தாயைவிடக் கருணையுள்ள இறைவன் தனக்கு இணைவைப்பதற்காக தண்டிப்பாரா?
சகோதரர் செங்கிஸ்கானின் அழகான விளக்கம்
இறைவனுக்கு இணை வைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்பதை நாம் எடுத்துக் கூறிய போது ஒரு சகோதரர்,
“தாயைவிடக் கருணையுள்ள இறைவன் தனக்கு இணைவைப்பதற்காக தண்டிப்பாரா? இது முரணாக இருக்கிறதே!” என்று கேட்டார்.
தன்னை வணங்காவிட்டாலும் இந்த உலகில் அவனுக்கு தேவையான உணவை, நீரை, காற்றை வாழ்வாதாரங்களை வழங்குவதில் தாயினும் கருணை காட்டும் இறைவன்!
நியாயத் தீர்ப்பு நாளில் தான் வகுத்த விதிக்கு கட்டுப்பட்டு தீர்ப்பளிக்கும்நீதிபதியாக இருக்கிறான்!
மகன் குற்றவாளி என்பதனால் நீதிபதியான தாயிடம் கருணை காட்ட சொல்வது சரியாகுமா?
வீட்டில் தாயாக கருணை காட்டுவார்!
கோர்ட்டில் அவர் நீதிபதி!
அது போன்று ஆசிரியராக இருக்கும் தாயிடம் வீட்டில் கருணை காட்டுவது போல் பள்ளியில் விதியை மீறிய, தேர்வில் தோல்வியுற்ற மகனிடம் கருணையோடு நடந்தால் அவரை நல்ல ஆசிரியர் என்போமா?
அது போலத்தான் இறைவன் இவ்வுலகில் தாயைப்போல் கருணையாளனாக காத்து உணவளித்தாலும், நியாயத் தீர்ப்பு நாளில் கண்டிப்பான நீதிபதியாக நடந்து கொள்வான்!
மேலும்,
இணைவைப்பு விஷயத்தில் தாய் மகன் என்பதை விடுத்து கணவன் மனைவியாகப் பாருங்கள்!
நாம் நம்முடைய மனைவியைப் படைக்கவில்லை! அவரது பிறப்பிலோ வளர்ப்பிலோ நமக்கு எந்தப் பங்கும் இல்லை! இன்னும் சொல்லப் போனால் திருமணத்துக்கு முன்பு வரை அவரை நமக்குத் தெரியாது!
ஒரு உடன்படிக்கை மூலம் இருவரும் கணவன் மனைவி ஆகிறோம்!
இதற்கே என்னுடைய இடத்தை நீ யாருக்கும் கொடுக்க கூடாது என்கிறோம்!
பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு மனைவி பூவோ, புடவையோ வாங்கி கேட்டால், பூதானே, புடவைதானே என்று அதை அனுமதிப்போமா?
வேலைக்காரியை தன கணவனுக்கு பணிவிடை செய்வதை எந்த மனைவியாவது அனுமதிப்பாரா?
பூவோ, புடவையோ, பணி விடையோ அல்லது வாகனத்தில் அழைத்து செல்வதோ இங்கு பிரச்சனை இல்லை! பிரச்சனை யாதெனில் என்னுடைய இடத்தை பிறருக்கு கொடுக்கக் கூடாது என நினைக்கிறோம்! ஆனால் கருவிலே இருந்து உருவாக்கி உணவளித்து காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு அவனது கால் தூசி பெறாதவற்றை இணையாக்குகிறோம்!
எப்படி இறைவன் அதை ஏற்றுக் கொள்வான்?
நீங்கள் அனைத்தையும் வழங்கி அன்பு செலுத்தும் உங்கள் மகன் உங்களை அப்பா என்று அழைக்க விட்டாலும் பரவாயில்லை!
தெருவிலே செல்லும் ஒரு பிச்சைக்காரனை அப்பா என மரியாதை கொடுத்து உங்களைப் புறக்கணித்தால்?
உங்களது அனைத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு உங்கள் மனைவி ஒரு குஷ்டரோகி பிச்சைக் காரனை அழைத்து வந்து கட்டிலிலே உங்கள் கண் முன்னால் கவுரவித்தால்?
இந்த நிலைதான் இறைவனுக்கு இணை வைக்கும் நிலையும்!
அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை என நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, புகாரி : 5223)
படைத்தவனை விட்டு படைப்பினங்களை வணங்கும் போது இறைவன் கோபமடைகிறான். அதனால் தான் அனைத்து பாவங்களையும் மன்னிக்கும் இறைவன் தனக்கு இணைவைப்பதை மட்டும் மன்னிக்க மாட்டேன் என்கிறான்.
”அழகிய விளக்கம் பாய்! நன்றி பாய்!” என கூறி அல்குர்ஆனை பெற்று விடை பெற்றார்.
அல்ஹம்து லில்லாஹ் !
-செங்கிஸ் கான் (ரஹ்மத்துல்லாஹ்), சென்னை அண்ணா சாலை தஃவாவின் போது