலாற்று ஆசிரியர்கள், ‘வன்முறை மிகுந்த மன்னர்கள்’ பட்டியலில் செங்கிஸ்கானுக்கு முதல் இடம் கொடுத்திருக்கிறார்கள்!
நன்றி: மதனின் ‘மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்’, விகடன் பிரசுரம்.
source: http://oorkavalan.blogspot.in