இப்லீசின் ஆறு சதிவலைகள்!
(1) முதலாவது அல்லாஹ் மற்றும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைகளுக்கு மாற்றமாக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி அதன் மூலம் இணைவைப்பு செய்து மற்றும் இறைக்கட்டளைகளைப் புறக்ணித்து குஃபஃரான காரியங்களைச் செய்யத் தூண்டுவது!
இதில் இப்லீஸ் வெற்றியடைந்தால் அந்த மனிதனை தன்னுடைய படையில் சேர்த்து சத்தியத்தில் இருக்கின்ற மற்ற மனிதர்களுக்கு எதிராக இவரைத் திருப்பி விடுகின்றான்.
(2) முதல் முயற்சியில் தோல்வி அடைந்த இப்லீஸ் தன்னுடைய இரண்டாவது முயற்சியாக தனக்கு விருப்பமான பித்அத்களை மார்க்கம் என்ற பெயரால் செய்வதற்கு தூண்டுகின்றான். ஏனெனில் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் புதுமையைப் புகுத்துவதன் மூலம் அந்த வழிகேட்டினைச் செய்ய வைத்து அவனை நரகத்திற்கு சொந்தக்காரனாக்கி விடுகின்றான்.
இதில் இப்லீஸ் வெற்றி கண்டால் இந்த புதுமையைப் பரப்புபவர்களில் ஒருவனாக அவனை ஆக்கிவிடுகின்றான்.
(3) ஒருவர் ஷிர்க் மற்றும் பித்அத்களை புறக்கணித்து வாழ்வதில் உறுதியுடையவராக இருந்தால், அதில் தோல்வி அடையும் இப்லீஸ் அதோடு நின்றுவிடுவதில்லை! மூன்றாவதாக அவரை மற்ற பெரும்பாவங்களைச் செய்வதற்கு தூண்டுகின்றான்.
(4) அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி பெரும்பாவங்களை விட்டும் தவிர்ந்து வாழக்கூடிய அடியானாக அவன் இருந்தால் நான்காவது முயற்சியாக அவனை சிறு பாவங்களைச் செய்வதற்குத் தூண்டுகின்றான்.
சிறு பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டே வரும் ஒருவனின் தீமைப்பதிவேட்டின் கணத்தைக் கூட்டுவதன் மூலம் அவனது மறுமை வாழ்வை சிதைப்பது தான் இப்லீசின் எண்ணம்!
(5) ஒரு அடியான் சிறு பாவங்கள் செய்வதைக் கூட தவிர்ந்து வாழ்பவனாக இருப்பின் அதில் தோல்வி கண்ட இப்லீஸ் அத்தோடு நின்றுவிடாமல் ஐந்தாவது முயற்சியாக ஒருவனை மறுமையில் எவ்வித தண்டனையோ அல்லது நன்மைகளையோ பெற்றுத்தராத அதே நேரத்தில் மார்க்கம் தடை செய்யாத செயல்களைச் செய்வதில் அவனை மூழ்க வைக்கின்றான். அதன் மூலம் அவன் மறுமை வாழ்வு சிறக்க செய்ய வேண்டிய சிறந்த அமல்களைச் செய்வதை விட்டும் அவனைத் தடுக்கின்றான்.
(6) இதிலும் ஒரு அடியான் உறுதியாக இருப்பின் இப்லீஸ் தனது ஆறாவது முயற்சியாக குறைந்த நன்மைகளைத் தரக்கூடிய அமல்களை மிகப்பெரிய அமல்களாக அந்த அடியானுக்கு காட்டி அதிலேயே அவனை மூழ்க வைத்து அதன் மூலம் அளப்பரிய நன்மைகளைத் தரக்கூடிய அமல்களைச் செய்வதை விட்டும் அவனைத் தடுக்கின்றான்.
இந்த சதிவலையில் அநேகர் விழுந்து விடுவர்! ஏனெனில் அவர்களின் நம்பிக்கை என்னவெனில் ஷைத்தான் எப்போதுமே நன்மையான காரியத்தை ஏவமாட்டான் என்பது! இறையருள் உடையவர்கள் மட்டுமே ஷைத்தானின் இந்த சதிவலையை உணர்ந்து அளப்பரிய நன்மைகளைத் தரும் மற்ற அமல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்குவர்.
ஒரு அடியான் ஷைத்தானின் மேற்கண்ட ஆறு சதிவலைகளிலிருந்தும் இறையருளைக் கொண்டு தன்னைக் காத்துக் கொண்டான் எனில், இப்லீஸ் தன்னுடைய படைகளையும் மனிதர்களில் தன்னைப் பின்பற்றியவர்களையும் ஏவிவிட்டு இறைவனின் ஏவல் விலக்கல்களை முறையாகப் பேணி வாழும் அந்த அடியாரை ‘வழிகெட்டவர்’ என்றும் ‘மார்க்கத்திற்கு முரணானவர்’ என்றும் மக்கள் முன் பறைசாற்றி அவரை விட்டும் மக்களை தூதமாக்கி அதன் மூலம் அவரின் போதனைகள் மக்களைச் சென்றடையாமல் இருக்கச் செய்வதோடல்லாமல் அவரையும் பலவீனப்படுத்தி இப்லீஸைப் பின்பற்றுபவர்களை பலப்படுத்துகின்றான்.
எப்போதாவது ஒரு முஃமின் இப்லீசின் விடாத முயற்சியால் சோர்வடைந்து விட்டால் அவனை மீண்டும் தன் வலையில் இழுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவன் தன்னுடைய பட்டாளத்தோடு முழு வீச்சில் எந்நேரமும் செயல்பட்டுவருவதால் ஒரு முஃமின் அவன் இறக்கும் வரையிலும் இப்லீசோடு போர் புரியும் நிலையிலேயே இருக்க வேண்டியதிருக்கிறது! – தப்ஸீர்’ இப்னு கைய்யூம் ரஹ்மதுல்லாஹி அலைஹி.