மனம் குமுறும் மரபு!
மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றிலும் ஒரு நோய் என, நோய்களுக்காகவே மனித உடம்பு ஏற்படுத்தப்பட்டது போன்ற நிலையை எண்ணம் கொள்ள வைத்திருக்கும் தற்காலம்!
கடந்த காலங்களை மனத்திற்குள் கொண்டு வந்து காரணங்கள் தேடினால், “உங்கள் கரங்களால் தேடிக் கொண்டீர்கள்” என்ற இறை வேத வசனம் முன் வந்து நிற்கும்.
புற உடலைப் பாதுகாத்து, அக்கரை செலுத்தி அழகுபடுத்தும் மனிதம், அக உடல் மீது ஆர்வம் கொள்ளாது அகன்று நிற்கிறது. உடல் உழைப்புக் குறைவு.
மாறிப்போன உணவுக் கலாச்சாரம். இயற்கை, மரபு வேளாண்மை முறை அழிக்கப்பட்டு, மேல் நாட்டு முறைகள் கடைப்பிடித்தல், மாற்றுப் பயிர்கள், பழங்கள், காய்கறிகள் என அனைத்தும் வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்தல், பயிரிடல், உண்ணல் நிலையால் இந்திய, தமிழக மரபு, உடலின் போக்கு தலை கீழாக மாறிப் போயிருக்கிறது.
குறுகிய காலப் பயிர்கள், அதிக விளைச்சல் பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் உரங்களால் உடல் பாதிப்பு மரபு ரீதியாகத் தொடர்கின்றது.
பிறந்த குழந்தைக்கு நீரிழிவு, மஞ்சள் காமாலை! இருபதிலிருந்து எண்பது வயது வரை சிறுநீரகக் கோளாறு! 30 வயதில் கர்ப்பப்பை அகற்றுதல்! நாற்பது வயதில் முதுகு எலும்பு, மூட்டு எலும்பு, இடுப்பு எலும்பு தேய்மானம்! வயது வித்தியாசமின்றி தைராய்டு! எலும்பாக உருக்கும் தைராய்டு. பெருத்த உடலாக்கும் தைராய்டு. அதிக, குறைவான இரத்த அழுத்தம், இரத்தம் போதாமை. பேன்கிரியாஸ் பிரச்சினைகள். கணையம், சுவாசம், பித்தப்பை, இதயநோய் கோளாறுகள் இன்னும் புதிய, புதிய பெயர்களில் நோய்கள். வெளியுலக புதிய உணவுகளை வணிகர்கள் அறிமுகம் செய்ததும் ஆர்வத்தோடு ருசி பார்க்கச் செல்வது போன்று, மனிதர்களை புதிய நோய்கள் ருசி பார்க்கின்றன! வாய்க்குள் நுழையாத பல பெயர்களை மருத்துவர்கள் இடுகின்றனர்!
மனிதர்கள் தத்தமது கலாச்சாரத்தை, பண்பாட்டை, பாரம்பர்ய உணவை, மரபுப் பேணலை, மண்ணின் உணவை, ஆரோக்கிய வாழ்வை வேண்டாமென ஒதுக்கினர்! உணவே மருந்தாகக் காட்டித்தரப்பட்ட மண்ணின் வேர்கள் செல்லரிக்கப்பட சொந்த நாட்டவரே காரணமாக இருந்தனர்! பெருத்த இயந்திரத்தின் பற்சக்கரத்துக்குள் அகப்பட்ட பொருள் போன்று மனிதர்கள் தம்மைத் தாமே நோய்களின் கைப்பிடிக்குள் தந்து கொண்டனர்!
மீள்வதும், வாழ்வதும் “உங்கள் கரங்களுக்குள், செயல்களுக்குள்” என்று மரபு, மனம் குமுறி மௌனம் பூண்டிருக்கிறது! நோய்களின் பிடிகளில் அகப்படாது வாழ்வதற்கான ஒரே வழி, மரபுக்குத் திரும்புதல், மரபை மட்டுமே நேசித்தல், தீர்வுக்கு வழி அமைக்கும்!
– முஸ்லிம் முரசு டிசம்பர் 2015