குர்ஆனின் மீது சத்தியம் செய்யலாமா?
[ அல்லாஹ் அல்லாததின் மீது சத்தியம் செய்தால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறார். அதனால் தான் மீண்டும் கலிமா சொல்ல வேண்டும் என்று ஹதீஸ் சொல்லித் தருகிறது.]
மவ்லவி யூனுஸ் தப்ரீஸ்
நாம் சொல்லக் கூடிய செய்திகளை உண்மைப் படுத்த வேண்டும் என்றால் அந்த செய்தி நம்பிக்கையானவர் சொல்லியிருக்க வேண்டும். சந்தேகமான செய்தி, அல்லது சந்தேகத்திற்கு இடமான செய்தி என்றால், அதை யாராவது உறுதிப் படுத்த வேண்டும். அப்படி யாரும் இல்லாவிட்டால் சத்தியம் செய்து அதை உறுதிப் படுத்த வேண்டும்.
ஒரு முஸ்லிம் எப்படி சத்தியம் செய்ய வேண்டும்.? எதைக் கொண்டு சத்திம் செய்ய வேண்டும்? என்பதை தெளிவுப் படுத்துவற்காகவே இக் கட்டுரை எழுதப்படுகிறது.
கணவன் மனைவி சத்தியம்
ஒரு பெண் மானக் கேடான விபசாரத்தில் ஈடுபடுவதை கண்டால் அவளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக அந்த காட்சியை கண்ட நேரடியான நான்கு சாட்சிகள் இருக்க வேண்டும் . இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை வழங்கப் படமாட்டாது. அதே நேரம் தன் மனைவி வேறொரு ஆடவரோடு தவறாக மானக் கேடான விடயத்தில் ஈடுபடுவதை நேரடியாக கண்டால், அதற்கு நான்கு சாட்சிகள் இல்லாவிட்டால், இப்போது இருவரும் சத்தியம் செய்ய வேண்டும். அந்த சத்தியம் எப்படி செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் குர்ஆன் மூலம் சொல்லித் தருகிறான்.
அதாவது,
முதலில் கணவன் நான்கு தடவைகள் நான் உண்மையாளன் என்றும், ஐந்தாவது தடவையாக நான் பொய்யனாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என் மீது உண்டாகட்டும் என்றும், அதே போல கணவன் பொய்யன் என்று நான்கு தடவையும், அவன் உண்மையாளனாக இருப்பானேயானால் அல்லாஹ்வின் சாபம் என் மீது உண்டாகட்டும் என்று ஐந்தாவது தடவையாக மனைவி கூற வேண்டும். என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் தெளிவுப் படுத்துகிறது
“எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி, ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).
இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி, ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்)”. (அல்குர்ஆன் 24:6.)
அல்லாஹ்வின் மீது மட்டும் சத்தியம் செய்தல்
ஒருவர் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது மட்டும் சத்தியம் செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எந்த படைப்பினங்கள் மீதும் சத்திம் செய்யக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பின்வரக் கூடிய ஹதீஸ்களை கவனியுங்கள்.
“சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி 2679)
மேலும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்;
“சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 3836)
மேலும் “ஒரு யூதன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து முஸ்லிமாகிய நீங்களும் இணை கற்ப்பிக்கிறீர்கள் ,கஃபாவின் மீது ஆணையாக என்று கூறுகிறீர்கள் எனக் கேட்டார்,இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம்கள் இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால்(கஃபாவின் மீது என்று கூறாமல்) கஃபாவின் இறைவன் மீது என்று கூற வேண்டும் என்று கூறினார்கள். (நூல்கள்: அஹ்மத், நஸாஈ)
மேலும் ”ஒரு மனிதர் கஃபாவின் இறைவன் மீது என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள், உடனே அல்லாஹ் அல்லாததின் மீது சத்தியம் செய்யக கூடாது என்று கூறினார்கள். யார் அல்லாஹ் அல்லாதவை மீது சத்தியம் செய்கிறாரோ அவா் இணைகற்பித்து விட்டார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)
எனவே அல்லாஹ் அல்லாத எந்த படைப்பினங்கள் மீதும் எவரும் சத்தியம் செய்யக் கூடாது. குறிப்பாக குர்ஆன் மீது என்று சத்தியம் செய்யக் கூடாது. அப்படி குர்ஆனை முன் நிறுத்தி சத்தியம் செய்ய வேண்டும் என்றால் இந்த குர்ஆனை அருளிய இறைவன் மீது என்று தாராளமாக கூறலாம். அதுவும் குர்ஆன் மீது கை வைத்து தான் கூற வேண்டும் என்று சட்டம் கிடையாது.
அல்லாஹ் அல்லாததின் மீது சத்தியம் செய்திருந்தால் அதன் பரிகாரம்
ஒருவர் தெரியாமல் நேரடியாக படைப்பினங்கள் மீதோ, அல்லது குர்ஆன் மீதோ சத்தியம் செய்து விட்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்துகிறது.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூது விளையாடுவோம்’ என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.” என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி 4860)
அல்லாஹ் அல்லாததின் மீது சத்தியம் செய்தால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறார். அதனால் தான் மீண்டும் கலிமா சொல்ல வேண்டும் என்று ஹதீஸ் சொல்லித் தருகிறது் எனவே சத்தியம் செய்யும் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொய் சத்தியம்
பொய் சத்தியம் செய்வர் முஸ்லிமாக இருக்கமாட்டார். அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்தால் அவர் மறுமையில் தண்டிக்கப் படுவார் என்பதை பின்வரும் குர்ஆன் வசனம் எச்சரிப்பதை கவனியுங்கள்.
”எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர். (அல்குர்ஆன் 58:14)
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ”இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவதும், கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும். என அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி 6675)
மேலும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்;
“ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உடனே, ‘அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது’ (அல்குர்ஆன் 03:77) என்னும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
(இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது) அஷ்அஸ் ரளியல்லாஹு அன்ஹு வந்து (மக்களை நோக்கி, ‘அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது. என் தந்தையின் சகோதரர் மகனுடைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது.
(அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன்.) அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?’ என்று கேட்டார்கள். நான், ‘என்னிடம் சாட்சிகள் இல்லை’ என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அப்படியென்றால், பிரதிவாதி (‘அந்த நிலம் என்னுடையது தான்’ என்று) சத்தியம் செய்யவேண்டும்’ என்றார்கள்.
நான், ‘அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே’ என்று கூறினேன். (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே, அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி (மேற்சொன்ன 3:77 ஆம்) குர்ஆன் வசனத்தை அருளினான்” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 2357)
எனவே வேண்டும் என்று பொய் சத்தியம் செய்தவர் உலகில் தப்பித்து விடலாம் ஆனால் மறுமையில் அல்லாஹ்வால் தண்டிக்கப் படுவார்என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
சத்தியத்தை முறிப்பதற்கான பரிகாரம்
ஒருவர் சத்தியம் செய்து விட்டு, அதை முறிக்க வேண்டும் என்றால் பின்வரக் கூடிய பரிகாரத்தை செய்ய வேண்டும்.
”அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன் 66: 2)
மேலும் ” உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை – உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.(அல்குர்ஆன் 5: 89)
எனவே இஸ்லாம் கூறும் ஒழுங்கு முறைகளைப் பேணி சத்தியம் செய்யும் விடயங்களில் நிதானமாக இருப்போமாக!
– மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்