நீங்கள் வாழ வேண்டுமா? அறிவை சுவாசியுங்கள்!
Katip Celepi – இஸ்தான்புல், துருக்கி
அறிவு பெறுவதன் மூலமே ஹலால் – ஹராம் பிரித்துப் பார்க்க முடியும். அறிவு செயல்படுத்தப் படாதிருந்தாலும் நற்செயலாகக் கருதப்படும். அறிவற்ற செயல்கள் அவ்வாறு எண்ணப்படாது.
அறிவும், செயலும் இணைந்து சரியாக இயங்கும்போது தான் மெய்மையாளன் இறைவனை அடைய வழிகாட்டும். நற்செயல் புரியும் ஒருவர் இறை நேசர் நிலையை அடைவார். அறிஞர்கள் முத்தகீன் நிலையைப் பெறுவர்.
அறிவு இறைவன் தருவது. செயல் அவனது அடியான் உடையது. அறிவு பெறுவதற்கு தடைகளாக இருப்பவை; எதிர்காலத்தை நம்புதல், சிந்தித்தல். கல்வித்திறன் பெற்றோர் இவ்வகைச் சிந்தனையுடன் இயங்க மாட்டர். வாய்ப்புகள் தினந்தோறும் வரக்கூடியன.
இன்றைய செயலை, பணியை நாளை எனத் தள்ளிப் போடக்கூடாது. அறிவின் மீது மட்டும் நம்பிக்கை வைத்தல் முட்டாள்தனமானது. அறிவைப் பெற்ற பலர் இந்த எண்ணம் உடையவர்களாக இருப்பதால், அறிவை அடைந்தும் அதன் பலனை அடைய வியலாத நிலையில் இருக்கின்றனர்.
சிலர் தாம் கற்றுக் கொண்டிருக்கும் அறிவு முழுமை பெறுவதற்குள், அடுத்த ஒன்றை நாடுகின்றனர். இந்த இயங்குதல் அவர்களுடைய மொத்த அறிவிலும் சேதம் உண்டாக்கும்.
அறிவு பெறும் போது அலுப்பு தட்டுவதும் ஒருவகைத் தடை. இவ்வுலகிற்காக மட்டும் அறிவு பெறுவது ஒருவரைக் கீழே தள்ளக்கூடியது. எழுதப்பெற்ற அறிவு சார்ந்த பல புத்தகங்கள் இருக்கும். அவற்றுள் இருக்கும் அடித்தள ஆதார மாற்றங்கள் ஒருவருக்கு சரியான அறிவு பெறத்தடையாக அமைந்து விடும்.
வெறுமனே மனப்பாடம் செய்தல் மூலமாக ஒருவர் அறிவு பெற்றுவிட முடியாது. அறிவுத் திறன் அளிக்காத மனப்பாடமும் வீணே. மனப்பாடம் செய்த சிலரைக் காணும்போது, மனப்பாடத்தினால் பெற்ற அறிவு அவர்களிடம் இருக்காது. விவாதம், உரையாடல் தருணத்தில் அறிவுத்திறனற்றவர் என்று வெளிக்காட்டி விடும். தொடர்ந்து வாசித்து ஆராய்வதற்காகவும், மூளைக்குள் பதிவதற்காகவும், மனப்பாடமுறை கொண்டு வரப்பட்டது. வெறுமனே மனப்பாடம் செய்துவிட்டு அதன்மீது ஆராயாது இருப்பதால் எந்த பயனும் ஏற்படாது.
அறிவு அடைவதற்கான முறைகள் சிலர் அறிவு தேடுவர். இஸ்லாமிய வரையரைக்குள்ளும், கற்ற அறிவின் வரம்புகளுக்குள்ளும் செயல்பட மாட்டர். இம்முறை அறிவு நிலையற்றது. தீய செயல்களை விட்டும் தன்னை விலக்கி வைக்கும் ஒருவரிடமே இதய சுத்தமிருக்கும். அறிவின் ஒளி நூர் கிடைக்கும்.
சுயத்தனம் மட்டுமே நோக்கமாக இருக்கக் கூடாது. தன் அறிவுத் தேடலுக்குத் தடையாக இருக்கும் மனைவியானாலும், கணவனாலும், மற்ற உறவுகளானாலும் அவர்களை விலக்கி வைக்கவேண்டும்.
மனிதருக்கு இரண்டு இதயங்களை இறைவன் படைக்கவில்லை. இதயம், மூளைக்குள் வெவ்வேறு சிந்தனைகள் நிரம்பியிருந்தாலும், அறிவு பெறுதலைத் தடுத்துவிடும். இரவில் கண் விழிக்க வேண்டும். சோம்பேறித்தனம் கைவிடப்படனும். இறை நோக்கத்தை அடைந்து மனிதன் மரணிப்பதற்கு நல்வழி காட்டக்கூடியது அறிவு.
“சந்தோஷங்களை வருத்தமடைச் செய்யும் மௌத்தை அதிகமாக நினைவில் கொள்ள வேண்டுமென்பது.” நபிமொழி.
அறிவு தேடுதலே மனிதரின் இலக்காக இருக்க வேண்டும் . ஒருவகை அறிவு தேடல் சலிப்படையச் செய்தால், அடுத்த வகை அறிவுத் தேடலில் ஈடுபட வேண்டும் .சோர்வை சரி செய்யும். உலகம் முழுவதிலும் இருந்தாவது தேடி தனக்குச் சரியான ஆசானை தேர்வு செய்ய வேண்டும். அந்த ஆசானை சிறப்பாக மதிக்க வேண்டும். ஒருவரை அறிமுகப்படுத்தும்போது இன்ன வருடைய மாணாக்கர், சீடர் என்று தான் குறிப்பிடுவர். பயிலும் பாடத்தை முழுமையாக ஆய்வு செய்யாமல், பூரணமாகப் புரிந்து கொள்ளாமல், பெறப்பட்ட அறிவு மட்டும் போதுமெனக் கருதக் கூடாது.
சில காரணங்களுக்காக பெறக்கூடிய அறிவு தேவையற்றது. நேரத்தை அதில் செலவிடக்கூடாது. அல்லாஹ் வுக்காக மட்டுமே ஒருவரைக் கற்பித் தலில் உயர்த்த வேண்டும்.
பெயர் வாங்குதலுக்காகவோ, பணம் பெறுதலுக்காவோ கற்பிப்பது கூடாது. நமது கற்பித்தல் மற்றவர்களுக்கு கனிகளை வழங்க வேண்டும்.
அடித்தளம் சரியாக அமைத்துத்தர வேண்டும். கற்பிப்பவரின் கற்பித்தலும், அவரது செயலும் ஒன்று பட்டிருக்க வேண்டும். கற்பவர், கற்றலோடு நிற்க மாட்டார், கற்பிப்பவரின் செயல்களோடு ஒப்பீடு செய்து பார்ப்பார்.
போதித்தல், வாதிடுதலின்போது ஒரு வகை அறிவை, மற்றொரு வகை அறிவுடன் கலக்கக்கூடாது. மெய்மை அறிவின் மீது வாதங்கள் கூடாது.
அறிவு கற்கவரும் இளைய சமூகத்தை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் நிலையை உற்று நோக்க வேண்டும். கடினமானவைகளையும் கற்கும் வல்லமை பெற்றவர்களுக்கு அறிவின் எல்லை வரை கற்பித்துவிட வேண்டும்.
எளிதில் புரியவியலாத நிலையிலிருப்பர் சிலர். அவர்களுக்கு படிப்பிப்பது, ஃப்ர்ளு – கட்டாயக் கடமை. சுன்னா – நபி காட்டியிருப்பது.
மேலும் இவர்களுக்கு வணக்க வழிபாடுகளும் கற்றுத்தர வேண்டும். கற்பவர் வினா தொடுத்தால் குற்றப்படுத்தும் விதத்தில் பதில் தரக்கூடாது. வினாவுக்கு விடை தெரியவில்லையெனில், வெளிப்படையாகத் தெரியாது எனக்கூறிவிடவேண்டும். தெரியவில்லை என்று அறிவிப்பதே எதிராளிக்குப் பாதி அறிவு கற்பித்தலுக்குச்சமம்.
(கதீப் செலுபி துருக்கி நாட்டுக்காரர். 1609இல் பிறந்து 1657வரை வாழ்ந்தவர். புவியியல் ஆய்வாளர், உலகமறிந்த சமூக அறிவியல் விஞ்ஞானி, உலக நூல்களை அதிகம் வாசித்தவர், நேர்பட எழுதும் எழுத்தாளர். குழந்தைப் பருவத்திலேயே குர்ஆன் அறிவு, அரபி இலக்கணம் கற்றவர். அவரது சிந்தனைகள் எடுத்து தமிழில் தரப் பட்டுள்ளது.)
-தமிழில் : என். மீரான்
முஸ்லிம் முரசு ஜூன் 2015
source: http://jahangeer.in/June_2015