குழந்தையில்லா பெண் வேண்டும்!!!
அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்த பிறகு, அவரது மனைவி உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திருமணம் முடித்திருந்தார்கள்.
தனது மனைவிக்கு முதல் கணவன் மூலம் பிறந்த குழந்தைகளையும் தம்முடன் வைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பராமரித்தார்கள். இதற்கு ஆதாரமான தகவலை உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா முதல் கணவருக்குப் பிறந்த அந்த பிள்ளைகளில் ஒருவரான உமர் கூறியிருக்கின்றார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் நான். ஒரு முறை நான் உணவருந்திக் கொண்டிருந்த பொழுது உணவுத் தட்டில் ஆங்காங்கே எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இதனைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம்
கூறினார்கள்;
”அல்லாஹ்வின் பெயர் சொல்லி உண்ணத் தொடங்க வேண்டும். வலது கரத்தால் உண்ண வேண்டும். தட்டில் உனக்கு முன்புறம் உள்ள உணவை எடுத்து உண்ண வேண்டும்“ என்றார்கள்.
இன்று தாம் பெற்ற பிள்ளைகளுக்குக் கூட அறிவுரை கூறத் தெரியாத, அறிவுரை கூற நேரமில்லாத தந்தையர் இருக்கின்றனர். மாற்றார் ஒருவருக்குப் பிறந்த குழந்தைகளையும் தன் பிள்ளையாகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேணியிருக்கிறார்கள்.
இன்றுள்ள, மனைவியை இழந்த 50, 60, 70 வயது நபர்களும் மனைவி தேடுவது எப்படித் தெரியுமா? குழந்தை இல்லாமல் வேண்டும். கண்ணிப் பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு ரொம்ப நல்லது! திருமண இடைத்தரகர்களைக் கேட்டால் கூறுவர்.
நிரம்ப சொத்துக்களையுடைய 64 வயதுடைய ஹாஜி, அல்ஹாஜ் வேறு! அவர், கண்ணிப் பெண்ணைத் தேடித் தேடி 25 வயதுடைய பெண்ணை மணமுடித்திருக்கிறார். இவர்களைப் போன்றவர்கள் தான் இஸ்லாத்தைப் பூரணமாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு வருடத்தில் தலாக், வயிற்றில் குழந்தையுடன் தலாக், கணவன் குணம், செயல்பிடிக்காமல் குலா கேட்ட பெண்கள் என மஹல்லா ஒவ்வொன்றிலும் குறைந்தது ஐம்பது பெண்கள் குழந்தைகளோடும், குழந்தையில்லாமலும் இருக்கின்றனர். இவர்களும் கணவனாக வரக்கூடியவரின் குழந்தையை ஏற்கத் தயாரில்லை! ஆண்களும் தாடி, மீசை நரைத்து பழுத்தும் குழந்தையில்லாப் பெண்ணாக, கண்ணிப் பெண்ணாகத் தேடுகின்றனர்.
தேடலுக்குத் தோதாக கருப்புச் சாயம் பூசிக் கொள்கின்றனர். இஸ்லாம்…. நபி வழி…?
ரசூலுல்லாஹ் ஒரு இளைஞரைப் பார்த்துத், நீ ஏன் கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாது எனக் கேட்டார்களே தவிர, வயது முதிர்ந்தவரைப் பார்த்து கேட்கவில்லை என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது,
– முஸ்லிம் முரசு டிசம்பர் 2015