“அல்லாஹ்வை வணங்குதல்” என்ற அடிப்படை கோட்பாட்டிற்காகவே நமக்கு இவ்வுலக வாழ்வு வழங்கப்பட்டிருக்கிறது!
ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்சனை, துயரம், ஏமாற்றம், இயலாமை… போன்ற சோக நினைவுகள் மட்டுமே நம் மனதில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. உண்மையாகவே, இன்பங்களை விட துன்பங்களே நம் வாழ்வின் பெரும் பகுதியை ஏன் ஆக்ரமிக்க வேண்டும்? அதிலும், அடுத்தவரை விட நமக்கே அதிக பிரச்சனை ஏற்பட என்ன காரணம்? மார்க்க புரிதலில் உளவியல் ரீதியாய் ஒரு பதிவு.
“அல்லாஹ்வை வணங்குதல்” என்ற அடிப்படை கோட்பாட்டிற்காகவே நமக்கு இவ்வுலக வாழ்வு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் தொடரும் முன்னர் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்…
அல்லாஹ் : “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது எது?
இப்லிஸ் : “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்”
இந்த உரையாடலின் முடிவில்…
இப்லிஸ்: என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!”
அல்லாஹ் : “நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;” இப்லீஸ் :”என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
அல்லாஹ்வை வணங்கி வாழ்வதற்காக – அதை சார்ந்த வாழ்வியல் நடவடிக்கைகள் ஒருபுறம்.
அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் தூரப்படுத்தும் சைத்தானின் செயல்கள் மறுபுறம்.
இந்த இரண்டிற்கும் மத்தியிலே எவருடைய வாழ்வும் இயங்கிக்கொண்டிருக்கிறது. சைத்தானும் அல்லாஹ்விற்கு மனிதனை மாறு செய்ய வைத்தாக வேண்டும். அதே நேரத்தில் அல்லாஹ் நமக்கு கொடுத்த வாக்குறுதிக்காக நாமும் சைத்தானிற்கு மாறு செய்ய வேண்டும் .
இந்த சுழற்சி நிலை கியாம நாள் வரை தொடர்ந்தே ஆகவேண்டும். கைர், விசயத்திற்கு வருவோம்.
அல்லாஹ்விடமிருந்து நம்மை அப்புறப்படுத்துவதே சைத்தானின் தலையாய மற்றும் ஒரே வேலை. அதற்காக அவன் பல வழிகளை கையாளுகிறான்.
முதன்மையாக, அல்லாஹ்வை வணங்குவதை விட்டு நம்மை திருப்புவது.
உலகியல் கேளிக்கைகளில், பொழுதுப்போக்கு எனும் பெயரில் நேரங்களை வீணடிக்கச்செய்து இறைவனின் பக்கம் நெருங்குவதை சைத்தான் தடை செய்கிறான். சுமார் 75 சதவீகித மக்களை சைத்தான் இந்த வழிகளில் மிக இலகுவாக ஏமாற்றி விடுகிறான்.
முதல்வழி பயனளிக்காதபோது மீதமுள்ள 25 சதவீகித மக்களை வழிக்கெடுக்க சைத்தான் தனது அணுகுறையை மாற்றுகிறான். அல்லாஹ்வை வணங்குவதை தவிர்க்க மனித மனங்களில் அல்லாஹ்வின் அருளின் மீதான நிராசையே ஏற்படுத்த வேண்டும். அதற்கு என்ன வழியோ அதை சைத்தான் இங்கே கையாளுகிறான்.
எந்நிலையிலும் வணங்குவதலை நாம் கைவிடா போது, இறைவனுக்கும் நமக்குமிடையே இடைவெளியே அதிகமாக்க வாழ்வியலில் அதிக குறுக்கீடை ஏற்படுத்துகிறான். உதாரணமாக குடும்ப உறவுகளில் பிரச்சனை, வேலையின்மை, வறுமை, பிணி, கடன், மரணம், இப்படி ஒன்றன்பின் ஒன்றாகவோ இல்லை எல்லாவற்றையுமே அவரவர் மன உறுதிக்கு தகுந்தார்ப்போல் ஏற்படுத்துவான்.
இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கிய விசயம். “நம் ஈமானின் உறுதிக்கேற்பவே சோதனைகளும் இருக்கும்”. ஏனெனில் சோதனைகள் நமது வாழ்விற்கான பரிட்சை. பரிட்சை எனும் போதே நம் தேர்ச்சிகேற்பவே கேள்விகளின் தரமும் உயரும். ஆக சைத்தான் நமக்கு உருவாக்கும் முதல் சோதனையில் நாம் வெற்றியை தழுவினால் அடுத்த கட்டத்தில் அதை தாண்டிய சோதனையோடு காத்திருப்பான்.
இன்னும் எளிதாக நம் வாழ்வியல் நடைமுறையிலிருந்தே இதை விளக்கலாம். ஒருவர் திருடுகிறார் என வைத்துக்கொள்வோம். அல்லாஹ் ஹராமாக்கியும் சைத்தானின் தூண்டுதலினால் செய்கிறார். இந்த இடத்தில் வாழ்க்கை பாடத்தில் தோல்வி தழுவுகிறார். சைத்தான் வெற்றி பெறுகிறான்!
முதற்கட்ட தேர்விலே தோல்வி தழுவிய அவர் அடுத்த கட்ட தேர்வுக்கு போக தகுதியற்றவர். அந்தளவிலே சைத்தானின் ஆதிக்கம் அவர் மீது நிறைவடைகிறது. ஆக, அடுத்த சோதனைகள் அவருக்கு தேவையில்லை
அதே இப்படி வைத்துக்கொள்வோம். திருடக்கூடிய ஒருவர் தன் செயல் தவறென உணர்ந்து அல்லாஹ்விற்காக அதிலிருந்து விலக முற்படுகிறார். சைத்தானின் சூழ்ச்சி அங்கே தோல்வியை தழுவுகிறது. ஆக அவனை வீழ்த்த முன்னை விட வீரியமாக அடுத்தக்கட்ட சூழ்ச்சியில் செயல்பட்டாக வேண்டும் சைத்தான்.
இப்படி சைத்தான் ஒவ்வொன்றாய் ஏற்படுத்த ஏற்படுத்த மனிதன் ஈமானின் பலத்திற்கு தகுந்தார் போல் தேர்ச்சிப்பெற்று வருகின்றான். எல்லாவற்றையும் தாண்டி ஒருவர் முழு ஈமானுடன் பயணிக்கும் போது நிச்சயம் அவருக்கான அடுத்தடுத்த சூழ்ச்சியோடு சைத்தான் வழி நெடுக்க காத்திருப்பான்.
எந்த கட்டத்தில் மனிதன் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைக்கிறானோ சைத்தானின் வலைப்பின்னலில் சிக்கிக்கொள்கிறான். அத்தோடு அங்கே கேம் ஓவர்..!
source: http://iraiadimai.blogspot.in/2014/01/blog-post.html