தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை!
ரெஹானா சுல்தானா
சொத்துக்கள் உறவினர்களுக்குச் சென்று விடாதிருக்க முஸ்லிம்கள் தங்களுக்கு பெற்ற பிள்ளையில்லாத நிலையில் தத்தெடுத்து வளர்க்கின்றனர்.
குழந்தை இல்லாதவர்களின் சொத்து அவர்களுடைய இரத்த உறவுகளில் எவர் எவருக்கு எவ்வளவு பங்கு என்று இறையால் நிர்ணயிக்கப் பெற்றிருக்க இறை நியதிக்கு மாறாக ஏமாற்றுத்தனம் புரிதல் சமூகத்தில் இருக்கிறது. இதற்கு தத்து என்ற சொல் உதவுகிறது.
“சுவீகாரம், தத்தெடுத்தல்’’ குறித்து குர்ஆன் அத் 3, வசனங்கள் 4,5 கூறுவதைக் காண்போம்.
“இன்னும் உங்களுடைய வளர்ப்பு மக்களை உங்களுடைய புதல்வர்களாகவும் அவன் ஆக்கவில்லை; இவை உங்களுடைய வாய்களினால் கூறிக்கொள்ளும் உங்களுடைய சொல்லாகும்; இறைவன் உண்மையைக் கூறுகிறான் நேர்வழியைக் காட்டுகிறான். (வளர்ப்புப் பிள்ளைகளாகிய) அவர்களை அவர்களுஆடய தந்தைகளுக்குரியவர்களாகவே நீங்கள் அழையுங்கள். இறைவனிடத்தில் அது மிகுந்த நீதியுடையதாகும். அவர்களுடைய தந்தைகளை நீங்கள் அறியவில்லையானால் அப்பொழுது தீனில் உங்களுடைய சகோதரர்களாகவும், நண்பர்களாகவும் இருக்கின்றனர்.” (அல்குர்ஆன் 3:4,5)
ஒரு கணவன் மனைவிக்கு அவர்கள் மூலமாகப் பிறந்த குழந்தைகள் தவிர மற்ற குழந்தைகள் அவர்களுடைய குழந்தைகளல்ல. தத்தெடுத்து வளர்ப்போர் மகன் என்றும், மகள் என்றும் கூப்பிட்டு உறவு முறை ஏற்படுத்தித் தருவது நான் காட்டிய வழிமுறையல்ல, உங்களது வாய் ஏற்படுத்திக் கொள்வது என்று மேற்காμம் அத்தியாயம் வசனத்தில் இறைவன் கூறுகிறான்.
ஒரு குழந்தைக்கு தாய், தந்தை யாரென்று தெரியாத நிலையில் நீங்கள் ஆதரவளித்தாலும் மகள், மகன் எனக் கூறாதீர்கள். தந்தை பெயர் தெரிந்தால் இன்னாருடைய மகனே! மகளே! என்றழையுங்கள். தெரியவில்லையானால் இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கும்படி சகோதரர்களாக, நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்பதே இறை வேதக் கட்டளை.
இந்த கட்டளையை ஏற்று நடப்போர் இருக்கின்றார்களா? தெரியவில்லை. தத்தெடுத்து சொத்துக்களை எழுதிவைத்தலிருக்கிறது. ஆண் வாரிசு இல்லாதவர்கள் குழந்தையில்லாதவர்கள் இஸ்லாம் விதித்திருக்கிறபடி சகோதர, சகோதரிகளுக்கு அவர்களுடைய வாரிசுகளுக்கு சென்றுவிடும் என்று ஒரே மகள் இருந்தாலும் நூறு கோடிச் சொத்தையும், ஒரு கோடிச் சொத்தையும் அந்த ஒருவருக்கே எழுதி வைத்துச் செல்லுதலையே எதார்த்தத்தில் பார்க்க முடிகிறது.
தத்து குறித்து இஸ்லாம் வைத்திருக்கும் கருத்தையே தமிழ் மரபும் கூறியிருக்கிறது. முஸ்லிம்கள் செவியேற்காதது போலவே தமிழர்களும் செவியேற்கவில்லை
இதோ ஆதாரப்பாடல்;
“பணத்துக்கு பிள்ளை வாங்கி
பந்தியிலே விட்டாலும்
பந்தி நெறஞ்சிருமா
பாத்த சனம் ஒப்பிடுமா
காசுக்குப் புள்ள வாங்கி
கடத்தெருவே விட்டாலும்
கடத்தெரு நெறஞ்சிடுமா
கண்ட சனம் ஒப்பிடுமா? (பண்பாட்டு அசைவுகள் நூல்)
தென் மாவட்ட கிராமங்களில் பாடப்படும் நாட்டுப்புற ஒப்பாரிப் பாடல் இது.
நாகரிகமாக, இஸ்லாம் தத்துப்பிள்ளை குறித்து கூறுவதை கிராமப் பேச்சு வழக்கிற்கே உரிய முறையில் நாட்டுப்புறப்பாடல் கூறியிருக்கிறது.
இந்த இடத்தில் இஸ்லாமும், தமிழர் மரபும் ஒத்துப் போகின்றன.
சொந்தபிள்ளை இடத்தை தத்துப்பிள்ளை ஒரு நாளும் அடைய முடியாது என்பதே இருபுறக் கருத்தும். சம்பாதித்து வைத்த சொத்துக்களை ஆள்வதற்கு ஆண்பிள்ளை இல்லாததும், பிள்ளைகளே இல்லாததும் சமூகத்தின் உள்ளே பெரும் குறையாகக் கருதப்படுகிறது. இதனால் சில சமூகத்தாரிடையே தத்தெடுத்தல் சடங்காகவே நடைபெறுகிறது.
கிராமங்களில் தாத்தா, பாட்டிமார்கள் தத்தமது பேரக் குழந்தைகளிடம் ஒங்க அப்பன் ஆத்தா பெத்து நீங்க வரலை ஒங்களை ஒரு புடி தவிட்டுக்குத்தான் வாங்கினோம் என்று கேலியாகச் சொல்வதுண்டு. நடைமுறையிலிருந்த ஓர் உண்மையே சொல் வழக்காக, நகைச்சுவைப் பேச்சாக மாறியுள்ளது.
தம் குடும்பம் எவ்வளவு வறுமையிலிருந்தாலும் தாம் பெற்ற பிள்ளைகளை விலைக்கு விற்பதற்கு 98 பேர் முன்வருவதில்லை. 2 பேரிடம் காசுக்கு விற்றல் இருக்கிறது.
எம் காதுகள் கேட்டுள்ளன. 98 பேரில் சிலர் எதிராளியின் வசதி வாய்ப்பு, தம்மிடம் இல்லாமல் தன் பிள்ளையாவது அங்கு போய் நல்ல உணவு உண்டு, நல்ல உடை உடுத்தி வசதியாக இருக்கட்டுமென ஒரு குழந்தையைத் தத்துக் கொடுப்பதுண்டு. அப்போதும் பணம் எதுவும் பெறாதே கொடுப்பர். bகொடுத்தவர் மீண்டும் திருப்பிக் கேட்டுவிடக்கூடாது. அதே சமயம் விற்றது போன்றும் இருக்க வேண்டும். பொருளுக்கு விற்றதாக அதனால் இலாபம் அடைந்ததாக எவரும் பேசிவிடக்க்கூடாது என்பதற்காக, அக்காலத்தில் வறட்டி தட்டுவதற்கும், மாட்டுக்கு கழனித் தண்ணீரோடு கலந்து தருவதற்கும் பயன்படும் கழிவாக வெளிவரும் தவிடை ஒரு பிடியளவு பெற்றுக் கொண்டு பதிலாகக் குழந்தையைக் கொடுத்துள்ளனர்.
நெல் அரவை மெஷின்களில் 1970-களி ல் இலவசமாகத்தான் தவிட்டை அள்ளிச்செல்வர். விற்றது வாங்கியதற்கான பாவனையாக இதனைச் செய்திருக்கின்றனர். இதுவே பிடி தவிட்டுக்கு பிள்ளை வாங்கிய கதை.
முஸ்லிம் முரசு, ஜூலை 2015.