வெற்றிக்கான பலத்தை எடைபோடுங்கள்….!
மௌலவி ஜம்பை ஜப்பார் தாவூதி
[ நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சார்ந்தோருக்கு பொறுப்பாளர்கள், குடும்பத் தலைவர் தன் குடும்பத்தைப் பற்றி கேட்கப்படுவார்.
ஒரு முத்தவல்லி வசூல் செய்வதும் சம்பளம் கொடுப்பதும், முத்தவல்லி என்று சொல்லிக் கொள்வதுமே தன் பொறுப்பு என்றில்லாமல், அவருடைய மஹல்லாவைப் பற்றியும், அவர்களுடைய வணக்க வழிபாடுகள் பற்றியும் கேட்கப்படுவார்,
ஒவ்வொரு துறை தலைவர்களுமே கேட்கப்படுவார்கள். சம்பாதிப்பது, செலவழிப்பது பற்றி கேட்கப்படும் போதும், தன் ஆளுமைக்குட்பட்டவைகளும் கேட்கப்படுவார்கள் தானே.
தலைவர் என்று சொல்லிக் கொள்ள விரும்பும் போது, அந்த தலைவர் தன் பொறுப்புகள் சரியாக நிர்வகித்தாரா? எனக் கேட்பதும் நியாயம் தானே!
வாய்ஜாலங்களால், பேச்சுத் திறமைகளால் காலத்தை ஓட்டுபவர்களின் திறமை, இறைவன் முன் ஒன்றுமில்லாமலாகிவிடும்.]
வெற்றிக்கான பலத்தை எடைபோடுங்கள்….!
மௌலவி ஜம்பை ஜப்பார் தாவூதி
“லவ்லா ஆலிஹதுன் இல்லல்லாஹ் லஃபஸததா” – இரண்டு இறைவன்கள் இருந்தால், குழப்பமாகிவிடும்.
இது ஹதீஸ். பள்ளிக்கு ஒரு முத்தவல்லி, கல்லூரிக்கு ஒரு முதல்வர், மருத்துவமனைக்கு ஒரு டீன், கட்சிக்கு ஒரு தலைவர், ஒரு சமுதாயத்துக்கு ஒரு தலைமை. இத்தலைமை தீன் வழிச்சுடராக, இக்லாஸ் எனும் மனத்தூய்மையும், இறைவனுக்காகவே இயங்குகிறேன், தலைமை சமுதாயத்துக்குத் தேவை. அமல்கள் நிறைந்திருக்கவேண்டும், அது அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காயிருக்க வேண்டும். அன்பு கிடைத்துவிட்டால் அவர் தூய்மை பெறுவார், தூய தலைமை கிடைத்துவிட்டால் சமுதாயம் தடம் புரளாமல் செல்லும். சுன்னத்து தானே, நஃபில்தானே என்ற அலட்சியம் அமல்கள் குறைய காரணமாகிவிடும்.
கல்வியறிவில்லாதோர் தலைவர்களாயிருப்பர், தாங்கள் வழிகெட்டு பிறரையும் வழிகெடுப்பர் இவர்கள் வணக்க வழபாடுகளின் அலட்சியமாயிருப்பர், இறை பக்தியும், நெறியும் இல்லாமலிருப்பர், பதவியும் பண ஆசையும் மிகைத்திருக்கும், இதனால் சமுதாய வழிகாட்டுதலுக்கு தகுதியில்லாதவராயிருப்பார்.
விருந்துக்கு அழைப்பது போல், யஹூதிகள் சண்டைக்கு அழைப்பர். அதிக எண்ணிக்கையில் பலத்துடனிருப்பீர். ஆனால் உலக ஆசை உங்கள் இதயங்களை ஈர்த்திருக்கும். (நபி மொழி – மிஷ்காத்)
”உங்கட்கு மத்தியில் உறவைத் துண்டிக்ககாதீர், குரோதம் கொள்ளாதீர்.” (புகாரி 896)
அமல்கள் செய்வதில் இருவர் சிறந்தவர்களாயிருந்தனர். இக்லாஸ் எனும் நற்குணத்தால் ஒருவர் உயர் அந்தஸ்தைப் பெற்றுவிட்டார். (ஷுஅபுல் ஈமான் 238)
இரு ஹதீஸ்களுமே தலைவர்களிடத்தில் இல்லை. தலைவர் என்ற ஒருமையை விட்டுவிட்டு, தலைவர்கள் என்று பன்மை சொல்லே ஒற்றுமையில்லாததனால்தான் உருவாகியிருக்கிறது.
புற்றீசல்கள் போல் கட்சிகள், தலைவர்கள், எல்லோருமே சமுதாயச் சேவைச் செம்மல்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள், விட்டுக் கொடுத்தல் என்ற வார்த்தை அவர்களின் அகராதியில் இல்லை. பெரிதாக தும்மினாலே கட்சி உடைகிறது. புதிய தலைவர் புறப்படுகிறார்.
”பசித்த ஓநாய்கள் ஆட்டு மந்தைக்குள் நுழைந்து நாசம் செய்வதைப்போல், மனிதனின் பணம் பதவி ஆசை பெரும் நாசத்தை ஏற்படுத்திவிடும்.” (திர்மிதி 2376)
அரபு நாட்டவர்களிடம் இந்த ஆசைகள் மேலோங்கியிருப்பதால்தான் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அழிவுகள், இழப்புகள், இழிவுகள். இதன் ஒரு பகுதியே ஹஜ்ஜின் போது, மினாவில் ஈரானியர்களால் விளைவிக்கப்பட்ட, காட்டுமிராண்டித்தனமான துயர சம்பவங்கள்.
பஸ்ஸில் பயணிகள் அயர்ந்து தூங்கினால், அது சொகுசுப் பயணம். டிரைவர் தூங்கினால் அது இறுதிப் பயணம். சமுதாயத்தை நேர்வழியில் அழைத்துச் செல்லக் கடமைப்பட்டவர்கள் தடுமாறினால் சமுதாயத்துக்குப் பேரிழப்பு, தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள், இறைவன் முன் தலைகுனிய வேண்டியவர்கள், நாங்கள் தான் வழிகாட்டலுக்குத் தகுதியானவர்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்களே.
நபிமணியின் இறுதிநேரம்…
”ஆயிஷா இருக்கும் தீனார்களை யாருக்காவது கொடுத்துவிட்டுவா”,
”நாயகமே, நடுநிசியில் யார் இருப்பர்?”
“இதைப் பெற்றுக் கொள்ள யாரையாவது அல்லாஹ் அனுப்புவான் போ”,
அவ்வாறே நடந்தது,
இப்படி அல்லாஹ் யாரையாவது ஒரு நல்ல வழிகாட்டுபவராக அனுப்ப மாட்டானா, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதும் கேட்டு செயல்பட்ட ஆயிஷாவைப் போல் ஒரு தலைமைக்கு கட்டுப்படக்கூடியவர்களாக அல்லாஹ் எல்லோரையும் ஆக்கமாட்டானா என ஏங்கும் நெஞ்சங்களை அல்லாஹ் நிறைவாக்கமாட்டானா?
நான் காட்டிய வழியை பின்பற்றாத ஒரு கூட்டம், அவர்களுடைய இதயம் ஷைத்தானின் இதயமாயிருக்கும், மழை பொழிவது போல், குழப்பங்கள் இருக்கும். (முத்தபகுன் அலைஹி)
உருவச் சிலைக்கு மலர் தூவி, கரம் கூப்பி வணக்கம் செலுத்திவிட்டுச் செல்லும் முஸ்லிம் கட்சித் தலைவரின் இதயமும் செயலும் இப்படி இருக்க, எப்படி இவர் பிறரை வழிநடத்திச் செல்வார்.
ஒருவரை ஒருவர் சொற்களாலும், எழுத்துக்களாலும் வசைபாடும்போது, இவர்கள் எப்படி வழிகாட்டிகளாயிருக்க முடியும்.
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சார்ந்தோருக்கு பொறுப்பாளர்கள், குடும்பத் தலைவர் தன் குடும்பத்தைப் பற்றி கேட்கப்படுவார்.
ஒரு முத்தவல்லி வசூல் செய்வதும் சம்பளம் கொடுப்பதும், முத்தவல்லி என்று சொல்லிக் கொள்வதுமே தன் பொறுப்பு என்றில்லாமல், அவருடைய மஹல்லாவைப் பற்றியும், அவர்களுடைய வணக்க வழிபாடுகள் பற்றியும் கேட்கப்படுவார்,
ஒவ்வொரு துறை தலைவர்களுமே கேட்கப்படுவார்கள். சம்பாதிப்பது, செலவழிப்பது பற்றி கேட்கப்படும் போதும், தன் ஆளுமைக்குட்பட்டவைகளும் கேட்கப்படுவார்கள் தானே.
தலைவர் என்று சொல்லிக் கொள்ள விரும்பும் போது, அந்த தலைவர் தன் பொறுப்புகள் சரியாக நிர்வகித்தாரா எனக் கேட்பதும் நியாயம் தானே. வாய்ஜாலங்களால், பேச்சுத் திறமைகளால் காலத்தை ஓட்டுபவர்களின் திறமை, இறைவன் முன் ஒன்றுமில்லாமலாகிவிடும்.
ராணுவ வீரர்களை பகடையாகப் பயன்படுத்திய முசோலினியும், ஹிட்லரும் இன்று போற்றிப் பேசப்படுவதில்லை. மகராசன் போயிட்டாரே என்று மக்கள் பேசும் போது, மலக்குகளால் ஆமீன் சொல்லப்பட்டு, அம்மகராசன் இறைவனிடம் ஏற்றம் பெறுகிறார். சனியன் தொலைந்தது என்று பேசப்பட்டால், இதற்கும் மலக்குகளின் ஆமீனால் அவர் இறைவனின் தண்டனைக்கு ஆளாக்கப்படுவார். இது ஹதீஸின் கருத்து.
சில கட்சிகள் தலைவரை மட்டும் கொண்டிருக்கிறது. சில கட்சிகள் பத்து நபர்களை சுற்றி வருகிறது. சில கட்சிகள் லட்டர் பேடில் நிற்கிறது. சில கட்சி மாநாடுகளுக்கு சில ஆயிரம் பேர்கள் கூடுவதைக் கண்டு மற்ற கட்சி ஏமாந்துவிடுகிறது. கூட்டவையின் மூலம் பெறப்படும் ஒரு மிகச் சின்ன வெற்றியைக் கொண்டு, தன்னை பெரிதாக மதிப்பிட்டுக் கொள்ளக் கூடாது. ஒட்டு மொத்த கட்சிகளின் பலத்தை கூட்டிப்பார்க்க வேண்டும்.
”இவ்வளவு பலமும், நம்முடைய பரிவால் வீணாக அல்லது லேசாக மதிக்கப்படுகிறது என்பது புரியும். என்ன புரிந்து என்ன செய்வது, முஹம்மது சொல்வதெல்லாம் உண்மைதான். அவர் தலைமைக்கு மிகப் பொருத்தமானவர்தான், ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத இயலாமையிலல்லவா இருக்கிறேன். ஏனெனில் இதுவரையில் என்னை தலைவன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களெல்லாம் ஏளனமாகப் பார்ப்பார்களே…” தலைமைத்தனம் இல்லாமல் என்னால் இருக்க முடியாதே என்ற அபூஜஹிலின் விட்டுத்தர முடியாத நிலை, யாருக்கும் வரக்கூடாது.
– முஸ்லிம் முரசு நவம்பர் 2015