அடிமைப்போக்கு மாறாமல் அகத்தில் அன்பு பிறக்காது!
மண வாழ்வை ஏற்று மச்சானாக ஒப்புக் கொண்டீர்
மழைக்கு குரல் பெருக்கும் தவளையாகி மகிழ்ந்தேன்!
மணநாள் குறித்தார் மணமேடையில் அமர்ந்தேன்!
முத்தவல்லியும் சாட்சிகளும் நோட்டு தூக்கி வந்தனர்
மூன்று சம்மதம் வேண்டுமென்றார்; மூன்று கிராம் தங்கத்துக்கு
கையப்பம் தா என்றார்; தலையெழுத்தை தான் தாவென்றார்!
மலர் முகத்துடன் வந்த மாப்பிள்ளை உறவினர் கை ஜாடையால்
கைச்செயின் கனமாக இல்லையென்றார், என் அன்னையிடம்!
முல்லைப் பல்காட்டிக் கொண்டிருந்த மாமியார் முகம் மாறியது! என்
முடியைத் தூக்கி கழுத்தைப் பார்த்து வெறித்தன அவர் கண்கள்!
குர்ஆன் குறிப்பிடும் ‘‘ஹம்மாலதன் ஹத்தப்’பை நினைவூட்டிய செயல்
காலந்தோறும் பிறப்பரோ உம்மூ ஜமீல்களும் & உமைய்யா இப்னு கலஃப்களும்!
குழியிலே தள்ளுவதற்கும் கூசாத நெஞ்சமுடையோர்
வாழ்ந்தாருக்கு மாரடிப்பார், எளியவரை ஏசியடிப்பார்!
உறவைக் கவர்வார், உழைப்பைச் சுரண்டுவார்
உளுத்துப் போன சிந்தனையாலான பேச்சும், செயல்களும்
தவழ விடுவார், தமக்கேற்ற தரகர் தேடுவார்! இஸ்லாத்தைத்
தாங்கிப் பிடிக்க வேண்டிய கரங்களில் பாசாங்கு பகடைகள்!
சொந்த வீடுண்டா? வேலையில் கை நிறைய காசுண்டா கேட்டனர்
எல்லாமும் உண்டென்றும்; ஆண் எனக்கு அழகில்லையெனக்கூற
அச்சப்பட்டு அழகு வார்த்தைகள் தேடிக் கொண்டிருக்கின்றார்!
நூறு பவுன் போடுவோம், நுகத்தடி மாடாகச் சம்மதிக்கனும்
குண்டும், ஒல்லியும் வேண்டாம்! மாமியார், மாமனார்…
நாத்தனார், கொழுந்தனார் வீடு கடத்தப்பட்டால் விரைவில் நிக்காஹ்!
மக்கா நகரைப் புனிதமாகக் கருதுவது போன்று சக
மக்களின் மானத்தையும், பொருளையும் புனிதமாகக் கருதச்
சொன்னார்கள் நபி! கொண்டவரும் கொடுத்தவரும் தவறுபுரிகின்றார்!
தாமிர வண்ணத்தில் இருபுற உள்ளத்தீ எரிகின்றது!
இரு கரங்கள் இணைந்தாலும் இயல்பு மையல் இருக்குமா?
அடிமைப் போக்கு மாற்றாமல் அகத்தில் அன்பு பிறக்குமா?
குறிப்பு : (நபியவர்களுக்கு கடுந்தொல்லை கொடுத்தவர், நபியின் இரண்டு மகள்களையும் தலாக் கூறிய சம்பந்தி உம்மு ஜமீல். அபூலஹப்பின் மனைவியிவர்.
குர்ஆன் இவரை ‘ஹம்மாலதல் ஹத்தப்’ விறகைச் சுமப்பவள் என வர்ணித்துள்ளது. அடுத்து உமைய்யா இப்னு கலஃப் நபியை பகிரங்கமாக ஏசித்திருந்தவன் இவனைக் குறித்து குர்ஆன் 104 சூரா முதல் வசனம் இறங்கியது. நபியின் அறவுரை ஹஜ்ஜத்து விதாவில் சொல்லப்பட்டது. கவிதைக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான விளக்கம்.)
-சோதுகுடியான்
முஸ்லிம் முரசு ஜூன் 2015
source: http://jahangeer.in/June_2015