முஸ்லிம் நண்பர்களுடன் என் இரத்த பந்தம்! -பேராசிரியர் மார்க்ஸ்
மழை வெள்ள அபாயத்தின்போது முஸ்லிம் தோழர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் ஆற்றிய பணியை உலகே பாராட்டுகிறது.
சுனாமி அழிவுகளின் போதும் கடற்கரையோரங்களில் அவர்களின் தொண்டை நான் நேரில் பார்த்துள்ளேன். அவர்களின் தொழுகைத் தலங்களில் அனைத்தையும் இழந்த மக்கள் வாழ்ந்திருந்ததையும், அவர்களின் கபருஸ்தா்ன்களில் யாருமற்ற அனைத்து மதத்தினரையும் புதைக்க அனுமதித்ததையும், வீடிழந்தவர்களுக்கு அவர்கள் வீடுகள் கட்டித் தந்ததையும் நேரில் பார்த்தவன் நான்.
சென்ற டிச 23 மதியம்தான் செட்டிநாடு மருத்துவ மனையில் இருந்த என் மனைவிக்கு ஆஞ்சியோ செய்து பார்த்து அடுத்த நாள் ஆபரேஷன் செய்யத் தடையில்லைா என்றார்கள். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தள்ளினால் அடுத்தடுத்து கிறிஸ்துமஸ் முதலான விடுமுறைகள். அதுவரை அறுவை சிகிச்சையைத் தள்ளிப் போட இயலாத நிலையில் மனைவி.
எங்கள் மருத்துவர் என்னை அழைத்து நாளையே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். “ஓ நெகடிவ்” இரத்தம் இரண்டு யூனிட்கள் தேவை. நமது மருத்துவ மனையில் தற்போது கைவசம் இல்லை என்றார்.
நெகடிவ் ரத்தம் அபூர்வம் என்பதால் யாரும் அதை சேமித்து வைப்பதில்லை (அதிக நாள் பயன்படுத்தாமல் இருந்தால் பயனற்றுப் போகும் என்பதால்).. இந்திராகாந்திக்குக் கடைசி நேரத்தில் ஊட்ட ஓ நெகடிெவ் இரத்தம் கைவசம் இல்லாதது அவரைக் காப்பாற்ற இயலாமற் போனதற்கான காரணங்களில் ஒன்று என ஒரு கருத்து உண்டு.
ஒரு கணம் திகைத்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. உடனடியாக எனக்கு நினைவுக்கு வந்தது முஸ்லிம் நண்பர்களின் இரத்ததான சேவைதான்.
அவர்களின் பல இரத்ததான நிகழ்ச்சிகளில் நான் கலந்துள்ளேன். இரண்டு மாதங்களுக்கு முன் நாச்சியார் கோவிலில் இந்தியன் தவ்ஹீத் ஜமாத் நடத்திய முகாம் ஒன்றைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
சிறிது நேரத் தயக்கத்திற்குப் பின் பாபுலர் ஃப்ரன்டின் அப்துல்ரசாக், இந்தியன் தவ்ஹீத் ஜமாத்தின் நண்பர் முஹம்மது ஷிப்லி, தமுமுகவின் தமீம் அன்சாரி, ம.ம,கவின் பேரா. ஹாஜா கனி, இயக்குனர் அமீர் அப்பாஸ், ஆளூர் ஷா நவாஸ் முதலியோுருக்குப் போன் செய்தேன். தொடர்பில் கிடைத்த அனைத்து நண்பர்களும் உடனடியாகப் பதிலளித்ததோடு ஒன்றும் கவலைப்படாதீர்கள் எனத் தைரியமும் அளித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நண்பர், “ஒரு கவலையும் படாதீர்கள் புரஃபசர். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” எனச் சொல்லி அடுத்த சரியாக ஒருமணி நேரத்திற்குள் ஒரு இரத்தக் கொடையாளியை அனுப்பினர். அவர் ஒரு இந்து நண்பர் என்பதும் ஐ.டி ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கன.
அடுத்த ஒரு மணி நேரத்தில் நண்பர் ஷிப்லி இன்னொரு கொடையாளியுடன் வந்தார். தொடர்ந்து என்னுடன் பேசிக் கொண்டிருந்த தமிமுன் அன்சாரி, அப்துல் ரசாக் ஆகியோருடன் தொடர்பு கொண்டு தேவையான உதவி கிடைத்துவிட்டது என்றேன். அப்படியும் எஸ்டிபிஐ தோழர்கள் உதவ ஓடோடி வந்தனர்.
பேரா. ஜவாஹிருல்லாஹ் போன்றோரை நான் அந்த நேரத்தில் தொந்தரவு செய்ய விருமபவில்லை. அதற்குள் உரிய உதவிகள் கிடைத்ததால் பின்னரும் தொந்தரவு செய்ய வில்லை. செய்திருந்தால் அவுர்களும் ஓடோடி வந்திருப்பர்.
இரத்தம் அளித்த நண்பர்களுக்குப் பின் தொடர்பு கொண்டு நன்றி சொன்னே்ன். அவர்களுக்கு நான் அன்றிருந்த பதட்ட நிலையில் ஒரு தேநீர் கூட வாங்கித் தரவில்லை.
எனக்கும் முஸ்லிம் நண்பர்களுக்குமான உறவு இரத்த பந்தமாகியது நான் பெற்ற பெரும் பாக்கியம்.
-பேராசிரியர் : மார்க்ஸ்
Marx Anthonisamy