பொதுநல எண்ணம் வளரட்டும்!
கவிஞர் பொன்னகரம் சுல்தான்
இருள் சூழ்ந்த மண், அந்த மண்ணோ ஆயிரக்கணக்கான அறிவிலிகள் பாதங்கள் பதித்த மண், அந்த மண்ணிலே இறைவன் உலக ஒற்றுமைக்கு குரல் கொடுக்க பல தெய்வ வணக்கத்தை புறந்தள்ள, ஓர் இறை நெறியை வகுத்துக்கொள்ள, ஏற்ற தாழ்வற்ற சமுதாய வழிமுறைகளை காட்டி பயணிக்கச் செய்ய எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவதரித்த மண்.
அரபுதேசம் என்று சொன்னால் அன்று காட்டரபிகள் என்ற முரடான வார்த்தைகளே முளைத்திருந்த காலம். மனம் போன போக்கிலே வாழ்க்கை குதிரை சவாரி செய்து கொண்டிருந்தோர் முன்னிலையில், எழுத்தறிவும் ஏட்டறிவும் இல்லாத தனிமனிதராய் இஸ்லாம் எனும் கோட்டையை எழுப்பிட இறைவன் பணித்த காலம்.
நல்லதை ஏற்பதைவிட அல்லதை முந்திக் கொண்டு ஏற்போர் முன்னே, உள்ளதை உள்ளபடியே உரைத்து உண்மையை உணராமைக்கும் உள்ள இடை வெளியை சுட்டிக்காட்டி ஒரே இறைவன் என்ற தாரக மந்திரத்தை மனதால் உணர்வால் நடத்தையால் விளக்கி காட்டியவரே எங்கள் அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவார்கள்.
பாலகனாய் இருந்தவர் பாட்டனார் அரவணைப்பில் வளர்ந்து, வாலிபத்தை கேளிக்கை விளையாட்டுகளில் விபரீதமாக்கிடாது, சிந்தனையை சமுதாய விளைச்சலுக்கு உடமூட்டி, நம்பிக்கை நாணயத்தை வணிகத்தில் காட்டியதால் உம்மி நபியாகியவர். பருவம் பாழ்படாதிருக்க படைத்தவன் பாதையில் பக்குவமாய் பயணம் செய்தவர். இவரது வணிக சாதுர்யத்தை நாணயத்தை நம்பிக்கையை கண்டிருந்த பெண்ணாம் கத்தீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணமகளாய் கைபிடித்தார்கள்.
மக்களின் கண்மூடித்தனமாக வாழ்க்கை வழிமுறைகளை வார்த்தை மகுடியால் மனதை வருடியவர் பிற்போக்கை, புதைகுழிக்குள் தள்ளச் செய்து இறைபோக்கில் வலம் வரச்செய்தவர், பெண் மகவை உயிருடன் புதைத்து வெறுக்கும் குறைஷியருக்கு பெண்மையின் உண்மைத் தன்மையை எடுத்துரைத்தவர் ஏற்றமிகு வாழ்வை ஏற்படுத்தியவர்.
உலக மக்கள் அனைவரின் உன்னத வாழ்விற்கு அடித்தளமிட்டவர், அமைதி வாழ்வுக்கு அழகிய வழியை காட்டியவர் அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ளின் புகழ்பாடும் நாம் அவர்தம் முன்மாதிரியை நினைவில் கொள்வோம். நாளும் அவர் வழியில் நடந்திடுவோம். சுயநலக் கிருமிகளை தூரவிட்டு பொதுநல எண்ணங்களை வளர்த்து சமுதாய நலம் காப்போம். பலம் சேர்ப்போம். உறுதி ஏற்போம்.
முஸ்லிம் முரசு, ஜனவரி 2016