இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இன்றைய மீலாது விழாக்கள்!
முஹிப்புல் இஸ்லாம்
பிறந்த தின விழாவெடுப்பதா…? அல்லது துக்கம் அனுஷ்டிப்பதா….?
பிறந்த தினம் விழாவாகக் கொண்டாடப் படுவது கிறித்தவர்கள் வழக்கம்.
மரித்த தினத்தில் துக்கம் அனுஷ்டிப்பது ஹிந்துக்கள் வழக்கம்.
மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதயமாகிய மாதம் ரபியுல் அவ்வல்.
மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரித்ததும் அதே மாதத்தில் பிறந்த அதே தினத்தில்!
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததும், இறந்ததும் ஒரே தினத்தில்தான் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. இன்றைய முஸ்லிம்கள் இந்த தினத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதயதினமாக -பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததும் இறந்ததும் ஒரே தினத்தில்தான் என்றால் அந்தத்-தினத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடுவதா…? அல்லது அந்தத் தினத்தில் துக்கம் அனுஷ்டிப்பதா…?
அந்த தினம் பிறந்த தினம் என்று பிரமாதப் படுத்தப்படும் அதே நேரத்தில் மரித்த தினம் என்பது இருட்டடிப்புச் செய்யப்படுவதேன்?
பிறப்பும்-இறப்பும் ஒரே தினத்தில் நிகழ்ந்திருக்க, அந்தத் தினத்தைப் பிறந்த தினமாக மட்டும் பாவிப்பது எத்தனை அபத்தமானது என்பதை என்னருமை முஸ்லிம் சமுதாயமே சித்தித்துப்பார்ஸ! மேலோட்டமாக அல்ல! ஆழ்ந்து சிந்தித்துப்பார்ஸ!
சாதாரண சேவைகள் செய்தவர்களையும் அவர்கள், இறந்த நாளில் தான், இன்றைய உலகம் நினைவு கூறுகிறது. அதனடிப்படையில் அந்தத் தினத்தைத் துக்கத் தினமாய் பாவிப்பது பிறந்த தினமாய் பாவிப்பதைக் காட்டிலும் சாலச் சிறந்தது என்பதை சாதாரண சாமான்யரும் எளிதாய் உணர முடியும். ஆனால் இன்றைய முஸ்லிம்கள், அந்தத் தினத்தைப் பிறந்த தினமாய் மட்டும் கொண்டாடுவதிலிருந்தே, இது ஏதோ சுயநல நோக்குடன் இந்தச் சமுதாயத்திற்குள் நுழைவிக்கப்பட்டுள்ளது. திணிக்கப்பட்டுள்ளது என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
பிறந்த தினமாய் பாவிப்பதில் உள்ள வசதி, மரித்தத் தினமாய் பாவிப்பதில் இல்லை, என்பதை உணர்ந்தே…
இந்த தினம் இந்தச் சமுதாயத்திற்குப் பிறந்த தினமாய் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிறந்த தினம் என்றால் இஷ்டப்பட்ட வேடிக்கை விளையாட்டுக்கள், அணி வகுப்புகள், இசைக் கச்சேரிகள், ஊர்வலங்கள், விருந்து கலரிகள், நம்மவர்களிடம் இன்றைய நடைமுறையில் காணப்படும் எண்ணற்ற கூத்துகள், கும்மாளங்கள் இடம்பெறச் செய்யலாம். ஆனால் துக்கம் அனுஷ்டித்தால் மேற்கண்டவைகளை இடம் பெறச் செய்யவியலாது என்பதை நன்குணர்ந்த இந்த சுயநலமிகள், அந்தத் தினத்தைத் துக்கத் தினமாய் அறிமுகப்படுத்தவில்லையென்பதை, இதை ஆழ்ந்து படிக்கும் சகோதர சகோதரிகள் முதற்கண் ஊன்றி உணர வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
பிறந்ததும், இறந்ததும் ஒரே தினத்தில் என்பதால், பிறந்த நேரத்தைக் கணக்கு வைத்து அந்த நேரத்தில் பிறந்த தினம் கொண்டாடுவதும், இறந்த நேரத்தைக் கணக்கு வைத்து, அந்த நேரத்தில் துக்கம் அனுஷ்டிப்பதும் கூடுமா? என்றொரு கேள்விக்கணை ஈண்டு இயற்கையாக எழுதுவதும் தவிர்க்க இயலாததாகி விடுகிறது.
பிறந்த தினம் விழாவாகக் கொண்டாடப் படுவது கிறித்தவர்கள் வழக்கம்.
மரித்த தினத்தில் துக்கம் அனுஷ்டிப்பது ஹிந்துக்கள் வழக்கம்.
இதிலிருந்து இவ்விரண்டும் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டச் சடங்கு, சம்பிரதாயங்கள் என்பது தெளிவு!
பிறந்த தினத்தை விழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை முஸ்லிம்கள் கிறித்தவர்களிட மிருந்து இறக்குமதி செய்துள்ளனர் என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகிறது.
முஸ்லிம்கள் இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினத்தை விழாவாகக் கொண்டாடுவதன் பின்னணி எது?
முஸ்லிம்கள் இந்தப் பிறந்த தினத்தை எப்படிக் கிறித்தவர்களிடமிருந்து கடன் வாங்கினார்கள்? காப்பியடித்தார்கள்.
2. மீலாது விழா எப்போது யாரால் ஏன் கொண்டாடப்பட்டது?
முஸ்லிம் சமுதாயத்தில், ஹிஜ்ரி 600 வரை வழக்கிலில்லாத ஒரு நூதன செயல்தான் “மீலாத் விழா’!
இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலோ, நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்கள் காலத் திலோ, அல்லது மற்ற சஹாபாக்கள் காலத் திலோ, மதஹபுடைய நற்பெரும் இமாம்கள் காலத்திலோ வழக்கிலில்லாத ஒரு புதிய நடை முறைதான் இந்த மீலாத் விழா.
ஹிஜ்ரி 600ஆம் ஆண்டிற்குப் பின் மாற்றாரின் வழக்கங்களை இஸ்லாத்தில் திணிக்க எகிப்திய முஸ்லிம்களில் பலர் தங்கள் நாட்டு அரசராகிய இர்பால் என்பவரிடம் கிறித்துவர்கள் இயேசு கிறித்துவின் (ஈஸா(அலை)) அவர்களுக்கு விழா கொண்டாடுகிறார்கள். நாமும் நமது நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடியே தீரவேண்டும் என்ற அன்பு வேண்டுகோளுக்கிணங்கித் துவக்கி வைக்கப்பட்ட விழாதான், இந்த மீலாத் விழா. “ஹிஜ்ரி 600ஆம் ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்த விழா பற்றிய செய்தி வரலாற்றில் காணப்படவில்லை.
ஹாபீஸ் ஜலாலுத்தின் சுயூத்தி, தாம் எழுதிய நூலில் “அர்பெல்’ நாட்டு அரசரே இதனைத் துவக்கி வைத்தவர் என்று கூறுகிறார். புகழ் மிக்க வரலாற்றாசிரியர் இப்னு கல்லிக்கானும் தம் நூல் ஒன்றில் இந்த அரசரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த அரசர் இந்த விழா கொண்டாடிய விதம் பற்றியும் விரிவாக விளக்குகிறார்”.
“இஸ்லாமிய பெருநாட்கள்’ (முஹம்மது முஸ்தபா பக்கங்கள் 14,15,16)
ஹிஜ்ரி 600க்குப் பின்னர்தான் இந்த மீலாத் விழா முஸ்லிம் சமுதாயத்திற்குள் நுழைந்துள்ளது என்பதற்கு மேற்கண்ட ஆதாரம் போதிய சான்றாக அமைகிறது.
“ஃபாத்திமிய வம்சத்து கலீஃபாக்களால் இது வேறு விதமாய்க் கொண்டாடப்பட்டது. ஃபாத்திமியர்கள் நடத்திய விழாவில் பொது மக்கள் பங்கு கொள்ளவில்லை. அரசாங்க அதிகாரிகளும், மார்க்கப் பெரியார்களுமே(?) அதில் அதிகம் கலந்து கொண்டனர். ஃபாத்திமியர்கள் இதனைப் பகலில் கொண்டாடினர்”. –“இஸ்லாமிய பெருநாட்கள்’ (முஹம்மது முஸ்தபா பக்கங்கள் 14,15,16)
பொதுமக்கள் பங்கேற்க இரவு காலங்களில் மவ்லித் ஓதுதல், விருந்து கொடுத்தல் போன்ற சடங்குகள், அர்பெல் நாட்டு அரசர் கொண்டாடிய மீலாத் விழாக்களில் இடம் பெற்றிருந்தன. இனிப்பு வழங்குதல், சொற்பொழிவாற்றுதல் இவ்விரண்டும் மேற்கூறிய, இருசாரார் கொண்டாடிய விழாக்களிலும் அங்கம் வகித்தன. இன்றைய மீலாத் விழாக்களுக்கு வித்திட்டவை, இவ்விரு சாரார் கொண்டாடிய மீலாத் விழாக்கள் என்ற பேருண்மை இன்றளவும் தமிழ் முஸ்லிம்களுக்கு முன் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மைஸ!
அன்பிற்குரிய முஸ்லிம் சகோதர, சகோதரிகளேஸ! ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள்!
நாம் காலங்காலமாய் வாழையடி வாழையாக கொண்டாடி வரும் இந்த மீலாத் விழா பிறப்பெடுத்த விதத்தை நம் சமுதாயம் நன்குணர வேண்டுமென்பதற்காக மேற்கண்ட வரலாற்று உண்மையை விரிவாக எடுத்துக் காட்டியுள்ளோம்.
இதை நினைவிலிருத்தி இதன் பின்னர் வரும் விளக்கங்களையும் ஊன்றிப் படித்து நமது சமுதாயம் உண்மையை உள்ளது உள்ளபடி உய்த்துணர வேண்டுமென்பதே நமது நோக்கம்! அதற்கு இறையருள் புரியட்டும். எகிப்தில் துவங்கிய இம்மீலாத் விழா சிறுக சிறுக முஸ்லிம் உலகை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. இவ் விழாக்களில் முதன்முதலில் இடம் பெற்ற சடங்கு, சம்பிரதாயங்கள் (முன்னர் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது) எல்லா இடங்களுக்கும் குடியேறியது. அத்துடன் உலகில் எல்லா பகுதிகளிலும் அந்தந்த நாட்டின் கலாச்சார, பழக்க, வழக்கங்கள், காலச் சூழ்நிலைகள், இவற்றை அனுசரித்து பல்வேறு புதிய நடை முறைகளும் அவ்வப்போதுத் திணிக்கப்பட்டும், நுழைக்கப்பட்டும், நாட்டுக்கு நாடு, இந்த விழா கொண்டாடப்படும் விதத்தில் சிற்சில வித்தியாசங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன என்றாலும் எல்லா இடங்களிலும் மீலாத் விழா என்ற பெயரிலேயே இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரி 600ஆம் ஆண்டு வரை அறியப்படாதது. 600க்குப் பின் கிறித்தவர்களிடமிருந்து முஸ்லிம்களால் அப்பட்டமாய்க் காப்பியடிக்கப்பட்ட, இறக்குமதி செய்யப்பட்ட, இந்த மீலாத் விழாக்கள், இஸ்லாமிய கொள்கைகள், செயல்களை வரையறை செய்யும் திருகுர்ஆனுக்கும், திருநபி வழி முறைக்கும் உட்பட்டதாஸ? அப்பாற்பட்டதாஸ? என்பதை உணர்வது ஒவ்வொரு முஸ்லிமின் தலையாய கடமையாகும்ஸ.!
மாற்றாரிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட வழக்கங்கள் மார்க்கமாகுமா?
யூத, கிறித்துவர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் களுக்கும் எதிரிகள். இஸ்லாத்திற்கு எதிரானவை களை, முஸ்லிம்களுக்கு நன்மை, புண்ணியம் என்று கற்பித்துக் கொடுத்து நம்பவைத்து முஸ்லிம்களை வழி கெடுக்க அல்லும் பகலும் அயராது உழைப்பவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் (ஜல்) வழங்கிய, அசல் நெறிநூல்(தவ்றாத்) களையே தங்கள் இஷ்டம் போல் புரட்டியவர் கள். இல்லாதவைகளைத் திணித்தல், இருப்ப வைகளை அழித்தல், உண்மைகளை சிதைத்தல், பொய்கள் புனைந்துரைத்தல், இல்லாத, இட்டுக் கட்டப்பட்ட கட்டுக்கதைகளை உருவாக்குதல், நெறி நூல்களின் உண்மைப் பொருளை மாற்றி தங்கள் இஷ்டம் போல் திரித்தல், அல்லாஹ் ஒருவனே வணங்குதற்குரிய ஒரே இறைவன் என்ற ஏகத்துவ கொள்கையைப் பல தெய்வ உருவ வழிபாட்டிற்கு மாற்றியமைத்தல் போன்ற எண்ணற்ற மோசடிகளைத் தங்கள் மார்க்கத் தின் பெயரால் துணிந்து செய்பவர்கள் என்று இந்த யூத கிறித்தவர்களின் மோசடிகளைக் கடுமையாக விமர்சிக்கிறான் அல்லாஹ் (ஜல்) திருகுர்ஆனில் பல்வேறிடங்களில். அவை மூலம் அவர்களின் யூத-கிறித்தவர்களின் மோச டிக்கு நாம் பலியாகிவிடக் கூடாதென்று நம்மை எச்சரிக்கிறான்.
அல்லாஹ்(ஜல்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கற்பித்துக் காட்டித் தராத எந்த செயலையும் நன்மையென்று இஸ்லாம் அங்கீகரிக்குமாஸ? என்பதை என்னரும் முஸ்லிம் சமுதாயமேஸ சிந்தித்துப் பார்ஸ! அதுவும் அல்லாஹ்வின் பகைவர்களில் ஒரு சாராரென்று திருகுர்ஆனில் பகிரங்கமாய் பிரகடனப்படுத்தப்பட்ட கிறித்தவர்களிட மிருந்து அப்பட்டமாகக் காப்பியடிக்கப்பட்டுள்ள.. இந்த மீலாத் விழாக்களை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளுமாஸ?
கிறித்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்த மீலாத் விழாக்களுக்கு இஸ்லாமிய வர்ணம் பூசத் தொடங்கி கடந்த சுமார் 832 வருடங்களாக வெகு விமரிசையாக மீலாது விழாக்களை நடத்தி வருகின்றனர். முஸ்லிம்கள் தங்களின் வழிகாட்டிகளாகப் பெரிதும் நம்பி இருக்கும் இந்த மவ்லவிகள்(?) இந்த மீலாது, விழாக்கள் மூலம் கைநிறையக் காசு வருகிறது என மகிழ்ந்திருக்கிறார்களே அல்லாமல், நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து 600 வருடங்கள் கழித்து மார்க்கத்தில் புகுத்தப்பட்டது எப்படி மார்க்கமாகும்?”
5:3ல் மார்க்கம் நிறைவு பெற்று விட்டது என்றும் 3:19ல் அல்லாஹ்வால் நிறைவு செய்யப்பட்ட இஸ்லாம் மார்க்கம் மட்டுமே அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் என்றும் 3:85ல் அல்லாஹ்வால் முழுமைப்படுத்தப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாம் மார்க்கம் விட்டு, மீலாது, மவ்லூது என சேர்க்கப்பட்ட மார்க்கம் அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்படாது. மேலும் இப்படிப்பட்ட பித்அத்களைப் புகுத்தியவர் மறுமை நாளில் நஷ்ட மடைந்தோரில் இருப்பர் என்று அல்லாஹ் கூறி இருப்பது முஸ்லிம்களின் கவனத்திற்குரியது. நபி(ஸல்) அவர்களும் புதிதாக உண்டாக்கப்படும் பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும்” என்று கடுமையாக எச்சரித்திருப்ப தையும் கவனத்தில் கொண்டு இனிமேலாவது இந்த பித்அத்துகளைத் தவிர்ப்போம்.