ஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்டுவோம்!
இஸ்லாமிய மாதங்களில், வருடம் இரண்டு நாட்களை நாம் சங்கை பொருந்திய பெருநாட்களாக கொண்டாடி வருகிறோம். ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையை நோன்புப் பெருநாளாகவும், துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது பிறையை ஹஜ்ஜுப் பெருநாளாகவும் நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.
ஹஜ்ஜுப் பெருநாள் என்றதுமே நமக்கு இரண்டு நபிமார்களைப் பற்றி நினைவிற்கு வரும். அல்லாஹ்வின் உற்ற தோழர் என்ற கருத்தில் அழைக்கப்படும் “கலீலுல்லாஹ்” என்ற பெயருக்கு சொந்தக்காரரான நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களின் அருமை மகனார் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் நம் நினைவில் நிற்கும் அந்த இரண்டு நபிமார்களாவர்.
அல்லாஹ்வின் அருள்மறையாம் திருகுர்ஆனை கருத்தூன்றி ஆராயும்போது நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தியாக வாழ்வு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அற்புத வரலாறாகும்.
நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும், துயரங்களையெல்லாம் அவர்கள் பொறுமையுடன் சகித்திருந்து இறைவனிடம் பிரார்த்தித்து வெற்றி பெற்ற வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும்.
நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளைச் சுருக்கமாக பார்ப்போம்.
எல்லாம் அறிந்த இன்றைய காலகட்டத்தில் ஏகத்துவம் ஏகத்துவவாதி என்று சொன்னால் ஒரு ஏளனமாக பார்க்கும்போது, 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏகத்துவத்தை உறக்க சொன்ன உத்தமர் நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். ஆகவே தான் நாம் ஏகத்துவத்தின் தந்தை என்று நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைக்கிறோம்.
ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும் போது ஊரில் உள்ள ஜமாத்து எதிர்த்தால், தெருவில் உள்ள சங்கம் எதிர்த்தால், சொந்தங்கள் எதிர்த்தால், நாம் பொறுத்துக் கொள்வோம், சகித்துக் கொள்வோம். ஆனால் நரகத்துக்கு செல்லாமல் இருக்க நம்முடைய தாய் தந்தையருக்கு ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லி அவர்கள் அதனை ஏற்காவிட்டால் நாம் எத்தகைய வேதனைப் படுவோம். அது போல் அருமை நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் தந்தைக்கு ஏகத்துவத்தை எடுத்துரைக்கிறார்கள் வேதனையடைகிறார்கள்.
“என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செம்மையான நேர்வழியில் நடத்துகிறேன். “என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன். “என் அருமைத் தந்தையே! நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனைவந்து உங்களைத் தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன்” (என்றார்). (அதற்கு அவர்) “இப்றாஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார். (அதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார். நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்; மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் நிர்ப்பாக்கியவானாகாமல் இருக்கப் போதும்” (என்றார்). (குர்ஆன் 19:43 – 19:48)
ஏகத்துவத்தை தன் தந்தைக்கு எடுத்து வைத்த இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உங்களுக்கு முன்மாதிரி என்று அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்.
“இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது, தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம், அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது, ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்); “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,” (குர்ஆன் 60:4)
(நபியே!) பின்னர் “நேர்மையாளரான இப்றாஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்” என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை.(குர்ஆன் 16:123)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் நம்முடைய தலைசிறந்த மூதாதையர்களில் முன்னணியில் இருப்பவர்கள் தான் நம் அருமை நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
நமது உயிரினும் இனிய நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபி இபுறாஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். (மேலும் பார்க்க அல்குர் ஆன் 3:95)
நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வயது முதிர்ந்த பருவத்தில் அந்த தம்பதியர் அவர்கள் இருவருக்கும் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் என்னும் அழகிய குழந்தை பிறக்கிறது. (மேலும் பார்க்க அல்குர்ஆன் 14:39)
தவமிருந்து கிடைத்த பொக்கிஷமாக நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் இவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்கள் தான் நம்முடைய ரஹ்மத்துலில் ஆலமீன் அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழியைப் பின்பற்றுமாறு அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கட்டளையிடுகிறான் (மேலும் பார்க்க அல்குர்ஆன் 3 : 95)
நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை வருகிறது, அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், பால்குடி பச்சிளம் குழந்தை நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் மக்காவின் மானுட புழக்கம் இல்லாத அந்த வெட்டவெளி பாலைவனத்தில் விட்டுச் செல்லும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். நபி (இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம்) அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக எவ்வித மறுதலிப்பின்றி அன்றைய மக்கா பிரதேசத்தை விட்டுச் செல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.
அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்கிறார்கள் “பச்சை பயிர்கள் அற்ற இந்த வரண்ட பூமியில் என்னை விட்டு விட்டு எங்கே செல்கிறீர்கள்” இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் மீண்டும் “அல்லாஹ் கட்டளையிட்டானா?” என்றும் கேட்கிறார்கள், அதற்கு இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “ஆம் அல்லாஹ் தான் இப்படி விட்டு விட்டுப் போகச் சொன்னான்” என்று பதிலுரைத்தார்கள்.
உடனே அந்த ஈமானியத் தாயிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் என்றும் நினைவில் கொள்ள வேண்டியவை. “அப்படியானால் அல்லாஹ் எங்களைக் கை விடமாட்டான்” என்று தன்னுடைய ஈமானின் உறுதியை கியாம நாள் வரை மக்களும் சொல்லும் விதமாக அந்த தியாகப் பெண்மணி அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள். பின்னர், அல்லாஹ்வே அன்னை ஹாஜராவுக்கும், நபி இஸ்மாயீலுக்கும் (அலைஹிஸ்ஸலாம்) உணவளித்தான். ஸஃபா-மர்வா மலைக் குன்றுகளுக்கு இடையே அன்னை ஹாஜரா அவர்கள் தண்ணீருக்காக அங்குமிங்கும் ஓடினார்கள், அல்லாஹ் ஜம்-ஜம் என்ற நீரூற்றை வரவைத்து, இவ்வுலக இறுதி நாள் வரை அன்னை ஹாஜராவின் ஈமானை ஞாபகப்படுத்தும் விதமாக செய்துள்ளான். (மேலும் பார்க்க புகாரி:3364 Volume :4 Book :60)
அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மேல் வைத்திருந்த நம்பிக்கை, அவர்களின் ஈமானிய உறுதியில் சிறிதளவேனும் நம்மிடம் ஈமானிய உறுதி அல்லாஹ் மேல் முழு நம்பிக்கையாக இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தீனை எத்திவைக்க இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக ஒரு ஆண் வேறு ஊருக்கு செல்ல நினைத்தால், நம் தாய் தந்தையர்கள், மனைவிமார்களிடம் அன்னை ஹாஜரா ஈமானிய உறுதியுடன் சொன்னது போன்ற வார்த்தையை எதிர்ப்பார்க்க முடியுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மனைவி அன்னை ஹதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சொன்ன ஆறுதல் வார்த்தைகளைப் போன்று நாம் செவியுற முடியுமா?
பொருளாதாரத்தில் இலட்சங்கள் செலவு செய்து கடமையான ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கு செல்கிறோம், அங்கே ஜம்-ஜம் நீரையும் பருகுகிறோம் அதனை ஊரில் இருக்கும் சொந்தங்களோடு பகிர்ந்து கொள்ளவும் எடுத்து வருகிறோம், அந்த தருணத்தில் ஈமானிய தாய் அன்னை ஹாஜரா அவர்கள் செய்த தியாகத்தை எண்ணி அவர்கள் பட்ட கஷ்டத்திற்காக என்றைக்காவது நாம் கண்ணீர் சிந்தியிருப்போமா? தன்னுடைய ஈமானின் உறுதியோடு தன் மகனின் உயிரைக் காப்பாற்ற போராடிய போராட்டத்தால் கண்டெடுத்த ஜம்-ஜம் தண்ணீரை ஒரு புனித நீராக மட்டுமே காண்கிறோமே, அதை அல்லாஹ்வுக்காக செய்த தியாகத்தின் ஒரு அத்தாட்சியாக நாம் கண்டு அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஈமானிய உறுதியை நினைவு கூர்ந்து நம்முடைய ஈமானை வலுப்படுத்த முயற்சித்திருப்போமா?
ஈமானைச் சோதனை செய்து பார்க்க நம்முடைய முன்னோடி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மீண்டும் அல்லாஹ்வின் கட்டளை வருகிறது, தன்னுடைய மகனை அல்லாஹ்வுக்காக அறுத்து பலியிட வேண்டும் என்ற கட்டளை வருகிறது.
வயது முதிர்ந்த பருவத்தில் கிடைத்த பொக்கிஷம், நீண்ட காலம் தன் மனைவியையும், மகனையும் பிரிந்திருந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். தன்னுடைய மகனை அறுத்து பலியிட தயாராகிறார்கள் தந்தை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தன் அருமை மகன் இஸ்மாயிலிடம் கேட்கிறார்கள், “அல்லாஹ் உன்னை அறுத்து பலியிட கட்டையிட்டுள்ளான் என் அருமை மகனே உன்னுடைய நிலை என்ன?” அதற்கு இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “எனதருமை தந்தையே அல்லாஹ் ஏவியதை நீங்கள் செய்யுங்கள், என்னை பொறுமைசாலியாக காண்பீர்கள்” என்று தன்னுடைய ஈமானின் உறுதியை உலகுக்கு காட்டிய முன்மாதிரி தியாகத்தின் சுடராகத் திகழ்ந்தார்கள் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
நம்முடைய பிள்ளைகள் மார்க்கச் சூழல் கல்வியோடு உலக கல்வி படிக்க அரபு மதர்ஸாவோடு ஒன்றிணைந்த பள்ளிக் கூடத்திலோ அல்லது வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ படிக்க வைக்க வேண்டும், குறைந்தபட்சம் இந்த தியாகத்தை செய்ய நாம் பல முறை யோசிக்கிறோம், மார்க்க கல்வியை கற்கப்போகும் அந்த பிள்ளையின் எதிர்காலம் என்னவாகும் என்கிற ஒருவித குழப்பத்தோடு தள்ளாடுகிறோம். ஆனால், யூத கிருஸ்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வித் திட்டமான இந்த அற்ப உலக கல்விக்காக கண்டம் விட்டு கண்டம் தாண்டி படிக்க வைக்க உடனே முடிவு செய்து தன் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்பி அனுப்பி வைக்கிறோமே, மார்க்க கல்வியோடு உலக கல்வி பயிலப்போகும் நம் பிள்ளையின் எதிர்காலத்தை அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பான் என்ற நம்பிக்கை ஏன் நம்மிடன் உறுதியாக வர மறுக்கிறது?
எத்தனை ஆடுகள், மாடுகள் உணவுக்காவும், உலுஹியாவுக்காகவும் அறுத்திருப்போம்? எத்தனை விதமான பொட்டலங்களாக அந்த கறியினை பங்கு வைத்திருப்போம்? அவன் இத்தனை ஆடு / மாடு அறுத்திருக்கிறான், நாம் அதைவிட இரண்டு கூடுதலாக அறுக்க வேண்டும், அவன் மாடு கொடுக்கிறான், நான் ஒட்டகம் கொடுக்க வேண்டும் என்று மனிதர்களுக்காக போட்டி போடுகிறோமே, என்றைக்காவது அந்த தியாகங்கள் செய்த தாய் தந்தையரான இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம், ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அருமை மகனார் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் ஈமானிய உறுதியையும் அவர்கள் அல்லாஹ் மேல் வைத்திருந்த முழு நம்பிக்கையையும் ஞாபகப்படுத்திக் கொண்டு ஆடு / மாடு / ஒட்டகம் அறுத்து பங்கிட்டு வைத்திருக்கிறோமா? அதன் மூலம் நம்முடைய ஈமானை உறுதிப்படுத்த முயற்சி செய்திருப்போமா? பங்கு வைத்த கறியில் பற்றாக்குறை என்பதற்காக கடையில் கறி வாங்கி உலுஹிய்யா என்று அல்லாஹ்வை ஏமாற்றி மனிதர்களை திருப்திபடுத்தும் நிலையில் அல்லவா நம்முடைய ஈமான் பலவீனமாக உள்ளது என்பதை என்றைக்காவது சிந்தித்திருப்போமா?
அல்லாஹ்வின் கட்டளையை நம்பி ஈமானிய உறுதிமிக்க அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் போன்றவர்கள் வளர்ப்பில் தான் ஈமானில் உறுதிமிக்க பொறுமைசாலியான இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வின் உதவியால் வளர்த்தெடுக்க முடிந்தது. அல்லாஹ்வின் கட்டளைப்படி நடக்கும் ஈமானில் உறுதிமிக்க தாய் தந்தையின் துஆ மற்றும் அவர்களின் வளர்ப்பால் வளர்ந்த பிள்ளைகள் பொறுமைசாலியாக இருந்து இஸ்லாத்திற்காக தியாகம் செய்யும் பிள்ளையாக அல்லாஹ்வின் உதவியால் வாழ முடியும், இதுவே நாம் பெறும் படிப்பினை.
அல்லாஹ்வின் அடியார்களான இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம், அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம், இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் போன்றோர் தந்தை, தாய், மகன் ஆகியோரின் ஈமானில் நிலைத்த உறுதிக்கு முன்மாதிரியான இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம், அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் வாழ்விலிருந்து படிப்பினை பெற்று நம்முடைய ஈமானை உறுதி படுத்த முயற்சி செய்வோம். நம் சந்ததியரை ஈமானிய உறுதியுடன் இறுதிநாள் வரை நிலைத்திருக்க பக்குவப்படுத்துவோம். அல்லாஹ் நம் எல்லோரையும் ஈமானில் உறுதி மிக்கவர்களாக ஆக்கி அருள்புரிவானாக.
நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வாழ்வில் ஆரம்பம் முதல் முடிவு வரை ஏற்பட்ட துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் நமக்கு ஒரு மகத்தான படிப்பினை இருக்கிறது. அதுதான் எத்தகைய கடும் சோதனை ஏற்பட்டாலும் அல்லாஹ்வை பிரார்த்தித்து பொறுமையுடன் ஐவேளை தொழுகையையும் மேற்கொண்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்பதே அந்த படிப்பினையாகும்.
ஹஜ்ஜுப்பெருநாள் அன்று பெருநாள் தொழுகை முடித்ததும் கடமை முடிந்தது என்று நினைக்காமல் ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனைகளை குறிப்பாக, நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்க்கை பாதையினை நெஞ்சில் நிறுத்தி உறவினர், நண்பர்களிடையே ஒருவருக்கொருவர் உபதேசம் செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் அடியார்களான இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம், அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம், இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் போன்றோர் தந்தை, தாய், மகன் ஆகியோரின் ஈமானில் நிலைத்த உறுதிக்கு முன்மாதிரியான இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம், அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் வாழ்விலிருந்து படிப்பினை பெற்று நம்முடைய ஈமானை உறுதி படுத்த முயற்சி செய்வோம்.
لًبّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاشَرِيْكَ لَك
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீ கலக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃ மத லக்க வல் முல்க் லாஷரீக்க லக்.
பொருள்: இறைவா உன் அழைப்பிற்கிணங்கி இதோ வந்தேன், வந்தேன் இறைவா. உனக்கிணை ஏதுமில்லை வந்தேன் இறைவா!! நிச்சயமாக சர்வ புகழும் எல்லா அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கேதும் இணையில்லை.
இறைவா! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள் மீதும் நல்லருள் புரிவாயாக. நீ இபுறாஹீம் நபி மீதும் அவர்களது கிளையார் மீதும் நல்லருள் புரிந்தவாறு. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள்மீதும் அபிவிருத்தி செய்வாயாக, நிச்சயம் புகழுக்குரியவனும் தலைமையுடையவனுமாக இருக்கின்றாய்.
source: http://adirainirubar.blogspot.in/2015/09/blog-post_17.html