இதைவிட எங்களை கேவலப்படுத்த முடியாது!
வெள்ளத்தில் சிக்கியவர் கூறும் வார்த்தைகள்..
இத்தனை ஆண்டுகள் வேறு எந்த சிந்தனைகளும் இல்லாமல் மாடு போல் உழைத்த சம்பாதித்த என் செல்வங்களெல்லாம் நீரில் சென்று விட்டது இனி எப்படி என் 25வயது மகளுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பேன். அதற்கு அடுத்த மகளுக்கும் என்னச் செய்வேன் ஒரு வேளை சோற்றுக்காக எங்கும் செல்லாத நான் இன்று மூன்று வேளை சோற்றுக்கு அடுத்தவர்களை எதிர்பார்த்து அப்படியே செத்துவிடலாம் போலிருக்கிறது.
எல்லோரும் எளிதாக வந்து சொல்கிறார்கள் சொத்துப்போனால் போகட்டும் உயிர்பிழைத்தீர்களே அதுவே பெரிசு என்று!
என் நிலையில் வயதுக்கு வந்த திருமண வயதில் பெண்ணை வைத்திருந்து பாருங்கள் அப்போது தெரியும் செல்வம் எவ்வளவு முக்கியம் என்று இது எவ்வளவு கேவளமான நிலை என்று?
ஒவ்வொரு முறையும் என் மூத்தப் பெண் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் இனி எப்படி என்னை கரை சேர்ப்பாய் ? என்பது போல இருக்கிறதே.
இந்த நிலைக்கு என்னைப் போன்றவர்களை தண்ணீரில் தள்ளிவிட்ட அரசு எங்களுக்கு நிவாரணமாக 5000 ருபாயை தருவதாக சொல்லுகிறது இதைவிட எங்களை கேவலப்படுத்த முடியாது! (5000 ரூபாய் எங்கே முழுசாக கிடைக்கப் போகிறது “பிணம் திண்ணி அரசியல் மற்றும் அதிகார வர்க்கம் கொள்ளையடித்தது போக, மிச்சம் தானே கிடைக்கப்போகிறது.)
சென்னை பேரழிவில் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவித்தொகை போதாது
சென்னை: “மழையின் பாதிப்பைவிட அரசின் அலட்சிய போக்கால் ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்பிற்கு முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டும்” என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து முன்னறிவிப்பின்றி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் அடையாறு, நேப்பியர் பாலம் அருகில் உள்ள முகத்துவார மணல் அடைப்பை தமிழக அரசு தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீர் கடலுக்குள் செல்ல முடியாமல் சென்னை மாநகரை பேரழிவிற்கு உள்ளாக்கியது. முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகம் செல்லவில்லை.
தலைமை செயலகம் கடந்த 2, 3 ஆகிய நாள்களில் வெறிச்சோடியிருந்தது. மாநகராட்சி செயல்படாத முடங்கிய நிலைக்கு சென்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் எவருக்கும் கிடைக்கவில்லை. ஆறுகளில் சடலங்கள் மிதந்து கொண்டிருந்ததது.
இந்த பாதிப்பிலிருந்து தமிழக மக்களை விடுவிக்கிற நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவினால் எடுக்க முடியுமா? என்கிற அச்சம் ஏற்படுகிறது. கடுமையான விமர்சனங்களுக்கு பிறகு தான், தமது சொந்த தொகுதியான ஆர்.கே.நகருக்கு காரிலேயே சென்று மண்ணில் கால்படாமல் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்தார். தற்போது ஹெலிகாப்டர் மூலமாக, பாதிக்கப்பட்ட 45 லட்சம் சென்னை மாநகர மக்களை 45 நிமிடத்தில் பார்த்ததை விட கண்துடைப்பு நாடகம் வேறு எதுவும் இருக்கமுடியாது.
வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட பாதிப்பை விட ஜெயலலிதா அரசின் அலட்சியப் போக்குக் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களது உயிர்களையும், உடமைகளையும் இழந்துள்ளனர். இதற்கான பொறுப்பை ஜெயலலிதா ஏற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே உதவி செய்கிற அணுகுமுறை மூலமாக, இயற்கையின் சீற்றத்திலிருந்து மக்களை நிச்சயமாக காப்பாற்ற முடியும். இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.