இதுதான் உலகம்!
அபிவிர்த்தீஸ்வரம் தாஜுத்தீன்
காற்றுவழி தென்றலதே காலமதின் பூங்காற்று!
நாற்றுவழி பயிரதுவே நற்கால உணர்வூற்று!
ஏற்றமதின் எழிலுருவே எதிர்கால வழிகாட்டு!
ஆற்றுப்பெருக்காலே அரும்விடும் வளவாழ்வு!
சோற்றுப் பெருக்கால் தான் சுடர்காம் சுகவாழ்வு!
ஆற்றல் அனைத்துமே அடங்கிவிடும் இதனுள்ளே!
மனிதன் மாண்புபெற மனஒழுக்கம் வழிவாழ்வு!
புனிதம் புவனம்பெற பொற்காலம் அதன்வரவு!
இனிதாய் வாழ்வதெல்லாம் இதயத்தின் வளர் வாழ்வு!
அணிசேர் அமைவதற்கு அடிப்படை அறவாழ்வு!
கணிசமாய் முன்னேற முன்ப்பின் நினை வாழ்வு!
நனிசேர் நலம்பெறவே நம்புவதே இதன் ஆக்கம்!
அவனியெங்கும் சுற்றிவர ஆசையுண்டு – ஆனாலும்
ஆணிவேராய் முயற்சித்தால் – அதுகூட நிகழ்வாகும்!
பவனிவந்து பதவியிலே அமர ஆசை அதிகமுண்டு
படித்தரத்தில் பளிச்சிட்டால் அது கூட இலகுதான்!
துடிப்புடனே செயல்பட்டு தூயபணி தொடர்ந்திட்டால்
தூணாக இருந்திடலாம் தூயவர்வழி வாழ்ந்திடலாம்.
அவனியிலே வாழ்ந்தோர்கள் ஆற்றலுற்றோர் வெற்றிப்பெற்றார்
அன்பின் அரவணைப்பில் அகம் கண்டோர் சுகம் கண்டோர்!
நவமணியாய் நாடுபோற்ற நற்பணியே வழிகாட்டும்!
நல்லதையே செய்யும் எண்ணம் வல்லமையாய் விழிக்காட்டும்!
வல்லமையாய் வாய்மைநின்றால் வளர்ந்துவிடும் தூய்மை எண்ணம்.
பொல்லாத குணம் விட்டால் புகுந்திடுமே புகழ் மூட்டம்!
காலத்தை வென்றுவிட காலமும் மனம் வேண்டாம்!
காலம் நம்மைவென்று விடும் கருத்திலே கொண்டிடுவோம்
சீலம் நமதானால் செழிப்பு வரும் தன்னாலே!
கோலம் குணமானால் கோலோச்சி வாழ்ந்திடலாம்!
நீலநிறம் வானம் எனில் நம்பினால் சிலநொடியில்
நீந்திவரும் பல நிறங்கள் – பார்த்திடுவோம் இதுதான் உலகம்!
– முஸ்லிம் முரசு டிசம்பர் 2015